சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

நடிகர்கள்: விக்ரம், ஸ்ரேயா, கிருஷ்ணா, பிரபு, வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி; இசை: தேவி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுசி கணேசன்.

ஜென்டில்மேனில் கொஞ்சம், அன்னியனில் கொஞ்சம், ரமணாவில் நிறைய எடுத்துச் சேர்த்து உருவாகியிருக்கும் படம்.

தங்கள் பிரச்னைகளை காகிதத்தில் எழுதி போரூர் முருகன் கோவிலில் இருக்கும் ஒரு மரத்தில் கட்டிவைத்தால், அந்தப் பிரச்னைகள் தீருகின்றன. தீர்த்து வைப்பவர் கந்தசாமி. இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று ஆராய வருகிறார் காவல்துறை டிஐஜி (பிரபு) ஒருவர்.

கந்தசாமி சிபிஐயின் பொருளாதாரக் குற்றப் பிரிவில் பணியாற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. தவறாகப் பணம் குவிக்கும் பணக்காரர்களை ரெய்டு செய்து, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் ஒரு பகுதியை ஏழைகளின் பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுத்துகிறார். இதில் சிக்கும் ஒரு பெரிய பணக்காரர் பிபிபி (ஆசிஷ் வித்யார்த்தி). அவருடைய மகள் சுப்புலட்சுமி (ஸ்ரேயா). முருகன் கோவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது கந்தசாமிதான் என்பது பிபிபிக்கு தெரிந்துவிட, ஏழைகளுக்காக உதவும் பணத்தில் பாதியைத் தனக்குத் தந்துவிட வேண்டுமென்று பேரம் பேசுகிறார் பிபிபி. பிபிபியுடன் கூட்டு சேர்ந்து, மெக்ஸிகோ வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் பெரு முதலாளிகள் சிலரது கருப்புப் பணத்தை அள்ளிவரத் திட்டம் போடுகிறார் கந்தசாமி. இதில் ஆர்எம்ஜி குழுமத்தின் ராஜ்மோகனுடன் மோதல் வருகிறது. மக்களின் குறையைத் தீர்த்துவைக்கும் கந்தசாமி யார் என்பதை காவல்துறை டிஐஜி கண்டுபிடித்தாரா, பிபிபி, ராஜ்மோகன் கதி என்ன ஆகிறது என்பதுதான் மீதப் படம்.

துயரத்தில் இருக்கும் நம்மை ஒரு சூப்பர் ஹீரோ வந்து காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பது எப்போதுமே சாகாத ஒரு ஃபேண்டஸி. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் நாயகர்கள் இந்த ஃபேண்டஸியில் உருவெடுத்தவர்கள்தான். இந்த வகைக் கதைகளில் இரண்டு, மூன்று வில்லன்களையும் சற்று சுவாரஸ்யமான திரைக்கதையையும் அமைத்துவிட்டால் போதும். ஒரு சூப்பர் ஹிட் படம் ரெடி. ஆரம்ப காலத்திலிருந்தே ஷங்கர் இம்மாதிரிக் கதையைத்தான் பல படங்களில் காட்டினார். ஆனால், ஜென்டில்மேனில் இருந்த இடஒதுக்கீட்டு எதிர்ப்புக் குரல், அன்னியனில் இருந்த இந்துத்துவ முகமும் ஆகியவை கடும் விமர்சனத்திற்குள்ளாயின. ஆனால், சுசி கணேசன் இம்மாதிரி எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. சூப்பர் ஹீரோ கதை என்று முடிவுசெய்த பிறகு, அதை சுவாரஸ்யமான, பளபளப்பான திரைக்கதையோடு கொடுத்திருக்கிறார் சுசி கணேசன்.

படத்தின் துவக்கத்தில் ஒரு ஏழைக்குக் கந்தசாமி கொடுத்த பணத்தை, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடுங்கிக் கொள்ள, அந்த இன்ஸ்பெக்டரை மாறுவேடத்தில் வரும் விக்ரம், பின்னணிப் பாடலுடன் அடித்துத் துவைக்கும்போதே படத்தின் தொனி செட்டாகிவிடுகிறது. அதை முடிவுவரை நூல் பிடித்தாற்போல எடுத்துச் சென்றிருக்கிறார் கணேசன்.  இப்படி சூப்பர் ஹீரோ கதையில் எல்லாம், மற்றொரு பக்கம் அசட்டு சென்டிமென்டுடன் கூடிய அம்மாவோ, அப்பாவிக் காதலியோ இருந்து படத்தை நாசம் செய்வார்கள். இந்தப் படத்தில் அப்படி இல்லை.

ஹாலிவுட் அழகியும் கந்தசாமியும்

ஹாலிவுட் அழகியும் கந்தசாமியும்

இந்தப் படத்தின் நாயகியாக வரும் ஸ்ரேயா, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் நாயகியைப் போல, கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நடிப்பு என்று வருகிறார். அது பொருத்தமாகவும் இருக்கிறது. ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையான ஒரே தமிழ் சினிமா கதாநாயகி இவர்தான்.

விக்ரமிற்கு கிட்டத்தட்ட அன்னியன் படத்தில் செய்தது மாதிரியான வேடம். அதனால், அலட்டிக்கொள்ளாமல் நடித்துவிட்டுப் போகிறார். இம்மாதிரி சூப்பர் ஹீரோ கதைகள் இந்திய நடிகர்களில் சிலருக்கு மட்டுமே பொருந்தும். விக்ரம் அவர்களில் ஒருவர் என்று தோன்றுகிறது. இந்த சூப்பர் ஹீரோ கதையில் வடிவேலு வலுவில் நுழைக்கப்பட்டிருக்கிறார். வரும் காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார் என்றாலும், படத்தோடு ஒட்டாமல் வந்துபோகிறார்.

படத்தின் ஒளிப்பதிவு (என்.கே. ஏகாம்பரம்), இசை, எடிட்டிங் எல்லாமே படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. பாடல்களும் அவை படமாக்கப்பட்டு விதமும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. அதிலும் “மியாவ்.. மியாவ் பூனை” பாடல்.

படத்தில் நிறைய ஓட்டைகளும் பலவீனங்களும் இருக்கின்றன. படத்தின் நீளம் (மூன்றேகால் மணி நேரம்) அயர்ச்சியூட்டுகிறது. ஆனால், அதையெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்தின் பிரம்மாண்டமும் அடிரிலின் சுரக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளும் மறக்க வைத்துவிடுகின்றன.

எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு மூன்றேகால் மணி நேரத்தைக் கழிக்க நினைத்தால், இந்தப் படம் சரியான சாய்ஸ்.

நடிகர்கள்: ஆர்.கே., நெப்போலியன், பானு, லால், வடிவேலு, மணிவண்ணன், சோனா, சுகன்யா, ரஞ்சிதா, சரவணன்; இயக்கம் இசை: இளையராஜா; எஸ்.பி. ராஜகுமார்.

அன்பு நாயகன் ஆர்.கேவும் தூரத்தில் பேரழகி பானுவும்

அன்பு நாயகன் ஆர்.கேவும் தூரத்தில் பேரழகி பானுவும்

தூண்டில், எல்லாம் அவன் செயல், மஞ்சள் வெயில் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஆர்.கேவுக்கு உண்மையில் இதுதான் முதல் படம். தனக்கு என்ன மாதிரி பாத்திரம் சரியாக வரும் என்று உணர்ந்து அம்மாதிரி ஒரு கதையில் நடித்திருக்கிறார் ஆர்.கே.

ஆர்.கேவும் நெப்போலியனும் அண்ணன் – தம்பிகள். ஆர்.கே. குடித்துவிட்டு ஊதாரித் தனமாகத் திரிகிறார். ஆர்.கேவுக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் நெப்போலியன். ஆனால், யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதற்கிடையில் லால் குடும்பமும் நெப்போலியன் குடும்பமும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். பிறகு ஆர்.கேவைக் காதலிக்கிறார் பானு. திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில் லாலின் தங்கை அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துகிறார். லாலும் நெப்போலியனும் ஏன் மோதிக் கொள்கிறார்கள், திருமணம் நடக்கிறதா என்பதுதான் கதை.

கதையிலும் திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. வழக்கமான பொத்தாம் பொதுவான கிராமம், இரு குடும்பங்களுக்கிடையில் பகை, கோவில் திருவிழா, பஞ்சாயத்து, கதாநாயகனுக்கு மாமனாக காமெடியன் என பல படங்களில் பார்த்துச் சலித்த செட் அப்தான். ஆனால், ஒரு பாட்டு, ஒரு சண்டை, பிறகு காமெடி, அப்புறம் சென்டிமெண்ட் என்று காட்சிகளை அடுக்கப்பட்டிருக்கும் வரிசையால் முதல் பாதி எந்தப் பிரச்னையும் இல்லாமல் நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஆர்.கேவின் கல்யாணம் நிற்கும்போது, படமும் முன்னேறாமல் தடுமாறுகிறது. ஃப்ளாஷ்பேக், பெரிய சண்டை என்று இழுத்துக் கொண்டே போகும் படம், எப்போது முடியும் என்று தோன்ற வைக்கிறது. வடிவேலுவின் காமெடி பரவாயில்லை ரகம். சுகன்யா, ரஞ்சிதா என்று பழைய நடிகைகளை ஒரு சில காட்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் (சுகன்யா நடித்திருக்கும் ஆர்.கேவின் இரண்டாவது படம் இது).

தனது முந்தைய படங்களில் ஆர்.கே. சீரியஸாக நடித்துக் கொண்டிருக்கும்போது, பார்ப்பவர்களுக்கு காமெடியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார். “தமாஷ்” என்ற வார்த்தையை மட்டும் தொடர்ந்து “தமாஸ்” என்றே உச்சரிக்கிறார்.

கதாநாயகியாக வரும் பானுவுக்கு காதலித்து, டூயட் பாடி, தாலி கட்டிக்கொள்ள வேண்டிய வேலை. என்ன செய்ய முடியுமோ செய்திருக்கிறார். ஆனால், க்ளோஸ் அப் காட்சிகளில் பயமுறுத்துகிறார். வடிவேலுவின் காதலியாக சில காட்சிகளுக்கு வரும் சோனாவை படத்தில் சேர்க்கும்போதே, கவர்ச்சிக்காக என்று சொல்லியே சேர்த்திருப்பதால், அவரும் வஞ்சனையில்லாமல் கொடுத்த பணியைச் செய்துவிட்டுப் போகிறார்.

இசை இளையராஜா. மூன்று பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. அதற்காக டைட்டில் சாங்காக ஒரு தத்துவப் பாடலை வைத்து, அதை அவரையே பாட வைத்திருக்க வேண்டுமா? (ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதை நினைத்து, “சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்வது மாதிரியான பாடல் இது.)

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு பிற்பாதியிலும் இருந்திருந்தால், ஆர்.கேவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்திருக்கும்.

நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்கிழமை கரண் நடித்த மலையன் படம் ரிலீஸானது. அந்தப் படம் ஒடும் திரையரங்கில் அந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழையும் எந்தெந்த இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலையும் திரையரங்கில் ஒட்டியிருந்தார்கள்.
ஏதாவது சுவாரஸ்யமான காட்சியை அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு, நம்மைப் பார்க்கவிடாமல் வெட்டிவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள நான் அந்தப் பட்டியலை முழுமையாகப் படித்துவிடுவது வழக்கம். இந்த மலையன் படத்தின் வெட்டுப் பட்டியலில்தான் இந்தக் காமெடி. கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி. அதில் காற்றில் தாவணி விலகி, அவரது தொப்புள் தெரியும். அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், படத்தில் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில்  கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் வெட்டு இல்லை!
நம் தணிக்கை அதிகாரிகளைப் பொறுத்தவரை, கதாநாயகியின் தொப்புளில்தான் கலாச்சாரம் குடியிருக்கிறது. அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது. கரகாட்டக்காரி எதைக் காட்டினாலும் சரி, கலாச்சாரத்திற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.
படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்களும் மறுபேச்சுப் பேசாமல் இதையெல்லாம் ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள்.
ஷம்மு

இவர் காண்பித்தால் கெட்டுவிடும்

நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்கிழமை கரண் நடித்த மலையன் படம் ரிலீஸானது. அந்தப் படம் ஒடும் திரையரங்கில் அந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழையும் எந்தெந்த இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலையும் திரையரங்கில் ஒட்டியிருந்தார்கள்.

ஏதாவது சுவாரஸ்யமான காட்சியை அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு, நம்மைப் பார்க்கவிடாமல் வெட்டிவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள நான் அந்தப் பட்டியலை முழுமையாகப் படித்துவிடுவது வழக்கம். இந்த மலையன் படத்தின் வெட்டுப் பட்டியலில்தான் இந்தக் காமெடி. கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி. அதில் காற்றில் தாவணி விலகி, அவரது தொப்புள் தெரியும். அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், படத்தில் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில்  கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் வெட்டு இல்லை!

நம் தணிக்கை அதிகாரிகளைப் பொறுத்தவரை, கதாநாயகியின் தொப்புளில்தான் கலாச்சாரம் குடியிருக்கிறது. அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது. கரகாட்டக்காரி எதைக் காட்டினாலும் சரி, கலாச்சாரத்திற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது (அதாவது, குஷ்பு பாதுகாப்பான செக்ஸ் பற்றிப் பேசினால், தமிழ்க் கலாச்சாரம் கெட்டுவிடும்; வேலு பிரபாகரன் பிட்டுப் படம் மாதிரி படம் எடுத்தால் தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்பது மாதிரி!).

இவர் காண்பித்தால் கெடாது

இவர் காண்பித்தால் கெடாது

படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்களும் மறுபேச்சுப் பேசாமல் இதையெல்லாம் ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள்.

மதுரை பிரஸ் லோகோ

மதுரை பிரஸ் லோகோ

என்னுடைய நண்பர் ஒருவர் மதுரை பிரஸ் என்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். மதுரைக்காரர். தன் பதிப்பகத்திற்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். தலைக்கனம் என்றுகூடச் சொல்லலாம். சற்று கர்வமாகத்தான் திரிவார். தன் ஊர்ப் பெயரும் பதிப்பகம் சார்ந்த பிரஸ் என்ற வார்த்தையும் நன்றாகப் பொருந்திப் போவதாக பார்த்தவர்களையெல்லாம் மொக்கை போடுவார். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை பார்ப்பதுபோல, பிற பதிப்பகத்தினரையெல்லாம் படு இகழ்ச்சியாகப் பார்ப்பார். இந்த அளவுக்குப் பெயர் அமையவில்லையாம்.

ஆனால், ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறானே!  அந்த நாளும் வந்தது. சென்னை கோவிந்தன் ரோட்டிலிருந்து சிஐடி நகருக்குத் திரும்பும் இடத்தில் ஒரு பெயர்ப் பலகை. மதுரை மெஸ். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த மதுரைக்காரருக்கு சுரீர் என்றது. பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த நண்பர், “’டேய் உன் கம்பனி பேரும் மதுரை மெஸ்தானே..” என்றார். மதுரைக்காரர் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார். “அது மதுரை பிரஸ்” என்றார் கொஞ்சம் சுருதி குறைந்து. “இரண்டும் ஒன்னு மாதிரிதான்டா இருக்கு.. என்ன பெரிய வித்தியாசம்?” என்றார் பில்லியன் நண்பர். அவமானத்தில் தலை கவிழ்ந்தார் மதுரைக்காரர்.

இப்போது ராத்திரியானால், அந்த மதுரை மெஸ்ஸில் புரோட்டா வாங்கித் தின்றுவிட்டு, “மதுரைக்காரன்னா சும்மாவா.. புரோட்டா சூப்பர்… நீங்களும் ரெண்டு சாப்பிடுங்க சார்” என்று பில்டப் கொடுத்துக்கொண்டு திரிகிறார். ஒருவர் கர்வத்தை அடக்க ஆண்டவன் என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள்!

செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசினால் நடிகர் மாதவன். நான் நடித்திருக்கும் வாழ்த்துகள் படத்தைப் பாருங்கள் என்கிறார். விளம்பரம்! சினிமா வெளியீடும் அதன் விளம்பர யுத்திகளும் எந்த அளவுக்கு மாறிவிட்டன? செல்போனில் வந்த விளம்பரம் உண்மையி்ல் எனக்கு ஒரு எதிர் மனநிலையை உருவாக்கியது. இப்படி நம்மைத் தொந்தரவு செய்து, விளம்பரத்தைத் திணிக்கும் இந்தப் படத்தைப் பார்க்கவேகூடாது என்று தோன்றியது (படத்தை இயக்கியிருப்பது சீமான் வேறு!).

தேடி வந்த திரையரங்கு

தேடி வந்த திரையரங்கு

80களின் துவக்கம். இரவு ஒரு ஏழு-ஏழரை மணி வாக்கில் ஒரு பேண்டு வாத்தியச் சத்தம் கேட்கும். புத்தகத்தைப் போட்டுவிட்டு எல்லோரும் ரோட்டுக்கு ஓடிவருவோம். முதலில் ஒரு பேண்டு வாத்தியக்காரன் பேண்டு அடித்துக்கொண்டு செல்வான். அடுத்ததாக ஒரு பெண் பெட்ரமாக்ஸ் லைட்டைத் தூக்கிச் செல்வார். அடுத்ததாக அந்த வாகனம் வரும். இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட (பார்க்க வரைபடம்) அந்த வாகனம் வரும். ஒரு பெரிய தகரம். அதைச் சுற்றி பிரேம். இரண்டு சக்கரங்கள் இதுதான் அந்த வாகனம். இதன் இரண்டு பக்கமும் வரவிருக்கும் அல்லது அப்போதுதான் ரிலீஸாகியிருக்கும் படங்களின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். இது போல குறைந்தது இரண்டு வண்டிகளாகவது வரிசையாக வரும். இந்த வண்டிகளின் பொற்கால யுகத்தில் அதாவது 82-83ல், ரிலீஸாகும் படத்தைப் பற்றிய விவரங்களுடன் கூடிய சாணித் தாளில் அடிக்கப்பட்ட நோட்டீஸை ஒருவர் கொடுத்துக் கொண்டே போவார். எங்களைப் போன்ற சின்னப் பையன்களுக்கு கொடுக்க மாட்டார்கள். “அண்ணே.. அண்ணே…” என்று கெஞ்ச வேண்டும். அந்த நோட்டீஸில் சில சமயங்களில் படத்தின் ஸ்டில் போக கதை, நடிகர்கள், இயக்குனர் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். பல சமயங்களில் கதை இல்லாமல் இந்த விவரங்கள் இருக்கும். எப்படியிருந்தாலும் அந்த நோட்டீஸைப் படிப்பது சுவாரஸ்யமான விஷயம்.

மதுரையின் மத்தியப் பகுதியில் அல்லது அதைச் சுற்றியிருந்த சென்ட்ரல், தேவி, நியூ சினிமா, சிட்டி சினிமா, சக்தி, சிவம் போன்ற தியேட்டர்களின் விளம்பரங்கள் மட்டுமே வடக்கு மாசி வீதியில் வரும். பிறகு, நோட்டீஸ் கொடுக்காமல் வாகனங்கள் மட்டும் ஒன்றிரண்டு ஆண்டுகள் வந்தன.  பிறகு வடக்கு மாசி வீதியில் போக்குவரத்து அதிகரிக்க, அதிகரிக்க 80களின் மத்தியிலேயே இந்த விளம்பர வாகனங்கள் வருவது நின்றுவிட்டது. நகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியே விளம்பரம் செய்துவிடலாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருக்க வேண்டும்.

செல்போனில் நடிகர்களே வந்து படம் பார்க்கச் சொல்லும் கால கட்டத்திலும் அந்தத் தகர விளம்பர வண்டியே இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. இதற்கு என் பழமை மோகம் மட்டும் காரணம் இல்லை என்று தோன்றுகிறது. அதிலிருந்த ஒரு பாமர எளிமையும் சினிமா பார்க்கும் வாய்ப்பு குறைவாக இருந்த காலகட்டத்தில் சினிமா திரை போன்ற அந்த வாகனமே எங்களைத் தேடி வருவதுமே எங்களை ஈர்த்திருக்க வேண்டும்.

பிரமாதமான நடிப்பு

பிரமாதமான நடிப்பு

பா. விஜய் நம் கலாம் கையால் தேசிய விருது வாங்கிய பாடலாசிரியர். பாக்யாவில் படு மோசமான சித்திரங்களுடன் உருகி.. உருகி.. கவிதை நடையில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். திடீரென்று பார்த்தால் ஒரு நாள் தாய் காவியம் என்று ஒரு படம், ஞாபகங்கள் என்று ஒரு பூப்போட்ட படம் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. கடைசியில் ஞாபகங்கள் வெளிவந்தேவிட்டது.

வசதியில்லாத ஒரு ரொம்ப நல்லவர் ஒரு பெண்ணை பயங்கரமாக, பயங்கர டீசன்டாகக் காதலிப்பது, பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு வீணாய்ப் போனவருடன் கல்யாணம் நடப்பது, பிறகு இந்த நல்லவர் பெரிய்ய ஆளாகி அந்த வீணாகப் போனவளைச் சந்திப்பது என்ற காவியக் காதல் கதையை 100 ஆண்டு கால சினிமாவில் பல முறை பார்த்தாகிவிட்டது. இந்தப் படத்தில் இன்னொரு முறை. இது ஒரு உண்மைக் கதை என்று படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு பில்ட் அப் வேறு கொடுக்கிறார் விஜய்.

சினிமா கவிஞர்களுக்கு என்று ஒரு பிம்பம் இருக்கிறது. வெள்ளை ஜிப்பா போடுவார்கள். எப்போதும் புன்னகையுடன் இருப்பார்கள். பேசும்போது எதுகை மோனையில் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். மென்மையாக நடந்துகொள்வார்கள். அதுவும் பெண்கள் என்றால் கேக்கவே வேண்டாம்.. அப்புறம்.. மெதுவாக, கம்பீரமாக நடப்பார்கள். இது ஒரு பாமர பிம்பம். ரவுடிகள் எல்லாம் கட்டம் போட்ட பனியன் போட்டிருப்பார்கள் என்பது மாதிரி. வைரமுத்துவை ஒரு தடவை நேரில் பார்த்தாலோ, உரையாடினாலோ இந்த பிம்பம் எல்லாம் கலைந்துவிடும்.

இந்த டுபாக்கூர் பிம்பத்தை அப்படியே பின்பற்றுகிறார் விஜய். மென்மையாக ஒரு புன்னகை. ஜிப்பா. எதுகை மோனையில் அசட்டு கவிதைகள். மென்மையாக நடந்து கொள்வது. இந்த மென்மையாக நடந்துகொள்வது என்றால் என்னவென்று இந்த இடத்தில் விளக்கிவிடுகிறேன். அதாவது, காதலிக்கும் பெண்ணுடன் தனியறையில் இருந்தால்கூட மயிலிறகால்தான் தடவுவார் கவிஞர். காதலியே முன்வந்து படுக்கத் தயாரானால்கூட, “நீ குழந்தைமா” என்று மறுத்து…

ஆனால், படம் முழுக்க தன்னை மகா கவிஞன் என்று மற்றவர்களைச் சொல்ல வைத்து அழகு பார்ப்பதில் மட்டும் கூச்சம் கிடையாது.

இந்த படத்தைப் பற்றிச் சொல்ல ஏதாவது ஒரு நல்ல விஷயம் கிடைக்குமா என்று போகஸ் லைட் போட்டுப் பார்த்தால்கூட… ம்.. ஹும்… நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார் விஜய். அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி மாட்டுவதுதான் அவருடைய உட்சபட்ச நடிப்பு.  பல முக்கிய காட்சிகளில் அழுகிறாரா, ஆத்திரப்படுகிறாரா, சிரிக்கிறாரா என்று புரியாத வகையில் ஒரு முகபாவம் காட்டுகிறார்.

படத்தில் காமெடி ட்ராக் என்று தனியாக இல்லை. அந்தக் குறையை, படத்தில் வரும் புரட்சிகர தோழர்கள் தீர்க்கிறார்கள். தீவிர மார்க்ஸியமோ, தமிழ்த் தேசியமோ பேசுகிற ஒரு குழு இவர் ஒரு கட்டுரைக்குக் கொடுக்கும் தலைப்பைப் (குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர். இந்தியா சுதந்திரம் வாங்கிவிட்டது – இதுதான் அந்த அற்புதமான தலைப்பு) பார்த்து அசந்துபோய் ரூ. 5,000 பரிசளிக்கிறார்களாம். அதைப் பார்த்து போலீஸ்காரர்கள் பிடித்துக்கொண்டுபோய் வைத்து அடிக்கிறார்களாம்.

சினிமாவைக் கண்டுபிடித்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது?

(குத்துப் பாட்டு இல்லாமல், கதாநாயகியின் சதையைக் காட்டாமல், சண்டைக் காட்சி இல்லாமல் ஒரு தரமான படத்தை எடுத்தால், அதை வரவேற்கும் நல்ல குணம் இல்லையே என்று திட்டும் அன்பர்களை வரவேற்கிறேன்)

தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தில் நடித்திருந்தார் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.
ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.
திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. இந்தப் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.
ஆனால், டிரெய்லரைப் பார்த்துப் பரவசப்பட்டு, படத்துக்குப் போகும் என்னை மாதிரி ஆட்களையெல்லாம், வாயில் ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்துவிட்டு, இன்னொரு செருப்பாலேயே அடிக்க வேண்டும்.

நாடோடிகள்தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தை இயக்கியவர் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.

ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.

படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.

திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. சுப்ரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் புதிய அலையையே, ஒரு வகைமாதிரியாக மாற்றியிருக்கிறது இந்த படம்.  அதாவது, ஒரு வெற்றிகரமான மசாலா படம் வந்ததும் அதைப் போலவே பத்து குப்பை மசாலா படங்கள் வருவது போல. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. மாறாக, இதைவிட பல மடங்கு மேம்பட்ட பசங்க படம் இந்த அளவு உற்சாகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. நாடோடிகள் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.

கொசு அடிப்பாளர்

தீவிர கொசு

தீவிர கொசு

 

அலுவலகம் விட்டுவந்த பின்

ஃப்ரீயாய் இருக்கும்

நேரத்தில்

என்ன செய்யலாம் என்று

யோசித்தபோது

கொசு அடிக்கலாம்

என்று தோன்றியது.

எனக்குச்

சின்ன வயதிலிருந்தே

கொசு அடிக்கும்

பழக்கம் உண்டு.

நண்பர்களும்

ஊக்குவித்தார்கள்.

உங்கள் முகமே

நீங்கள் திறம்வாய்ந்த

கொசு அடிப்பாளர் என்கிறது

என்றார் ஒரு நண்பர்.

எல்லாம் சேர்ந்து கொசு

அடிக்கக் கிளம்பியாயிற்று.

கொசு அடிக்கும் மின்சார

மட்டையும் வாங்கிவிட்டேன்.

முதல் நாளே எட்டுத்திக்கும்

ஜெயம்.

1000 கொசுக்கள்.

வாரத்தில் 1000 கொசுக்கள்

அடித்தாலே

வெற்றிதான் என்றார்கள்

விவரம் தெரிந்தவர்கள்.

நாட்கள் செல்லச் செல்ல

நீங்கள் வேலையை விட்டுவிட்டு

முழுநேரமும் கொசு அடிக்கலாமே

என்று சொல்ல ஆரம்பித்தாள் மனைவி.

நண்பர்களும் ஊக்குவிக்கிறார்கள்.

கொசு அடித்தே கொரெல்லோ

கார் வாங்கிவிட்டாராம்

அந்த கொசுவாளர்.

இன்னொருவருக்கு

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்

5 கோடிக்கு ஆர்டராம்.

இதோ

இறங்கிவிட்டேன் நானும்.

நாம் அடிக்கும் கொசுவுக்கு

1 கோடி கிடைத்தால்

போதாது?

 

போன வாரம் மங்களூரில் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஸ்ரீ ராம சேனா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்று காரணமும் சொன்னார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய மாநில பா.ஜ.க. அரசுக்கு பல நாட்கள் பிடித்தன. “பப் கலாச்சாரத்தை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா. பா.ஜ.க.விடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஆச்சரியம் தருவது இங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம்தான். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளிலிருந்து வி.சி.க. போன்ற சிறிய கட்சிகள் வரைக்கும் இதைப் பற்றி வாயையே திறக்கவில்லை. 

31ந் தேதி தி இந்து நாளிதழில் அன்புமணி இதுகுறித்து வெளியிட்ட ஒரு கருத்து வெளிவந்திருக்கிறது. அதாவது பப் கலாச்சாரம் குடிப்பதை ஊக்குவிப்பதால், இவர் அதை எதிர்க்கிறாராம். அவர் இப்படிச் சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம். பா.ம.க. மட்டுமில்லை, தமிழ் தேசியவாதம் பேசும் எல்லாக் கட்சிகளுமே இம்மாதிரி நிலைப்பாட்டைக் கொண்டவைதான். இவர்களின் கை ஒங்கும்போது, இக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிச்சயம் இம்மாதிரித் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். தமிழ் தேசியவாதக்காரர்களைக் கூர்ந்து கவனித்தால் சில ஒற்றுமைகள் புலப்படும். அவையாவன: 1. ஏதாவது ஒரு ஜாதிக்கு ஆதரவான செயல்பாடு பட்டும்படாமலும் இருக்கும், தனிப்பட்ட மட்டத்திலாவது. 2. நம்முடைய கலாச்சாரம் என்று எதையாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 3. இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லோரையும்  தமிழினத் துரோகி என்பார்கள். 4. பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றி அவ்வப்போது பேசுவார்கள். 5. தம்மை ஏற்காத கலை, கலாச்சார அமைப்புகளைத் தாக்குவார்கள். விடுதலைப் புலிகள் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் திரைப்படங்களுக்கு 4 கட்ட தணிக்கை இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். 

 

தமிழ்த் தேசிய வாதிகளின் கையில் அதிகாரம் கிடைக்கும்போது அவர்களும் இதையே செய்வார்கள். தமிழையோ, அதன் கலாச்சாரத்தையோ காப்பாற்றுவதற்காக அல்ல; அதன் பெயரால் சொத்து சேர்க்க, வேண்டியதை அனுபவிக்க. கடந்த பத்தாண்டுகளில் பா.ம.க சேர்த்திருக்கும் சொத்தும் பணமும் இதையே சுட்டிக்காட்டுகின்றன. 

முதலில் ரிலையன்ஸை எதிர்த்தார் ராமதாஸ். பிறகு பான்பராக். பிறகு கோக். இப்போது சிகரெட், மது. ரிலையன்ஸ், கோக், பான்பராக் போன்றவை இல்லாமல் போய்விட்டனவா? அதை எதிர்த்து ஏன் தொடர் போராட்டங்கள் நடப்பதில்லை? இதன் பின்னணியில் இப்பது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த கரிசனம் மட்டும்தானா? இதைக் கேட்டால் தமிழின விரோதி என்பார்கள். 

எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட இனக்குழுவானது தம்முடைய உரிமைகளைக் காப்பாற்ற தனி நாடு முழக்கத்தை எழுப்பி போராடி வருவது தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளமான முதல் 4 மாநிலங்களுக்குள் இருந்து வருகிறது. உரிமைப் பிரச்னை ஏதும் புதிதாக எழவில்லை. 

ஆகையால் இம்மாதிரி தமிழ்த் தேசியவாதம் பேசுபவர்களுக்கு “தமிழ்க் கலாச்சாரம்” என்ற ஒன்றைப் புதிதாகக் கட்டமைத்து அதை முன்னிறுத்தி குரலெழுப்ப வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கலாச்சாரம் சுதந்திரமான ஒன்றாக இருப்பதால், ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒன்றை இவர்கள் தமிழ்க் கலாச்சாரமாக முன்வைப்பார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஜாதி அடக்குமுறைக்கு எதிராக இருந்தால் இவர்கள் அதை ஆதரிப்பார்கள். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும்; அவரது பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் கோரியதை கவனிக்கலாம். இத்தனைக்கும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் நிலங்கள் அனைத்தும் தலித்துகளுக்குச் சொந்தமானவை. இருந்தும் திருமாவளவன் தேவர் பெயரை எதற்கு முன்வைக்கிறார்? ஒரு பெரிய ஜாதிக்கூட்டத்தின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக.

யோசித்துப் பார்த்தால், ராமதாஸ், சீமான் கூட்டத்தைவிட கருணாநிதியும் ஜெயலலிதாவும் பலமடங்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது.

1.

பள்ளிக்கூட நினைவுகள்

பாதியில் கலைவதில்லை

இப்போது எதிர்ப்பட்டாலும் 

கேட்கிறாய்

கடலை மிட்டாய் 

வாங்கிக் கொடுத்த

கடனை.

 

2.

முறுக்குவித்த கோவிந்தம்மாளுக்கு 

அப்போதே வயது 60.

இப்போதோ 

80.

முறுக்கு விலை 

ஏறும்போது

சேர்ந்தே ஏறுகிறது 

வயதும்.

 

3.

கவிதை என்பது

பித்தனின் உளறல்

கவிதை என்பது 

காதலின் ஆன்மா

கவிதை என்பது

இரண்டாம் ஆட்ட சினிமா

கவிதை என்பது

குளிர்ந்த பீர்

கவிதை என்பது

ஆஃபரில் கிடைக்கும் பீஸா

கவிதை என்பது

600 காப்பிகள் அடிக்க உதவும் எழுத்து

கவிதை என்பது

விசிட்டிங் கார்ட்

கவிதை என்பது

கவிஞனின் திமிர்

கவிதை என்பது

இல்லாத ஒன்று.

Next Page »