நானே புலியைப் பாத்ததில்ல..

mp_tiger.jpg mp_tiger.jpg

திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி சமீப காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு அந்த வனப் பகுதியை புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால், அங்கே புலிகள் ஏதும் இல்லை சமீபத்தில் அங்கு சென்ற வனவிலங்கு நிபுணர்கள் சொல்லிவிட்டுப் போய்விட, செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது வனத்துறை. அந்த வனப் பகுதிக்கு நேரில் சென்று பார்த்துவிடலாம் என்று நானும் என் நண்பனும் கிளம்பினோம். திருநெல்வேலியில் இறங்கி அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வழி கேட்டோம். அவர், இங்க தாங்க பக்கத்தில, ஒரு பத்து கி.மீ. இருக்கும். ஒரு பஸ்ஸப் பிடிச்சு களக்காட்டில இறங்கி அங்கேயிருந்து காட்டுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சுப் போங்க என்றார். அட, திருநெல்வேலி நகரத்திலிருந்து இவ்வளவு அருகில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியா என்ற ஆச்சரியத்துடன் களக்காடு பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.  நடத்துனர் 14 ரூபாயை பயணக்கட்டணமாக வசூலித்தார். பத்து கி.மீ. தூரத்திற்கு நிச்சயமாக பதினான்கு ரூபாய் வசூலிக்க மாட்டார்களே, ஒரு நெடும் பயணம் காத்திருக்கிறது என்ற திகில் ஏற்பட்டது.

பேருந்து சேரன் மாதேவி, பத்தமடை வழியாக சுமார் 40 கி.மீ. தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து களக்காடு புதிய பேரூந்து நிலையத்தில் நின்றது. அங்கே இருக்கும் கடைகளில், இங்கிருந்து முண்டந்துறை சரணாலயத்திற்கு எப்படிச் செல்வதென்று கேட்டேன். எல்லோரும் ஒரே மாதிரியாக, அப்படி ஒரு இடமே சுற்றுவட்டாரத்தில் இல்லை என்று கையை விரித்தார்கள். ஒரு அரைமணி நேரம் இப்படி பரிதாபமாகக் கழிந்தது.  

பிறகு ஒரு ஆட்டோ டிரைவர், அருகில் முண்டந்துறை என்று ஏதும் கிடையாது. களக்காடு வனப்பகுதி வேண்டுமானால் இருக்கிறது. இறக்கிவிடுகிறேன். நாற்பது ரூபாய் கொடுங்கள் என்று சொன்னார். வந்ததற்கு அதையாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். மூன்று கி.மீ. சென்ற பிறகு, வனத்தை நெருங்கியது ஆட்டோ. வனத்துறை அலுவலகம் ஒன்றும் கண்ணில் பட்டது. வாசலில் இருந்த பலகையில், களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் என்றிருந்தது. அட இதுதான் முண்டந்துறையா என்று ஆட்டோக்காரர் ஆச்சரியப்பட்டுக் கொண்டார். வனத்திற்குள் செல்ல வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றுவரும்படி சொன்னார்.  

உள்ளே சென்று, அங்கிருந்த அதிகாரியிடம் புலிகள் காப்பகத்தைப் பார்க்க அனுமதி வேண்டுமெனக் கேட்டேன். அவர் கிளிஞ்சல்கள் படத்தில் வரும் கோபாலகிருஷ்ணண் போல கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். தம்பி, இது புலிகள் காப்பகம்தான். ஆனால் புலியெல்லாம் பார்க்க முடியாது. புலி இருக்கு. இல்லைனு சொல்லல. கடவுள் இருக்கார்னு சொல்றோம்ல, அது மாதிரிதான். யாராவது கடவுளைப் பார்த்திருக்கமா? ஆனா, அவர் இருக்கார்னு நம்புறோம்ல, அது மாதிரிதான். நாங்களும் இங்கே புலி இருக்குன்னு நம்புறோம். இந்த மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கே, அது கன்னியாகுமரில ஆரம்பிச்சு, பூனே வரைக்கும் சுமார் பத்து மாநிலங்கள்ள பரந்து விரிஞ்சு கிடக்கு. இதுல எங்கேயாவது புலி இல்லாமையா போகும். அது சரி, எங்கேயிருந்து வர்றீங்க?” என்றார். மதுரை வடக்கு மாசி வீதியிலிருந்து வருகிறோம் என்றேன்.

 நான் இங்கே பதினஞ்சு வருசமா வேலை பார்க்கிறேன். நானே புலியைப் பார்த்ததில்ல. மதுரையிலயிருந்து வந்த உடனே புலியப் பார்த்துறனுமா? அந்தா, அங்க பாருங்க, ஒரு புலி படம் இருக்குல்ல, அத வேனாப் பார்த்துக்கங்க. இந்தப் பத்திரிகைகாரங்க அசிங்கப்படுத்துறது பத்தாதுன்னு நீங்க வேற என்றார் அந்த அதிகாரி.  இந்தக் காட்டில் புலிகள் இல்லை என்ற ரகசியம் எப்படி வெளியில் வந்ததெனக் கேட்டேன். அதாவது திடீர்னு மூணு நாலு விஞ்ஞானி கிளம்பி, புலி இருக்கான்னு பாக்க வந்துட்டான். உள்ள விடமாட்டேன்னு சொல்ல முடியுமா? உள்ள போனவன் நாலு நால் காத்து கிடந்து, ஆராய்ச்சி பண்ணி புலி இல்லைனு சொல்லிப்புட்டான். அவன் படிச்சவன். அவனை ஏமாத்த முடியுமா? இப்படித்தான் விசயம் வெளில வந்துச்சு. நாங்க பண்றதும் தப்புதான். வருசா வருசம் புலி எண்ணிக்கை கூடிக்கிட்டிருக்குன்னு பொய்க் கணக்குக் காமிச்சுக்கிட்டிருக்கோம். போன வருசத்தைவிட இந்த வருசம் இரண்டு புலி கூடிருக்குன்னு எழதியனுப்புவோம். குறைஞ்சிருச்சுன்னு எழுதுனா, புடுச்சு தின்னியான்னு கேப்பான். இங்க காப்பித் தண்ணிக்கே வழியில்ல, நாமலா புலியப் புடிச்சுத் திண்ணப்போறோம்? சரின்னு இத்தனை வருசம் பொய்க் கணக்குக் காமிச்சது இப்ப மாட்டிக்கிட்டோம். படிக்காதவுக யாரும் இங்க வர்றதில்ல. ஒங்கள மாதிரி படிச்ச புள்ளகதான் வந்து ஏமாந்து போதுக பாவம். சரி, வந்தது வந்துட்டீங்க, இங்கனக்குள்ள தலையணையாறுன்னு ஒரு ஆறு ஓடுது, அதையாவது பாத்துட்டுப் போங்க என்று அனுமதி கொடுத்தார்.  

அடர்ந்த வனத்தின் நடுவில் ஓடும் மிக அற்புதமான சிற்றாறு அது. அதில் காலை நனைத்து அனுபவித்துக் கொண்டிருந்தபோது, வனத்துறை ஊழியர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். நேத்து வந்திருக்கலாமே, இரண்டு புலி இங்க திருஞ்சுச்சு. நான்தான் விரட்டி விட்டேன் என்று புருடா விட்டார். திரும்பவும் ஆட்டோவில் வந்து களக்காட்டில் இறங்கினோம். ஆட்டோக்காரர் 150 ரூபாய் கேட்டார். கொடுத்துவிட்டு, திருநெல்வேலிக்கு வண்டியைப் பிடித்தோம்.  

 

This entry was posted in அனுபவம். Bookmark the permalink.

6 Responses to நானே புலியைப் பாத்ததில்ல..

  1. மின்னல் says:

    இது நிஜமாவே புலி வருது கதையா இருக்கே!!!!

    Like

  2. கோவிலுக்குப் போயிட்டு வந்த மாதிரிதான்…

    Like

  3. kaipulla says:

    dude, the same mundanthurai sanctuary extends to manimutharu, Papanasam etc.

    Beleive me, I’ve seen leopards near the lower dam (karayaar) and also heard from the locals that there are tigers in that area.

    gtg now, will give more details later

    Like

  4. கட்டியக்காரன் says:

    மின்னல், இது நிஜமாவே புலி வராத கதை.
    கைப்பிள்ளை, நீங்கள் சொல்வது பாதி சரி. முண்டந்துறை சரணாலயம் என்பது பாபநாசம் வரை நீண்டு கிடக்கிறது என்பது உண்மைதான். காரையாறு அணைக்கு அருகில் சிறுத்தைகளை எளிதில் பார்க்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், புலிகள் அந்தச் சரணாலயத்தில் மிக மிகக் குறைவு என்பதுதான் தற்போதைய நிலை. உள்ளூர்காரர்கள் சிறுத்தைகளையே புலிகள் என்று சொல்லியிருக்கக்கூடும். அந்தப் பிராந்தியத்தில் புலிகள் இல்லை என்றே தெரிகிறது.

    Like

  5. Pingback: Kalakkadu Mundanthurai Tiger Sanctuary visit « கில்லி - Gilli

  6. Andrews says:

    Hello,
    puli pakkanumna puli irukkira idathukku ponum. atha vittutu neenga…..sari sari vishayathukku varen. Puli mundanturai la than irukku ana mundanthurai enga irukku. kalakadu pakkam illa.Athu pabanasam pakkam irukku.Tirunelveliyil irundhu pabanasam Rs.14.appuram mundanthurai karaiyar pora valiela iruuku.papanasathilarundhu 9km than ippa puriyutha mundanthuai. Anga Mann irukku,puli irukku, Mizha irukku
    Andrews
    papanasam

    Like

Leave a comment