மதுரை மத்திய தொகுதிக்கு வரும் 11ந் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை ஆற்றிய பங்கைப் பற்றிப் பேசதான் இந்த வலைப்பதிவு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குமுதம் ரிப்போர்ட்டர் மத்தியத் தொகுதி இடைத் தேர்தல் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த தொகுதியில் முக்குலத்தோர்தான் அதிகம் என்பதால் அங்கு முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்த ஒருவரைதான் எல்லாக் கட்சிகளும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற தொனியில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க முக்குலத்தோரைதான் நிறுத்தும் என்றெல்லாம் அந்த கட்டுரையாளர் புலம்பித் தள்ளியிருந்தார். இதற்காக பல டுபாக்கூர் புள்ளிவிவரங்களையும் அள்ளிவிட்டிருந்தார்.
மதுரை மத்திய தொகுதி என்பது மதுரையின் மையத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளை(ஏறக்குறைய)யும் வேறு சில பகுதிகளையும் உள்ளடக்கிய மிகச்சிறிய தொகுதி. அங்கே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அடுத்ததாக யாதவர்கள். அதற்கடுத்த நிலையில் சௌராஷ்ட்ரா சமூகத்தினர், நாயக்கர்கள், ஆயிரம் வைசியர், பிராமணர்கள் போன்றவர்களும் சிறிய எண்க்கையில் வசிக்கிறார்கள். ஆனால் அங்கே வசிக்கும் முக்குலத்தோரை விரல்விட்டு எண்விடலாம். பிறகு ஏன் குமுதம் ரிப்போர்ட்டரின் செய்தியாளர் அந்தத் தொகுதியில் முக்குலத்தோர்தான் அதிகம் என்று கூறுகிறார்?
அதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர் அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த ராஜன் செல்லப்பாவிற்கு வாய்ப்புத் தர மறைமுகமாக அ.தி.மு.க தலைமையை நிர்ப்பந்திக்க விரும்பியிருக்க வேண்டும். இந்த இரண்டாவது லட்சியத்தில் செய்தியாளருக்கு வெற்றி கிடைத்துவிட்டது. அ.தி.மு.க என்னதான் தேவர்களுக்கு சார்பான கட்சியாகக் கருதப்பட்டாலும் வேறு ஜாதியினரும் மதத்தினரும் அதிகமாக வசிக்கும் ஒரு தொகுதியில் தேவர் பாசத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு அ.தி.மு.க தலைமை முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரை தேர்வாளர்களை (அவர்களும் முக்குலத்தோர்தான்) அந்த நிலையை நோக்கித் தள்ளியிருக்கலாம். அல்லது தேர்வாளர்கள் அந்தக் கட்டுரையைக் காட்டி தங்கள் ஜாதியினரை வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்.
ராஜன் செல்லப்பாவை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்ததும், அவரே வெற்றி பெறப் போகிறார் என்பது மாதிரி ஒரு கட்டுரையை ரிப்போர்ட்டர் வெளியிட்டது. ஆனால் உண்மை அதற்கு மாறானது. 90களின் மத்தியில் ராஜன் செல்லப்பா எம்.பியாகவும் அ.தி.மு.கவின் முக்கியப் பொறுப்பிலும் இருந்தார். அவையெல்லாம் மதுரை மக்களுக்கு மறக்க முடியாத வருடங்கள். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்பவர்கள் காலனியைப் பாதுகாக்க ரூ. 1 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் தரும் சீட்டில் வெறும் 20 பைசாவே கட்டணமாக அச்சிடப்பட்டிருக்கும். இதன் பின்ணனியில் ராஜன் செல்லப்பா இருந்ததாகச் சொல்லப்பட்டது. பல்வேறு கொலை வழக்குகள், குண்டு வெடிப்பு வழக்குகள் இவர் மீது இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அ.தி.மு.க தலைமை இதையெல்லாம் மறந்துவிட்டாலும் மதுரை மத்தியத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இதை மறக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.
இந்தத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதும் விஜயகாந்தின் தே.மு.தி.க இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பதும் நிச்சயம். குமுதம் நிர்வாகம் திடீரென்று இதை கவனித்தது போலத் தெரிகிறது. மதுரை மத்தியத் தொகுதியைப் பற்றி வேறொருவர் எழுத ஆரம்பித்திருக்கிறார். ஒரு செய்தியாளர் நினைத்தால் ஒரு பெரிய கட்சியின் முடிவிலேயே தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் நிரூபித்திருக்கிறது. ஆனால் அது அந்த செய்தியாளரைத் தவிர வேறு யாருக்கும் நன்மையாக இருக்கப் போவதில்லை.
இப்பதிவை இப்போதுதான் படிக்கிறேன். நல்ல அலசல்.
LikeLike
say onaday comunity
LikeLike