Uncategorized


போன வாரம் மங்களூரில் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஸ்ரீ ராம சேனா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்று காரணமும் சொன்னார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய மாநில பா.ஜ.க. அரசுக்கு பல நாட்கள் பிடித்தன. “பப் கலாச்சாரத்தை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா. பா.ஜ.க.விடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஆச்சரியம் தருவது இங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம்தான். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளிலிருந்து வி.சி.க. போன்ற சிறிய கட்சிகள் வரைக்கும் இதைப் பற்றி வாயையே திறக்கவில்லை. 

31ந் தேதி தி இந்து நாளிதழில் அன்புமணி இதுகுறித்து வெளியிட்ட ஒரு கருத்து வெளிவந்திருக்கிறது. அதாவது பப் கலாச்சாரம் குடிப்பதை ஊக்குவிப்பதால், இவர் அதை எதிர்க்கிறாராம். அவர் இப்படிச் சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம். பா.ம.க. மட்டுமில்லை, தமிழ் தேசியவாதம் பேசும் எல்லாக் கட்சிகளுமே இம்மாதிரி நிலைப்பாட்டைக் கொண்டவைதான். இவர்களின் கை ஒங்கும்போது, இக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிச்சயம் இம்மாதிரித் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். தமிழ் தேசியவாதக்காரர்களைக் கூர்ந்து கவனித்தால் சில ஒற்றுமைகள் புலப்படும். அவையாவன: 1. ஏதாவது ஒரு ஜாதிக்கு ஆதரவான செயல்பாடு பட்டும்படாமலும் இருக்கும், தனிப்பட்ட மட்டத்திலாவது. 2. நம்முடைய கலாச்சாரம் என்று எதையாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 3. இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லோரையும்  தமிழினத் துரோகி என்பார்கள். 4. பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றி அவ்வப்போது பேசுவார்கள். 5. தம்மை ஏற்காத கலை, கலாச்சார அமைப்புகளைத் தாக்குவார்கள். விடுதலைப் புலிகள் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் திரைப்படங்களுக்கு 4 கட்ட தணிக்கை இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். 

 

தமிழ்த் தேசிய வாதிகளின் கையில் அதிகாரம் கிடைக்கும்போது அவர்களும் இதையே செய்வார்கள். தமிழையோ, அதன் கலாச்சாரத்தையோ காப்பாற்றுவதற்காக அல்ல; அதன் பெயரால் சொத்து சேர்க்க, வேண்டியதை அனுபவிக்க. கடந்த பத்தாண்டுகளில் பா.ம.க சேர்த்திருக்கும் சொத்தும் பணமும் இதையே சுட்டிக்காட்டுகின்றன. 

முதலில் ரிலையன்ஸை எதிர்த்தார் ராமதாஸ். பிறகு பான்பராக். பிறகு கோக். இப்போது சிகரெட், மது. ரிலையன்ஸ், கோக், பான்பராக் போன்றவை இல்லாமல் போய்விட்டனவா? அதை எதிர்த்து ஏன் தொடர் போராட்டங்கள் நடப்பதில்லை? இதன் பின்னணியில் இப்பது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த கரிசனம் மட்டும்தானா? இதைக் கேட்டால் தமிழின விரோதி என்பார்கள். 

எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட இனக்குழுவானது தம்முடைய உரிமைகளைக் காப்பாற்ற தனி நாடு முழக்கத்தை எழுப்பி போராடி வருவது தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளமான முதல் 4 மாநிலங்களுக்குள் இருந்து வருகிறது. உரிமைப் பிரச்னை ஏதும் புதிதாக எழவில்லை. 

ஆகையால் இம்மாதிரி தமிழ்த் தேசியவாதம் பேசுபவர்களுக்கு “தமிழ்க் கலாச்சாரம்” என்ற ஒன்றைப் புதிதாகக் கட்டமைத்து அதை முன்னிறுத்தி குரலெழுப்ப வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கலாச்சாரம் சுதந்திரமான ஒன்றாக இருப்பதால், ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒன்றை இவர்கள் தமிழ்க் கலாச்சாரமாக முன்வைப்பார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஜாதி அடக்குமுறைக்கு எதிராக இருந்தால் இவர்கள் அதை ஆதரிப்பார்கள். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும்; அவரது பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் கோரியதை கவனிக்கலாம். இத்தனைக்கும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் நிலங்கள் அனைத்தும் தலித்துகளுக்குச் சொந்தமானவை. இருந்தும் திருமாவளவன் தேவர் பெயரை எதற்கு முன்வைக்கிறார்? ஒரு பெரிய ஜாதிக்கூட்டத்தின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக.

யோசித்துப் பார்த்தால், ராமதாஸ், சீமான் கூட்டத்தைவிட கருணாநிதியும் ஜெயலலிதாவும் பலமடங்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது.

trisha1.jpgஅஜீத்தும் த்ரிஷாவும் நாயகன் – நாயகியாக நடித்த ஜி என்ற படத்தில் “டிங்டாங் கோவில் மணி” என்றொரு பாடல் இருக்கிறது.  தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த பாடல்களில் மிகச் சிறப்பான பாடல் இது என்றே தோன்றுகிறது. பாடல் வரிகள், இசை, அந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம், அதில் வரும் பெண்களின் உடை, காட்சிகள், ஒளியமைப்பு, எடிட்டிங் எல்லாமே ஒரு ஒத்திசைவுடன் அமைந்திருக்கின்றன.  இருளையும் ஒளியையும் ஒளிப்பதிவாளர் இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கும் விதம் அசர வைக்கிறது. அதேபோல நீண்ட ஷாட் எதுவுமே பாடலில் கிடையாது. எல்லாம் ஒன்றிரண்டு வினாடிகளுக்குள் முடியக்கூடிய ஷாட்கள். இந்தக் காட்சிகளை அடுக்கியிருக்கும் விதம்தான் பாடலின் உச்சகட்ட உழைப்பு. அதிகம் கவனிக்கப்படாத இந்தப் பாடலை, ஒரு காவியப் பாடல் என்றே சொல்லலாம்.  அந்தப் பாடலை யாரோ புண்ணியவான் தன் வலைபதிவில் போட்டிருக்கிறார். அதன் யுஆர்எல் இதோ: http://tamilvcdsongs.blogspot.com/search/label/Ji  பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

பின்குறிப்பு: சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் என்ற இந்தப் பாடலில் வரும் ஒரு வரியையே இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைக்கலாம் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால், த்ரிஷாவின் பெயர் தலைப்பில் வந்தால் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என அராய்ச்சி முடிவுகள் காட்டுவதால், காவிய நாயகி த்ரிஷா என்றே பெயர் சூட்டிவிட்டேன்.

apl-05-f.jpg

இந்தப் படத்திற்கு விளக்கம் தேவையில்லை. கையை ஓங்குபவர் சென்னை தியாகராய நகர் தொகுதியின் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் (அ.தி.மு.க).

அஜீத் நடித்த ஆழ்வார் ஊத்திக்கொண்டுவிட்டது. இப்படியே போனால், அஜீத் விரைவில் டாஸ்மாக்கில் குடியிருக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி நடக்கும் பட்சத்தில், 10 வருடங்கள் கழித்து மனிதர் எப்படியிருப்பார் என்றாரு கற்பனை.

North Masi StreetNorth Masi Street 
வடக்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி என்று எழுதினால் மட்டும் போதுமா? அந்த வீதி எப்படி இருக்கும் என்று காட்ட வேண்டாமா? இந்த இரண்டு புகைப்படங்களும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் நின்றபடி, கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் எடுக்கப் பட்டவை. நான் கொடுத்த பில்ட் – அப்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்தப் புகைப்படங்கள் ஏமாற்றமளிக்கலாம். காரணம் என் நினைவில் இருக்கும் வடக்கு மாசி வீதி 80கள், 90களின் முற்பதிக்கானது. அந்த சமயத்தில் இவ்வளவு வாகனங்களோ, கடைகளோ அந்த வீதியில் கிடையாது. பெரும்பாலும் வீடுகள்தான். சாலையில் தென் பகுதியில் யாதவர்களும் நாயக்கர்களும் குடியிருந்தார்கள். வட பகுதியில் பிராமணர்கள் (ஐயர்) குடியிருந்தார்கள். தற்போது இரு பகுதிகளிலும் பெரும்பாலும் மஞ்சப்புத்தூர் செட்டியார்கள் குடியிருக்கிறார்கள். மீதி இடங்களில் கடைகள் இருக்கி்ன்றன. வடக்கு மாசி வீதியிலிருந்து செல்லும் சந்துகளில்தான் வீடுகள் இருக்கின்றன.

மதுரைக் கோட்டைக்குள் இருக்கும் பிரதான வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயர்களில் அமைந்திருக்கும். வடக்கு ஆடி வீதி, வடக்குச் சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, தெற்கு மாசி வீதி என்பதுபோல. மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா எந்த மாதத்தில் எந்த வீதியில் நடக்கிறதோ, அந்த மாதத்தின் பெயரை அத்தெருக்கள் கொண்டிருக்கும் என்பதுதான் ஏற்பாடு. ஆடி மாதத் திருவிழாவின் போது அம்மனும் சுவாமியும் ஆடி வீதிகளில் வலம் வருவார்கள். ஆவணி மாதத் திருவிழாவில் ஆவணி வீதிகளில் வலம் வருவார்கள். ஆனால், சித்திரைத் திருவிழா சித்திரை வீதிகளில் நடக்காது. மாசி வீதிகளில் நடக்கும்.

மதுரையை திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா சித்திரை மாதத்தில் நடந்தது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டிய திருவிழா மாசி வீதியில் மாசி மாதத்தில் நடந்துவந்தது. அருகருகே இரண்டு மாதங்கள் திருவிழாக் கொண்டாட்டத்தில் போய்விடுவதைக் கண்ட திருமலை நாயக்கர் இரண்டையும் ஒன்று சேர்த்து சித்திரை மாதத்தில் நடத்த உத்தரவிட்டார். சித்திரை மாத முழுநிலவு நாளன்றுதான் அழகர் வைகையாற்றில் இறங்க வேண்டும் என்பதால் அதை மாசி மாதத்திற்கு மாற்றாமல் மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். ஆனால் விழா நடந்து வந்த வீதியை மாற்றவில்லை. மாசி வீதிகளிலேயே நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

மதுரைக் கோட்டைக்குள் அமைந்திருக்கும் கடைசி பிரதான சாலைகள் மாசி வீதிகள்தான். அதற்குப் பிறகு சிறிது தூரத்தில் கோட்டைச் சுவர்கள். இந்தக் கோட்டை 1850ல் இடிக்கப்பட்டது. யார் எந்த அளவுக்கு இடிக்கிறார்களோ அந்த அளவு இடம் அவர்களுக்கே சொந்தமாகும் என அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அந்தக் கோட்டையை இடித்ததில் கிடைத்த கற்களை வைத்து வைகையாற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டது. கல்பாலம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பாலம் இன்னமும் இருக்கிறது. அதன் மீது புதிதாக ஒரு மேல் பாலம் தற்போது கட்டப்பட்டிருக்கிறது.

வடக்கு மாசி வீதியின் வாசகர்களில் எத்தனை பேர் ஜனவரி 1ந் தேதியன்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி அவர்களை நோகடித்தீர்கள் என்று தெரியாது. மற்றவர்களோடு ஒப்பிட்டால் எனக்கு மிகக் குறைவாகவே வாழ்த்து அழைப்புகள் வந்தன. அன்று மதியம் வரை என் கைபேசியை நான் அணைத்து வைத்திருந்தது இதற்கு முக்கியமான காரணம். என் உறவினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, Happy New Year! என்றார். நான் “புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றேன் பதிலுக்கு. இதென்ன தமிழில் சொல்கிறீர்கள் என்று சண்டைக்கு வந்தார் அவர். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. வாழ்த்துக்களை எல்லாம் ஆங்கிலத்தில்தான் சொல்ல வேண்டும் என்பது இங்கே மரபாகிப் போய்விட்டது. இதனால் பல விபத்துகளும் நேரிட்டுவிடுகின்றன.

என் நண்பன் ஓருவன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மிகுந்த ஆர்வமுடையவன். சென்னையில் இளைஞர்கள் எல்லாம் புத்தாண்டு இரவன்று கடற்கரையில் கூடுவதுபோல, மதுரை மாசிவீதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மேல மாசிவீதியில் இருக்கும் ஆர்யபவன் உணவத்தின் அருகில் கூடுவது வழக்கம். அதற்கு அருகில் ஏகப்பட்ட மதுபானக் கடைகள் இருப்பதுதான் இதற்குக் காரணம். என் நண்பனும் வருடம் தவறாமல் ஆர்யபவன் அருகில் ஆஜராகி, எல்லோரோடும் சேர்ந்து குடித்துவிட்டு, “Happy New Year” என்று தொண்டைகிழிய  கத்திவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு படுத்து, அடுத்த நாள் பிற்பகல் 3 மணிக்கு எழுந்து தலைவலியோடு ஜனவரி 1ந் தேதியைக் கழிப்பது வழக்கம். இது கடந்த பத்து – பதினைந்து ஆண்டுகளாக நடந்துவரும் நிகழ்வு.

தொடர்ந்து ஜனவரி 1ந் தேதியன்று “Happy New Year” என்று சொல்லிப் பழகிவிட்டதால், அவன் புத்தாண்டு தினத்தையே ஹேப்பி நியூ இயர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று நினைத்துவிட்டான். அதனால், “போன ஹேப்பி நியூ இயர் அன்னைக்கு படத்துக்குப் போனப்ப…”, “அடுத்த ஹேப்பி நியூ இயரையாவது நல்லா கொண்டாடனும்டா” என எப்போதும் “நியூ இயர்” என்பதை “ஹேப்பி” என்ற வார்த்தையுடன் சேர்த்துத்தான் சொல்லுவான். அதனால் பிற நண்பர்கள் எல்லாம், “போன ஹேப்பி தீபாவளியன்னைக்கு”, “வர்ற ஹேப்பி அம்மாவாசையன்னைக்கு” என்று என் நண்பனை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தும் நண்பனுக்குப் புரிந்தபாடில்லை.

சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சி தந்த லாபத்தால் பல பதிப்பாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஒரு பதிப்பாளர் இன்னொரு பதிப்பகத்தில் வேலை பார்ப்பவரிடம் இப்படி சொன்னாராம்: “காலச்சுவடு, உயிர்மை பதிப்பகத்துக்கு என்ன ஒரு பத்தாயிரத்துக்கு வித்திருக்கும். ஏன்னா எனக்கே அவ்வளவுதான் வித்திருக்கு.” இதில் காமடி என்னான்னா, படிக்க முடியாத அறுவை நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் தமிழ்நாட்டில் யார் எழுதினாலும் தேடிப் பிடித்து 300 பிரதிகள் அச்சிடுபவர் இவர். ஆனால் என்ன்வோ தமிழ்நாட்டின் பென்குவின் பதிப்பக உரிமையாளரைப் போல “ஏன்னா, எனக்கே..” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னதைக் கேட்டதும் வடக்குமாசி வீதியின் வசிக்கும் நம்ம பய ஒருத்தன் ஞாபகம் வந்தது.
அவன் பெயர் ரங்கசாமி. என்னுடன் பள்ளியில் படித்தவன். பத்தாவதில் பெயிலானவுடன் கஜினி முகமதுவைப் போல பலமுறை படையெடுத்ததால் பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கே இவன் விண்ணப்பத்தைப் பார்த்துப் பார்த்து போரடித்துப் போனதில், ஒரு வழியாக ஏழாண்டுகள் கழித்து பாஸ் போட்டுவிட்டார்கள். ஒரு முறை ரேஷன் கடையில் அவனைப் பார்க்க நேர்ந்தது. நான் அப்போது எம்.ஏ படித்துக் கொண்டிருந்தேன். ரங்கசாமி பத்தாவது பாஸ் செய்த பூரிப்பில் இருந்தான். “என்னடா பண்ற” என்றான். “எம்.ஏ படிக்கிறேன்” என்று சுதாரிப்பாக வரிசையைக் கவனித்துக் கொண்டே பதில் சொன்னேன். ஏனென்றால் இப்படி பேச்சை ஆரம்பித்து ஒரு முறை எனக்கு முன்னால் மண்எண்ணையை வாங்கிக் கொண்டு ஓடிவிட்டான் ரங்கசாமி. “எம்.ஏவா படிக்கிற? அப்போ 12வது?” என்றான். “இம்மாதிரி கேள்விகள் ரங்கசாமியிடம் சகஜம். அதனால் பொறுமையாக, “12வது பாஸ் பண்ணிட்டேன்டா” என்றேன். “அவனும் விடாமல், “பத்தாவது?” என்றான். “அதையும் பாஸ் பண்ணிட்டேன்” என்றேன். “பத்தாவதுல கணக்கு பாஸ் பண்ணியா?” என்றான். “கணக்கு பாஸ் பண்ணாம எப்படிடா 11வது சேர முடியும்?” என்றேன் எரிச்சலோடு. “கோவப்படாதேடா. ஏன்னா, எனக்கே 10வது கணக்கு வரலையே, நீ எப்படி பாஸ் பண்ணினேனன்னு தெரிஞ்சுக்கிறத்தான் கேட்டேன்” என்றான் ரங்கசாமி.

மதுரையில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் மற்றொரு தின்பண்டம் பேரீச்சம்பழம். ஒரு அகலமான கோபுரம் போல, மிகுந்த பளபளப்புடன் வண்டிகளில் இவை குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோபுரத்தைப் பார்க்கும் வெளியூர்காரர்கள் (பெரும்பாலும் ஐயப்ப சாமிகள்) இதை வாங்காமல் தப்பிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. கடையில் கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் விலையில் பாதி விலைக்கு இங்கே கிடைக்கும்.

இவை ஏன் இவ்வளவு குறைவான விலையில் விற்கப்படுகின்றன? இவை எங்கிருந்து இந்தக் கடைக்காரர்களுக்கு வருகின்றன என்பது யாருக்கும் தெரியாத மர்மம். மிக அழுக்கான, நைந்துபோன சாக்குப் பைகளில் இவை கடைக்காரர்களின் கையில் கிடைக்கும். அந்தப் பைகளிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளியில் எடுக்கப்படும் பேரீச்சம்பழங்களை, வண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக குவித்து, கோபுரம்போல கட்ட ஆரம்பிப்பார்கள். அந்தக் கோபுரத்தின் வெளிப்புறப் பகுதி, மிகுந்த பிசுபிசுப்புடனும் பார்க்க அருவருக்கத்தக்க வகையிலும் காட்சியளிக்கும். வண்டியின் அடியில் இருக்கும் ஒரு அழுக்கான வாளியை எடுத்துச் சென்று, எங்கிருந்தோ தண்ணீர் கொண்டுவந்து, கோபுரத்தின் வெளிப்புறத்தைத் துடைக்க ஆரம்பிப்பார்கள். கோபுரம் பளபளக்க ஆரம்பிக்கும். கோபுரத்தின் நடுவில் ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பதித்து வைத்து, நான்கு ஊதுபத்திகளையும் கொளுத்திவைத்துவிட்டால், ஐயப்ப சாமிகளுக்கு பேரீச்சம்பழம் ரெடி. எல்லா ஐயப்ப சாமிகளும் ஏமாளிகளல்ல. சில உஷாரான சாமிகள் பளபளப்பான பேரீச்சம்பழ கோபுரத்திலிருந்து சில பழங்களை உதிர்த்து எடுத்து, சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறதென்று தலையாட்டிவிட்டுத்தான் வாங்குவார்கள். பிசுபிசுப்பை தங்கள் அழுக்குத் துண்டில் துடைத்துக்கொள்வார்கள். இந்த டைப் பேரீச்சம்பழங்கள் சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதிகளில் மட்டுமே கிடைக்கும். உள்ளூர்காரர்கள் சிலரும் திருப்தியுடன் இவற்றை வாங்கிச் செல்வதுண்டு. சென்னையின் சில பகுதிகளிலும் இதே டைப் பேரீச்சம்பழம் விற்பதாகச் சொல்கிறார்கள்.

மதுரையில் கோவிலைச் சுற்றியிருக்கும் நான்கு சித்திரை வீதிகளில் மேற்குச் சித்திரை வீதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய அற்புதப் பண்டம்தான் இந்த பீம புஷ்டி அல்வா. இந்த அல்வா இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: மஞ்சள், அரக்கு (மஞ்சள் அல்வாதான் சற்று நாள் சென்றவுடன் அரக்கு நிறத்திற்கு மாறுகிறது என்று சொல்பவர்களும் உண்டு). இந்த அல்வா எப்போதுமே தள்ளுவண்டியில் வைத்துத்தான் விற்கப்படும். அந்தத் தள்ளுவண்டியில் இருக்கும் ஒரு பெரிய தகர போர்டில் ஒரு ஆஜானுபாகுவான மனிதனின் (பெரும்பாலும் அது பீமனாகத்தான் இருக்க வேண்டும்) படம் வரையப்பட்டிருக்கும். அந்த மனிதனுக்கு அருகிலேயே மிகச் சிறிய மனிதர் ஒருவர் அந்த ஆஜானுபாகுவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அல்வா சாப்பிட்டால் ஆஜானுபாகுவாகவும் சாப்பிடாதவர்கள் அந்த வேடிக்கை பார்க்கும் மனிதர்களைப் போல் அற்பமானவர்களாகவும் மாறிவிடுவார்கள் என்பதுதான் அந்த தகர போர்டின் தாத்பர்யம். இந்த போர்டு இரண்டே வண்ணங்களில் தீட்டப்பட்டிருக்கும்: நீலம், வெள்ளை. ஆஜானுபாகுவின் தலைக்கு மேலே பீம புஷ்டி அல்வா என்று எழுதப்பட்டிருக்கும். அந்த அல்வாக் கடையில் அல்வா குறைந்து நான் பார்த்ததேயில்லை. எப்போதாவது அப்பாவி சுற்றுலாப் பயணிகள் (பெரும்பாலும் முட்டாள் ஐயப்ப பக்தர்கள்) அதை வாங்குவதுண்டு. அந்த அல்வாவை வெட்ட, ஆடு வெட்டப் பயன்படும் கத்தியை வைத்திருப்பார் கடைக்காரர். ஐயப்ப பக்தர் அல்வா கேட்டவுடன் அந்த ஆடு வெட்டும் கத்தியை வைத்து, ஆட்டின் கழுத்தை அறுப்பதுபோல கரகரவென அறுத்து தராசில் போட்டு நிறுத்துத் தருவார். அல்வாவை வெட்டுக் காட்சிக்கே நாம் கொடுத்த காசு செல்லும். ஐயப்ப பக்தர் பரம ஆனந்தத்துடன் அந்த அல்வாவை வாங்கிச் செல்வார். இந்த பீம புஷ்டி அல்வாக் கடைகளில் கிடைக்கும் மற்றொரு பண்டம் பூந்தி. பிற கடைகளில் கிடைப்பதுபோல உதிரியாக இந்த பூந்தி இருக்காது. ஒரு சதுர வடிவ குன்று போல, அந்த பீம புஷ்டி அல்வாவுக்குப் பக்கத்தில் இந்த பூந்திக் குன்று நின்றுகொண்டிருக்கும். அல்வாவை வாங்கிய ஐயப்ப பக்தர் தவறிப் போய் இந்த பூந்திக்கும் ஆசைப்படக்கூடும். பூந்திக் குன்றை வெட்டுவதற்கு ஆடு வெட்டும் கத்தி பயன்படாது. அதனால், அதற்கென்று ஒரு குறுவாளை வைத்திருப்பார் கடைக்காரர். அந்த வாளினால் பூந்திக் குன்றை இடித்து, பூந்திகளை உதிரியாக்கி நிறுத்துத் தருவார். இந்த பூந்திக்கு பெயர் ஏதும் கிடையாது என்றாலும், பாறை பூந்தி என்று பரவலாக இதை அழைப்பார்கள். ஒரு முறை இந்தக் கடைகளில் பூந்தியையோ அல்வாவையோ வாங்கி அருந்தியவர்கள் பிறகு மதுரைக்கே வரமாட்டார்கள்.