
தமிழின் சீரியஸ் எழுத்தாளர்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி ரொம்ப அதிகம். அசோகமித்திரன் ஒரு விதிவிலக்கு. இப்படி ஒரு அபிப்பிராயம் மனதில் பதிந்து போயிருக்கையில், நண்பர் ஒருவர் அனுப்பிய லிங்கிற்குப் போய் பார்த்தேன். அவர் சுட்டியது ஜெயமோகனின் வலைபதிவை. அதில் எஸ். ராமகிருஷ்ணனைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார், பாருங்கள்.. அந்த ஒரு கட்டுரைக்காகவே அவருக்கு ஞானபீடம் கொடுக்கலாம். அந்தப் பதிவை காப்பியைக் குடித்துக்கொண்டே படித்தேன். மூன்றாவது பாராவிலேயே புரையேறி மானிட்டர் முழுக்க காப்பி. ஜெயமோகனைப் பற்றி உங்களுக்கு என்னவிதமான எண்ணம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை ஒருபக்கம் வைத்துவிட்டு இதைப் படியுங்கள். தமிழ் இலக்கிய உலக அரசியல் பற்றி சிறிது பரிச்சயம் இருந்தால், கட்டுரையை வெகுவாக ரசிப்பீர்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்ஜாய்!
January 28, 2009
December 26, 2008
அந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்
Posted by கட்டியக்காரன் under சினிமா விமர்சனம்[5] Comments

பழைய அழகியும் பயங்கர நடிகரும்
தமிழ் சினிமாவில் த்ரில்லர் ரக படங்கள் வெளிவருவது மிக அரிதான சம்பவம். அதிலும் நல்ல த்ரில்லர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இம்மாதிரி சூழலில்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொம்மலாட்டம் மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. பாரதிராஜாவின் முந்தைய த்ரில்லர்களான டிக்…டிக்…டிக்.., சிவப்பு ரோஜாக்கள், கண்களால் கைது செய் படங்களையெல்லாம்விட பல மடங்கு மேம்பட்ட த்ரில்லர் இது. டிக்…டிக்… இடைவேளைக்குப் பிறகு எங்கெங்கோ போய்விடும். சிவப்பு ரோஜாக்களின் க்ளைமாக்ஸ் உருக்கமோ, உருக்கம். கண்களால் கைது செய் படம் த்ரில்லர் என்று சொல்லிக்கொண்டாலும், படுசோம்பலான படம். பாரதிராஜாவின் கிராமப் பின்னணியில் அமைந்த படங்களில் முதல் மரியாதைக்கு என்ன இடமோ,அந்த இடத்தை அவரது த்ரில்லர் வரிசையில் இந்தப் படத்திற்குக் கொடுக்கலாம்.
ராணா (நானா படேகர்) ஒரு எக்ஸென்ட்ரிக்கான திரைப்பட இயக்குனர். அவரது லேட்டஸ்ட் படமான சினிமாவில் நடித்த கதாநாயகியை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, காரோடு வைத்து ஒரு மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றுவிடுகிறார். இந்தக் கொலையை விசாரிக்க வருகிறார் சி.பி.ஐ. அதிகாரி விவேக் (அர்ஜுன்). இந்தக் கொலைக்கு முன்பும், அதே படத்தின் ஷூட்டிங்கில் நடந்த வேறு இரண்டு கொலைகளையும் நோண்ட ஆரம்பிக்கிறார் விவேக். எக்ஸென்ட்ரிக்கான ராணா தன் கதாநாயகியிடம் ஏன் அவ்வளவு கரிசனம் காட்டினார்? படம் வெளிவரும் முன்பே நாயகியை ஏன் கொல்கிறார்..அதுவும் பத்திரிகையாளர்கள் துரத்தி வரும்போது? முந்தைய கொலைகளுக்கும் ராணாவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த முடிச்சுகள் எல்லாம் ஒரே புள்ளியில் இறுதியில் அவிழ்கின்றன.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, இதுவரை பாரதிராஜா எடுத்த பாடாவதிப் படங்களுக்கெளுக்கெல்லாம் அந்தப் படங்களையெல்லாம் அவர் அலட்சியமாகக் கையாண்டதுதான் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறது. சினிமா என்ற ஊடகத்தின் சாத்தியங்களையும் வரையறைகளையும் மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குனாரால் மட்டுமே எடுக்கக்கூடிய பல காட்சிகள் இந்தப் படத்தில் உண்டு. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, படத்தின் மையப்புள்ளியைவிட்டு எங்கும் நகராத திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். இம்மாதிரி த்ரில்லர்களில், கொலைகாரன் யார் என்பதைத் தேடும்போது, படம் பார்ப்பவர்களுக்கு பல்வேறு நபர்களின் மீது சந்தேகம் ஏற்படச்செய்யும் வகையில் பல காட்சிகளை அமைத்து, ஏமாற்றும் சிறுபிள்ளைத்தனமான உத்தி இந்தப் படத்தில் அறவே கிடையாது. படம் முழுக்க ராணா மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது. அவர்தான் செய்தாரா, ஏன் செய்தார்? என்ற ஒரே ஒரு கேள்வியைச் சுற்றியே படத்தை நகர்த்திச் செய்கிறார் பாரதிராஜா.
தமிழின் மிகை நாடும் கலைஞர்களை விட்டுவிட்டு நானா படேகரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனமான காரியம். சின்ன விழியசைவு, லேசாகத் திரும்பிப் பார்ப்பது போன்றவற்றின் மூலமே சொல்லவேண்டியதைக் கச்சிதமாகச் செய்கிறார் நானா. என்னதான் அர்ஜுன் நடித்திருந்தாலும், அதுவும் நல்லவராக நடித்திருந்தாலும் நானாதான் கதாநாயகன். அவர் ஃப்ரேமில் இருக்கும்போது மற்றவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள். நாயகியாக வரும் ருக்மிணி விஜயகுமார் ஒரு பழமை வாய்ந்த அழகி (சேலை விளம்பரங்களில் வருவார்களே.. அந்த மாதிரி).
படத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், படம் முழுக்கத் தென்படும் அழகுணர்ச்சி. எந்த நெருடலும் இல்லாமல் படம் முழுக்க தேர்ந்த கலைஞனுக்குரிய அழகுணர்ச்சி வெளிப்படுகிறது. தமிழ்ப் படங்களில் காணவே முடியாத அம்சம் இது. பி. கண்ணனின் ஒளிப்பதிவு உண்மையிலேயே உலகத்தரம். படம் பல இடங்களில் ஃப்ளாஷ்பேக்கில் நடக்கிறது. ஃப்ளாஷ்பேக் என்ற கொசுவர்த்திச் சுருள் உத்தியை இவ்வளவு திறமையுடன் பயன்படுத்த முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால், சில ஓட்டைகளும் உண்டு. கவிதாயினியாக வரும் அனிதா என்ற பெண் சம்பந்தமே இல்லாமல் ராணாவுடன் அவர் போகும் இடங்களுக்கெல்லாம் உடன் சுற்றுகிறார். கதையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த ஒரு பாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் பத்து மடங்கு சிறப்பாக இருந்திருக்கும். பிறகு, கவனக்குறைவால் ஆங்காங்கே தென்படும் சில குறைகள். அப்புறம் பாடல்கள். இவ்வளவு துணிந்த, பாரதிராஜாவால் பாடல்களைத் துறக்க முடியவில்லை. இதையெல்லாம் மீறித்தான், படத்தை இறுதிவரை நகத்தைக் கடித்துக்கொண்டு பார்க்க வைக்கிறார் பாரதிராஜா.
December 23, 2008
நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி இது. சரத் ரெட்டி விவகாரத்தைப் பற்றி மேலும் சில தகவல்கள் தெரியவந்தன. அதாவது மனிதர் திங்கள்கிழமை அலுவலகத்திற்கே வீல் சேரில்தான் வந்தாராம். சரி, இந்த விவகாரத்தை கலைஞர் டிவியின் உரிமையாளர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களாம்? நிறைய நடந்திருக்கிறது. சரத் ரெட்டியைத் தாக்குவதற்கு முன்பே கலைஞர் டிவி தரப்பினரிடம் செய்து சரத்தைப் பற்றி புகார் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, சன் டிவி தங்கள் நிறுவனத்திற்காக வாங்க நினைத்து நிராகரித்த கருவிகளை, கலைஞர் டிவிக்காக வாங்கிக்கொடுத்து ஏகப்பட்ட பணத்தை சரத்ரெட்டி அடித்துவிட்டார் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால், கலைஞர் டிவி தரப்பும் சரத்திடம் கோபமாக இருக்கிறதாம். இந்நிலையில் உள்ளே புகுந்த சகோதரர்கள் எவ்வளவு பணம் அடித்தாய், எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்டு தாக்கினார்களாம். அடியாட்களெல்லாம் கிடையாது. அவர்களே.
கடைசியாக வந்த நம்ப முடியாத தகவல்: கலைஞர் டிவியையே மூடிவிடும் திட்டம் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.
December 22, 2008
ஊடகத்துறை மிகத் துடிப்புமிக்கதாக கருதப்படும் நமது நாட்டில், எடிட்டர் என்பவர் பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கும் வெளியில் இருக்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை. சமீபத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் இதற்கு ஒரு சான்று. கடந்த சனிக்கிழமை இரவு கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் ரெட்டியின் வீட்டிற்கு மாறன் சகோதரர்கள் சென்றதாகவும் அங்கே நள்ளிரவு வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எதற்காக மாறன் சகோதரர்கள் அங்கே சென்றார்கள் என்பது தெரியாது. ஆனால், திடீரென வீட்டிலிருந்து கூக்குரல் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் நடந்ததில் சரத் ரெட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்தச் செய்தி சென்னையில் இருக்கும் எல்லா செய்தியாளர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே தெரியவந்துவிட்டது. ஆனால், எந்தத் தொலைக்காட்சியிலும் எந்த நாளிதழிலும் இதுபற்றி சிறு குறிப்புகூட வெளிவரவில்லை. தமிழகத்திற்கு சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு ஆங்கில நாளிதழ் இதை வெளியிட முடிவு செய்ததாகவும் ஆனால், பெரிய இடத்திலிருந்து வந்த வேண்டுகோளை (உத்தரவு?) அடுத்து அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே இந்தச் செய்தியை 22ந் தேதிமுதல் பக்கத்தில் ஏகப்பட்ட பூச்சுப்பூசி வெளியிட்டது.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனருக்கே இந்த கதி என்றால், சாதாரணமானவர்கள் எல்லாம் இவர்கள் வழியில் குறுக்கிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. இறப்புச் சான்றிதழ்கூட கிடைக்காது. இதில் ஊடகங்கள் கடைப்பிடிக்கும் மௌனம்தான் இன்னும் பயத்தைக் கிளப்புகிறது. யாராவது ஒரு பெண்ணோடு கடற்கரைக்குப் போய், காவல்துறை உங்களை விசாரித்தேலே போதும்.. உங்கள் தொழிலோடு செக்ஸ் என்ற வார்த்தையைச் சேர்த்து மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளிவிடுவார்கள். செக்ஸ் டீக்கடைக்காரர், வக்கிர பழவியாபாரி என்று பெயர்களோடு தொடர் வெளிவரும். இந்த சரத் ரெட்டி தாக்குதல் செய்தி, புதன்கிழமை வெளிவரும் ரிப்போரட்டர், ஜூனியர் விகடன் இதழ்களில் வேண்டுமானால், இதைப் பற்றி செய்திகள் வரலாம். வராமலும் நடுநிலை காக்கப்படலாம்.
பின்குறிப்பு: சம்பந்தப்பட்டவர்களின் படங்களைப் போட்டு, வெளிப்படையாக எழுதத்தான் நினைத்தேன். ஆனால் பயம் தடுத்துவிட்டது.
December 21, 2008
அடேங்கப்பா பேட்டிகளை நாம் மட்டும்தான் எழுதவேண்டுமா என்ன? சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர்களே செய்வார்கள். இந்த வார ஆனந்த விகடனில் (24.01.2009) விஜயகாந்த் அளித்த பேட்டி அட்டகாசம். அதில் ஒரு சாம்பிள்.
கேள்வி: ஆற்காடு வீராசாமி உங்களைச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வந்ததே?
பதில்: எலித் தொல்லை தாங்க முடியல சார்.
December 1, 2008
காலை பத்தரை மணி இருக்கும். தர்மாம்பாள் டீச்சர் கிருஷ்ணனைக் கூப்பிட்டு, போய் மீனாட்சி காப்பி கடையில் டீ வாங்கிக் கொண்டுவரும்படி சொன்னார். துணைக்கு வரும்படி கிருஷ்ணன் என்னைக் கூப்பிட்டான். அந்தத் தருணங்களில் அவன் கடைக் கண் பார்வை தன் மீது படாதா என்று பல மாணவர்கள் ஏங்குவார்கள். கடைக்குச் சென்றுவரும் அந்தப் பத்து – பதினைந்து மணி நிமிட சுந்திரத்திற்காகத்தான் அந்த ஏக்கம். கிருஷ்ணன் விரும்பியவர்கள், தன்னிடம் நல்லபடி நடந்துகொள்பவர்களை கடைக்குக் கூட்டிச் செல்வான். என்னை அடிக்கடி அழைத்துச் செல்கிறான் என்பதில் எனக்குப் பெருமிதத்தில் நெஞ்சம் விம்மியது. வழக்கமாக டீ வாங்கும் டம்ளரை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனோம். டீயை வாங்கி வந்து கொடுத்தான் கிருஷ்ணன். டம்ளர் மாறியிருந்தது.“என்னடா இது டம்ளர் மாறியிருக்கு“ என்றார் டீச்சர். சற்று நேரம் விழித்துவிட்டு, “ஆமாம் டீச்சர், ஒரே கூட்டம்.. அதுல மாறியிருக்கும். இன்னொரு ஆளும் இதே மாதிரி டம்ளரில் டீ வாங்க வந்தான். அவன் டம்ளராயிருக்கும்“ என்று பதிலுறுத்தான். இந்த டீயைக் குடிக்கலாமா என்று கொஞ்ச நேரம் யோசித்த டீச்சர், “சரீ… அந்த ஆளு நல்லாத்தானே இருந்தான்.. தோல் வியாதியெல்லாம் இல்லையே?” என்று கேட்டபடி டம்ளரை வாயருகில் எடுத்துக்கொண்டுபோனார் டீச்சர். “இல்ல டீச்சர்… அவன் குஷ்டரோகி மாதிரி இருந்தான்.. ஒரே புண்ணு“ என்றான் கிருஷ்ணன். டீச்சர் அதற்குப் பிறகு யாரையும் டீ வாங்க அனுப்புவதில்லை. உண்மையில் அன்றைய தினம் டீக் கடையில் அம்மாதிரி யாரும் இல்லை. தினமும் கிடைக்கும் அந்த பத்து நிமிட சுதந்திரத்தை கிருஷ்ணன் ஏன் பொங்கவைத்தான் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். டீச்சருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தர அவன் நினைத்திருக்கலாம்.
November 29, 2008
விஸ்வநாத் பிரதாப் சிங்: மனங்களை வென்றவர் (1931- 2008)
Posted by கட்டியக்காரன் under அஞ்சலிLeave a Comment
வி.பி. சிங் என்றவுடன் மனதில் உடனடியாக இரண்டு பிம்பங்கள் தோன்றும். அந்த இன்னொரு பிம்பம் தீக்குளிக்கும் தில்லி மாணவர் ராஜீவ் கோஸ்வாமியினுடையது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில்தான் இந்தத் தீக்குளிப்பு நாடகம் (இங்கே கமிஷன் என்ற வார்த்தையை சத்தமாக உச்சரிக்கக்கூடாது. டி.ஆர். பாலு, அ. ராசா, அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் ஒடிவந்துவிடுவார்கள்). வி.பி. சிங் உறுதியுடன் அதை நிறைவேற்றினார்.
வி.பி. சிங் எங்கே, எப்போது பிறந்தார் என்ற தகவல்களைவிட அவர் இந்திய அரசியலில் செலுத்திய பங்களிப்பு குறித்தே இந்த சிறு பதிவு. இந்திய அரசியலில் காணாமல் போயிருந்த தார்மீகம் சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பித்தவர் வி.பி. சிங். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ. 60 கோடி லஞ்சமாகப் பெற்றதாக ராஜீவை உலுக்கியெடுத்தார் (மத்திய அமைச்சர் மாண்புமிகு அ. ராசா ரூ. 60,000 கோடி அடித்த தகவல் வெளிவந்த காலத்தில் நல்லவேளையாக நினைவிழந்துகிடந்தார் மனிதர்). ராஜீவுக்கும் அந்த நேரத்தில் அறிவு இல்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முதலில் வந்த போபர்ஸிடமிருந்து 60 கோடியை வாங்கிக்கொண்டோம் என்று அண்ணன் ராசா வழியில் போயிருக்கலாம். அந்த நேரத்தில் புத்தியை எங்கேயோ அடகு வைத்துவிட்டார் ராஜீவ். இந்த விவகாரமே வி.பி. சிங்கிற்கு பிரதமர் பதவியைப் பிடித்துத் தந்தது. கூட்டணி அமைச்சரவையில் ஒரு எம்பியைக்கூட வெல்லாத தி.மு.கவிற்கும் மந்திரி பதவியளித்து, கூட்டாட்சித் தத்துவத்தில் தனக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார் வி.பி. சிங்.
மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது அவரது மற்றொரு சாதனை. அவரது இந்த நடவடிக்கை வட இந்திய அரசியலின் முகத்தையே மாற்றியமைத்து. பிற்படுத்தப்பட்டவனா, தலித்தா.. இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதுதான் என்று நமக்கு சர்வசாதாரணமாகத்தான் தோன்றுகிறது. வட இந்தியாவில் வாழும் இந்தி பேசும் உன்னதம் மிக்கவர்களுக்கு இன்றுவரை அதன் தாத்பர்யம் புரியவில்லை. அப்படியிருக்கையில் 1990லேயே, கடும் எதிர்ப்புக்கு இடையில் இதை அமல்படுத்தினார் சிங். போபர்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியது தான் ஆட்சிக்கு வருவதற்காகத்தான்; மண்டல் கமிஷனை நிறைவேற்றியது பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் என்றெல்லாம் வியாக்கியானம் பேசலாம். ஆனால், இதைச் செய்யும் துணிவு வேறு யாருக்கும் இல்லை என்பதுதான் இதில் முக்கியம். தேசிய அரசியலில் காங்கிரஸின் பிடி வலுவிழந்தது. பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. அதுதான் பா.ஜ.கவின் வளர்ச்சி.
நாட்டைத் துண்டுபோடும் நோக்கத்தோடு அத்வானி ரத யாத்திரையைத் நடத்தியபோது, அவரைக் கைது செய்து தடுத்து நிறுத்தினார் வி.பி. சிங். அதற்குப் பிறகு தன் ஆட்சி நிலைக்காது என்று தெரிந்தும் இைதச் செய்தார். “உத்தமர் அத்வானியின் அமைதியான யாத்திரையை நான் தடுத்து நிறுத்துவேன்; இந்த ஆட்சி கவிழும் என்று சில கோட்டான்கள் மனப்பால் குடிக்கின்றன. பெரியாரின் வழி வந்தவராம் வாஜ்பாயி, அண்ணாவின் வழி வந்தவராம் அத்வானி ஆகியோர் மதவாதத்தை நாடுவார்கள் என்பதை இந்த நாடு நம்பாது” என்றெல்லாம் புருடா விடாமல் கைது செய்தார் (கைது செய்தது அப்போது பிஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ்). இவரது அரசு கவிழந்தது.
நிதி அமைச்சராக இருந்தபோது தீருபாய் அம்பானியையும் அமிதாப் பச்சனையும் ஆட்டி வைத்தது, சம்பல் பகுதியில் நடந்த கொள்ளைகளுக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது, பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நடவடிக்கைக்காக இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டது, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தது போன்றவை அவருடைய பிற குறிப்பிடத்தக்க செயல்கள். 1996ல் பிரதமர் பதவி தேடி வந்தபோது, அதை மறுத்தது மற்றொரு புத்திசாலித்தனமான, சரியான நடவடிக்கை. படுக்கையில் விழும்வரை பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வி.பி. சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இதில் ஆச்சரியம். மக்கள் போராட்டங்களிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு தலைவனாகவே தன் கடைசி நாட்களில் இருந்தார். ஆனால், பணத்தை அடுக்கும் வேலையில் இருக்கும் நம் தலைவர்கள் இவரது மறைவை கண்டுகொள்ளவேயில்லை என்பதுதான் ஆத்திரமடைய வைக்கிறது.
October 26, 2008
இயக்குனர் சீமான் சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழகத்தில் கருத்துச் சுதந்திரமே இல்லை என்று குமுறுயிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னையாக்குகிறார்களாம். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால், எந்த நாட்டிலும் பிரச்னை வரத்தான் செய்யும். எல்டிடிஇ மீதான தடை இன்னும் நீடிப்பது சரியா என்பது வேறு பிரச்னை. ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னைதான். அதை எதிர்கொண்டுதான் நம்முடைய கொள்கையை அரசிடம் முன்வைக்க வேண்டும். உடனே அதைக் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான விஷயமாக்குவது விஷயத்தை திசை திருப்புவதாகும்.
தவிர, சீமான் போன்றவர்களுக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் தகுதி இருக்கிறதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் குஷ்பு, பாதுகாப்பான செக்ஸ் பற்றி சில ஆரோக்கியமான கருத்துக்களைச் சொன்னபோது, கொதித்தெழுந்து தமிழ்நாடு முழுக்க வழக்கத் தொடர்ந்தார்கள். மொத்தம் 27 வழக்குகள். இத்தனைக்கும் அந்தக் கருத்து பகுத்தறிவு சார்ந்து சொல்லப்பட்ட கருத்து. அதைத் “தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி தவறாகப் பேசிய குஷ்பு” என்று குறிப்பிட்டு அவரைப் பல மாதங்களுக்கு நீதிமன்றங்களில் இழுத்தடித்தார்கள். அதைச் செய்தவர்களை வலுவாக ஆதரித்தவர் சீமான். குஷ்புவுக்கு இல்லாத கருத்துச் சுதந்திரம் இவருக்கு மட்டும் வேண்டுமாம். இதற்கு நடுவில் தனித் தமிழ்நாடு கோரிக்கை வேறு. பசும்பொன் மாதிரி ஜாதி வெறியைத் தூக்கிப்பிடிக்கும் படங்களை எடுக்கும் இவர்கள் கையில் தனியாக ஒரு தமிழ்நாடு கிடைத்தால், கதை அதோடு கந்தல்தான்.
October 25, 2008
இந்தி பேசுபவர்களுக்கு சுரணை இருக்கிறதா?
Posted by கட்டியக்காரன் under சும்மா ஒரு கருத்து[2] Comments
மகாரஷ்டிரத்தில் ரயில்வே தேர்வு எழுதவந்த வட இந்திய மாணவர்கள் மீது மகாராஷ்டிர நவ நிர்மாண சேனையினர் தாக்குதல் நடத்தியது, வட இந்தியவர்களை அதிர வைத்திருக்கிறதோ என்னவோ, வட இந்திய ஊடகங்களை அதிர வைத்திருக்கிறது. குமுறித் தள்ளுகிறார்கள். “அவர் ஆஃப் ஷேம்” என்கிறது அவுட்லுக். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புலம்பித் தள்ளுகிறார்கள். சகிப்புத் தன்மையைப் பற்றிப் பக்கம் பக்கமாக பாடம் நடத்துகிறார்கள். இந்தியாவிற்குள் யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்று கேவுகிறார்கள். ராஜ் தாக்கரேவின் கட்சியினர் செய்வது தவறுதான்.
ஆனால் சகிப்புத் தன்மை பற்றியெல்லாம் வட இந்தியர்கள் பேசுவது தகுமா? இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் வெறும் நான்கு மாநிலங்களில் மட்டுமே பேசப்பட்டுக்கொண்டிருந்த இந்தியை, இந்தியா முழுவதுமிருக்கும் மக்கள் எல்லோரும் பேச வேண்டும்; இனி இந்திதான் இந்திய அரசின் தகவல்தொடர்பு மொழி; மத்திய அரசுப் பணியில் பணியாற்ற விரும்புவர்கள் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தது மட்டும் சகிப்புத்தன்மைக்கு உகந்த காரியமா?
தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்திருக்கும் குக்கிராமத்தில் இருக்கும் வங்கி கிளையில் பணம் கட்டுவதற்கான படிவத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலத்திலும் மற்றொரு பகுதியில் இந்தியிலும் அச்சடித்து வழங்கிக்கொண்டிருக்கிறார்களே, அது மட்டும் சகிப்புத் தன்மையா? இந்தியா முழுவதுமிருக்கும் ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், வங்கிகளில் இந்தி இல்லாத இடமே கிடையாது. இந்தி பேசுபவன் மட்டும் எங்கே போனாலும் சிரமப்படக்கூடாது. மற்றவன் உழைத்துச் சாப்பிட வேண்டுமானாலும் அதற்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் இப்படி நிலையை ஏற்படுத்தியவர்கள்தான் பயங்கரவாதிகள்.
இந்தி பேசும் மக்களின் மனநிலையே ஒரு மாதிரியானது. அவர்களைப் பொறுத்தவரை, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்திதான் பேசுகிறார்கள். இந்தி பேசாத, தெரியாத மக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு விசித்திரமாக இருக்கிறது. சத்தீஸ்கரி உள்ளிட்ட பல மொழிகளை இந்தியின் பரவல் அழித்துவிட்டது. இனிமேல் அந்த மொழிகளை மீட்கவே முடியாது. அந்த மொழிகளோடு சேர்ந்து, அவற்றில் இருந்த மருத்துவ, விஞ்ஞான, சுற்றுச்சூழல் அறிவும் அழிந்துவிட்டது. அப்போதெல்லாம் யாரும் குமுறவில்லை. இன்றைக்கு இந்தி பேசுபவர்கள் அடிவாங்குகிறார்கள் என்றவுடன் குமுறுகிறார்கள்.
ஆட்களை அடித்தால்தான் வன்முறை என்றில்லை. கலாச்சார ரீதியிலான, மொழி ரீதியிலான தாக்குதலும்கூட வன்முறைதான். ஆனால், அதை மென்மையாக யாராவது சொன்னால் புரிவதில்லை. கையில் கட்டையுடன் சொன்னால்தான் புரிகிறது.
October 24, 2008

