September 2008


தற்போது வடக்கு மாசி வீதியில் வசிக்கும் பலருக்கு இப்படி ஒரு கடை இருந்ததே தெரியாது. ஆனால் 80களின் துவக்கத்தில் அப்படி ஒரு கடை இருந்தது. தற்போது கோபால் டாக்டர் அலுவலகத்திற்கு எதிரே அந்த இடம் இருக்கிறது. அந்தக் கடையின் உரிமையாளர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால், அந்தக் கடையை நொண்டி கடை என்றுதான் எல்லோரும் அழைத்து வந்தார்கள். ஃப்ளக்ஸ் போர்டுகள் இல்லாத காலம் அது. அதனால், அந்தப் பகுதியில் இருந்தவர்கள் வைக்கும் பெயர்களே நிலைத்துவிடும்.

அது ஒரு மளிகைக் கடை. அந்தக் கடைக் காரரின் முகம் மிக மங்கலாக நினைவுக்கு வருகிறது. அந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால், மற்ற கடைகளில் இல்லாத மிட்டாய்கள் அந்தக் கடையில் கிடைக்கும் என்பதுதான். தரை மட்டத்திலிருந்து சற்று உயரத்தில் அந்தக் கடை அமைந்திருந்தது. இரண்டு படிகளை ஏறித்தான் செல்ல வேண்டும்.

இந்தக் கடை எனக்கு நினைவில் இருப்பதற்கு மற்றும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலேயே ஒரு காசு, இரண்டு காசு ஆகியவை செல்லாமல் ஆகிவிட்டன. இந்த நொண்டி கடையில் மட்டும் அவை செலாவணி ஆகிக் கொண்டிருந்தன. அவர் அந்தக் கடையை இழுத்து மூடும் வரை அந்தக் காசுகளை வாங்கிக் கொண்டு மிட்டாய்களை சிறுவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அவர் அந்தக் கடையைக் காலி செய்த பிறகு, அந்த இடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டினார்கள். அங்கே ஒரு பேட்டரி கடை வந்தது. இப்போது ஒரு லாரி சர்வீஸின் பார்ஸல் அலுவலகம் இருக்கிறது. அந்த இடத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம், ஒரு பைசா இனிமேல் செல்லாதா என்று கேட்கத் தோன்றும். அந்தக் கடையின் வாசலில் நின்று கொண்டிருக்கும் லாரியின் ஹாரன், அந்தக் காசுகள் இனிமேல் செல்லாது என்று சொல்வதைப் போல இருக்கும். ஆமாம், அந்த உரிமையாளர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்?

வடக்கு மாசி வீதியின் அடையாளங்களில் ஒன்று அண்ணா கடை. அறிஞர் அண்ணாவுக்கும் இந்தக் கடைக்கும் சம்பந்தமில்லை. கடையை வைத்திருப்பவரை எல்லோரும் அண்ணா என்று அழைப்பதால் கடைக்கு இந்தப் பெயர். நான் அவரை அண்ணா என்று கூப்பிடுவேன். என் தந்தையும் அவரை அண்ணா என்று அழைத்து, அவருடைய மாணவப் பருவத்தில் பொருள்களை வாங்கியிருக்கிறார். அதாவது, உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இந்த அண்ணா இருந்து வருகிறார் என்பதுதான் இதன் பொருள்.

இந்தக் கடையை ஒரு சிறிய ஸ்டேஷனரி ஷாப் என்று குறிப்பிடலாம். பரிட்சை பேப்பர், நோட்டு, பேனா, பென்சில், லப்பர் (ரப்பர்) போன்ற பொருள்கள்தான் முக்கிய விற்பனைப் பொருள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாமே அடித்தட்டு மக்கள் வாங்கும் விதத்திலான விலையில்தான் இருக்கும். பெரிய விலையிலான பொருள்கள் ஏதும் கிடைக்காது. ஜியோமெண்ட்ரி பாக்ஸ் என்றால் நடராஜா பாக்ஸ்தான் கிடைக்கும். கேமல் இருக்காது. 80களில் அண்ணா கடைக்கு அருகில் ஹார்வி என்ற நர்ஸரி பள்ளி இருந்தது. அதனால், காலை நேரங்களில் எப்போதுமே கடையில் கூட்டம் நெரியும். மாநகராட்சிப் பள்ளியில் படித்த எங்களுக்கும் அண்ணாதான் பரிட்சை பேப்பர்களை விற்று வந்தார். இவையெல்லாம் போக கோலிக் குண்டு, பம்பரம், சாட்டை, தீப்பெட்டிப் படம், பட்டம் (காற்றாடி) போன்றவற்றையும் விற்றுவந்தார் அண்ணா.

அண்ணா என்று கம்பீரமாக அழைக்கப்பட்டாலும், அண்ணாவின் உருவம் கம்பீரமானதல்ல. சற்று அழுக்கான கதராடைதான் உடுத்துவார் அண்ணா. முதுகில் கூன் விழுந்திருப்பதால், மூன்றரை அடி உயரம்தான் இருப்பார். கம்பை ஊன்றித்தான் நடப்பார். அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கிறார்களா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. காலையில் சீக்கிரம் கடைக்குப் போனால், நெற்றியில் செந்தூரத்தால் இடப்பட்டிருக்கும் நாமத்தைப் பார்க்க முடியும். ஆனால், வடக்கு மாசி வீதியில் வசிக்கும் கோனார்களும் நாமம் இடுவார்கள் என்பதால் அவர் பிராமணரா, கோனாரா என்ற குழப்பம் என் தலைமுறையினருக்கு உண்டு.

கடையில் சம்பளத்திற்கென்று ஆள் கிடையாது. கூட்ட நேரங்களில் உதவுவதற்கென்று யாராவது வருவார்கள். அந்தக் காலத்தில் வடக்கு மாசி வீதி மைனர்கள் சட்டைக் காலர் அழுக்காகாமல் இருக்க கழுத்தைச் சுற்றி கைக்குட்டையைச் சுற்றியிருப்பார்கள். இப்படி கைக்குட்டையைச் சுற்றி வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ஷோக்குப் பேர்வழிகளாக இருப்பார்கள். அப்படி ஒருவர் எப்போதும் அண்ணா கடையில் இருப்பார். அண்ணாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். அண்ணாவுக்கு சாப்பாடு, காபி எல்லாம் வாங்கிக் கொடுப்பார். அண்ணா கடையில் நிற்பது தவிர வேறு வேலை ஏதும் அவருக்குக் கிடையாது. அண்ணா செத்தவுடன் அந்தக் கடைக்கு உரிமை கொண்டாடுவது, கடையைக் கைப்பற்றுவது அவர் திட்டமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும். ஆனால், இன்றுவரை அந்த நாள் வரவில்லை.

அண்ணா கடையில் அதிகம் தென்படும் மற்றொரு நபர் ஏ.வி.எம். ராஜன். அவரது உண்மைப் பெயர் அதுவல்ல. ஏ.வி.எம். ராஜனைப் போல கேசம், மீசை எல்லாம் வைத்திருப்பார். அவர் தோற்றமும் கிட்டத்தட்ட அப்படியே இருக்கும். சமீபத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. பல்லெல்லாம் விழுந்து ஒரிஜினல் ஏ.வி.எம். ராஜனைவிட கிழடுதட்டிப் போயிருந்தார்.

80களில் வாழ்க்கை எவ்வளவு எளிமையாக, குழப்பமில்லாமல் இருந்தது என்பதற்கு அண்ணா கடை ஒரு உதாரணம். தேர்வு செய்ய குறைவான வாய்ப்புகள், எல்லோருக்கும் உகந்த விலையில் பொருள்கள் என ஒரு மாயா பஜாரே நடத்திவந்தார் அண்ணா. இப்போதும் அண்ணா கடை இருக்கிறது. கூட்டம்தான் இல்லை. இப்போது யாரும் குறைந்த விலையிலான பேனாக்களையோ, நோட்டுகளையோ வாங்க விரும்புவதில்லை. தவிர ஹார்வி நர்ஸரி ஸ்கூல் இடம் மாறிவிட்டது. யாரும் மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்புவதில்லை என்பதால், அந்தப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.

அண்ணாவும் அந்த கைக்குட்டை ஷோக்குப் பேர்வழியும் தனியாக இருக்கும் போது மௌனமாக இருப்பார்கள். இனிமேல் இந்தக் கடை தன் கைக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை என்பது கைக்குட்டை நபருக்குப் புரிந்திருக்க வேண்டும். அடிக்கடி இந்தப் பக்கம் வருவதில்லை. அண்ணாவும் தன் கடையில் விற்கும் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார். ஒரு வகையில் அண்ணாதான் வடக்கு மாசி வீதியின் பொற்காலத்தின் கடைசிப் பிரதிநிதி. அவர் இல்லாமல் போகும்போது, அந்த வீதியும் தன் தனித் தன்மைகளை இழந்து நிற்கும் என்று தோன்றுகிறது.

ரோட்டுக் கடையில் இட்லி சாப்பிடும்போது
சட்னி அதிகம் வாங்கிச் சாப்பிடு என்பான் புத்திசாலி!

மேகத்திற்குத்தான்
எவ்வளவு பரிகாசம்
தன்னை எட்டிப்பிடிக்க நினைக்கும்
மரத்தின் கைகளைத் தட்டிவிட்டுப்
போகிறதே!

அதனால்தான்
வருந்தி
பின் மழையாக
அழுகிறதோ?

(மேலே உள்ள கவிதை பரிசு ரூ. 25ஐப் பெறுகிறது)

நான் அப்போதுதான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். என்னுடன் வேலை பார்த்த பெண் ஒருத்தி தன்னுடைய செல்போன் எண்ணைக் கொடுத்தாள். அடிக்கடி போன் செய் என்றாள். முதல் வாரம். வெள்ளிக் கிழமை அலுவலகத்தைவிட்டுக் கிளம்பினேன். கிளம்பிய பிறகுதான் நாளைக்கு அலுவலகம் இருக்கிறதா என்று திடீரென எனக்கு ஒரு சந்தேகம். அலுவலகத்திற்கே போன் செய்து கேட்டால் நன்றாக இருக்காது என்று இந்தப் பெண்ணுக்குப் போன் செய்தேன். போனை எடுத்தது ஒரு ஆண். என்ன வேண்டும் என்றார் அவர். நான் அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்றேன். எதற்கு என்றார். விஷயத்தைச் சொன்னேன். நாளைக்கு அலுவலகம் லீவு என்றார் அவர். நான் போனை வைத்துவிட்டேன். பிறகு மறுபடியும் போன் செய்தார். எதற்கு போன் செய்தீர்கள் என்று கேட்டார். அதுதான் சொல்லிவிட்டேனே என்றேன். போனை வைத்துவிட்டார். திங்கட்கிழமை அந்தப் பெண் வந்து புளியோதரைக்கு (அடையாளம் தெரியாமல் இருக்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) போன் செய்தாயா என்று கேட்டாள். உனக்குத்தான் போன் செய்தேன். அவர் எடுத்தார் என்றேன். அவர் பெரிய இயக்குனர். விரைவில் அவர் இயக்கும் படம் வெளிவரவிருக்கிறது என்றாள் அவள். அதற்காக உன் போனை அவர் எடுக்க வேண்டுமா என்று கேட்டேன். இது சம்பவம் நம்பர் 1.

சம்பவம் நண்பர் 2. என்னுடைய சாட் தோழி ஒருத்திக்கு ஒரு இயக்குனர் நண்பர். அவர் தன் முதல் படத்தைத் துவங்கிய நேரத்தில், அவரைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வரவழைக்க முடியுமா என்றெல்லாம் இவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பிறகு அவர் படத்தை எடுத்து, வெளியிட்டுவிட்டார். பெரும் பரபரப்பைக் கிளப்பிய போலி தமிழ்ப் பற்றுப் படம் அது. ஊத்திக்கொண்டுவிட்டது. விஷயம் அதுவல்ல. ஒரு நாள் சாட்டில் அந்தப் பெண் வந்தாள். நான் ஹாய் என்றேன். பதில் சொன்னது இந்த இயக்குனர். அவள் தன் ஐடியையும் பாஸ்வேர்டையும் இந்தத் தாடிக்காரரிடம் கொடுத்திருக்கிறார் என்பது அப்போதுதான் புரிந்தது.

மூன்றாவதாக நான் இங்கே குறிப்பிடும் பெண் எனக்கு நெருக்கமான தோழி. அந்த இயக்குனரும் நெருங்கிய நண்பர். அந்தப் பெண்ணின் மின்னஞ்சலை அந்த இயக்குனர்தான் பார்த்து, பதிலளிக்கிறார் என்று தெரிய வந்ததது.
இதில் நான் குறிப்பிட்ட மூன்று பெண்களுமே படித்தவர்கள். அதில் ஒருவருக்கு திருமணமும் ஆகிவிட்டது. எப்படி இவர்கள் தங்களது பிரைவசியை ஒரு ஆணிடம் அடகு வைக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இவர்கள் இயக்குனர் என்பதுதான் காரணமா? அதிலும் போனில் பேசும்போதும், சாட்டில் பேசும்போதும் இவர்களது கம்பீரம் இருக்கிறதே, அது தமிழில் நீங்கள் எம்.ஏ. படித்தாலும் கிடைக்காது.