August 2007


பிள்ளையார் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட நான், டிஸ்கோ சாந்தி பெயருக்கான காரணம் தேடி பள்ளி முழுவதும் அலைந்தேன். எனக்குப் பதில் சொல்லித் தேற்றுவாரில்லை. முயற்சிகளில் தோல்வியுற்று ஒரு நெட்டிலிங்க மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, லெட்டுப் பிள்ளையே என்னை நோக்கி வந்தான். டிஸ்கோ சாந்தி என்று பெயர் வந்த காரணத்தைக் கண்ணீரோடு கூறலானான்.

பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, விளையாட்டு வகுப்புகளில் மாணவர்கள் யாரும் சட்டை அணிந்து விளையாடக்கூடாது. பனியன் அணிந்துதான் விளையாட வேண்டும் என எமது தலைமை ஆசிரியர் பிரகடனம் செய்தார். இது பள்ளியின் வரலாற்றுப் பதிவேடுகளில் பனியன் பிரகடனம் என்று புகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகிறது.

திடீரென பனியன் வாங்க வசதியில்லாத காரணத்தால் லெட்டுப் பிள்ளை அடுத்த நாள் விளையாட்டு வகுப்புக்கு தன் தந்தையின் பனியனை அணிந்து வந்தான். லெட்டுப் பிள்ளை மிகக் குட்டையான ஆள் என்பதால் அவன் தந்தையின் பனியன் மிகப் பெரியதாக இருந்தது. கழுத்தை நுழைக்கும் இடம் வயிறுவரை வந்தது. அப்போது அவனுடன் படித்த டிஸ்கோ சாந்தி ரசிகனொருவன், டிஸ்கோ சாந்தியின் ஆடைகளைப் போலவே இவனது பனியனிலும் கழுத்து மிகக் கீழிறங்கி இருப்பதால், இவனுக்கும் டிஸ்கோ சாந்தி என்று பெயர் சூட்டிவிடலாம் என்று சொன்னான். இதைப் பிற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் அமோதித்தார்கள். இப்படியாக தனக்கு டிஸ்கோ சாந்தி என்ற பெயர் அமைந்தது என்று சொல்லி முடித்தான் லெட்டுப் பிள்ளை.

எனக்கு அந்தப் பெயர்க் காரணம் தெரிந்ததில் பிள்ளையாருக்கு ஏக மகிழ்ச்சி. தன் தலைக்குப் பின்னால் சீரியல் லைட் சுத்த, என்னைப் பார்த்து புன்னகைத்தார் பிள்ளையார்.

velu2.jpg மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் ஆர். வேலு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியிலிருந்து: 

கே: சென்னை சென்டரலில் புறநகர் ரயில்கள் சரியாக வராததை எதிர்த்து மறியல் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறீர்களே.

ப. மக்களுக்காக ரயில்வே என்று நினைத்துவிட்டார்களா? ரயில்வேவுக்காகத்தான் மக்கள். இனியும் மறியல் செய்பவர்களை பா.ம.க. தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

கே. தென் மாவட்டங்களுக்கு எப்போதும் ரயில்கள் மிகுந்த நெரிசலுடன் செல்கின்றன. அந்த ரூட்டில் இரட்டை ரயில்பாதை எப்போது போடுவீர்கள்?

ப. திண்டிவனத்திற்கும் நகரிக்கும் இடையில் பணிகள் துவங்கிவிட்டன.

கே. நகரி ஆந்திராவில் இருக்கிறது. திண்டிவனத்திற்கும் நகரிக்கும் இடையில் எதற்கு இரட்டைப் பாதை?

ப. சென்னைக்கும் தென்மாவட்டங்களுக்கும் இடையில் திண்டிவனம் இருப்பதால், எல்லாத் திட்டங்களிலும் திண்டிவனம் பயனடைகிறது என்பது உண்மைதான். ஆனால், திண்டிவனத்திற்கென்று தனியாக ஏதாவது திட்டம் வேண்டாமா? அதனால்தான்.

கே. ஏன் ரயில்வே திட்டங்களில் தென்மாவட்டங்களைப் புறக்கணிக்கிறீர்கள்?

ப. தென் மாவட்டங்களில் வன்னியர்களா இருக்கிறார்கள். வன்னியர்களின் ரயில்வே அன்னியருக்குக் கிடையாது.  

கே. எதிர்க்கட்சிகள் போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறாரே?

ப. போராடுவது ஜனநாயக உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது.

கே. ரயில்வேவின் அநியாயங்களை எதிர்த்துப் போரிடுவதும் ஜனநாயக உரிமைதானே?

ப. யார்றா.. இவண்? கேணத்தனமா கேட்டுக்கிட்டு… ரயில்வேவை எதிர்த்தா ஜெயில்தான். ஆனா, தமிழக அரசோட எல்லாத் திட்டங்களையும் நாங்க எதிர்ப்போம்.

கே. சென்னைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் இரட்டை ரயில்பாதை போட்டால், ரயில்களில் கூட்டம் குறையுமே?

ப. வந்துட்டார்யா ரயில்வே அமைச்சர் சொல்றதுக்கு. எங்களுக்குத் தெரியாதா?

கே. புதிதாக ஏதாவது ரயில்வே திட்டங்கள் இருக்கிறதா?

ப. ஏன் எங்கிட்ட கேக்குற? இதுக்கு முன்னாடி கேள்வி கேட்டானே அவங்கிட்ட கேளு.. டேய் எந்திரிங்கடா… பத்திரிகையாளர் கூட்டமெல்லாம் முடிஞ்சுபோச்சு.. போங்க.. போங்க…

பரத கண்டம் என்ற இந்த ஜம்புத் தீபத்திலே முன்பொரு காலத்திலே அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. மதுரையின் வடபகுதியில் வைகை நதிக்கு அருகில் சேதுபதி மேல் நிலைப் பள்ளி என்றொரு பள்ளி இருக்கிறது. அங்கே ராமச்சந்திரன் என்றொரு மாணாக்கன் ஆறாம் வகுப்பு பயின்று வந்தான். ஆனால், அவனை யாரும் ராமச்சந்திரன் என்று அழைத்து யாம் கண்டதில்லை. எல்லோரும் லெட்டுப் பிள்ளை என்றே அன்புடன் அழைத்து வந்தனர். அதன் காரணம் யாது என்று பல்வேறு தரப்பினரிடமும் வினவியபோது, அதன் காரணம் யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் அங்கிருந்த பிள்ளையாரையே கேட்டேன். அவர் அந்தக் கதையை எனக்குக் கூறலாகினார்.

கதை வருமாறு: ராமச்சந்திரன் நீண்ட காலமாக ரீஃபிள் பேனாவை பயன்படுத்திவந்தான். வகுப்பில் பெரிதாக அவன் ஏதும் எழுதுவதில்லை என்பதால், அந்தப் பேனாவின் ரீஃபிளில் மை தீரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரையாண்டுகள் இப்படியே கழிந்தன. ரீஃபிளைத் தவிர பேனாவின் பிற பாகங்கள் எல்லாம் உடைந்து சிதறிவிட்டன. வெறும் ரீஃபிளைப் பிடித்தே எழுதிவந்தான் ராமச்சந்திரன். காலம் இப்படிக் கழிகையில் அந்த கெட்ட நாளும் வந்தது. ஆம். ரீஃபிள் தீர்ந்துவிட்டது. ராமச்சந்திரனால் துக்கத்தை அடக்க முடியவில்லை. கோவென்று கதறியழலானான். பள்ளி மாணாக்கர்கள் அந்த நாட்களில் ரீஃபிளை லெட்டு என்று அழைத்து வந்தனர். அக்காரணத்தால் என் லெட்டுப் பிள்ளை போச்சே என்று குமுறிக்குமுறி அழுதான் ராமச்சந்திரன். இதைக் கண்ணுற்ற பலரும் துணுக்குற்றனர். ஒரு லெட்டு தீர்ந்தததற்கா இவ்வளவு அழுகை என்று ஆச்சரியத்துடன் வினவினர். அப்போது ராமச்சந்திரன் சொல்லானான்: அது வெறும் லெட்டு அல்ல. என் பிள்ளையைப் போல அல்லவா வைத்திருந்தேன். அது இன்று தீர்ந்துவிட்டதே.. அய்யகோ.. நான் என் செய்வேன்… என்று கேட்போர் மனம் கலங்கும் வண்ணம் மீண்டும் கதறலானான். ஆகையால் அங்கு கூடியிருந்த எல்லோரும் சேர்ந்து அவனுக்கு தேறுதல் சொல்லி, அந்த லெட்டை நல்லடக்கம் செய்யும் யோசனையைக் கூறினர். ராமச்சந்திரனும் அவ்வாறே அரசமரத்தடியில் ஒரு குழியைத் தோண்டி லெட்டைப் புதைத்தான். மேலே மண்ணால் ஆன ஒரு சமாதியையும் எழுப்பினான். லெட்டை பிள்ளை என்று கருதி, உயிர் வளர்த்ததனால் அன்றைய தினத்திலிருந்து அவன் பெயர் லெட்டுப் பிள்ளை என்று வழங்கலாயிற்று.

இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிள்ளையார், லெட்டுப் பிள்ளைக்கு டிஸ்கோ சாந்தி என்றொரு பெயரும் வழக்கில் உண்டு. அது ஏன் என்று கண்டறியாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று கூறிவிட்டு சயனத்தில் ஆழ்ந்தார்.

அந்தக் கதை…..