April 2007


தாய்வீடு படத்தில் ரஜினிகாந்திற்கு ஒரு நாய் ரொம்பவுமே உதவி செய்யும். பல சாகசங்களில் ஈடுபடும். இதைப் பார்த்த வடக்குமாசி வீதி பழுக்குகளாகிய நாங்கள் ஒரு நாய் வளர்க்க முடிவெடுத்தோம். அதற்காக ஒரு குட்டி நாயைத் தேடி தெருத்தெருவாக சுற்றினோம். கடைசியில் ஓரிடத்தில் பிறந்து ஒன்றிரண்டு வாரங்களேயான ஒரு நாய் கண்ணில் பட்டது. அப்போது அந்தக் குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. அப்போதாவது எங்களுக்கு அதன் தன்மை புரிந்திருக்க வேண்டும். புரியவில்லை. தூக்கிக்கொண்டு மாசி வீதிக்கு வந்துவிட்டோம்.

உடனடியாக நாய் வளர்க்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. செல்வம் அந்தக் குழுவின் தலைவன். நான் பொதுச்செயலாளர். இதன் அர்த்தம் என்னவென்றால் நாய்க்காக நாங்கள் ஏதும் செலவு செய்யமாட்டோம் என்பதுதான். நாய்க்கு பயிற்சியளித்து, அதை பெரிய ஆளாக்குவது மட்டுமே எங்கள் பொறுப்பு. பிற செலவுகளையெல்லாம் மற்றவர்கள்தான் பார்த்துகொள்ளவேண்டும். பாலைப் பற்றிப் பிரச்னையில்லை. அங்கே நிற்கும் ஏதாவது ஒரு மாட்டைப் பிடித்து கறந்துவிடுவோம். நாய்க்கான கழுத்துப் பட்டை, சங்கிலி போன்றவற்றை வாங்கும் செலவை பிறர் தலையில் கட்டினோம்.

கழுத்துப் பட்டை, சங்கிலி, சைக்கிள் டயர், ஸ்கூட்டர் டயர் போன்ற சாதனங்கள் வாங்கப்பட்டன. ஒரு பழுக்கு நாய்க்கு எந்நேரம் பார்த்தாலும் பாலைக் கறந்து ஊற்றிக்கொண்டே இருந்தான். இன்னொருவன் தொடர்ந்து பிஸ்கட், சாப்பாடு போன்றவற்றை போட்டுக் கொண்டிருந்தான்.

நாய்க்கு பெயர் வைக்கும் பிரச்னை எழுந்தது. டைகர், ராம்போ போன்ற புதுயுகப் பெயர்களும் மணி, ராமு போன்ற பாரம்பரியப் பெயர்களும் யோசிக்கப்பட்டன. கடைசியில் ராம்போ என்ற பெயரே சூட்டப்பட்டது (அந்த சமயத்தில் ராம்போ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது).ராம்போவுக்கான பயிற்சிகள் துவங்கின. முதலில் ஓட்டப்பயிற்சி. இத்தனை நாட்களாக பாலையும் பிஸ்கட்டையும் தின்று தின்று கொழுத்துப் போயிருந்த ராம்போ நடக்கவே சிரமப்பட்டது. இரண்டடி நடக்கும். பிறகு மெதுவாக நிற்கும். அப்படியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அப்படியே தூங்கிவிடும். செல்வம் இதைப் பார்த்து ரொம்பவுமே நொந்துபோனான். ராம்போ தூங்குவதைப் பார்த்தாலே விளக்கமாற்றுக் குச்சியால் அதனைப் பின்னியெடுத்துவிடுவான். அடிவாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடும். பிறகு வழக்கம்போல நிற்பது, உட்கார்வது, தூங்குவது என்ற பழைய கதைதான்.

சர்க்கஸில் வருவதுபோல, ராம்போவை ஒடிவரச் செய்து உயரத்தில் சைக்கிள் டயரைத் தொங்கவிட்டு, அதன் நடுவே ராம்போவைத் தாவச் செய்வதற்காகதான் சைக்கிள் டயர், ஸ்கூட்டர் டயர் ஆகியவை வாங்கப்பட்டன. ஆனால், ஒரு முறைகூட ராம்போ சைக்கிள் டயர் நடுவில் தாவிச்செல்ல முயற்சிக்கவில்லை. கீழே வழியிருக்கும்போது, மேலே எதற்குத் தாவச் சொல்கிறார்கள் என்பதுபோல செல்வத்தை கேவலமாக ஒரு பார்வை பார்க்கும். பிறகு சாவகாசமாக சைக்கிள் டயருக்குக் கீழே நடந்து சென்றுவிடும். சைக்கிள் டயருக்கு அடுத்ததாக, அதற்குச் சற்று சின்ன சைசில் இருக்கும் ஸ்கூட்டர் டயர் கட்டப்பட்டிருக்கும். சைக்கிள் டயரையே தாண்டாத ராம்போ, ஸ்கூட்டர் டயரை நிமிர்ந்துகூட பார்க்காது.தினமும் அதற்கு பால் ஊத்திக் கொண்டிருந்த ஒரு பழுக்கு சொன்னான், ஏண்டா, இந்த சைக்கிள் டயரையே தாண்டாத இந்த நாயாடா நாம ஆபத்தில இருக்கும்போது வந்து காப்பாத்தப்போது…. செல்வத்திற்கு ஏகப்பட்ட ஆத்திரம். விளக்குமாறு குச்சியால் வெளுத்துவிட்டான் ராம்போவை. அப்போது அந்தப் பக்கம் சென்ற, மாசி வீதி பெண்மணி, ஒரு பொட்டை நாயைப் போட்டு இந்தப் பாடு படுத்துறாய்ங்களே என்றார். எங்களுக்குத் திகீர் என்று ஆனது. ஓரு பெட்டை நாய்க்கா ராம்போ என்று பெயர் வைத்தோம் என்று கூசிப் போனோம். செல்வம் மௌனமாக அதன் கழுத்துப் பட்டையையும் சங்கிலியையும் கழற்றினான். பிறகு எங்கோ போய் விட்டுவிட்டுவந்தான். சில நாட்களில் மீண்டும் வடக்குமாசி வீதியில் ராம்போ தென்பட்டது. ஆனால், பழுக்குகள் கண்டுகொள்ளவில்லை.

வடக்கு மாசி வீதியில் கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய காப்பிக்கடை இருந்தது. பார்க்க மிகக் கச்சிதமாக இருக்கும். உரிமையாளரே கல்லாவில் உட்கார்ந்திருப்பார். ஒரே ஒரு மாஸ்டர். எல்லாம் இருந்தும் காப்பி சகிக்காது. ஏரியாவுக்குப் புதிதாக வருபவர்கள் தெரியாமல் அங்கே காப்பி குடிப்பார்கள். சில சமயங்களில் பால் தீர்ந்துவிட்டது; லோடு வரவேண்டியிருக்கிறது என்பார் கடைக்காரர். காப்பி இவ்வளவு மோசமாக இருந்தும் பால் ஏன் இவ்வளவு சீக்கிரமாக தீர்ந்துவிடுகிறது என்ற சந்தேகம் பலருக்குண்டு. லோடு வந்து இறங்கும்போது பார்த்திருந்தால் சந்தேகமே வந்திருக்காது. காரணம், லோடு என்பது அரை லிட்டர் பால். பக்கத்திலிருக்கும் ஆவின் பூத்தில் போய் வாங்கி வருவார் மாஸ்டர். காலையில் பத்து, பத்தரை மணியளவில் மாஸ்டரை அழைப்பார் உரிமையாளர். டேய், தூக்குவாளியை நல்ல கழுவிட்டு, மீனாட்சி காப்பிக் கடையில போய் நல்ல காப்பிய ஒன்னு வாங்கிட்டு வா என்று காசை எடுத்துக் கொடுப்பார். பல சமயங்களில் காலையிலிருந்து வசூலான தொகையே மீனாட்சி காப்பிக்கடையில் காப்பி வாங்கும் அளவுக்குத்தான் இருக்கும். தான் அந்தக் கடையில் மாஸ்டராக இருந்தும், தான் போட்டுத்தரும் காப்பியைக் குடிக்காமல் வேறு கடையில் வாங்கச் சொல்லிக் குடிக்கிறாரே முதலாளி என்று மாஸ்டர் ஒருநாளும் வருந்தியதில்லை. ஒங்களுக்கு காப்பி வாங்கீட்டு, நானும் அப்படியே ஒரு காப்பி…. என்று இழுப்பார் மாஸ்டர். அன்றைக்கு வசூல் சற்று பரவாயில்லை என்றால் அனுமதி கிடைக்கும். இப்படி ஈ ஓட்டும் கடையில் கணக்கு மட்டும் கம்ப்யூட்டர் பாணியில் இருக்கும். அதாவது முதலாளியிடம் காசைக் கொடுத்து டோக்கன் வாங்கினால்தான் மாஸ்டர் காப்பி போட்டுத் தருவார். இத்தனைக்கும் மாஸ்டரும் முதலாளியும் அருகருகில் இருப்பார்கள். காப்பியென்றால் சிவப்பு டோக்கன். டீ என்றால் பச்சை டோக்கன். இரண்டும் ஒரே விலை. சிவப்பு டோக்கனை வாங்கிவிட்டு டீ கேட்டால் ஸ்ட்ரிக்டாக மறுத்துவிடுவார் மாஸ்டர். டோக்கனை மாற்ற முதலாளியிடம் சிபாரிசு வேண்டுமானால் செய்வார். நம்ம பையந்தான். தெரியாம காப்பிக்குப் பதிலா டீ டோக்கனை வாங்கீட்டான். டோக்கனை மாத்திக் குடுங்க என்பார் முதலாளியிடம். அவர்கள் பேசுவதைப் பார்த்தால் நாளைக்கே கவர்மெண்ட் ஆடிட்டர் வந்து, ஏன் டோக்கன் மாறியது என்று இவர்களை ஜெயிலில் போட்டுவிடுவார்கள் என்பதைப் போல இருக்கும். ஒரு முறை எங்கள் வீட்டில் காப்பி வாங்கிவரச் சொன்னார்கள். நான் இந்தக் கடையில் வாங்கிவந்து கொடுத்தேன். இனிமே அந்தக் கடைப்பக்கம் போவியா…, போவியா?” என்று என் முதுகுத்தோலை உரித்துவிட்டார்கள்.

apl-05-f.jpg

இந்தப் படத்திற்கு விளக்கம் தேவையில்லை. கையை ஓங்குபவர் சென்னை தியாகராய நகர் தொகுதியின் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் (அ.தி.மு.க).