பொதுவாழ்வில் வேலை நெருக்கடி அதிகமாக இருந்ததால் இந்தப் பதிவின் பக்கம் கவனத்தைத் திருப்ப முடியாமல் போய்விட்டது. எப்போது பதிவு எழுதுவீர்கள் என்று மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் நேரிலும் விசாரித்த வாசகப் பெருமக்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏண்டா, மொத்த ஹிட்டே இன்னும் இரண்டாயிரத்தைத் தாண்டல. அதற்குள் இவ்வளவு பில்டப்பா என்று காசிமேடு பார்த்தசாரதி (காசிமேட்டிலும் பார்த்தசாரதிகள் உண்டு. திருவல்லிக்கேணியிலும் காளி, கபாலிகள் உண்டு) கேட்பது காதில் விழுகிறது. ஓரு விளம்பரந்தான்…
இந்தப் பதிவு டிசம்பர் 28ந் தேதி தி இந்து நாளிதழின் இணைப்பாக வெளிவந்த மெட்ரோ ப்ளஸில் பிரசுரமான The Fab Five of 2006 என்ற கட்டுரையைப் பற்றியது. கட்டுரையை எழுதியவர் சுதீஷ் காமத். தி இந்துவில் நீண்ட நாட்களாக சினிமா தொடர்பான கட்டுரைகளையும் சினிமா விமர்சனங்களையும் எழுதிவருபவர்.
இந்தக் கட்டுரையில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில, இந்தி, தமிழ்ப் படங்களில் தலா முதல் ஐந்து படங்களைப் பட்டியலிட்டு, அவை அந்த இடங்களைப் பெற்றதற்கான காரணங்களை எழுதியிருந்தார். ஆங்கிலத்தில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற படங்கள்: The Departed, The Prestige, Pirates of the Caribean: Dead man’s Chest, Happy Feet, Casino Royale. இவற்றில் The Departed படம் இன்னும் இங்கே ரிலீஸாகவில்லை. டிவிடியில் பார்த்துவிட்டு, அந்தப் படத்திற்கு முதலிடம் கொடுத்துவிட்டார். சுதீஷ் காமத்தே சொல்லிவிட்டார் என்று ரசிகப் பெருமக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். “the performances are timed to perfection just like the taut screenplay is executed to precision with enough ammunition and technical wizardry but at a more basic level, what will take `MI-III’ to the remotest of villages around the world, irrespective of the dubbing, is the visual story-telling: Exactly what made James Bond the most successful film franchise.” என்றெல்லாம் புலம்பித் தள்ளிய Mission Impossible – III படத்திற்கு இந்தப் பட்டியலில் தலைவர் இடம் ஏதும் வழங்கவில்லை. இதயத்தில் இடம் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. இந்தப் படம் வெளிவந்தபோது, மெட்ரோ ப்ளஸில் 7 பத்திகளில் சுமார் அரைப்பக்கத்திற்கு இந்தப் பாடாவதி படத்தைப் பற்றி ஆ, ஊ என்று குமுறித்தள்ளியிருந்தார் சுதீஷ். பிறகு ஞானம் வந்து, இது மோசமான படம் என்று உணர்ந்திருப்பார் போலிருக்கிறது.
தமிழ்ப் படங்களுக்கு தலைவர் வழங்கிய தரவரிசை பி்ன்வருமாறு: 1. வேட்டையாடு விளையாடு, 2. ஈ, 3. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, 4. புதுப்பேட்டை, 5. சில்லுனு ஒரு காதல். வருட இறுதியில் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கும் வெயில் படம் பட்டியலிலேயே இல்லை. அந்தப் படத்திற்குப் பதிலாகத்தான் சில்லுனு ஓரு காதல் படமாம். வெயிலைவிட சில்லுனு ஓரு காதல் எப்படி நல்ல படம் என இப்போது சுதீஷ் காமத் அவர்களே விளக்குவார்கள்: “Director Krishna’s Debut reminds you of the rawness ManiRatnam showed in the early phase of his career. The film is exceptionally good in parts and terrible when the director tries to sneak in Vadivelu and his brand of humour. But for such unwarranted speed – breakers, this leisurely paced film is an interesting watch, just about beating newcomer Vasantha Balan’s Veyil for the slot. Veyil has an infinitely superior first half, but the second half ridden with nearly four songs in less than 30 minutes completely ruins the flow of the narrative.”
நியாயமாகப் பார்த்தால் இந்தப் பட்டியலில் வெயில் படம்தான் முதலிடத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சுதீஷ் காமத்திற்கு பரிச்சயமில்லாத ஒரு வாழ்க்கையைப் பற்றி படம் பேசுவதால் இந்தப் படத்தை அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், விஷயம் அதற்கு மேலும் இருக்கிறது.
சுதீஷ் நீண்ட நாட்களாக ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். படத்தி்ன் பெயர் The Four Letter Word. சமீபத்தில் அந்தப் படத்தைத் திரையிட்டார். கௌதம் மேனன், சூர்யா போன்ற பிரபலங்களை அந்த ஷோவிற்கு வரவழைத்திருந்தார். கௌதம் படத்தைப் பற்றி பிரமாதமாக ஏதும் சொல்லவில்லை. சூர்யா படத்தைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டாராம். அந்தப் படத்தில் மாதவன் நடித்திருந்த கௌரவப் பாத்திரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டாராம். இத்தனைக்கும் அந்தப் படம் படு அமெச்சூரான, பாடாவதிப் படம். இந்தப் படத்திற்கு சூர்யா கொடுத்த மரியாதைக்கு பதில் மரியாதைதான் அவரது சொந்தப் படமான சில்லுனு ஓரு காதல் படத்திற்கு ஐந்தாவது இடம் கொடுத்தது.
சத்யம் திரையரங்கைப் பொறுத்தவரை, சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பு. எவ்வளவு மோசமான படமாக இருந்தாலும், எவ்வளவு பழைய படமாக இருந்தாலும் சனிக்கிழமை இரவுக்காட்சிக்கு டிக்கெட் கிடைக்காது. ஆனால், சில்லுனு ஓரு காதல் திரையிடப்பட்டிருந்தபோது, படம் துவங்கி 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நீங்கள் கவுண்டருக்குப் போனால், கையில் பத்து ரூபாயைக் கொடுத்து டிக்கெட்டும் கொடுத்த கொடுமை நடந்தது. வசூல் ரீதியாகவோ, கலை ரீதியாகவோ எந்த விதத்திலும் குறிப்பிடத்தக்க படமில்லை அது. ஆனால், சுதீஷைப் பொறுத்தவரை வெயிலைவிட சிறந்தபடமாம். கர்நாடக இசைக் கலைஞர்களைப் பற்றி இப்படி ஓரு தர வரிசை தி இந்துவில் வெளிவருமா?