suhasini.jpg பெண்ணியம் என்பதை பொத்தாம்பொதுவாக விளக்குவதானால், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஆணாதிக்கத் தனத்திலிருந்து பெண்களை விடுவிப்பது என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக இது குறித்த கருத்துகள், சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. மேரி டாலி, சார்லோட் பஞ்ச், மெரிலின் ஃப்ரை போன்ற பெண்ணியவாதிகள் பெண் விடுதலையை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எழுதியும் வந்தனர். நம்மிடத்தில் இப்படிச் சிந்தனையாளர்கள் யாரும் இல்லை. அது பெரிய பிரச்னையாகவும் இல்லை. மேலை நாட்டு பெண்ணியவாதிகளின் சிந்தனைகளை நம் நாட்டிற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம். அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.

ஆனால் சமீப காலமாக சில பெண் கவிஞர்கள், மார்க்கெட் இழந்த நடிகைகள் ஆகியோர் பெண்ணியவாதிகளாகவும் இலக்கியம், சினிமா, கலை ஆகிய துறைகளில் உன்னதம் விரும்புபவர்களாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள். சமீபத்தில் ஒரு பெரிய பத்திரிகை நடத்தும் இலக்கிய இதழில் ஒரு பெண் கவிஞர் பெண், பெண் உடல், பெண் வெளி என்றெல்லாம் ஏதேதோ பேத்தியிருந்தார். ஒருவரிகூட யாருக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக எழுதியிருந்தார் (உதா: போதுமான அளவுக்கு உள்கிடங்குகளில் நிறையும் உளக்கிடக்கைகளோ பழுப்பேறி புழுதிபடிந்து, மூச்சுமுட்டும் அளவுக்கானவை. இக்கட்டத்தில் ஒரு இல்லத்தை அல்லது வீட்டை ஒரு பெண்ணின் உடல் மெய்ஞ்ஞானம் எய்துவதற்கான வெளியாகவோ வாழ்வியல் இன்பங்களை நுகர்வதற்கான ஒரு பரப்பாகவோகூட ஒருபொழுதும் நுகர முடியாது!). தமிழ் உரைநடை தெரியாதவர்கள் மட்டுமே இப்படிக் கிறுக்க முடியும்.  உலகையே புரட்டிப்போட்ட கம்யூனிஸ்ட் அறிக்கைகூட படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதாகத்தான் இருந்தது.  இருந்தும் பாருங்கள், அந்தக் கவிஞர் நம் சமூகத்தில் ஒரு முக்கியமான சிந்தனையாளர். படைப்பாளி. சினிமாகூட தெரியும். இதனால்தான் இந்தப் பாழாய்போன பெண்ணியம் மு.மேத்தா வாயிலெல்லாம் விழ வேண்டியிருக்கிறது.

நடிகைகளான ரேவதி, சுகாசினி ஆகியோர் தங்கள் கேரியரின் உச்சத்தில் இருந்தபோதுகூட, அவர்களைவிட சிறந்த நடிகைகள் கோலிவுட்டில் இருந்தனர். அவர்களுக்குப் பின்னும் நிறைய நடிகைகள் அவர்கள் தொட்ட சிகரங்களையெல்லாம் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, குஷ்பு, சிம்ரன். ஆனால், அவர்கள் ஒருபோதும் சிறந்த நடிகைகளாக நம் அறிவுஜீவிக் கூட்டத்தால் கருதப்பட்டதில்லை. காரணம் நல்ல நடிகைகள் என்பதற்கு நம் அறிவுஜீவிகள் வைத்திருக்கும் இலக்கணம். அந்த இலக்கணங்கள் இதோ: குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கக்கூடாது; ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கக்கூடாது; படங்களில் கண்ணியமாக (எல்லாம் so called கண்ணியம்தான்) நடித்திருக்க வேண்டும். குஷ்பு, சிம்ரன் ஆகியோர் இந்த இலக்கணத்திற்கு வெளியே இருப்பதால் அவர்களுக்கு அறிவாளி அந்தஸ்து கிடையாது.

இப்போது மேலே சொன்ன நடிகைகள் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள். அறிவுஜீவி அந்தஸ்து அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.  எந்த ஒரு பொதுப் பிரச்னையிலும் குரல்கொடுக்காதவர்கள் சமூக போராளிகளாக முன்னிறுத்தப்பட்டு, குடிசைகளின் நடுவே, ஏழைகளின் நடுவே, உண்மையாகப் பணியாற்றும் பெண்களுக்கு அவமானம் சேர்க்கப்படுகிறது.  சிபிஎம்மின் வாசுகி கலந்து கொண்ட பெண்கள் தினக் கூட்டங்களைவிட இந்த நடிகைகள் கலந்து கொண்ட பெண்கள் தினக்கூட்டங்கள் அதிகமாக இருக்கும். இந்த நடிகைகள் எளிதில் அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதாலேயே எல்லா இடங்களுக்கும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது இவர்களது தப்பேயில்லை. கூட்ட அமைப்பாளர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும் (அதற்குத் தண்டனையாக சுகாசினி, ரேவதி நடித்த புதுமைப்பெண், மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களைப் பத்துப் பத்து தடவை பார்க்கச் சொல்ல வேணடும்). கூட்டங்களுக்கு வருபவர்களும் சீரியஸ் சினிமாவுக்கு, சீரியஸ் எழுத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதில்லை.

இந்த இடத்தில் ஒன்றை விளக்கிவிடவேண்டும். ஒருவர் நடிகையாக இருப்பதாலேயே அவருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்ல வரவில்லை. நடிகைகளைக் கூட்டங்களுக்கு அழைப்பதை எதிர்க்கும் ஆச்சாரப் பார்வையையும் இங்கே முன்வைக்கப்படவில்லை. சீரியஸான நடிகைக்கான இலக்கணம் என்பது அவர்கள் காட்டும் கவர்ச்சியை வைத்தே முடிவெடுக்கப்படுகிறது என்ற ஆதங்கம்தான் இங்கே கொட்டப்படுகிறது.
விரைவில் இந்த வரிசையில் சொர்ணமால்யாவும் சேரக்கூடும். அவர் சிறப்பாக நடனம் ஆடுகிறார் என்பது அதற்குக் காரணமாக இருக்காது. அவர் நடித்த மொழி திரைப்படம், ஐநாக்ஸ், சத்யம் போன்ற மல்டிப்ளெக்ஸ்களில் நன்றாக ரசிக்கப்படுகிறது; கண்ணிய நடிகை என்று பெயர் அவர் விரும்பியோ, விரும்பாமலோ அவர் மீது ஒட்டிக்கொண்டதுதான் காரணமாக இருக்கும்.