July 2008


தேன் மிட்டாய்
வாங்கினேன்
தேனே இல்லையே!

 29.07.2008ந் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னைப் பதிப்புடன் வழங்கப்படும் சென்னை டைம்ஸில் ஒரு சிறு குறிப்பு. மதுரையில் எடுக்கப்படும் படங்களெல்லாம் வெற்றிபெறுகின்றன என்பதுதான் அந்தக் குறிப்பின் சாரம். மதுரையை சோழப் பேரரசின் தலைநகரம் என்கிறது அந்தக் குறிப்பு! மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரமா, சோழ நாட்டின் தலைநகரமா என்ற சந்தேகம் வந்தால் யாரிடமாவது கேட்க வேண்டியதுதானே? அது சரி, ஆங்கிலப் பத்திரிகையாளராக இருந்துகொண்டு இதையெல்லாம் கேட்க முடியுமா?

தலைநகரத்தை மாற்ற வேண்டியதுதான்.

********** 

27.07.2008 தேதியிட்ட டெக்கான் க்ரானிக்கிளின் சென்னைக் க்ரானிக்கிளில் முதல் பக்கத்தில் தமிழ் சித்திரக் கதைகளைப் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

Kitsch Tamil Comics come alive on the net என்று அதற்கு ஒரு அற்புதமான தலைப்பு வேறு. பல தமிழ் காமிக்ஸ்கள் இணையத்தில் கிடைக்கின்றன என்று ஆரம்பித்து, அதை உருவாக்கும் முறை, விற்பனை என்று சொதப்பலான கட்டுரை அது. கட்டுரையை விடுங்கள், இதன் தலைப்புதான் மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. Kitsch என்றால் something of tawdry design, appearance, or content created to appeal to popular or undiscriminating taste என்கிறது டிக்ஷ்னரி டாட் காம். உண்மையில் தமிழ் காமிக்ஸ் பதிப்புகள் அவ்வளவு கேவலமாகவா இருக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் Tex Willer, Lucky Luke போன்ற உலகப் புகழ் வாய்ந்த ஐரோப்பிய காமிக்ஸ்கள் இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும்தான் கிடைக்கின்றன. அதுவும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பில். அமெரிக்கா முழுக்க தேடிப் பார்த்தாலும் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் ஆங்கிலத்தில் கிடைக்காது. ஆனால், தமிழில் இங்கே கிடைக்கிறது. அது Kitsch Tamil Comics காமிக்ஸாம். கபி குஷி கபி கம் என்றொரு இந்திப் படம் வந்தது. அந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்லும் கோஷ்டியைச் சேர்ந்தவர் எழுதியிருப்பார் போலிருக்கிறது.

சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 120. இந்த டிக்கெட்டை வாங்கும்போதெல்லாம் வடக்கு மாசி வீதி சாந்தி திரையரங்கின் நினைவுதான் வருகிறது. இந்தத் திரையரங்கம் வடக்கு மாசி வீதி – மேல மாசி வீதி சந்திப்பில் இருந்தது. கச்சிதமாகக் கணக்குப்போட்டுப் பார்த்தால் மேல மாசி வீதியில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் ஓகோவென்றிருந்த தியேட்டர்.  80களின் துவக்கத்தில் நொடித்துப் போய் இருந்தது. அந்த காலகட்டத்தில் மதுரையில் எல்லாத் திரையரங்கங்களிலும் மிகக் குறைந்த கட்டணம் ஒரு ரூபாய் பத்து காசு. இந்த டிக்கெட் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டும்தான் வழங்கப்படும். ஆண்களுக்குக் குறைந்த கட்டணம் இரண்டு ரூபாய் இருபத்தைந்து காசு.  ஆனால், சாந்தியில் குறைந்த கட்டணம் 50 காசுகள். அதற்கடுத்த கட்டணம் 80 காசுகள். பால்கனி ரூ. 1.40. இதுதான் முதல் வகுப்பு. இருந்தும் 50 காசு டிக்கெட்டிற்கு கூட்டம் நெறியும். ஒருபோதும் 1.40 டிக்கெட்டிற்கு ஆள் வராது.

தூங்காதே தம்பி தூங்காதே, மாமன் மகள், நான் பாடும் பாடல் ஆகிய படங்களை அங்கேதான் பார்க்க நேர்ந்தது. 50 காசு டிக்கெட்டிற்கு வெறும் பலகைதான். 80 காசு டிக்கெட்டிற்கும் அதே போல பலகைதான். என்ன, திரையிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும்.
60களில் புதிய படங்களை ரிலீஸ் செய்துகொண்டிருந்த அந்தத் திரையரங்கம் 80களின் துவக்கத்தில் இப்பவோ, அப்பவோ என்று இருந்தது. எல்லாத் திரையரங்கங்களிலும் ஓடித் தேய்ந்த படங்களை  திரையிட்டு வந்தார்கள். திடீரென 1983ல் ஒரு நாள் படங்கள் திரையிடப்படுவது நின்றுவிட்டது (“நான் நாயகன் படம்கூட அங்கேதான் பார்த்தேன். 89 வாக்கில்தான் அது மூடப்பட்டதாக ஞாபகம். கட்டியக்காரரே கொஞ்சம் கவனியுங்கள்” என்று தயவுசெய்து யாரும் பின்னூட்டம் இடாதீர்கள். அது மூடப்பட்ட வருடம் 83தான் ). வடக்கு மாசி வீதிகாரர்களுக்கு வருத்தம்தான்.

திடீர் திடீரென அந்தத் திரையரங்கம் இயங்க ஆரம்பிப்பதாக வதந்திகள் வலம்வரும். ம்ஹும்.. அவை வதந்திகளாகவே முடிந்துவிட்டன. ஆனால், பிற திரையரங்குகளைப் போல இந்தத் திரையரங்கம் இடித்துத்தள்ளப்படவில்லை. இன்னமும் இருக்கிறது. வாகனம் நிறுத்தும் இடமாக பயன்பட்டு வருகிறது. விசில் சத்தமும் கைதட்டல்களும் கிடையாது. எப்போதாவது கார் ஹார்ன் சத்தம் கேட்கும். அடுத்த முறை மதுரைக்குச் செல்லும்போது அந்தத் திரையரங்கின் நிழற்படத்தை எடுத்துவர முயற்சிக்கிறேன்.