Posted by கட்டியக்காரன் under
சும்மா ஒரு கருத்து [14] Comments
இரு வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு இதுதான்: சிவப்பாக இருப்பவர்கள் சமூகத்தில் அதிக மதிப்புப் பெறுகிறார்களா? தன்னுணர்ச்சி மிக்க யாருக்கும் அன்றைய விவாதம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது என்று பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் சிவந்த நிறமுடையவர்கள். சிவந்த நிறமுடையவர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற தொனியிலேயே எல்லோரும் பேசினார்கள். அவர்களிடமிருந்து வெளிவந்த அகங்காரமும் திமிரும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தன. அப்படி மதிப்பு ஏதும் கிடையாது என்று வாதிட்டவர்களின் வாதம் மிகப் பரிதாபமாக இருந்தது. தங்கள் நிலைக்குத் தாங்களே வெட்கப்படுவது போலவே பெரும்பாலானவர்கள் பேசினார்கள்.
நிறவெறி என்பது ஏதோ அமெரிக்க, ஐரோப்பிய சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்திருக்க வேண்டும். உண்மையில் நம்முடைய நிறம் குறித்த பிரக்ஞை நமக்குள் ஊறிப்போயிருக்கிறது. சிவந்த நிறமுடையவர்களுக்கு பெருமிதத்தையும் கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையையும் நம் சமூகமே ஏற்படுத்திவிடுகிறது. இதில் டிவி விளம்பரங்களின் பங்கு மிகக் கணிசமானது. சற்று மாநிறமுள்ள பெண்ணுக்கு கல்யாணமே ஆகாதது போலவும், அவர் ஒரு க்ரீமைப் பயன்படுத்தி சிவந்த நிறம் பெற்றதும் கல்யாணம் நடப்பதுபோலவும் எத்தனை விளம்பரங்களில் காட்டப்பட்டுவிட்டன. நமக்கு சொரணை என்ற ஒன்று இருந்திருந்தால் இந்த விளம்பரங்களை எதிர்த்திருப்போம் இல்லையா?
சுமார் 80 சதவீத மக்கள் கறுப்பான மேனியுடையவர்களாக இருக்கும் ஒரு மாநிலத்தில் – சென்னைக்காரர்கள் கவனமாகப் படிக்கவும். மாநிலம் என்பது தமிழ்நாட்டைக் குறிக்கிறது. வெறும் சென்னையை மட்டுமல்ல – நீங்கள் சிவந்த நிறம் பெற வேண்டுமா என்று விளம்பரம் செய்வது எவ்வளவு பெரிய வன்முறை?
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயல்பாகவே கறுப்பு நிறம் உண்டு. சூரியக் கதிர்களால ஏற்படும் தோல்புற்று நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இயற்கையே தந்த ஏற்பாடு இது. இப்போதும் சிவந்த நிறமுடையவர்களே தோல்நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தும் கறுப்பாயிருப்பவர்களின் தாழ்வு மனப்பான்மையும் சிவந்த நிறமுடையவர்களின் திமிரும் சேர்ந்து, சிவந்த நிறமே உயர்வானது என்ற பரவலான கருத்தை உருவாக்கியிருக்கிறது.
Posted by கட்டியக்காரன் under
சும்மா ஒரு கருத்து [5] Comments
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மறு ஆய்வு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு என ஜனவரி 11ந் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒன்று. மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் பொதுவாக நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவை. அரசியல் சாஸனம் மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை எந்தச் சட்டமாவது மீறும் என்று நீதிமன்றம் நினைத்தால் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அதற்கு உண்டு.
1951ல் நிலச் சீர்திருத்தம் பற்றி ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த ஒரு சட்டம், அரசியல் சாஸனம் வழங்கிய சில உரிமைகளில் குறுக்கிட்டது. நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து சட்டத்தைக் காப்பாற்ற நினைத்த நேரு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணை என்ற ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த அட்டவணையின் கீழ் இயற்றப்படும் சட்டங்கள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படாது. இதைத் தொடர்ந்து பல சட்டங்கள் அந்தப் பிரிவின் கீழ் இயற்றப்பட்டன. அப்படி ஒரு சட்டம்தான் தமிழக அரசு இயற்றிய இடஒதுக்கீட்டுச் சட்டம்.
50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தன் ஒரு தீர்ப்பில் அறிவித்ததையடுத்து, இந்த 9வது அட்டவணையின் கீழ் தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவந்தது தமிழக அரசு. இதையொட்டி, 9வது அட்டவணையின் கீழ் உருவாக்கப்படும் சட்டங்களையும் நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிருக்கிறது நீதிமன்றம்.
இனி என்ன நடக்குமென்பது தெரிந்தகதைதான். முந்தைய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி 69 சதவீத இடஒதுக்கீடு ரத்துச் செய்யப்படும். மக்களின் அடிப்படை உரிமையில் இது குறுக்கிட்டது என்று காரணம் வேறு சொல்வார்கள். இவர்களின் நீதியைக் கேட்டால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதற்கு முன் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் இவர்கள் நடந்த கொண்ட விதத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
அரசியல் சாஸனத்தின் 21வது பிரிவு சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை இந்திய மக்களுக்கு வழங்குகிறது. வாழ்வதற்கான உரிமை, தனிநபர் சுதந்திரம், நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை ஆகியவற்றையும் இந்தப் பிரிவுதான் மக்களுக்கு வழங்குகிகது. 1975ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது, இந்த 21வது பிரிவையும் முடக்கி உத்தரவிட்டார் நமது குடியரசுத் தலைவர். அந்த சமயத்தில் உள்நாட்டு பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாத நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் சார்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை 5 மூத்த நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. 21வது பிரிவு முடக்கப்பட்டுவிட்டதால், அதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று வாதிட்டது அரசு. மக்களின் அடிப்படை உரிமை முடக்கப்பட்டிருப்பதை கண்டு இந்த மூத்த நீதிபதிகள் கொதித்திருக்க வேண்டும். செய்யவில்லை. 5 பேரில் நான்கு பேர் அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பெழுதினார்கள். நீதியரசர் கண்ணா மட்டுமே அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதினார். 69 சதவீத இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்படும் அடிப்படை உரிமையைவிட, நெருக்கடி நிலை கால அட்டூழியங்களினால், மிசாவினால் பாதிக்கப்பட்டது அதிகம். ஆனால் நம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேறுவிதமாகவே செயல்பட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இதையெல்லாம் சரிசெய்யும் என்று தோன்றுகிறது.
Posted by கட்டியக்காரன் under
நம்ம பயலுக [13] Comments
இந்தக் கதைகளின் நாயகனின் கற்பனைப் பெயர் அம்பி. எம்சிஏ பட்டதாரி. கதைகளைப் படித்துவிட்டு, இதெல்லாம் புருடா என்று சொல்லக்கூடாது. நிஜமாகவே அம்பி நடத்திய திருவிளையாடல்கள்தான் இவை. இந்தக் கதைகள் எல்லாம், ‘என்றாரே பார்க்கலாம்!’ என்று முடியும். கி.வா.ஜவின் சிலேடைத் தொகுப்புகளைப் படித்ததன் விளைவு அது.
*****
ஒரு முறை அம்பி நண்பர்களுடன் ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றான். சாப்பிட்டு முடித்தவுடன் கைகழுவுவதற்கான கிண்ணத்தைக் கொண்டுவந்து வைத்தார்கள். அதில் எலுமிச்சம்பழத் துண்டுகள் மிதப்பதைப் பார்த்த அம்பி, ‘சார் நான் லெமன் ஜூஸ் கேக்கவேயில்லையே’ என்றானே பார்க்கலாம்!
*****
அம்பி நண்பர்களுடன் ஒரு அசைவ உணவு விடுதிக்குச் சென்றான். கூட வந்த சிலர் சிக்கன் 65 ஆர்டர் செய்ததைப் பார்த்து, அம்பியும் அதை ஆர்டர் செய்தான். சிக்கன் வந்து சேர்ந்தது. அம்பிக்கு வந்ததே கோபம். ‘ஹலோ, நான் கோழிக்கறிக் கேக்கல. சிக்கன் 65 கேட்டேன். அதைக் கொண்டுவாங்க’ என்றானே பார்க்கலாம்!
*****
அம்பி ஒரு முறை என் நண்பனின் வீட்டிற்கு வந்தான். நண்பனின் தாயார் எல்லோருக்கும் அன்னாசிப் பழரசம் கொடுத்தார். ‘இது என்ன ஜூஸ்டா மாப்ள’ என்று என் நண்பனிடம் கேட்டான் அம்பி. பைன்ஆப்பிள் என்று பதிலளித்தான் நண்பன். ‘என்னடா புதுசா இருக்கு. ஆப்பிளப் போட்டு, எப்படி பைன் பண்ணுவீங்க’ என்றானே பார்க்கலாம்!
*****
ஒருமுறை எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, சென்னையிலிருந்து அப்போதுதான் மதுரைக்கு வந்து சேர்ந்திருந்த ஓரு நண்பனும் எங்கள் கூட்டத்தில் ஐக்கியமானான். ‘வீட்டுல அவசரமா வரச்சொன்னாய்ங்க. அதுனால ஃப்ளைட்டப் புடுச்சு வந்தேன்’ என்றான் அவன். அம்பி கொதித்துப் போனான். ‘டேய், உங்கிட்ட பாஸ்போர்ட்டே இல்ல. எப்பிடிடா ஃப்ளைட்ட வந்த?’ என்றானே பார்க்கலாம்!
Posted by கட்டியக்காரன் under
சும்மா ஒரு கருத்து [5] Comments
தமிழக தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம்தோறும் நடந்துவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த வருடம் நடத்தலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதற்குப் பல நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. சமீபத்தில் சென்னைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பால் மிகுந்த வேதனையுற்றேன். இந்தத் தீர்ப்பு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் எதிரானது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களும் ஓட்டுக்காக அரசியல்வாதிகளும்தான் ஜல்லிக்கட்டு வேண்டுமென்று விரும்புகின்றனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். சமீபகாலமாக மீடியாக்களிலும் இதுபற்றிய விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதினால், மாடுகளுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது; மாடுபிடி வீரர்கள் சாகிறார்கள் என்ற வாதங்கள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பை பல வருடங்கள் நேரில் கவனித்திருக்கிறேன். அந்த மாட்டை வளர்க்கும் ஒவ்வொரும் அதைத் தங்கள் உயிராக நினைத்துத்தான் வளர்க்கிறார்கள். அதை பிறர் நெருங்கக்கூட விடமாட்டார்கள். ஏன், பிறரைப் பார்க்கக்கூட விடமாட்டார்கள். எல்லாம் ஜல்லிக்கட்டு என்ற அந்த ஒரு நாளுக்காகத்தான். இதில் அந்தக் காளை களத்தில் நிற்பது 30 வினாடிகள்கூட இருக்காது. அதற்குள் அந்த மாட்டை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் மாடு வென்றதாக அறிவிக்கப்படும். மாடு வளர்த்தவருக்கு சைக்கிள், கட்டில், சில்வர் குடம் போன்ற ஏதாவது பரிசு கிடைக்கும். இந்தப் பரிசி்ன் மதிப்பு, மாட்டின் ஒரு மாதச் செலவுக்குக்கூட காணாது. ஆனால், மாடு வளர்ப்பவர் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த வெற்றியை வருடம் முழுக்கக் கொண்டாடிக் கொண்டிருப்பார். மாட்டுக்கு சாராயம் புகட்டுவது, கண்ணில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவது, மூக்குப் பொடி போடுவது என்பதெல்லாம் வெகு அரிதான சமாச்சாரங்கள். சினிமாவில் இம்மாதிரி காட்சிகளைப் பார்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் எல்லோரும் மாடுகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று குரல் கொடுப்பது மேட்டுக்குடித் திமிர்.
அதேபோல, மாடுபிடிக்க களத்தில் இறங்கி உயிர்துறப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வேடிக்கை பார்க்கப் போய், தாறுமாறாக மாட்டின் முன் விழுந்து காயம் படுபவர்கள்தான் அதிகம். இந்நிலையில், வேடிக்கை பார்க்க வருபவர்களை முறைப்படுத்த வேண்டும்; நல்ல மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். அதைவிட்டுவிட்டு, இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது நியாயமாகாது.
இந்த விவாதத்திற்குள் இறங்குவதற்கு முன், ஒருமுறையாவது ஜல்லிக்கட்டை நேரில் காணவேண்டும். முரட்டுக்காளை படத்தைப் பார்த்துவிட்டெல்லாம் ஜல்லிக்கட்டைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூடாது. குறைந்தது, செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலையாவது படிக்க வேண்டும். இன்னும் பலர் மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, ஜல்லிக்கட்டு ஆகிய எல்லாம் ஒன்று என நினைத்துக் கொண்டு விவாதத்தில் இறங்கி காதைப் புண்ணாக்குகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத ஐடி கூலித் தொழிலாளர்கள் ஏசி அறைக்குள் இருந்துகொண்டு இதுபற்றியெல்லாம் கருத்துச் சொல்வதுதான் இருப்பதிலேயே வேடிக்கை. வாழ்வின் எல்லா வசதிகளும் கிடைத்தவுடன் யாரையாவது திருத்தி நல்வழிப் படுத்த வேண்டுமென்று தோன்றுகிறது, பாவம். குழந்தைத் திருமணம், சதி போன்ற சமூகத் தீமைகள் இல்லாத காலகட்டம். சரி, ஜல்லிக்கட்டு விளையாடும் கற்கால மனிதர்களையாவது திருத்துவோம் என்று களத்தில் இறங்கிவி்டுகிறர்கள். எல்லாம் தலையெழுத்து.
இப்படி மனிதர்களைப் பற்றி அக்கறையோடு குமுறித்தள்ளும் மேனகா காந்தி, குஜராத்தில் அவருக்கு மந்திரி பதவி கொடுத்த பா.ஜ.க. முஸ்லிம்களை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தபோது கிளிக்கு தலைசீவி விட்டுக்கொண்டிருந்தாரா? இத்தனை நூற்றாண்டு ஜல்லிக்கட்டில் இறந்தவர்களைவிட, குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பா.ஜ.க.வையும் ஆர்.எஸ்.எஸையும் கலைக்கச்சொல்வாரா மேனகா? மாட்டார். பிறகு யார் மந்திரி பதவி கொடுப்பார்கள்?
Posted by கட்டியக்காரன் under
Uncategorized [3] Comments
வடக்கு மாசி வீதியின் வாசகர்களில் எத்தனை பேர் ஜனவரி 1ந் தேதியன்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி அவர்களை நோகடித்தீர்கள் என்று தெரியாது. மற்றவர்களோடு ஒப்பிட்டால் எனக்கு மிகக் குறைவாகவே வாழ்த்து அழைப்புகள் வந்தன. அன்று மதியம் வரை என் கைபேசியை நான் அணைத்து வைத்திருந்தது இதற்கு முக்கியமான காரணம். என் உறவினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, Happy New Year! என்றார். நான் “புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றேன் பதிலுக்கு. இதென்ன தமிழில் சொல்கிறீர்கள் என்று சண்டைக்கு வந்தார் அவர். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. வாழ்த்துக்களை எல்லாம் ஆங்கிலத்தில்தான் சொல்ல வேண்டும் என்பது இங்கே மரபாகிப் போய்விட்டது. இதனால் பல விபத்துகளும் நேரிட்டுவிடுகின்றன.
என் நண்பன் ஓருவன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மிகுந்த ஆர்வமுடையவன். சென்னையில் இளைஞர்கள் எல்லாம் புத்தாண்டு இரவன்று கடற்கரையில் கூடுவதுபோல, மதுரை மாசிவீதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மேல மாசிவீதியில் இருக்கும் ஆர்யபவன் உணவத்தின் அருகில் கூடுவது வழக்கம். அதற்கு அருகில் ஏகப்பட்ட மதுபானக் கடைகள் இருப்பதுதான் இதற்குக் காரணம். என் நண்பனும் வருடம் தவறாமல் ஆர்யபவன் அருகில் ஆஜராகி, எல்லோரோடும் சேர்ந்து குடித்துவிட்டு, “Happy New Year” என்று தொண்டைகிழிய கத்திவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு படுத்து, அடுத்த நாள் பிற்பகல் 3 மணிக்கு எழுந்து தலைவலியோடு ஜனவரி 1ந் தேதியைக் கழிப்பது வழக்கம். இது கடந்த பத்து – பதினைந்து ஆண்டுகளாக நடந்துவரும் நிகழ்வு.
தொடர்ந்து ஜனவரி 1ந் தேதியன்று “Happy New Year” என்று சொல்லிப் பழகிவிட்டதால், அவன் புத்தாண்டு தினத்தையே ஹேப்பி நியூ இயர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று நினைத்துவிட்டான். அதனால், “போன ஹேப்பி நியூ இயர் அன்னைக்கு படத்துக்குப் போனப்ப…”, “அடுத்த ஹேப்பி நியூ இயரையாவது நல்லா கொண்டாடனும்டா” என எப்போதும் “நியூ இயர்” என்பதை “ஹேப்பி” என்ற வார்த்தையுடன் சேர்த்துத்தான் சொல்லுவான். அதனால் பிற நண்பர்கள் எல்லாம், “போன ஹேப்பி தீபாவளியன்னைக்கு”, “வர்ற ஹேப்பி அம்மாவாசையன்னைக்கு” என்று என் நண்பனை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தும் நண்பனுக்குப் புரிந்தபாடில்லை.
Posted by கட்டியக்காரன் under
நம்ம பயலுக [7] Comments
கோவில் திருவிழாக்களை ஒட்டி வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு தமிழகத்தி்ன் பல ஊர்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. மீடியாக்களில் அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த இந்த வழுக்குமரம் ஏறுதல், வடக்கு மாசி வீதியிலும் வருடாவருடம் நடந்துவருகிறது. அதைப் பற்றியதுதான் இந்தப் பதிவு.
வழுக்குமரம் என்பது சுமார் 50-60 அடி உயரமுள்ள, வழவழப்பான மரம். அது பெரும்பாலும் தேக்கு, பலா மரத்தாலானது. இந்த மரத்தின் அடிப்பாகம் சுமார் 3-4 அடி சுற்றளவும் மேல் பகுதி 2-3 அடி சுற்றளவையும் கொண்டதாக இருக்கும். திருவிழாக் காலங்களில் மட்டுமே மண்ணில் சுமார் 4 அடி ஆழக் குழியில் ஊன்றப்படும் இந்த மரம், பிற நாட்களில் சம்பந்தப்பட்ட கோவிலில் படுக்கை வசத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்.
வடக்கு மாசிவீதியில் இருக்கும் நவனீத கிருஷ்ணசுவாமி கோயிலில் நடக்கும் கிருஷ்ணன் பிறப்புத் திருவிழாவை ஒட்டி நடக்கும் உற்சவத்தில் இந்த வழுக்கு மரம் ஏறும் வைபவமும் ஒன்று. இரண்டாவது நாள் விழாவாக இந்த வைபவம் இடம்பெறும். அதாவது கிருஷ்ணன் பிறப்புக்கு அடுத்த நாள்.
கிருஷ்ணன் பிறப்புக்கு ஓரு வாரத்திற்கு முன்பே இந்த மரம் ஊன்றப்பட்டுவிடும். ஊன்றியவர்கள் அந்தப் பக்கம் சென்றவுடனேயே அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மரத்தைத் தொற்ற ஆரம்பித்துவிடுவார்கள். சிறுமிகள் வேடிக்கை பார்ப்பதோடு சரி. ஏறமுயன்று கிழே விழும் சிறுவர்களைப் பார்த்து கிணுங்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.
நாள் நெருங்க, நெருங்க மரத்தைச் சுற்றி பரபரப்பு அதிகரிக்கும். பொடியன்களை விரட்டிவிட்டு, கொஞ்சம் பெரிய பையன்கள் மரத்தில் ஏறிப் பழக ஆரம்பிப்பார்கள். வழுக்கு மரம் ஏறும் நாளன்று வடக்கு மாசி வீதியில் சத்தமில்லாமல் பல சமாச்சாரங்கள் நடக்கும். வீட்டுக்கு வெளியில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகள், சாக்குகள் திடீரெனக் காணாமல் போகும். ஆங்காங்கே சிறுவர்கள் அமர்ந்து மண்ணை அள்ளிக் கொண்டிருப்பார்கள்.
நான்கு மணியளவில் கோவிலைச் சேர்ந்த ஓருவர், ஒரு கையில் எண்ணை வாளி, ஒரு கையில் ஏணியுடன் மரத்தை நெருங்குவார். மரத்தில் ஏறிப் பழகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அவரை நெருங்கி, “யேவ், அழுக்கு வேட்டி எண்ணையை கம்மியா ஊத்துயா. ராவுல கவுனிச்சிரலாம்” என்பார்கள். அழுக்கு வேட்டி அவர்கள் பக்கமே திரும்பமாட்டார். வழுக்குமரத்திலிருந்து துரத்தப்பட்டு, அகதிகளாகி, சிறுமிகளோடு நின்று ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்துக் கையசைப்பார். நெருங்குபவர்களில் ஒருவன் கையில் வாளியைக் கொடுப்பார். ஏணி வழுக்கு மரத்தின் மீது சாற்றப்படும். அழுக்கு வேட்டி ஏணியின் உச்சிக்குப் போனபின், கையில் எண்ணெய் வாளியுடன் சிறுவனும் பி்ன்னால் ஏறிகொள்வான். வழுக்குமரம் முழுக்க எண்ணெய் பூசப்படும். சிறுவனுக்கு 50 காசு கொடுத்துவிட்டு, “டேய், உறியடிக்கிறத்துக்குள்ள யாரும் மரத்தத்த தொட்டீங்க அவ்வளவுதான்” என்று அங்கிருப்பவர்களைப் பார்த்து எச்சரித்துவிட்டு, பதில் மரியாதையாக கெட்ட வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டு புறப்படுவார்.
இன்னும் சிறிது நேரம் கழித்து, அதே போல ஏணி வைத்து மரத்தின் உச்சியில் பரிசுப் பொருள் கட்டப்படும். சுமார் ஏழு மணிக்கு சுவாமி கிருஷ்ணன் கோவிலிலிருந்து புறப்பாடாகி, மரத்தை நெருங்கும். இப்போது கிருஷ்ணன் உறியடிக்க வேண்டும். கோவிலின் தர்மகர்த்தா கிருஷ்ணனின் பாத்திரத்தை ஏற்று உறியடிப்பார் (இந்தக் காமெடியை வேறொரு பதிவில் தனியாக எழுதுகிறேன்).
அந்த நேரத்தில் வழுக்குமரத்தைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். வழுக்குமரத்திற்கு அருகில் இருக்கும் கட்டிடத்தில் வரிசையாக ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். உறியடிக்கப்பட்டவுடன் மரத்திற்கு அருகில் இருப்பவர்கள் மரத்தின் மீது ஏற ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் சிறுவர்கள். எண்ணெய் குளியல் நடத்தி, வழுவழுப்பாக இருக்கும் அந்த மரத்தில் இரண்டு அடி ஏறுவதற்குள் நாக்குத் தொங்கிப்போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக பத்தடி வரை அந்தச் சிறுவர்கள் ஏறிவிடுவார்கள். திடீரென எங்கிருந்தோ பத்துப் பதினைந்து சிறுவர்கள் தோன்றுவார்கள். ஏறிக் கொண்டிருக்கும் சிறுவர்களைவிட இவர்கள் சற்றுப் பெரியவர்கள். எறிக்கொண்டிருக்கும் சிறுவர்களின் காலைப் பிடித்து கீழே வீசிவிட்டு, இவர்கள் ஏற ஆரம்பிப்பார்கள்.
அருகிலிருக்கும் கட்டிடத்தில் வரிசையாக அமர்ந்திருக்கும் கூட்டம் இப்போது ஏறுபவர்களுக்குக் கைகொடுக்கும். மதிய வேளைகளில் காணாமல் போன, துணிகள், சாக்குகள் மண்ணில் புரட்டப்பட்டு ஏறிக்கொண்டிருப்பவர்களுக்கு வீசப்படும். அவர்கள் அதை வைத்து மரத்தைத் துடைத்துவிட்டு ஏறமுயல்வார்கள். இதுஒரு பத்து நிமிடம் நீடிக்கும்.
சட்டென கூட்டத்தில் ஓரு பரபரப்பு ஏற்படும். கூட்டத்திலிருந்து ஓரு இளைஞர் மரத்தில் ஏற ஆரம்பிப்பார். முக்கால்வாசி உயரம் ஏறியிருக்கும் எல்லா சிறுவர்களும் காலைப் பிடித்து இழுக்கப்பட்டு கிழே தள்ளப்படுவார்கள். அவருக்கு உதவியாக இன்னும் நான்கைந்து இளைஞர்கள் மரத்தில் ஏறுவார்கள். மண்ணில் புரட்டப்பட்ட சாக்குகள் தொடர்ந்து வீசப்படும். ஏறுபவர்களிடம் வெறிகூடும்.
இன்னும் ஓரு அடி. அந்த ஒரு அடியைக் கடந்தால் பரிசை அவிழ்த்துவிடலாம் என்றுக்கும்போது, ஏறியிருக்கும் எல்லோரும் மடமடவென கீழே விழுவார்கள். பின்பு எல்லாம் முதலிலிருந்து துவங்கும். முடிவில் அந்தப் பரிசுப் பொருள் அவிழ்த்து எடுக்கப்படும்.
பரிசு என்பது ஒரு வெள்ளைத் துண்டு, சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய் பழம், ஒரு ரூபாய் காசு ஆகியவைதான். இதற்காகவா இத்தனை பேர் அடித்துக்கொண்டார்கள் என்று தோன்றும். ஜல்லிக்கட்டில் செயல்படும் மனோபாவம்தான் இங்கேயும் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும்போது, பலரை வென்று, இலக்கை அடைவதில் இருக்கும் பெருமிதத்திற்கு என்ன பாடு வேண்டுமானாலும் படலாம் என்ற மனோபாவம்.
பிறகு அந்த வெள்ளைத் துண்டை ஏலம் விடுவார்கள். ரூ. 2,500 வரை அது ஏலம் போகும். அந்தக் காசை வைத்து சுமார் 40 -50 பேர் அன்றிரவு குடிப்பார்கள். சாப்பிடுவார்கள். மரம் ஏறியதால் உடலில் ஏற்பட்ட காயம் ஆற இரண்டு வாரங்கள் பிடிக்கும். ஆனால், இந்த அனுபவம் வருடம் முழுக்க பேசப்படும்.