February 2007


North Masi StreetNorth Masi Street 
வடக்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி என்று எழுதினால் மட்டும் போதுமா? அந்த வீதி எப்படி இருக்கும் என்று காட்ட வேண்டாமா? இந்த இரண்டு புகைப்படங்களும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் நின்றபடி, கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் எடுக்கப் பட்டவை. நான் கொடுத்த பில்ட் – அப்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்தப் புகைப்படங்கள் ஏமாற்றமளிக்கலாம். காரணம் என் நினைவில் இருக்கும் வடக்கு மாசி வீதி 80கள், 90களின் முற்பதிக்கானது. அந்த சமயத்தில் இவ்வளவு வாகனங்களோ, கடைகளோ அந்த வீதியில் கிடையாது. பெரும்பாலும் வீடுகள்தான். சாலையில் தென் பகுதியில் யாதவர்களும் நாயக்கர்களும் குடியிருந்தார்கள். வட பகுதியில் பிராமணர்கள் (ஐயர்) குடியிருந்தார்கள். தற்போது இரு பகுதிகளிலும் பெரும்பாலும் மஞ்சப்புத்தூர் செட்டியார்கள் குடியிருக்கிறார்கள். மீதி இடங்களில் கடைகள் இருக்கி்ன்றன. வடக்கு மாசி வீதியிலிருந்து செல்லும் சந்துகளில்தான் வீடுகள் இருக்கின்றன.

மதுரைக் கோட்டைக்குள் இருக்கும் பிரதான வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயர்களில் அமைந்திருக்கும். வடக்கு ஆடி வீதி, வடக்குச் சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, தெற்கு மாசி வீதி என்பதுபோல. மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா எந்த மாதத்தில் எந்த வீதியில் நடக்கிறதோ, அந்த மாதத்தின் பெயரை அத்தெருக்கள் கொண்டிருக்கும் என்பதுதான் ஏற்பாடு. ஆடி மாதத் திருவிழாவின் போது அம்மனும் சுவாமியும் ஆடி வீதிகளில் வலம் வருவார்கள். ஆவணி மாதத் திருவிழாவில் ஆவணி வீதிகளில் வலம் வருவார்கள். ஆனால், சித்திரைத் திருவிழா சித்திரை வீதிகளில் நடக்காது. மாசி வீதிகளில் நடக்கும்.

மதுரையை திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா சித்திரை மாதத்தில் நடந்தது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டிய திருவிழா மாசி வீதியில் மாசி மாதத்தில் நடந்துவந்தது. அருகருகே இரண்டு மாதங்கள் திருவிழாக் கொண்டாட்டத்தில் போய்விடுவதைக் கண்ட திருமலை நாயக்கர் இரண்டையும் ஒன்று சேர்த்து சித்திரை மாதத்தில் நடத்த உத்தரவிட்டார். சித்திரை மாத முழுநிலவு நாளன்றுதான் அழகர் வைகையாற்றில் இறங்க வேண்டும் என்பதால் அதை மாசி மாதத்திற்கு மாற்றாமல் மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். ஆனால் விழா நடந்து வந்த வீதியை மாற்றவில்லை. மாசி வீதிகளிலேயே நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

மதுரைக் கோட்டைக்குள் அமைந்திருக்கும் கடைசி பிரதான சாலைகள் மாசி வீதிகள்தான். அதற்குப் பிறகு சிறிது தூரத்தில் கோட்டைச் சுவர்கள். இந்தக் கோட்டை 1850ல் இடிக்கப்பட்டது. யார் எந்த அளவுக்கு இடிக்கிறார்களோ அந்த அளவு இடம் அவர்களுக்கே சொந்தமாகும் என அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அந்தக் கோட்டையை இடித்ததில் கிடைத்த கற்களை வைத்து வைகையாற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டது. கல்பாலம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பாலம் இன்னமும் இருக்கிறது. அதன் மீது புதிதாக ஒரு மேல் பாலம் தற்போது கட்டப்பட்டிருக்கிறது.

வடக்கு மாசி வீதியில் மாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வலம் வருவது பழுக்குகள்தான். 10 முதல் 16 வயதுள்ள, வீட்டுக்கு அடங்காத, சாலையில் செல்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சிறுவர்களுக்குத்தான் பழுக்குகள் என்று பெயர். தனி ஒரு பழுக்கையே சமாளிப்பது கடினமான காரியம். அதில் எல்லாப் பழுக்குகளும் ஒன்றுகூடினார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

இந்தப் பழுக்குகள் ஒன்றுகூடி விளையாடும் ஒரு விளையாட்டு, பர்ஸ் விளையாட்டு. ரூ. 15 – 20 மதிப்பில் பளபளப்பான ஒரு பர்ஸை வாங்கிவந்து, அதற்குள் பணம் இருப்பதைப்போல காகிதத்தைத் தினித்து சாலையில் வெளிச்சம் இருக்கும் இடத்தில் போட்டுவிடுவார்கள். அந்த பக்கமாக வரும் இருசக்கர வாகன ஒட்டிகள், பாதசாரிகள் அந்தப் பர்சைப் பார்க்காமல் போகவே முடியாது. பத்துப் பேரின் பார்வை அதன் மேல் பட்டால், ஓருவராவது அந்தப் பர்ஸை கையில் எடுத்துவிடுவார். அவ்வளவுதான்.

எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கும் பழுக்குகள் அந்த நபரைச் சுற்றி வளைத்துவிடுவார்கள். “ஏய்யா ஒரு பர்ஸ் ரோட்ல கிடந்தா உடனே எடுத்துருவியா. ஏ இங்க பார்றா அண்ணனுக்கு ஆசைய..” என்று கத்தி, ஊரைக்கூட்டி மானத்தை வாங்கிவிடுவார்கள். பர்ஸ் பறிமுதல் செய்யப்படும். கூனிக்குறுகிப்போகும் அந்த நபர், பிறகு வடக்குமாசிவீதியில் தலையைக் காட்டவே அஞ்சுவார். மறுபடியும் பர்சை அதே இடத்தில் போட்டுவிட்டு, பழுக்குகள் ஒளிந்துகொள்வார்கள். எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து நபர்களாவது ப்ர்ஸை எடுத்து அவமானப்படுவார்கள்.

வடக்குமாசி வீதியி்ன் பெரியவர்களும் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் கவனிப்பது உண்டு. ‘எவன்கிட்டயாவது நல்ல அடி வாங்குனாத்தான்டா உங்களுக்கு புத்திவரும்’ என்று சொல்லிக்கொண்டே இந்த விளையாட்டை ரசிப்பார்கள் (அடுத்தவர் வம்புச் சண்டைக்குப் போகும்போது வேடிக்கை பார்ப்பது, அடுத்தவர் அடிவாங்கும் போது ரசிப்பது ஆகியவை வடக்குமாசி வீதியின் தேசிய குணம்).

ஆனால், இந்தப் பர்ஸ் விளையாட்டு தற்போது அழிந்துவிட்டதுதான் சோகம். இரண்டு சம்பவங்கள் அதற்குக் காரணமாக அமைந்தன. ஒரு முறை பர்சை ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி எடுத்தார். பழுக்குகள் வழக்கம்போல, பர்சைக் கேட்க, ‘போங்கடா எடுவட்ட பயலுகளா, இப்பத்தான் 20 ரூவா குடுத்து வாங்கீட்டு வாரேன், கீழ கெடந்து எடுத்ததுதனா சொல்றீங்க? விளக்கமாறு பிஞ்சுபோகும்’ என்று பழுக்குகளை கட்டி ஏற ஆரம்பித்துவிட்டார்.

பழுக்குகள் மிரண்டுபோனார்கள். இதுவரை இப்படி நடந்ததே இல்லை. அந்தப் பெண்மணியிடம் சாம, தான, பேத, தண்ட முறைகளையெல்லாம் பிரயோகித்துப் பார்த்தும் பிரயோஜனமில்லை. அந்தப் பெண்மணி பர்ஸ் தன்னுடையதுதான் என்று சாதித்துவிட்டார். பர்சோடு சென்றும் விட்டார்.இருபது ரூபாய் நஷ்டம். அடுத்த சில நாட்கள் இந்த விளையாட்டு நடக்கவில்லை. புதிதாக பர்ஸ் வாங்க யாரிடமும் காசு இல்லை. வெகுநாட்களுக்குப் பிறகு, எப்படியோ காசு திரட்டி மற்றோரு பர்ஸ் வாங்கிவரப்பட்டது. விளையாட்டு ஆரம்பித்தது. முதல் நபர் வழக்கம்போல அவமானப்படுத்தப்பட்டு, துரத்தப்பட்டார்.

அடுத்த நபர் சைக்கிளில் வந்தார். சைக்கிளை நிறுத்தி பதறாமல் அந்த பர்சை எடுத்தார். பழுக்குகள் வழக்கம்போல அவரைச் சுற்றி வளைத்து, காரியத்தை ஆரம்பித்தனர். சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த நபர், ஒரு பழுக்கின் சட்டைப் பிடித்தார். ‘பொளேர்’ என ஒரு அறைவிட்டார். அடுத்ததாக, சைக்கிளில் இருந்து லத்தியை உருவினார். அப்போதுதான் பழுக்குகளுக்கு விபரீதம் புரிந்தது. அந்த நபர் ஒரு போலீஸ்காரர். திசைக்கு ஒருவராக சிதறி ஓடினார்கள் பழுக்குகள். புதிதாக பர்ஸ் வாங்கிய அன்றே பறிபோன அதிர்ச்சியிலிருந்தும் அடியிலிருந்தும் பழுக்குகளால் மீள முடியவேயில்லை. அந்த விளையாட்டு அன்றோடு முடிந்துபோனது.

பிப்ரவரி 12ந் தேதி மாலை நாளிதழ்களில் பின்வருமாறு தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது: கிழக்குக் கடற்கரைச் சாலை பண்ணை வீடுகளில் போலீஸ் அதிரடி ரெய்டு: 6 பேர் கைது. இந்த ஆறு பேரும் என்ன செய்தார்களாம்?

ஒரு பண்ணை வீட்டில், வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று, உள்ளே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்ததுதான் அவர்கள் செய்த தவறாம். இந்தத் தவறு போதாதென்று லேப்டாப்பில் பாட்டு வேறு போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்களாம். இந்தக் கலாச்சார மீறல்களைச் சகிக்க முடியாத காவல்துறை, அவர்கள் வைத்திருந்து விலையுயர்ந்த மதுபாட்டில்கள், லேப்டாப்களை அதிரடியாக பறிமுதல் செய்திருக்கிறது. வீட்டு உரிமையாளரைத் தேடி வருகிறது.
என்ன காமெடி இது? திருவல்லிக்கேணி பக்கம் போனால், ஒவ்வெரு டாஸ்மாக் வாசலிலும் குறைந்தது நான்கு பேராவது குடித்துவிட்டு அலம்பல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே மட்டுமில்லை, சென்னையின் பல இடங்களிலும் இதே கதைதான். இவர்களையெல்லாம் தூக்கி உள்ளே வைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. சட்டம் – ஒழுங்கு, கலாச்சாரம், மண்ணாங்கட்டி இவற்றைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் கதவைப் பூட்டிக்கொண்டு குடிப்பவர்களை அதிரடி ரெய்டு போட்டு தூக்குவது என்ன நியாயம்? இதற்கு கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மேற்பார்வை வேறு!

நமது சட்டங்களே ரொம்பவும் ஆச்சாரமானவை. அந்த ஆச்சாரங்களையும் மீறி வழங்கப்பட்டிருக்கும் சில சுதந்திரங்களையும் காவல்துறை பறிக்கிறது என்பதுதான் சோகம். நீலப்படங்களையே தனிநபர் பார்ப்பது தவறில்லை என்று சட்டம் சொல்லும் நிலையில், பூட்டிய வீட்டிற்குள் குடித்தவர்களை கைது செய்து, நாளிதழ்களுக்கும் செய்தியாகக் கொடுப்பது அராஜகம்.