September 2006


தாய்லாந்தில் நடந்த ராணுவப் புரட்சி, மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவை பற்றி நம்முடைய வலைப்பதிவுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அளித்த பரபரப்பு பேட்டி:

கே: இவ்வளவு நாளாக ஆளையே காணவில்லையே. எங்கே போயிருந்தீர்கள்?

ப: தாய்லாந்திற்கு. அங்கே பிரதமர் தூக்கி எறியப்பட்டு, ராணுவமும் காவல்துறையும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதை நடத்தியதே நான்தான்.

கே: அப்படியா?

ப: ஆமாம். தாய்லாந்த் மன்னர் பூமிபோல் அதுலியொதேஜ் என்னுடன் ஹார்ட்வர்டில் படித்தவர். தாய்லாந்தில் அதிகாரத்தைக் கைப்பற்றித் தரும்படி நீண்ட நாட்களாக கெஞ்சிக் கொண்டிருந்தார். அதைதான் இப்போது செய்திருக்கிறேன்.

கே: தாய்லாந்தில் ராணுவமும் காவல்துறையும் ஆட்சியை கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் உங்களுக்கு எப்படி பங்கிருக்கிறது?

ப: தாய்லாந்து ராணுவத்தின் தலைமை தளபதி சோந்தி பூனியாரத் கால்தான் தாய்லாந்து நாட்டின் ஜனதா கட்சித் தலைவர். அதனால்தான் அவரை வைத்துப் புரட்சியை நடத்தினேன்.

கே: இதனால் உங்களுக்கு என்ன லாபம்?

ப: தமிழக ஜனதா கட்சித் தலைவர் சந்திரலேகாவை தாய்லாந்து ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கவிருக்கிறார்கள். அதன் மூலம் நான் தாய்லாந்தை அமெரிக்கா போல் ஆக்கிக் காட்டுவேன்.

கே: இப்படிதான் மதுரைக்கு எம்.பியானால் மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொன்னீர்கள்.

ப: சிங்கப்பூரை சிங்கப்பூர் ஆக்கவே 50 வருடங்கள் ஆனது. அதனால் பொறுமை அவசியம்.

கே: மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தலில் ஜனதா கட்சி போட்டியிடுகிறதா?

ப: எங்கள் கட்சி வேட்பாளரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

கே: அப்படி செய்ய அரசியல் சாஸனத்தில் இடம் இல்லையே?

ப: அரசியல் சாஸனத்தை எழுதியவர்கள் அதற்கு ஒரு விதியை சேர்த்திருந்தார்கள். அதை சோனியாவும் ராகுலும் சேர்ந்து அழித்து விட்டார்கள். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

கே: அப்படியே வழி இருந்தாலும் தி.மு.க போன்ற கட்சிகள் இதை ஆட்சேபிக்காதா?

ப: கருணாநிதியைப் பற்றி எனக்குத் தெரியாதா? பின் லேடனை கோபாலபுரத்தில்தான் ஒளித்து வைத்திருக்கிறார் கருணாநிதி. பின் லேடன் சொல்லிதான் மத்தியத் தொகுதியில் கவுஸ் பாட்ஷாவிற்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். இதை மத்திய மக்களிடம் அம்பலப்படுத்துவேன்.

கே: உங்கள் கட்சி மத்திய தொகுதியில் ஜெயித்தால் என்ன செய்வீர்கள்?

ப: நான் முதல்வராகிவிடுவேன். இப்போதே பல கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்னை முதல்வராக்க கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரங்கள் என்னிடம் இருக்கின்றன. போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறேன்.

வடக்கு மாசி வீதிகாரய்ங்களுக்கு சினிமாக்காரர்கள் மீதிருக்கும் மையல் அளவுக்கு வேறு யாருக்கும் இருக்குமா என்று தெரியவில்ல்லை. என் நண்பன் அரவிந்திற்கும் அவனது தம்பிக்கும் பானுப்ரியா மீது ஏகப்பட்ட காதல். அடிக்கடி அவரது வீட்டிற்கு போன் செய்வார்கள். பெரும்பாலும், “அம்மா அவுட்டோர் போயிருக்காங்க” என்ற பதில்தான் வரும். ஒரு முறை அரவிந்த் போன் செய்தபோது, பானுப்ரியாவே போனை எடுத்துவிட்டார். வெலவெலத்துப்போய்விட்டான் அரவிந்த். ஆபாசமான நோக்கத்துடன்தான் போன் செய்திருந்தான் என்றாலும், அதை பானுப்ரியாவிடமே கேட்கும் துணிச்சல் அவனுக்கு இல்லை. பதறிப்போய், “ஓங்க ரசிகன் நானு. ஒரு போட்டோ அனுப்புங்க” என்று சொல்லி, அட்ரசையும் கொடுத்துவிட்டு போனை வைத்துவிட்டான். ரெண்டு நாளில் போட்டோவும் வந்து சேர்ந்தது.

கெட்ட காரியம் செய்யும் நோக்கம் கொண்டிருந்த அரவிந்த், இந்த போட்டோவில் எப்படி திருப்தியடைவான்? இனி போனில் பேசினால் சரிப்படாது என்று முடிவுசெய்த அரவிந்தும் அவனது தம்பியும் பானுப்ரியாவுக்கு கடிதம் எழுத முடிவு செய்தனர். ஒருநாள் எல்லோரும் தூங்கிய பிறகு படுக்கையறையில் அமர்ந்து கொண்டு அந்த கடிதத்தை எழுத ஆரம்பித்தனர். “அன்புள்ள பானுப்ரியா அவர்களுக்கு, நாங்கள் உங்களுக்கு அரிஸ்டோகிராட் பார்ட்டி வைக்க ஆசைப்படுகிறோம். அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை” என்ற் இரண்டு வரிகளே கடிதத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த வரலாற்று புகழ்பெற்ற கடிதம் பானுப்ரியாவுக்குப் போய் சேர்வதற்கு முன் ஒரு பெரும் விபத்து நேர்ந்துவிட்டது.

அடுத்த நாள் காலையில் எதற்காகவோ அவர்களது அறையில் நுழைந்த அவர்களது தந்தை அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டார். உடனே அவர்களை எழுப்பாமல், வெளியில் வந்து, ஒரு வேப்பங்குச்சியை உடைத்து கையில் வைத்துக்கொண்டு, அவர்களை எழுப்பினார். அவர்கள் கண்ணை திறந்ததும், விளாறு விளாறு என விளாறி விட்டார். “ஏண்டா, எவன் காசை எடுத்து எவளுக்கு பார்ட்டி வைக்கிறீங்க? அது என்னடா அரிஸ்டோகிராட் பார்ட்டி?” என்று புகுந்து விளையாடிவிட்டார்.

அரிஸ்டோகிராட் பார்ட்டி என்றால் என்ன என்ற சந்தேகம் எங்களுக்கும் இருந்தது. அதைக் கேட்டவுடன், வேப்பங்குச்ச்சியால் ஏற்பட்ட புண்ணை சொறிந்து கொண்டே கர்வமாகப் பார்த்தான் அரவிந்த். “அதாண்டா, ஒரு நாள் புல்லா அவ நம்மகூட இருப்பா. என்னவேனா செய்யலாம். எல்லாச் செலவையும் நாம பார்த்துக்கனும். நாமதான் அரிஸ்டோகிராட்டு” என்றான் அரவிந்த். இந்த அரிஸ்டோகிராட்டை அவன் அப்பா அடித்த அடியால் ஏற்பட்ட காயம் ஆற 3 வாரங்கள் பிடித்தது.

சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சி தந்த லாபத்தால் பல பதிப்பாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஒரு பதிப்பாளர் இன்னொரு பதிப்பகத்தில் வேலை பார்ப்பவரிடம் இப்படி சொன்னாராம்: “காலச்சுவடு, உயிர்மை பதிப்பகத்துக்கு என்ன ஒரு பத்தாயிரத்துக்கு வித்திருக்கும். ஏன்னா எனக்கே அவ்வளவுதான் வித்திருக்கு.” இதில் காமடி என்னான்னா, படிக்க முடியாத அறுவை நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் தமிழ்நாட்டில் யார் எழுதினாலும் தேடிப் பிடித்து 300 பிரதிகள் அச்சிடுபவர் இவர். ஆனால் என்ன்வோ தமிழ்நாட்டின் பென்குவின் பதிப்பக உரிமையாளரைப் போல “ஏன்னா, எனக்கே..” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னதைக் கேட்டதும் வடக்குமாசி வீதியின் வசிக்கும் நம்ம பய ஒருத்தன் ஞாபகம் வந்தது.
அவன் பெயர் ரங்கசாமி. என்னுடன் பள்ளியில் படித்தவன். பத்தாவதில் பெயிலானவுடன் கஜினி முகமதுவைப் போல பலமுறை படையெடுத்ததால் பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கே இவன் விண்ணப்பத்தைப் பார்த்துப் பார்த்து போரடித்துப் போனதில், ஒரு வழியாக ஏழாண்டுகள் கழித்து பாஸ் போட்டுவிட்டார்கள். ஒரு முறை ரேஷன் கடையில் அவனைப் பார்க்க நேர்ந்தது. நான் அப்போது எம்.ஏ படித்துக் கொண்டிருந்தேன். ரங்கசாமி பத்தாவது பாஸ் செய்த பூரிப்பில் இருந்தான். “என்னடா பண்ற” என்றான். “எம்.ஏ படிக்கிறேன்” என்று சுதாரிப்பாக வரிசையைக் கவனித்துக் கொண்டே பதில் சொன்னேன். ஏனென்றால் இப்படி பேச்சை ஆரம்பித்து ஒரு முறை எனக்கு முன்னால் மண்எண்ணையை வாங்கிக் கொண்டு ஓடிவிட்டான் ரங்கசாமி. “எம்.ஏவா படிக்கிற? அப்போ 12வது?” என்றான். “இம்மாதிரி கேள்விகள் ரங்கசாமியிடம் சகஜம். அதனால் பொறுமையாக, “12வது பாஸ் பண்ணிட்டேன்டா” என்றேன். “அவனும் விடாமல், “பத்தாவது?” என்றான். “அதையும் பாஸ் பண்ணிட்டேன்” என்றேன். “பத்தாவதுல கணக்கு பாஸ் பண்ணியா?” என்றான். “கணக்கு பாஸ் பண்ணாம எப்படிடா 11வது சேர முடியும்?” என்றேன் எரிச்சலோடு. “கோவப்படாதேடா. ஏன்னா, எனக்கே 10வது கணக்கு வரலையே, நீ எப்படி பாஸ் பண்ணினேனன்னு தெரிஞ்சுக்கிறத்தான் கேட்டேன்” என்றான் ரங்கசாமி.

ஆழ்வார் படப்பிடிப்பில் இருந்த அஜித்தை சந்தித்த போது, தன் முந்தைய படங்களின் தோல்விக்கெல்லாம் தன் காரணமல்ல என்று சொன்னார். பல்வேறு நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

கே: உங்களுடைய சமீபத்திய படங்கள் ஏதும் ஓடவில்லையே?

ப: நான் நடித்திருக்கிறேன் என்பதாலேயே அவை ஓடவில்லை. ரசிகர்கள் திரையரங்குகளின் பக்கம் வருவதையே தவிர்த்தனர். இதற்கு நான் பொறுப்பாக முடியாது.

கே: உங்களுக்கு போட்டியாக நடிக்க வந்த விஜய் எங்கேயோ போய்விட்டார். நீங்கள் இன்னும் செட்டிலாகவில்லை.

ப: என்னை அழ வைப்பதுதான் உங்கள் நோக்கமா?

கே: சூர்யா-ஜோதிகா திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: எல்லோரும் அவர்களைப் பற்றியே பேசுவதை கேட்டால் எரிச்சலாக இருக்கிறது. எனக்கும் ஷாலினிக்கும் திருமணம் நடந்த போது அப்படி பேசினீர்களா?

கே: வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் படம்கூட நன்றாக ஓடுகிறது.

ப: சிம்பு தேவனுக்கும் எனக்கும் ஏற்கனவே பிரச்னை உண்டு. இதனால் வேண்டுமென்றே அவர் வடிவேலுவை வைத்து நல்ல படங்களை எடுக்கிறார். இதை நான் சும்மா விட போவதில்லை. இனி எனக்கும் வடிவேலுவுக்கும்தான் போட்டி.

கே: இப்போது ஆழ்வார் என்ற படத்தில் நடிக்கிறீர்கள். கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியான் என்று ஒரு பாத்திரம் இருப்பது தெரியுமா?

ப: இந்த ஆழ்வார் யாருக்கும் அடியான் அல்ல.

கே: பரமசிவன் படத்தில் பாதி வரை நீள தலைமுடியுடன் வந்தீர்களே, எதற்காக?

ப: வழக்கம் போல கதைக்கும் அதற்க்கும் சம்பந்தமில்லை. ஷுட்டிங் ஆரம்பிக்கும் தினத்திற்கு முன்பு முடி வெட்டிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஷூட்டிங்கிற்கு முந்தைய தினம் எல்லா முடிவெட்டும் கடைகளையும் மூடும்படி செய்துவிட்டார்கள் எனது போட்டியாளர்கள். பிறகு ஒரு மாதம் அந்த ஏரியாவில் முடிவெட்டும் கடைகளே திறக்கவில்லை.

கே: போட்டியாளர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?

ப: வடிவேலுவுடன் நடிக்கும் போண்டா மணியையும் முத்துக் காளையயும்தான் சொல்கிறேன். அவர்களை ஜெயிக்காமல் விடமாட்டேன்.

முனியாண்டி குடித்துவிட்டு வந்த நாளி்ல்,
வீட்டில் சாம்பார் வைத்திருந்தால்,
அவர் மனைவியைப் பார்த்து,
 

திடுமாடு நெடுமுருகா,
நித்தம் நித்தம் இந்த இழவா,
வாத்தியாரு சாவாரா,
வயித்தெரிச்சல் தீராதா?

ஏண்டி, தினம் என்னை சாம்பார்
வைச்சே கொல்லப் பாக்குறீ்ங்களா? என்ற வரிகளை
ஒரு மந்திரம் போலச் சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவார்.

முனியாண்டிக்குப் பிடித்த மற்றொரு வரி: “நடந்தவை
நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும்.” (குடித்துவிட்டு கலாட்டா செய்தபின், மைத்துனர் பொறி பறக்க அடிக்கும்போது
சொல்லும் வார்த்தைகள் இவை.)

இந்தப் பதிவின் தலைப்பில் வரும் முனியாண்டி
வடக்கு மாசி வீதியின் ஆயிரக்கணக்கான குடிகாரர்களில் ஒருவர். குடித்துவிட்டு மனைவியை அடிப்பது, மகன்,
மைத்துனன் ஆகியோரிடம் அடிவாங்குவது இவரது அன்றாட வழக்கம்.
இந்தச் சண்டைகள் ஒரு முறை பெரிதாகி, முனியாண்டியின் மனைவி
பிறந்தவீட்டுக்குப் போய்விட்டார். முனியாண்டியின் வீட்டின் ஒரு பகுதியில் தனபால் என்பவர் சைக்கிள் கடை வைத்திருந்தார். முனியாண்டிக்கு ஜெயராஜ்
என்றொரு நண்பர் உண்டு. அவர் அடிக்கடி தனபாலின் கடையில் வந்து கடன் கேட்பதுண்டு. தனபாலிடமிருந்து ஒரு பைசா பெயராது என்றாலும் இப்படிக்
கடன் கேட்பதே, தனபாலுக்கு பெரிய எரிச்சலாக இருந்தது.

சம்பவம் நடந்த நாளன்று, முனியாண்டி வழக்கம் போல நன்றாகக் குடித்துவிட்டு, நண்பர் ஜெயராஜுடன் மனைவி இல்லாத வீட்டிற்கு வந்தார். ஜெயராஜை தனபாலின் கடைக்கு அருகில் நிற்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள்
சென்றார். அந்த சமயத்தில் தனபாலின் கடைக்கு அருகில் தனபாலின் நண்பர்கள் மூன்று பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் ஜெயராஜ்
போய் அமர்ந்து பேச்சுக் கொடுத்தார். அவர்கள் ஜெயராஜை சட்டை செய்யவில்லை. தன்னை மதிக்காத அவர்களை ஏக வசனத்தில் பேச ஆரம்பித்த ஜெயராஜ்,
திடீரென சில கெட வார்த்தைகளையும் எடுத்துவிட்டார்.
நண்பர்கள் மூவரும் தனாபாலுக்கு கண்ணைக் காட்டினார்கள். தனபால் கடையிலிருந்து எழுந்துவந்து, ஜெயராஜை நெருங்கினான். அடுத்த சில நொடிகளில் ஜெயராஜை நான்கு பேரும் நொறுக்க ஆரம்பித்தார்கள். பத்துப் பதினைந்து வினாடிகளில் நால்வரின்
காலடியில் மிதிபட்டுக் கொண்டிருந்தார் ஜெயராஜ்.

இப்படி அடிதடி ஏதாவது நடந்தால் வடக்கு மாசி வீதியில் ஒரு பெரிய கூட்டம் குழுமிவிடும். சண்டையை யாரும்
விலக்கிவிடாதபடி கூட்டத்தினர் கவனித்துக் கொள்வார்கள். அதே போல கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில் முனியாண்டியும் நின்றுகொண்டிருந்தார்.
அவமானத்திலும் வலியிலும் துடித்த ஜெயராஜ்,
“முனியாண்டி, முனியாண்டி காப்பாத்து” என்று கதற ஆரம்பித்தார். கூட்டத்தினர், முனியாண்டியைப் பார்த்து, “என்ன முனியாண்டி, உன் பேரைச் சொல்லிக் கத்துறான். பயலுகள விலக்கி விடாம இருக்க” என்று கேட்டார்கள். பதறிப்போன முனியாண்டி, “இது யாருன்னே எனக்குத் தெரியல. என்ன வம்பிழுத்தாரோ, நம்ம தனபால் தம்பி போட்டி அடிச்சிக்கிட்டிருக்கு” என்று சொன்னார். அடி வாங்கிக் கொண்டிருந்த ஜெயராஜ் அதுவரையிலும் முனியாண்டி தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்பிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டவுடன், சட்டென்று அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தார். முனியாண்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெகு நேரம் கழித்து வீட்டுக்குள்ளிருந்து ஒரு மொட்டை அரிவாளை எடுத்து வந்து, தனபாலின் கடைக்கு அருகில் போட்டார். “வாங்கடா, இப்ப யாராவது வந்து அடிங்கடா”
என்று ஊரடங்கிய பின் கத்த ஆரம்பித்தார். கடையை
அடைத்துக் கொண்டிருந்த தனபால், “என்ன மாமா,
சத்தம் ரொம்பப் பலமா இருக்கு” என்று கேட்டவுடன்,
முனியாண்டியின் முகத்தில் பீதி பரவியது. அரிவாளை
எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

மதுரையில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் மற்றொரு தின்பண்டம் பேரீச்சம்பழம். ஒரு அகலமான கோபுரம் போல, மிகுந்த பளபளப்புடன் வண்டிகளில் இவை குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோபுரத்தைப் பார்க்கும் வெளியூர்காரர்கள் (பெரும்பாலும் ஐயப்ப சாமிகள்) இதை வாங்காமல் தப்பிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. கடையில் கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் விலையில் பாதி விலைக்கு இங்கே கிடைக்கும்.

இவை ஏன் இவ்வளவு குறைவான விலையில் விற்கப்படுகின்றன? இவை எங்கிருந்து இந்தக் கடைக்காரர்களுக்கு வருகின்றன என்பது யாருக்கும் தெரியாத மர்மம். மிக அழுக்கான, நைந்துபோன சாக்குப் பைகளில் இவை கடைக்காரர்களின் கையில் கிடைக்கும். அந்தப் பைகளிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளியில் எடுக்கப்படும் பேரீச்சம்பழங்களை, வண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக குவித்து, கோபுரம்போல கட்ட ஆரம்பிப்பார்கள். அந்தக் கோபுரத்தின் வெளிப்புறப் பகுதி, மிகுந்த பிசுபிசுப்புடனும் பார்க்க அருவருக்கத்தக்க வகையிலும் காட்சியளிக்கும். வண்டியின் அடியில் இருக்கும் ஒரு அழுக்கான வாளியை எடுத்துச் சென்று, எங்கிருந்தோ தண்ணீர் கொண்டுவந்து, கோபுரத்தின் வெளிப்புறத்தைத் துடைக்க ஆரம்பிப்பார்கள். கோபுரம் பளபளக்க ஆரம்பிக்கும். கோபுரத்தின் நடுவில் ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பதித்து வைத்து, நான்கு ஊதுபத்திகளையும் கொளுத்திவைத்துவிட்டால், ஐயப்ப சாமிகளுக்கு பேரீச்சம்பழம் ரெடி. எல்லா ஐயப்ப சாமிகளும் ஏமாளிகளல்ல. சில உஷாரான சாமிகள் பளபளப்பான பேரீச்சம்பழ கோபுரத்திலிருந்து சில பழங்களை உதிர்த்து எடுத்து, சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறதென்று தலையாட்டிவிட்டுத்தான் வாங்குவார்கள். பிசுபிசுப்பை தங்கள் அழுக்குத் துண்டில் துடைத்துக்கொள்வார்கள். இந்த டைப் பேரீச்சம்பழங்கள் சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதிகளில் மட்டுமே கிடைக்கும். உள்ளூர்காரர்கள் சிலரும் திருப்தியுடன் இவற்றை வாங்கிச் செல்வதுண்டு. சென்னையின் சில பகுதிகளிலும் இதே டைப் பேரீச்சம்பழம் விற்பதாகச் சொல்கிறார்கள்.