வழுக்கு மரம்

கோவில் திருவிழாக்களை ஒட்டி வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு தமிழகத்தி்ன் பல ஊர்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. மீடியாக்களில் அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த இந்த வழுக்குமரம் ஏறுதல், வடக்கு மாசி வீதியிலும் வருடாவருடம் நடந்துவருகிறது. அதைப் பற்றியதுதான் இந்தப் பதிவு.
வழுக்குமரம் என்பது சுமார் 50-60 அடி உயரமுள்ள, வழவழப்பான மரம். அது பெரும்பாலும் தேக்கு, பலா மரத்தாலானது. இந்த மரத்தின் அடிப்பாகம் சுமார் 3-4 அடி சுற்றளவும் மேல் பகுதி 2-3 அடி சுற்றளவையும் கொண்டதாக இருக்கும். திருவிழாக் காலங்களில் மட்டுமே மண்ணில் சுமார் 4 அடி ஆழக் குழியில் ஊன்றப்படும் இந்த மரம், பிற நாட்களில் சம்பந்தப்பட்ட கோவிலில் படுக்கை வசத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்.
வடக்கு மாசிவீதியில் இருக்கும் நவனீத கிருஷ்ணசுவாமி கோயிலில்  நடக்கும் கிருஷ்ணன் பிறப்புத் திருவிழாவை ஒட்டி நடக்கும் உற்சவத்தில் இந்த வழுக்கு மரம் ஏறும் வைபவமும் ஒன்று. இரண்டாவது நாள் விழாவாக இந்த வைபவம் இடம்பெறும். அதாவது கிருஷ்ணன் பிறப்புக்கு அடுத்த நாள்.
கிருஷ்ணன் பிறப்புக்கு ஓரு வாரத்திற்கு முன்பே இந்த மரம் ஊன்றப்பட்டுவிடும்.  ஊன்றியவர்கள் அந்தப் பக்கம் சென்றவுடனேயே அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மரத்தைத் தொற்ற ஆரம்பித்துவிடுவார்கள். சிறுமிகள் வேடிக்கை பார்ப்பதோடு சரி.  ஏறமுயன்று கிழே விழும் சிறுவர்களைப் பார்த்து கிணுங்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.
நாள் நெருங்க, நெருங்க மரத்தைச் சுற்றி பரபரப்பு அதிகரிக்கும். பொடியன்களை விரட்டிவிட்டு, கொஞ்சம் பெரிய பையன்கள் மரத்தில் ஏறிப் பழக ஆரம்பிப்பார்கள். வழுக்கு மரம் ஏறும் நாளன்று வடக்கு மாசி வீதியில் சத்தமில்லாமல் பல சமாச்சாரங்கள் நடக்கும். வீட்டுக்கு வெளியில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகள், சாக்குகள் திடீரெனக் காணாமல் போகும். ஆங்காங்கே சிறுவர்கள் அமர்ந்து மண்ணை அள்ளிக் கொண்டிருப்பார்கள்.
நான்கு மணியளவில் கோவிலைச் சேர்ந்த ஓருவர், ஒரு கையில் எண்ணை வாளி, ஒரு கையில் ஏணியுடன் மரத்தை நெருங்குவார். மரத்தில் ஏறிப் பழகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அவரை நெருங்கி, “யேவ், அழுக்கு வேட்டி எண்ணையை கம்மியா ஊத்துயா. ராவுல கவுனிச்சிரலாம்” என்பார்கள். அழுக்கு வேட்டி அவர்கள் பக்கமே திரும்பமாட்டார். வழுக்குமரத்திலிருந்து துரத்தப்பட்டு, அகதிகளாகி, சிறுமிகளோடு நின்று ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்துக் கையசைப்பார். நெருங்குபவர்களில் ஒருவன் கையில் வாளியைக் கொடுப்பார். ஏணி வழுக்கு மரத்தின் மீது சாற்றப்படும். அழுக்கு வேட்டி ஏணியின் உச்சிக்குப் போனபின், கையில் எண்ணெய் வாளியுடன் சிறுவனும் பி்ன்னால் ஏறிகொள்வான். வழுக்குமரம் முழுக்க எண்ணெய் பூசப்படும். சிறுவனுக்கு 50 காசு கொடுத்துவிட்டு, “டேய், உறியடிக்கிறத்துக்குள்ள யாரும் மரத்தத்த தொட்டீங்க அவ்வளவுதான்” என்று அங்கிருப்பவர்களைப் பார்த்து எச்சரித்துவிட்டு, பதில் மரியாதையாக கெட்ட வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டு புறப்படுவார்.
இன்னும் சிறிது நேரம் கழித்து, அதே போல ஏணி வைத்து மரத்தின் உச்சியில் பரிசுப் பொருள் கட்டப்படும். சுமார் ஏழு மணிக்கு சுவாமி கிருஷ்ணன் கோவிலிலிருந்து புறப்பாடாகி, மரத்தை நெருங்கும். இப்போது கிருஷ்ணன் உறியடிக்க வேண்டும். கோவிலின் தர்மகர்த்தா கிருஷ்ணனின் பாத்திரத்தை ஏற்று உறியடிப்பார் (இந்தக் காமெடியை வேறொரு பதிவில் தனியாக எழுதுகிறேன்).
அந்த நேரத்தில் வழுக்குமரத்தைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். வழுக்குமரத்திற்கு அருகில் இருக்கும் கட்டிடத்தில் வரிசையாக ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். உறியடிக்கப்பட்டவுடன் மரத்திற்கு அருகில் இருப்பவர்கள் மரத்தின் மீது ஏற ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் சிறுவர்கள். எண்ணெய் குளியல் நடத்தி, வழுவழுப்பாக இருக்கும் அந்த மரத்தில் இரண்டு அடி ஏறுவதற்குள் நாக்குத் தொங்கிப்போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக பத்தடி வரை அந்தச் சிறுவர்கள் ஏறிவிடுவார்கள். திடீரென எங்கிருந்தோ பத்துப் பதினைந்து சிறுவர்கள் தோன்றுவார்கள். ஏறிக் கொண்டிருக்கும் சிறுவர்களைவிட இவர்கள் சற்றுப் பெரியவர்கள். எறிக்கொண்டிருக்கும் சிறுவர்களின் காலைப் பிடித்து கீழே வீசிவிட்டு, இவர்கள் ஏற ஆரம்பிப்பார்கள்.
அருகிலிருக்கும் கட்டிடத்தில் வரிசையாக அமர்ந்திருக்கும் கூட்டம் இப்போது ஏறுபவர்களுக்குக் கைகொடுக்கும். மதிய வேளைகளில் காணாமல் போன, துணிகள், சாக்குகள் மண்ணில் புரட்டப்பட்டு ஏறிக்கொண்டிருப்பவர்களுக்கு வீசப்படும். அவர்கள் அதை வைத்து மரத்தைத் துடைத்துவிட்டு ஏறமுயல்வார்கள். இதுஒரு பத்து நிமிடம் நீடிக்கும்.
சட்டென கூட்டத்தில் ஓரு பரபரப்பு ஏற்படும். கூட்டத்திலிருந்து ஓரு இளைஞர் மரத்தில் ஏற ஆரம்பிப்பார். முக்கால்வாசி உயரம் ஏறியிருக்கும் எல்லா சிறுவர்களும் காலைப் பிடித்து இழுக்கப்பட்டு கிழே தள்ளப்படுவார்கள். அவருக்கு உதவியாக இன்னும் நான்கைந்து இளைஞர்கள் மரத்தில் ஏறுவார்கள். மண்ணில் புரட்டப்பட்ட சாக்குகள் தொடர்ந்து வீசப்படும். ஏறுபவர்களிடம் வெறிகூடும்.
இன்னும் ஓரு அடி. அந்த ஒரு அடியைக் கடந்தால் பரிசை அவிழ்த்துவிடலாம் என்றுக்கும்போது, ஏறியிருக்கும் எல்லோரும் மடமடவென கீழே விழுவார்கள். பின்பு எல்லாம் முதலிலிருந்து துவங்கும். முடிவில் அந்தப் பரிசுப் பொருள் அவிழ்த்து எடுக்கப்படும்.
பரிசு என்பது ஒரு வெள்ளைத் துண்டு, சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய் பழம், ஒரு ரூபாய் காசு ஆகியவைதான். இதற்காகவா இத்தனை பேர் அடித்துக்கொண்டார்கள் என்று தோன்றும். ஜல்லிக்கட்டில் செயல்படும் மனோபாவம்தான் இங்கேயும் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும்போது, பலரை வென்று, இலக்கை அடைவதில் இருக்கும் பெருமிதத்திற்கு என்ன பாடு வேண்டுமானாலும் படலாம் என்ற மனோபாவம்.
பிறகு அந்த வெள்ளைத் துண்டை ஏலம் விடுவார்கள். ரூ. 2,500 வரை அது ஏலம் போகும். அந்தக் காசை வைத்து சுமார் 40 -50 பேர் அன்றிரவு குடிப்பார்கள். சாப்பிடுவார்கள்.  மரம் ஏறியதால் உடலில் ஏற்பட்ட காயம் ஆற இரண்டு வாரங்கள் பிடிக்கும். ஆனால், இந்த அனுபவம் வருடம் முழுக்க பேசப்படும்.
 

Advertisements
This entry was posted in நம்ம பயலுக. Bookmark the permalink.

7 Responses to வழுக்கு மரம்

 1. நல்ல குறும்படம்!

  Like

 2. கட்டியக்காரன் says:

  இது பாராட்டா, விமர்சனமா? தமிழில் வெளிவரும் குறும்படங்களை வைத்துப் பார்த்தால், நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

  Like

 3. அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள் என்பதைத்தான் ஒரு தினுசாகச் சொன்னேன்!

  Like

 4. Anonymous says:

  அருமையான படைப்புகள்.., நல்ல மதுரை வாசனை. 76ல் பிறந்தது முதல், 98ல் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் எம்.ஸி.ஏ. முடித்தது வரை 23 வருடங்கள் மறக்கமுடியாத மதுரை வாசம். இன்று சென்னையில் கணிப்பொறி முன் அமர்ந்து, மதுரை வீதிகளை தங்களால் ரசிப்பது, ஆனந்தமாக உள்ளது.

  தினமணி யில் அவ்வப்போது வரும் மாசி வீதி ஒவியங்களை வலைபதிவில் இணைத்து, தங்கள் மனதிலுள்ள தொன்நூறுகளின் வடக்கு மாசியை அனைவருக்கும் தெரிவிக்கவும்.

  கிழக்கு மாசி வீதியின் மளிகை கடைகளும், தெற்கு மாசி வீதி பள்ளிகளும், மேலமாசி வீதி பெயிண்ட் கடைகளும், ஆவணி மூல வீதி நகைகடைகளும், வக்கீல் புதுதெரு, சொக்கப்ப நாயக்ன் தெரு, எழுகடல் தெரு, லக்ஷ்மி நாராயண புர அக்ரகாரம், நேதாஜி தெரு இவற்றில் அலைந்து திரிந்த நாட்கள் நீங்காத நினைவுகளாய் நெஞ்சில் வலம் வருகின்றன.

  also see : http://www.pbase.com/oochappan/madurai_street

  Like

 5. நன்றி அனானி. நீங்கள் சொல்லும் அதே வருடங்களில்தான் நானும் தியாகராசர் கல்லூரியில் படித்தேன். நீங்கள் எந்தத் துறை? நான் ஆங்கிலத் துறை. தினமணியில் அவ்வப்போது மாசி வீதி பற்றி ஓவியங்கள் வருவதாகச் சொன்னீர்கள். அவை எந்தப் பகுதியில் வருகின்றன. உங்கள் மின்னஞ்சல் முகவரியை முடிந்தால் தரவும்.

  Like

 6. AT. Viswanath says:

  AT. Viswanath. (Anonymous)
  viswanathat@yahoo.com

  I have studied MCA at Thiagarajar Eng. college, Pasumalai.

  Please have a look at the wonderful paintings of Manohar Devadoss’s Book : Multiple Facets of My Madurai. (http://www.hindu.com/mag/2007/04/22/stories/2007042200140400.htm)

  The pictures of my school Sethupathi HSS are amazing.

  Your style (nadai) in the recent post (Pazhukugal valartha naikutti) is so nice.

  Like

 7. agrahara naai says:

  HI
  Nanum madurai maindhan than.Neengal 90gal endral naan 80s.Naanum sethupathy (Seththa paatti endru matra school pasangalal chellamaga??? azhaikkapaduvathundu) product than.Meendum antha naatkalukku chendru vantha anubavam ungal ezhuthai padikkum podhu…Keep writing..Meendum sandhippom

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s