மதுரையில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் மற்றொரு தின்பண்டம் பேரீச்சம்பழம். ஒரு அகலமான கோபுரம் போல, மிகுந்த பளபளப்புடன் வண்டிகளில் இவை குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோபுரத்தைப் பார்க்கும் வெளியூர்காரர்கள் (பெரும்பாலும் ஐயப்ப சாமிகள்) இதை வாங்காமல் தப்பிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. கடையில் கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் விலையில் பாதி விலைக்கு இங்கே கிடைக்கும்.

இவை ஏன் இவ்வளவு குறைவான விலையில் விற்கப்படுகின்றன? இவை எங்கிருந்து இந்தக் கடைக்காரர்களுக்கு வருகின்றன என்பது யாருக்கும் தெரியாத மர்மம். மிக அழுக்கான, நைந்துபோன சாக்குப் பைகளில் இவை கடைக்காரர்களின் கையில் கிடைக்கும். அந்தப் பைகளிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளியில் எடுக்கப்படும் பேரீச்சம்பழங்களை, வண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக குவித்து, கோபுரம்போல கட்ட ஆரம்பிப்பார்கள். அந்தக் கோபுரத்தின் வெளிப்புறப் பகுதி, மிகுந்த பிசுபிசுப்புடனும் பார்க்க அருவருக்கத்தக்க வகையிலும் காட்சியளிக்கும். வண்டியின் அடியில் இருக்கும் ஒரு அழுக்கான வாளியை எடுத்துச் சென்று, எங்கிருந்தோ தண்ணீர் கொண்டுவந்து, கோபுரத்தின் வெளிப்புறத்தைத் துடைக்க ஆரம்பிப்பார்கள். கோபுரம் பளபளக்க ஆரம்பிக்கும். கோபுரத்தின் நடுவில் ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பதித்து வைத்து, நான்கு ஊதுபத்திகளையும் கொளுத்திவைத்துவிட்டால், ஐயப்ப சாமிகளுக்கு பேரீச்சம்பழம் ரெடி. எல்லா ஐயப்ப சாமிகளும் ஏமாளிகளல்ல. சில உஷாரான சாமிகள் பளபளப்பான பேரீச்சம்பழ கோபுரத்திலிருந்து சில பழங்களை உதிர்த்து எடுத்து, சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறதென்று தலையாட்டிவிட்டுத்தான் வாங்குவார்கள். பிசுபிசுப்பை தங்கள் அழுக்குத் துண்டில் துடைத்துக்கொள்வார்கள். இந்த டைப் பேரீச்சம்பழங்கள் சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதிகளில் மட்டுமே கிடைக்கும். உள்ளூர்காரர்கள் சிலரும் திருப்தியுடன் இவற்றை வாங்கிச் செல்வதுண்டு. சென்னையின் சில பகுதிகளிலும் இதே டைப் பேரீச்சம்பழம் விற்பதாகச் சொல்கிறார்கள்.