Posted by கட்டியக்காரன் under
சும்மா ஒரு கருத்து [7] Comments
இயக்குனர் சீமான் சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழகத்தில் கருத்துச் சுதந்திரமே இல்லை என்று குமுறுயிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னையாக்குகிறார்களாம். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால், எந்த நாட்டிலும் பிரச்னை வரத்தான் செய்யும். எல்டிடிஇ மீதான தடை இன்னும் நீடிப்பது சரியா என்பது வேறு பிரச்னை. ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னைதான். அதை எதிர்கொண்டுதான் நம்முடைய கொள்கையை அரசிடம் முன்வைக்க வேண்டும். உடனே அதைக் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான விஷயமாக்குவது விஷயத்தை திசை திருப்புவதாகும்.
தவிர, சீமான் போன்றவர்களுக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் தகுதி இருக்கிறதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் குஷ்பு, பாதுகாப்பான செக்ஸ் பற்றி சில ஆரோக்கியமான கருத்துக்களைச் சொன்னபோது, கொதித்தெழுந்து தமிழ்நாடு முழுக்க வழக்கத் தொடர்ந்தார்கள். மொத்தம் 27 வழக்குகள். இத்தனைக்கும் அந்தக் கருத்து பகுத்தறிவு சார்ந்து சொல்லப்பட்ட கருத்து. அதைத் “தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி தவறாகப் பேசிய குஷ்பு” என்று குறிப்பிட்டு அவரைப் பல மாதங்களுக்கு நீதிமன்றங்களில் இழுத்தடித்தார்கள். அதைச் செய்தவர்களை வலுவாக ஆதரித்தவர் சீமான். குஷ்புவுக்கு இல்லாத கருத்துச் சுதந்திரம் இவருக்கு மட்டும் வேண்டுமாம். இதற்கு நடுவில் தனித் தமிழ்நாடு கோரிக்கை வேறு. பசும்பொன் மாதிரி ஜாதி வெறியைத் தூக்கிப்பிடிக்கும் படங்களை எடுக்கும் இவர்கள் கையில் தனியாக ஒரு தமிழ்நாடு கிடைத்தால், கதை அதோடு கந்தல்தான்.
Posted by கட்டியக்காரன் under
சும்மா ஒரு கருத்து [2] Comments
மகாரஷ்டிரத்தில் ரயில்வே தேர்வு எழுதவந்த வட இந்திய மாணவர்கள் மீது மகாராஷ்டிர நவ நிர்மாண சேனையினர் தாக்குதல் நடத்தியது, வட இந்தியவர்களை அதிர வைத்திருக்கிறதோ என்னவோ, வட இந்திய ஊடகங்களை அதிர வைத்திருக்கிறது. குமுறித் தள்ளுகிறார்கள். “அவர் ஆஃப் ஷேம்” என்கிறது அவுட்லுக். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புலம்பித் தள்ளுகிறார்கள். சகிப்புத் தன்மையைப் பற்றிப் பக்கம் பக்கமாக பாடம் நடத்துகிறார்கள். இந்தியாவிற்குள் யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்று கேவுகிறார்கள். ராஜ் தாக்கரேவின் கட்சியினர் செய்வது தவறுதான்.
ஆனால் சகிப்புத் தன்மை பற்றியெல்லாம் வட இந்தியர்கள் பேசுவது தகுமா? இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் வெறும் நான்கு மாநிலங்களில் மட்டுமே பேசப்பட்டுக்கொண்டிருந்த இந்தியை, இந்தியா முழுவதுமிருக்கும் மக்கள் எல்லோரும் பேச வேண்டும்; இனி இந்திதான் இந்திய அரசின் தகவல்தொடர்பு மொழி; மத்திய அரசுப் பணியில் பணியாற்ற விரும்புவர்கள் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தது மட்டும் சகிப்புத்தன்மைக்கு உகந்த காரியமா?
தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்திருக்கும் குக்கிராமத்தில் இருக்கும் வங்கி கிளையில் பணம் கட்டுவதற்கான படிவத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலத்திலும் மற்றொரு பகுதியில் இந்தியிலும் அச்சடித்து வழங்கிக்கொண்டிருக்கிறார்களே, அது மட்டும் சகிப்புத் தன்மையா? இந்தியா முழுவதுமிருக்கும் ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், வங்கிகளில் இந்தி இல்லாத இடமே கிடையாது. இந்தி பேசுபவன் மட்டும் எங்கே போனாலும் சிரமப்படக்கூடாது. மற்றவன் உழைத்துச் சாப்பிட வேண்டுமானாலும் அதற்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் இப்படி நிலையை ஏற்படுத்தியவர்கள்தான் பயங்கரவாதிகள்.
இந்தி பேசும் மக்களின் மனநிலையே ஒரு மாதிரியானது. அவர்களைப் பொறுத்தவரை, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்திதான் பேசுகிறார்கள். இந்தி பேசாத, தெரியாத மக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு விசித்திரமாக இருக்கிறது. சத்தீஸ்கரி உள்ளிட்ட பல மொழிகளை இந்தியின் பரவல் அழித்துவிட்டது. இனிமேல் அந்த மொழிகளை மீட்கவே முடியாது. அந்த மொழிகளோடு சேர்ந்து, அவற்றில் இருந்த மருத்துவ, விஞ்ஞான, சுற்றுச்சூழல் அறிவும் அழிந்துவிட்டது. அப்போதெல்லாம் யாரும் குமுறவில்லை. இன்றைக்கு இந்தி பேசுபவர்கள் அடிவாங்குகிறார்கள் என்றவுடன் குமுறுகிறார்கள்.
ஆட்களை அடித்தால்தான் வன்முறை என்றில்லை. கலாச்சார ரீதியிலான, மொழி ரீதியிலான தாக்குதலும்கூட வன்முறைதான். ஆனால், அதை மென்மையாக யாராவது சொன்னால் புரிவதில்லை. கையில் கட்டையுடன் சொன்னால்தான் புரிகிறது.
Posted by கட்டியக்காரன் under
படைப்பு [6] Comments
Posted by கட்டியக்காரன் under
பேப்பர்காரய்ங்க அட் [2] Comments
என்ன நினைத்து இந்த போஸ்டரின் வாசகங்களை எழுதினார்கள் என்று தெரியவில்லை. படித்தால் சிரிப்புத்தான் வருகிறது.
Posted by கட்டியக்காரன் under
நம்ம பயலுக [2] Comments

விஜயகாந்த்
தலைப்பைப் பார்த்தால் “பட்டணத்தில் பூதம்” தொனியில் இருக்கிறதே என்று யோசிக்காமல் தொடர்ந்து படியுங்கள். நடிகரும் தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் பிறந்து, வளர்ந்தது வடக்கு மாசி வீதியில் உள்ள ஒரு தெருவில்தான். அவர் முதல்வரானால், தமிழகத்திற்கு ஒரு முதல்வரைத் தந்தை பெருமையும் இந்த வீதிக்குக் கிடைத்துவிடும். ஆனால், சொல்ல வந்த விஷயமே வேறு.
80களின் இறுதியில் விஜயகாந்த் நடித்த படங்களைப் பார்த்தால், ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அந்த நேரத்தில் வந்த பல படங்களில் ஜாதி, மதம், அந்தஸ்து காரணமாக பிரிக்கப்படும் காதலர்களை உயிரைக் கொடுத்தாவது சேர்த்து வைப்பார் விஜயகாந்த். இப்படி விஜயகாந்தைப் போலவே காதலர்களைச் சேர்த்துவைக்கவென்று 90களின் ஆரம்பத்தில் வடக்கு மாசி வீதியில் பலர் திரிந்தார்கள். யாராவது ஒரு பையன், ஒரு பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் போதும். எங்கிருந்தோ வந்துவிடுவார் ஒரு விஜயகாந்த். விறுவிறுவென அந்தப் பெண்ணின் பூர்வீகம், ஜாதகம் எல்லாவற்றையும் ஒப்பிப்பார். பிறகு, அந்தப் பெண்ணை எந்த இடத்தில் எப்போது பார்க்கலாம் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அந்த ஒரு தலைக் காதலனுக்குத் தேவைப்படக்கூடிய அத்தனை உதவிகளையும் செய்துகொடுப்பார் விஜயகாந்த். “கவலைப் படாதீங்க பாஸ். அது ஒங்களைத்தான் பாக்குது. முடிச்சிடலாம்” என்று தினமும் சாயங்காலம் சந்தித்து ஆறுதல் சொல்வார்.
இவனுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று நீங்கள் மறுகுவீர்கள். ஒரு கைமாறும் எதிர்பார்க்க மாட்டார் விஜயகாந்த். ஓட்டலுக்குப் போனால்கூட பில்லை அவர் கொடுப்பார். எல்லாம் நல்லபடியாகப் போய்கொண்டிருக்கும். எல்லாம் அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்குமான உறவு தொடரும்வரைதான். அந்தப் பெண் மீதான ஒரு தலைக் காதல் உங்களிடம் தீர்ந்துவிட்டாலோ, அல்லது நீங்கள் பிரிந்துவிட்டாலோ சட்டென விஜயகாந்த் காணாமல் போய்விடுவார்.
பிறகு எதிரில் பார்த்தால்கூட ஒரு வேண்டாவெறுப்புச் சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போய்விடுவார். பிறகு, வேறு யாரையாவது சேர்த்துவைக்க முயன்றுகொண்டிருப்பார் மனிதர். வாழ்நாளில் அவரை மீண்டும் சந்திக்கவே மாட்டீர்கள். இந்த விஜயகாந்த்கள் எப்படி உருவாகிறார்கள்? தங்கள் ஒரு தலைக் காதலில் தோற்றவர்கள்தான் இப்படி மாறுகிறார்கள் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. ஆனால், காதலில் தோற்றவர்கள் எல்லோரும் இப்படியாவதில்லையே? காதலிலும் தோற்று, வேலை வெட்டி ஏதும் இல்லாமல் போனால் இப்படி விஜயகாந்த் ஆகும் வாய்ப்பு அதிகம் என்கிறார் 2008ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற ஃப்ரான்சுவா பாரி சினௌசி. அந்தக் கூற்றில் உண்மை இருக்கவே செய்கிறது.