ஊடகத்துறை மிகத் துடிப்புமிக்கதாக கருதப்படும் நமது நாட்டில், எடிட்டர் என்பவர் பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கும் வெளியில் இருக்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை. சமீபத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் இதற்கு ஒரு சான்று. கடந்த சனிக்கிழமை இரவு கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் ரெட்டியின் வீட்டிற்கு மாறன் சகோதரர்கள் சென்றதாகவும் அங்கே நள்ளிரவு வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எதற்காக மாறன் சகோதரர்கள் அங்கே சென்றார்கள் என்பது தெரியாது. ஆனால், திடீரென வீட்டிலிருந்து கூக்குரல் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் நடந்ததில் சரத் ரெட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்தச் செய்தி சென்னையில் இருக்கும் எல்லா செய்தியாளர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே தெரியவந்துவிட்டது. ஆனால், எந்தத் தொலைக்காட்சியிலும் எந்த நாளிதழிலும் இதுபற்றி சிறு குறிப்புகூட வெளிவரவில்லை. தமிழகத்திற்கு சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு ஆங்கில நாளிதழ் இதை வெளியிட முடிவு செய்ததாகவும் ஆனால், பெரிய இடத்திலிருந்து வந்த வேண்டுகோளை (உத்தரவு?) அடுத்து அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே இந்தச் செய்தியை 22ந் தேதிமுதல் பக்கத்தில் ஏகப்பட்ட பூச்சுப்பூசி வெளியிட்டது.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனருக்கே இந்த கதி என்றால், சாதாரணமானவர்கள் எல்லாம் இவர்கள் வழியில் குறுக்கிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. இறப்புச் சான்றிதழ்கூட கிடைக்காது. இதில் ஊடகங்கள் கடைப்பிடிக்கும் மௌனம்தான் இன்னும் பயத்தைக் கிளப்புகிறது. யாராவது ஒரு பெண்ணோடு கடற்கரைக்குப் போய், காவல்துறை உங்களை விசாரித்தேலே போதும்.. உங்கள் தொழிலோடு செக்ஸ் என்ற வார்த்தையைச் சேர்த்து மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளிவிடுவார்கள். செக்ஸ் டீக்கடைக்காரர், வக்கிர பழவியாபாரி என்று பெயர்களோடு தொடர் வெளிவரும். இந்த சரத் ரெட்டி தாக்குதல் செய்தி, புதன்கிழமை வெளிவரும் ரிப்போரட்டர், ஜூனியர் விகடன் இதழ்களில் வேண்டுமானால், இதைப் பற்றி செய்திகள் வரலாம். வராமலும் நடுநிலை காக்கப்படலாம்.
பின்குறிப்பு: சம்பந்தப்பட்டவர்களின் படங்களைப் போட்டு, வெளிப்படையாக எழுதத்தான் நினைத்தேன். ஆனால் பயம் தடுத்துவிட்டது.