July 2007


perkins_lecture_018.jpgஜான் பெர்கின்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் Confessions of an Economic Hit man என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அந்த நூல் இப்போது தமிழில் ஓரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கோவையிலிருக்கும் விடியல் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய மூன்றும் எப்படி கூட்டுக்களவாணிகளாகச் செயல்படுகின்றன என்பதுதான் புத்தகத்தின் சாரம்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வளத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்ட இந்த மூன்றும் எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதை விலாவாரியாக விவரிக்கிறார் ஜான் பெர்க்கின்ஸ். இவரும் ஒரு பன்னாட்டு நிதியுதவி நிறுவனத்தில் பணியாற்றியவர்.

சதிகாரர் சங்கத்தின் உள்ளிருந்தவர் என்பதால் இந்தப் புத்தகத்தில் இருக்கும் எல்லா தகவல்களும் நம்பகத் தன்மை வாய்ந்தவை. இவர் இந்த நூலை எழுதப் போகிறார் என்றவுடனேயே கொலை மிரட்டல்கள் வந்தன. ஏகப்பட்ட பணம் தருவதாக ஆசை காட்டப்பட்டது. இதையெல்லாம் செய்தது சிஐஏ. அந்த வகையில் சிஐஏவே பார்த்து மிரண்ட புத்தகம் இது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புதிதாக இம்மாதிரி டாபிக்களை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு தங்கச் சுரங்கம். பொருளாதாரப் புலிகளுக்கு மனசாட்சி இருந்தால் இந்தப் புத்தகம் அவர்கள் கண்களைத் திறக்கும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருப்பவர்கள் கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகம்.

frnr2.jpgஇந்த வார துக்ளக் இதழில் சீனியர் சிட்டிசன் என்பவர் எழுதும் துணுக்குத் தொகுப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐ.மு.கூ சார்பில் போட்டியிடும் பிரதீபா படேலைப் பற்றி ஒரு துணுக்கு வந்திருக்கிறது. அவர் ஆவியுடன் பேசுவதாக சொல்லியதையடுத்து ஆவி அமுதா என்று பெயர் சூட்டியிருக்கிறார் சீனியர் சிட்டிசன். இந்த சீனியர் சிட்டிசன் ஒரு எழுத்தாளர். பல்வேறு புனைப்பெயர்களில் துக்ளக்கில் பழம் கருத்துக்களை அள்ளிவிடுவது இவரது நீண்ட காலத் தொழில். இந்த ஆவிகளோடு பேசும் சமாச்சாரமும் இவருக்கு உகந்ததுதான். ஆனால், காங்கிரசைத் திட்ட ஒரு வாய்ப்புக்கிடைத்தது என்று அம்மையாரைத் திட்டித் தீர்த்திருக்கிறார் சீனியர்.

உண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆவிகளின் பெயரைச் சொல்லி பெரும் அட்டூழியம் புரிந்தது நம்முடைய முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாத்தான். பிரதீபா பாடீல் ஆவி அமுதா என்றால், ராஜேந்திர பிரசாதை பேய்க் கதை மன்னன் பி.டி. சாமியுடன்தான் ஒப்பிட வேண்டும். ஆவியுடன் பேசுபவர்களை அழைத்து வந்து நேரம் காலம் தெரியாமல் தொடர்ந்து ஆவியுடன் பேசிவந்தவர் இவர்தான். அதேபோல, இவர் காலத்தில்தான் ஜாதகம் பார்க்கிறேன், குறி சொல்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட போக்கிரிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் சுற்றித் திரிந்தார்கள். ராஜேந்திரப் பிரசாதின் மனைவி ரொம்பவும் ஆச்சாரமானவர். அவருக்குக் காலையில் தினமும் அன்றைக்குக் கறக்கப்பட்ட பசுவின் பால் வேண்டும். அதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்குள்ளேயே பசுக்கள் வளர்க்கப்பட்டன. இந்தியாவின் முன்னாள் வைசிராய்கள் பயன்படுத்திய கழிப்பறைகளில் இந்தப் பசுக்கள் கட்டப்பட்டன. இவ்வளவு அட்டூழியமும் ஆச்சாரம், மத நம்பிக்கையின் பெயரால் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தேறின. சீனியர் சிட்டிசன்கள், ஆதிகள், துர்வாசர்களுக்கு இதெல்லாம் பக்காவாக மறந்துபோய்விடும். ஏனென்றால் முதல் குடியரசுத் தலைவர் ஒரு இந்து வெறியர். ராஜேந்திர பிரசாதைப் பற்றிய இந்த விமர்சனங்கள் எல்லாம் ஏதோ வாய்க்கு வந்தபடி சொல்லப்படுபவை அல்ல. The Relevance of Bhagavath Geetha in Indian History உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நூல்களில் இடம்பெற்றவைதான்.

பி.கு. : அதற்காக ஆவி அமுதா அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதை வடக்கு மாசி வீதி ஆதரிக்கவில்லை. அவர் மீது வந்து குவியும் ஊழல் புகார்களை வைத்துப் பார்த்தால், அடுத்த குடியரசுத் தலைவர் குடியேற அந்த மாளிகையையாவது மிச்சம் வைப்பாரா என்று பயமாக இருக்கிறது.  இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னொரு காமெடி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. காரணம் இவர் புட்டபர்த்தி சாயிபாபாவின் பக்தர் என்பதால்  இவரை ஏற்றுக்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் மறுத்துவிட்டதுதான்.  பாவம் சிவராஜ் பாடீல், சாயிபாபாவை நம்பினால் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.  பாபாவை நம்பியதாலேயே வாய்ப்புப் பறிபோய்விட்டது.  இதற்குப் பிறகும் சிவராஜ் திருந்துவார் என்று நினைக்கிறார்களா? ம்ஹும்,  அங்கே போய் பாபா லிங்கம் எடுப்பதையும் சங்கிலி எடுப்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத்தான் வருவார்.  யாரு பெத்த புள்ளையோ, என்ன சீக்கோ?

mp_tiger.jpg mp_tiger.jpg

திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி சமீப காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு அந்த வனப் பகுதியை புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால், அங்கே புலிகள் ஏதும் இல்லை சமீபத்தில் அங்கு சென்ற வனவிலங்கு நிபுணர்கள் சொல்லிவிட்டுப் போய்விட, செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது வனத்துறை. அந்த வனப் பகுதிக்கு நேரில் சென்று பார்த்துவிடலாம் என்று நானும் என் நண்பனும் கிளம்பினோம். திருநெல்வேலியில் இறங்கி அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வழி கேட்டோம். அவர், இங்க தாங்க பக்கத்தில, ஒரு பத்து கி.மீ. இருக்கும். ஒரு பஸ்ஸப் பிடிச்சு களக்காட்டில இறங்கி அங்கேயிருந்து காட்டுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சுப் போங்க என்றார். அட, திருநெல்வேலி நகரத்திலிருந்து இவ்வளவு அருகில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியா என்ற ஆச்சரியத்துடன் களக்காடு பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.  நடத்துனர் 14 ரூபாயை பயணக்கட்டணமாக வசூலித்தார். பத்து கி.மீ. தூரத்திற்கு நிச்சயமாக பதினான்கு ரூபாய் வசூலிக்க மாட்டார்களே, ஒரு நெடும் பயணம் காத்திருக்கிறது என்ற திகில் ஏற்பட்டது.

பேருந்து சேரன் மாதேவி, பத்தமடை வழியாக சுமார் 40 கி.மீ. தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து களக்காடு புதிய பேரூந்து நிலையத்தில் நின்றது. அங்கே இருக்கும் கடைகளில், இங்கிருந்து முண்டந்துறை சரணாலயத்திற்கு எப்படிச் செல்வதென்று கேட்டேன். எல்லோரும் ஒரே மாதிரியாக, அப்படி ஒரு இடமே சுற்றுவட்டாரத்தில் இல்லை என்று கையை விரித்தார்கள். ஒரு அரைமணி நேரம் இப்படி பரிதாபமாகக் கழிந்தது.  

பிறகு ஒரு ஆட்டோ டிரைவர், அருகில் முண்டந்துறை என்று ஏதும் கிடையாது. களக்காடு வனப்பகுதி வேண்டுமானால் இருக்கிறது. இறக்கிவிடுகிறேன். நாற்பது ரூபாய் கொடுங்கள் என்று சொன்னார். வந்ததற்கு அதையாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். மூன்று கி.மீ. சென்ற பிறகு, வனத்தை நெருங்கியது ஆட்டோ. வனத்துறை அலுவலகம் ஒன்றும் கண்ணில் பட்டது. வாசலில் இருந்த பலகையில், களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் என்றிருந்தது. அட இதுதான் முண்டந்துறையா என்று ஆட்டோக்காரர் ஆச்சரியப்பட்டுக் கொண்டார். வனத்திற்குள் செல்ல வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றுவரும்படி சொன்னார்.  

உள்ளே சென்று, அங்கிருந்த அதிகாரியிடம் புலிகள் காப்பகத்தைப் பார்க்க அனுமதி வேண்டுமெனக் கேட்டேன். அவர் கிளிஞ்சல்கள் படத்தில் வரும் கோபாலகிருஷ்ணண் போல கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். தம்பி, இது புலிகள் காப்பகம்தான். ஆனால் புலியெல்லாம் பார்க்க முடியாது. புலி இருக்கு. இல்லைனு சொல்லல. கடவுள் இருக்கார்னு சொல்றோம்ல, அது மாதிரிதான். யாராவது கடவுளைப் பார்த்திருக்கமா? ஆனா, அவர் இருக்கார்னு நம்புறோம்ல, அது மாதிரிதான். நாங்களும் இங்கே புலி இருக்குன்னு நம்புறோம். இந்த மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கே, அது கன்னியாகுமரில ஆரம்பிச்சு, பூனே வரைக்கும் சுமார் பத்து மாநிலங்கள்ள பரந்து விரிஞ்சு கிடக்கு. இதுல எங்கேயாவது புலி இல்லாமையா போகும். அது சரி, எங்கேயிருந்து வர்றீங்க?” என்றார். மதுரை வடக்கு மாசி வீதியிலிருந்து வருகிறோம் என்றேன்.

 நான் இங்கே பதினஞ்சு வருசமா வேலை பார்க்கிறேன். நானே புலியைப் பார்த்ததில்ல. மதுரையிலயிருந்து வந்த உடனே புலியப் பார்த்துறனுமா? அந்தா, அங்க பாருங்க, ஒரு புலி படம் இருக்குல்ல, அத வேனாப் பார்த்துக்கங்க. இந்தப் பத்திரிகைகாரங்க அசிங்கப்படுத்துறது பத்தாதுன்னு நீங்க வேற என்றார் அந்த அதிகாரி.  இந்தக் காட்டில் புலிகள் இல்லை என்ற ரகசியம் எப்படி வெளியில் வந்ததெனக் கேட்டேன். அதாவது திடீர்னு மூணு நாலு விஞ்ஞானி கிளம்பி, புலி இருக்கான்னு பாக்க வந்துட்டான். உள்ள விடமாட்டேன்னு சொல்ல முடியுமா? உள்ள போனவன் நாலு நால் காத்து கிடந்து, ஆராய்ச்சி பண்ணி புலி இல்லைனு சொல்லிப்புட்டான். அவன் படிச்சவன். அவனை ஏமாத்த முடியுமா? இப்படித்தான் விசயம் வெளில வந்துச்சு. நாங்க பண்றதும் தப்புதான். வருசா வருசம் புலி எண்ணிக்கை கூடிக்கிட்டிருக்குன்னு பொய்க் கணக்குக் காமிச்சுக்கிட்டிருக்கோம். போன வருசத்தைவிட இந்த வருசம் இரண்டு புலி கூடிருக்குன்னு எழதியனுப்புவோம். குறைஞ்சிருச்சுன்னு எழுதுனா, புடுச்சு தின்னியான்னு கேப்பான். இங்க காப்பித் தண்ணிக்கே வழியில்ல, நாமலா புலியப் புடிச்சுத் திண்ணப்போறோம்? சரின்னு இத்தனை வருசம் பொய்க் கணக்குக் காமிச்சது இப்ப மாட்டிக்கிட்டோம். படிக்காதவுக யாரும் இங்க வர்றதில்ல. ஒங்கள மாதிரி படிச்ச புள்ளகதான் வந்து ஏமாந்து போதுக பாவம். சரி, வந்தது வந்துட்டீங்க, இங்கனக்குள்ள தலையணையாறுன்னு ஒரு ஆறு ஓடுது, அதையாவது பாத்துட்டுப் போங்க என்று அனுமதி கொடுத்தார்.  

அடர்ந்த வனத்தின் நடுவில் ஓடும் மிக அற்புதமான சிற்றாறு அது. அதில் காலை நனைத்து அனுபவித்துக் கொண்டிருந்தபோது, வனத்துறை ஊழியர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். நேத்து வந்திருக்கலாமே, இரண்டு புலி இங்க திருஞ்சுச்சு. நான்தான் விரட்டி விட்டேன் என்று புருடா விட்டார். திரும்பவும் ஆட்டோவில் வந்து களக்காட்டில் இறங்கினோம். ஆட்டோக்காரர் 150 ரூபாய் கேட்டார். கொடுத்துவிட்டு, திருநெல்வேலிக்கு வண்டியைப் பிடித்தோம்.