வடக்கு மாசி வீதியின் அடையாளங்களில் ஒன்று அண்ணா கடை. அறிஞர் அண்ணாவுக்கும் இந்தக் கடைக்கும் சம்பந்தமில்லை. கடையை வைத்திருப்பவரை எல்லோரும் அண்ணா என்று அழைப்பதால் கடைக்கு இந்தப் பெயர். நான் அவரை அண்ணா என்று கூப்பிடுவேன். என் தந்தையும் அவரை அண்ணா என்று அழைத்து, அவருடைய மாணவப் பருவத்தில் பொருள்களை வாங்கியிருக்கிறார். அதாவது, உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இந்த அண்ணா இருந்து வருகிறார் என்பதுதான் இதன் பொருள்.
இந்தக் கடையை ஒரு சிறிய ஸ்டேஷனரி ஷாப் என்று குறிப்பிடலாம். பரிட்சை பேப்பர், நோட்டு, பேனா, பென்சில், லப்பர் (ரப்பர்) போன்ற பொருள்கள்தான் முக்கிய விற்பனைப் பொருள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாமே அடித்தட்டு மக்கள் வாங்கும் விதத்திலான விலையில்தான் இருக்கும். பெரிய விலையிலான பொருள்கள் ஏதும் கிடைக்காது. ஜியோமெண்ட்ரி பாக்ஸ் என்றால் நடராஜா பாக்ஸ்தான் கிடைக்கும். கேமல் இருக்காது. 80களில் அண்ணா கடைக்கு அருகில் ஹார்வி என்ற நர்ஸரி பள்ளி இருந்தது. அதனால், காலை நேரங்களில் எப்போதுமே கடையில் கூட்டம் நெரியும். மாநகராட்சிப் பள்ளியில் படித்த எங்களுக்கும் அண்ணாதான் பரிட்சை பேப்பர்களை விற்று வந்தார். இவையெல்லாம் போக கோலிக் குண்டு, பம்பரம், சாட்டை, தீப்பெட்டிப் படம், பட்டம் (காற்றாடி) போன்றவற்றையும் விற்றுவந்தார் அண்ணா.
அண்ணா என்று கம்பீரமாக அழைக்கப்பட்டாலும், அண்ணாவின் உருவம் கம்பீரமானதல்ல. சற்று அழுக்கான கதராடைதான் உடுத்துவார் அண்ணா. முதுகில் கூன் விழுந்திருப்பதால், மூன்றரை அடி உயரம்தான் இருப்பார். கம்பை ஊன்றித்தான் நடப்பார். அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கிறார்களா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. காலையில் சீக்கிரம் கடைக்குப் போனால், நெற்றியில் செந்தூரத்தால் இடப்பட்டிருக்கும் நாமத்தைப் பார்க்க முடியும். ஆனால், வடக்கு மாசி வீதியில் வசிக்கும் கோனார்களும் நாமம் இடுவார்கள் என்பதால் அவர் பிராமணரா, கோனாரா என்ற குழப்பம் என் தலைமுறையினருக்கு உண்டு.
கடையில் சம்பளத்திற்கென்று ஆள் கிடையாது. கூட்ட நேரங்களில் உதவுவதற்கென்று யாராவது வருவார்கள். அந்தக் காலத்தில் வடக்கு மாசி வீதி மைனர்கள் சட்டைக் காலர் அழுக்காகாமல் இருக்க கழுத்தைச் சுற்றி கைக்குட்டையைச் சுற்றியிருப்பார்கள். இப்படி கைக்குட்டையைச் சுற்றி வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ஷோக்குப் பேர்வழிகளாக இருப்பார்கள். அப்படி ஒருவர் எப்போதும் அண்ணா கடையில் இருப்பார். அண்ணாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். அண்ணாவுக்கு சாப்பாடு, காபி எல்லாம் வாங்கிக் கொடுப்பார். அண்ணா கடையில் நிற்பது தவிர வேறு வேலை ஏதும் அவருக்குக் கிடையாது. அண்ணா செத்தவுடன் அந்தக் கடைக்கு உரிமை கொண்டாடுவது, கடையைக் கைப்பற்றுவது அவர் திட்டமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும். ஆனால், இன்றுவரை அந்த நாள் வரவில்லை.
அண்ணா கடையில் அதிகம் தென்படும் மற்றொரு நபர் ஏ.வி.எம். ராஜன். அவரது உண்மைப் பெயர் அதுவல்ல. ஏ.வி.எம். ராஜனைப் போல கேசம், மீசை எல்லாம் வைத்திருப்பார். அவர் தோற்றமும் கிட்டத்தட்ட அப்படியே இருக்கும். சமீபத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. பல்லெல்லாம் விழுந்து ஒரிஜினல் ஏ.வி.எம். ராஜனைவிட கிழடுதட்டிப் போயிருந்தார்.
80களில் வாழ்க்கை எவ்வளவு எளிமையாக, குழப்பமில்லாமல் இருந்தது என்பதற்கு அண்ணா கடை ஒரு உதாரணம். தேர்வு செய்ய குறைவான வாய்ப்புகள், எல்லோருக்கும் உகந்த விலையில் பொருள்கள் என ஒரு மாயா பஜாரே நடத்திவந்தார் அண்ணா. இப்போதும் அண்ணா கடை இருக்கிறது. கூட்டம்தான் இல்லை. இப்போது யாரும் குறைந்த விலையிலான பேனாக்களையோ, நோட்டுகளையோ வாங்க விரும்புவதில்லை. தவிர ஹார்வி நர்ஸரி ஸ்கூல் இடம் மாறிவிட்டது. யாரும் மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்புவதில்லை என்பதால், அந்தப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.
அண்ணாவும் அந்த கைக்குட்டை ஷோக்குப் பேர்வழியும் தனியாக இருக்கும் போது மௌனமாக இருப்பார்கள். இனிமேல் இந்தக் கடை தன் கைக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை என்பது கைக்குட்டை நபருக்குப் புரிந்திருக்க வேண்டும். அடிக்கடி இந்தப் பக்கம் வருவதில்லை. அண்ணாவும் தன் கடையில் விற்கும் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார். ஒரு வகையில் அண்ணாதான் வடக்கு மாசி வீதியின் பொற்காலத்தின் கடைசிப் பிரதிநிதி. அவர் இல்லாமல் போகும்போது, அந்த வீதியும் தன் தனித் தன்மைகளை இழந்து நிற்கும் என்று தோன்றுகிறது.
இந்தப் பதிவுக்கு ‘அண்ணா நாமம் வாழ்க’ என்று தலைப்பிட்டிருக்கலாம்! நீங்கள் மதுரையை விட்டுச் சென்னைக்கு வந்த காரணம் இவர்தானோ?
LikeLike
நான் சென்னைக்கு வந்ததற்கு அண்ணா காரணம் இல்லை. “வாழ்தல் வேண்டி ஊழ்வினை” துரத்தியதுதான் காரணம். வடக்கு மாசி வீதி போற்றுதும்! வடக்கு மாசி வீதி போற்றுதும்! வடக்கு மாசி வீதி போற்றுதும்!
LikeLike