August 2009


சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

நடிகர்கள்: விக்ரம், ஸ்ரேயா, கிருஷ்ணா, பிரபு, வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி; இசை: தேவி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுசி கணேசன்.

ஜென்டில்மேனில் கொஞ்சம், அன்னியனில் கொஞ்சம், ரமணாவில் நிறைய எடுத்துச் சேர்த்து உருவாகியிருக்கும் படம்.

தங்கள் பிரச்னைகளை காகிதத்தில் எழுதி போரூர் முருகன் கோவிலில் இருக்கும் ஒரு மரத்தில் கட்டிவைத்தால், அந்தப் பிரச்னைகள் தீருகின்றன. தீர்த்து வைப்பவர் கந்தசாமி. இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று ஆராய வருகிறார் காவல்துறை டிஐஜி (பிரபு) ஒருவர்.

கந்தசாமி சிபிஐயின் பொருளாதாரக் குற்றப் பிரிவில் பணியாற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. தவறாகப் பணம் குவிக்கும் பணக்காரர்களை ரெய்டு செய்து, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் ஒரு பகுதியை ஏழைகளின் பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுத்துகிறார். இதில் சிக்கும் ஒரு பெரிய பணக்காரர் பிபிபி (ஆசிஷ் வித்யார்த்தி). அவருடைய மகள் சுப்புலட்சுமி (ஸ்ரேயா). முருகன் கோவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது கந்தசாமிதான் என்பது பிபிபிக்கு தெரிந்துவிட, ஏழைகளுக்காக உதவும் பணத்தில் பாதியைத் தனக்குத் தந்துவிட வேண்டுமென்று பேரம் பேசுகிறார் பிபிபி. பிபிபியுடன் கூட்டு சேர்ந்து, மெக்ஸிகோ வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் பெரு முதலாளிகள் சிலரது கருப்புப் பணத்தை அள்ளிவரத் திட்டம் போடுகிறார் கந்தசாமி. இதில் ஆர்எம்ஜி குழுமத்தின் ராஜ்மோகனுடன் மோதல் வருகிறது. மக்களின் குறையைத் தீர்த்துவைக்கும் கந்தசாமி யார் என்பதை காவல்துறை டிஐஜி கண்டுபிடித்தாரா, பிபிபி, ராஜ்மோகன் கதி என்ன ஆகிறது என்பதுதான் மீதப் படம்.

துயரத்தில் இருக்கும் நம்மை ஒரு சூப்பர் ஹீரோ வந்து காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பது எப்போதுமே சாகாத ஒரு ஃபேண்டஸி. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் நாயகர்கள் இந்த ஃபேண்டஸியில் உருவெடுத்தவர்கள்தான். இந்த வகைக் கதைகளில் இரண்டு, மூன்று வில்லன்களையும் சற்று சுவாரஸ்யமான திரைக்கதையையும் அமைத்துவிட்டால் போதும். ஒரு சூப்பர் ஹிட் படம் ரெடி. ஆரம்ப காலத்திலிருந்தே ஷங்கர் இம்மாதிரிக் கதையைத்தான் பல படங்களில் காட்டினார். ஆனால், ஜென்டில்மேனில் இருந்த இடஒதுக்கீட்டு எதிர்ப்புக் குரல், அன்னியனில் இருந்த இந்துத்துவ முகமும் ஆகியவை கடும் விமர்சனத்திற்குள்ளாயின. ஆனால், சுசி கணேசன் இம்மாதிரி எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. சூப்பர் ஹீரோ கதை என்று முடிவுசெய்த பிறகு, அதை சுவாரஸ்யமான, பளபளப்பான திரைக்கதையோடு கொடுத்திருக்கிறார் சுசி கணேசன்.

படத்தின் துவக்கத்தில் ஒரு ஏழைக்குக் கந்தசாமி கொடுத்த பணத்தை, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடுங்கிக் கொள்ள, அந்த இன்ஸ்பெக்டரை மாறுவேடத்தில் வரும் விக்ரம், பின்னணிப் பாடலுடன் அடித்துத் துவைக்கும்போதே படத்தின் தொனி செட்டாகிவிடுகிறது. அதை முடிவுவரை நூல் பிடித்தாற்போல எடுத்துச் சென்றிருக்கிறார் கணேசன்.  இப்படி சூப்பர் ஹீரோ கதையில் எல்லாம், மற்றொரு பக்கம் அசட்டு சென்டிமென்டுடன் கூடிய அம்மாவோ, அப்பாவிக் காதலியோ இருந்து படத்தை நாசம் செய்வார்கள். இந்தப் படத்தில் அப்படி இல்லை.

ஹாலிவுட் அழகியும் கந்தசாமியும்

ஹாலிவுட் அழகியும் கந்தசாமியும்

இந்தப் படத்தின் நாயகியாக வரும் ஸ்ரேயா, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் நாயகியைப் போல, கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நடிப்பு என்று வருகிறார். அது பொருத்தமாகவும் இருக்கிறது. ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையான ஒரே தமிழ் சினிமா கதாநாயகி இவர்தான்.

விக்ரமிற்கு கிட்டத்தட்ட அன்னியன் படத்தில் செய்தது மாதிரியான வேடம். அதனால், அலட்டிக்கொள்ளாமல் நடித்துவிட்டுப் போகிறார். இம்மாதிரி சூப்பர் ஹீரோ கதைகள் இந்திய நடிகர்களில் சிலருக்கு மட்டுமே பொருந்தும். விக்ரம் அவர்களில் ஒருவர் என்று தோன்றுகிறது. இந்த சூப்பர் ஹீரோ கதையில் வடிவேலு வலுவில் நுழைக்கப்பட்டிருக்கிறார். வரும் காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார் என்றாலும், படத்தோடு ஒட்டாமல் வந்துபோகிறார்.

படத்தின் ஒளிப்பதிவு (என்.கே. ஏகாம்பரம்), இசை, எடிட்டிங் எல்லாமே படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. பாடல்களும் அவை படமாக்கப்பட்டு விதமும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. அதிலும் “மியாவ்.. மியாவ் பூனை” பாடல்.

படத்தில் நிறைய ஓட்டைகளும் பலவீனங்களும் இருக்கின்றன. படத்தின் நீளம் (மூன்றேகால் மணி நேரம்) அயர்ச்சியூட்டுகிறது. ஆனால், அதையெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்தின் பிரம்மாண்டமும் அடிரிலின் சுரக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளும் மறக்க வைத்துவிடுகின்றன.

எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு மூன்றேகால் மணி நேரத்தைக் கழிக்க நினைத்தால், இந்தப் படம் சரியான சாய்ஸ்.

நடிகர்கள்: ஆர்.கே., நெப்போலியன், பானு, லால், வடிவேலு, மணிவண்ணன், சோனா, சுகன்யா, ரஞ்சிதா, சரவணன்; இயக்கம் இசை: இளையராஜா; எஸ்.பி. ராஜகுமார்.

அன்பு நாயகன் ஆர்.கேவும் தூரத்தில் பேரழகி பானுவும்

அன்பு நாயகன் ஆர்.கேவும் தூரத்தில் பேரழகி பானுவும்

தூண்டில், எல்லாம் அவன் செயல், மஞ்சள் வெயில் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஆர்.கேவுக்கு உண்மையில் இதுதான் முதல் படம். தனக்கு என்ன மாதிரி பாத்திரம் சரியாக வரும் என்று உணர்ந்து அம்மாதிரி ஒரு கதையில் நடித்திருக்கிறார் ஆர்.கே.

ஆர்.கேவும் நெப்போலியனும் அண்ணன் – தம்பிகள். ஆர்.கே. குடித்துவிட்டு ஊதாரித் தனமாகத் திரிகிறார். ஆர்.கேவுக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் நெப்போலியன். ஆனால், யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதற்கிடையில் லால் குடும்பமும் நெப்போலியன் குடும்பமும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். பிறகு ஆர்.கேவைக் காதலிக்கிறார் பானு. திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில் லாலின் தங்கை அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துகிறார். லாலும் நெப்போலியனும் ஏன் மோதிக் கொள்கிறார்கள், திருமணம் நடக்கிறதா என்பதுதான் கதை.

கதையிலும் திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. வழக்கமான பொத்தாம் பொதுவான கிராமம், இரு குடும்பங்களுக்கிடையில் பகை, கோவில் திருவிழா, பஞ்சாயத்து, கதாநாயகனுக்கு மாமனாக காமெடியன் என பல படங்களில் பார்த்துச் சலித்த செட் அப்தான். ஆனால், ஒரு பாட்டு, ஒரு சண்டை, பிறகு காமெடி, அப்புறம் சென்டிமெண்ட் என்று காட்சிகளை அடுக்கப்பட்டிருக்கும் வரிசையால் முதல் பாதி எந்தப் பிரச்னையும் இல்லாமல் நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஆர்.கேவின் கல்யாணம் நிற்கும்போது, படமும் முன்னேறாமல் தடுமாறுகிறது. ஃப்ளாஷ்பேக், பெரிய சண்டை என்று இழுத்துக் கொண்டே போகும் படம், எப்போது முடியும் என்று தோன்ற வைக்கிறது. வடிவேலுவின் காமெடி பரவாயில்லை ரகம். சுகன்யா, ரஞ்சிதா என்று பழைய நடிகைகளை ஒரு சில காட்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் (சுகன்யா நடித்திருக்கும் ஆர்.கேவின் இரண்டாவது படம் இது).

தனது முந்தைய படங்களில் ஆர்.கே. சீரியஸாக நடித்துக் கொண்டிருக்கும்போது, பார்ப்பவர்களுக்கு காமெடியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார். “தமாஷ்” என்ற வார்த்தையை மட்டும் தொடர்ந்து “தமாஸ்” என்றே உச்சரிக்கிறார்.

கதாநாயகியாக வரும் பானுவுக்கு காதலித்து, டூயட் பாடி, தாலி கட்டிக்கொள்ள வேண்டிய வேலை. என்ன செய்ய முடியுமோ செய்திருக்கிறார். ஆனால், க்ளோஸ் அப் காட்சிகளில் பயமுறுத்துகிறார். வடிவேலுவின் காதலியாக சில காட்சிகளுக்கு வரும் சோனாவை படத்தில் சேர்க்கும்போதே, கவர்ச்சிக்காக என்று சொல்லியே சேர்த்திருப்பதால், அவரும் வஞ்சனையில்லாமல் கொடுத்த பணியைச் செய்துவிட்டுப் போகிறார்.

இசை இளையராஜா. மூன்று பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. அதற்காக டைட்டில் சாங்காக ஒரு தத்துவப் பாடலை வைத்து, அதை அவரையே பாட வைத்திருக்க வேண்டுமா? (ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதை நினைத்து, “சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்வது மாதிரியான பாடல் இது.)

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு பிற்பாதியிலும் இருந்திருந்தால், ஆர்.கேவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்திருக்கும்.