
பழைய அழகியும் பயங்கர நடிகரும்
தமிழ் சினிமாவில் த்ரில்லர் ரக படங்கள் வெளிவருவது மிக அரிதான சம்பவம். அதிலும் நல்ல த்ரில்லர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இம்மாதிரி சூழலில்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொம்மலாட்டம் மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. பாரதிராஜாவின் முந்தைய த்ரில்லர்களான டிக்…டிக்…டிக்.., சிவப்பு ரோஜாக்கள், கண்களால் கைது செய் படங்களையெல்லாம்விட பல மடங்கு மேம்பட்ட த்ரில்லர் இது. டிக்…டிக்… இடைவேளைக்குப் பிறகு எங்கெங்கோ போய்விடும். சிவப்பு ரோஜாக்களின் க்ளைமாக்ஸ் உருக்கமோ, உருக்கம். கண்களால் கைது செய் படம் த்ரில்லர் என்று சொல்லிக்கொண்டாலும், படுசோம்பலான படம். பாரதிராஜாவின் கிராமப் பின்னணியில் அமைந்த படங்களில் முதல் மரியாதைக்கு என்ன இடமோ,அந்த இடத்தை அவரது த்ரில்லர் வரிசையில் இந்தப் படத்திற்குக் கொடுக்கலாம்.
ராணா (நானா படேகர்) ஒரு எக்ஸென்ட்ரிக்கான திரைப்பட இயக்குனர். அவரது லேட்டஸ்ட் படமான சினிமாவில் நடித்த கதாநாயகியை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, காரோடு வைத்து ஒரு மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றுவிடுகிறார். இந்தக் கொலையை விசாரிக்க வருகிறார் சி.பி.ஐ. அதிகாரி விவேக் (அர்ஜுன்). இந்தக் கொலைக்கு முன்பும், அதே படத்தின் ஷூட்டிங்கில் நடந்த வேறு இரண்டு கொலைகளையும் நோண்ட ஆரம்பிக்கிறார் விவேக். எக்ஸென்ட்ரிக்கான ராணா தன் கதாநாயகியிடம் ஏன் அவ்வளவு கரிசனம் காட்டினார்? படம் வெளிவரும் முன்பே நாயகியை ஏன் கொல்கிறார்..அதுவும் பத்திரிகையாளர்கள் துரத்தி வரும்போது? முந்தைய கொலைகளுக்கும் ராணாவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த முடிச்சுகள் எல்லாம் ஒரே புள்ளியில் இறுதியில் அவிழ்கின்றன.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, இதுவரை பாரதிராஜா எடுத்த பாடாவதிப் படங்களுக்கெளுக்கெல்லாம் அந்தப் படங்களையெல்லாம் அவர் அலட்சியமாகக் கையாண்டதுதான் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறது. சினிமா என்ற ஊடகத்தின் சாத்தியங்களையும் வரையறைகளையும் மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குனாரால் மட்டுமே எடுக்கக்கூடிய பல காட்சிகள் இந்தப் படத்தில் உண்டு. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, படத்தின் மையப்புள்ளியைவிட்டு எங்கும் நகராத திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். இம்மாதிரி த்ரில்லர்களில், கொலைகாரன் யார் என்பதைத் தேடும்போது, படம் பார்ப்பவர்களுக்கு பல்வேறு நபர்களின் மீது சந்தேகம் ஏற்படச்செய்யும் வகையில் பல காட்சிகளை அமைத்து, ஏமாற்றும் சிறுபிள்ளைத்தனமான உத்தி இந்தப் படத்தில் அறவே கிடையாது. படம் முழுக்க ராணா மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது. அவர்தான் செய்தாரா, ஏன் செய்தார்? என்ற ஒரே ஒரு கேள்வியைச் சுற்றியே படத்தை நகர்த்திச் செய்கிறார் பாரதிராஜா.
தமிழின் மிகை நாடும் கலைஞர்களை விட்டுவிட்டு நானா படேகரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனமான காரியம். சின்ன விழியசைவு, லேசாகத் திரும்பிப் பார்ப்பது போன்றவற்றின் மூலமே சொல்லவேண்டியதைக் கச்சிதமாகச் செய்கிறார் நானா. என்னதான் அர்ஜுன் நடித்திருந்தாலும், அதுவும் நல்லவராக நடித்திருந்தாலும் நானாதான் கதாநாயகன். அவர் ஃப்ரேமில் இருக்கும்போது மற்றவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள். நாயகியாக வரும் ருக்மிணி விஜயகுமார் ஒரு பழமை வாய்ந்த அழகி (சேலை விளம்பரங்களில் வருவார்களே.. அந்த மாதிரி).
படத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், படம் முழுக்கத் தென்படும் அழகுணர்ச்சி. எந்த நெருடலும் இல்லாமல் படம் முழுக்க தேர்ந்த கலைஞனுக்குரிய அழகுணர்ச்சி வெளிப்படுகிறது. தமிழ்ப் படங்களில் காணவே முடியாத அம்சம் இது. பி. கண்ணனின் ஒளிப்பதிவு உண்மையிலேயே உலகத்தரம். படம் பல இடங்களில் ஃப்ளாஷ்பேக்கில் நடக்கிறது. ஃப்ளாஷ்பேக் என்ற கொசுவர்த்திச் சுருள் உத்தியை இவ்வளவு திறமையுடன் பயன்படுத்த முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால், சில ஓட்டைகளும் உண்டு. கவிதாயினியாக வரும் அனிதா என்ற பெண் சம்பந்தமே இல்லாமல் ராணாவுடன் அவர் போகும் இடங்களுக்கெல்லாம் உடன் சுற்றுகிறார். கதையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த ஒரு பாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் பத்து மடங்கு சிறப்பாக இருந்திருக்கும். பிறகு, கவனக்குறைவால் ஆங்காங்கே தென்படும் சில குறைகள். அப்புறம் பாடல்கள். இவ்வளவு துணிந்த, பாரதிராஜாவால் பாடல்களைத் துறக்க முடியவில்லை. இதையெல்லாம் மீறித்தான், படத்தை இறுதிவரை நகத்தைக் கடித்துக்கொண்டு பார்க்க வைக்கிறார் பாரதிராஜா.
நல்ல படம் இறுதிவரை விறு விறுப்பு
LikeLike
நல்ல விமர்சனம் சார்
LikeLike
நன்றி தமிழ் அண்ணன். நன்றி கலாநிதி. அடிக்கடி வருக, ஆதரவு தருக!
LikeLike
After reading your review, i really want to watch this movie. Though it is such a good movie, what do you think is the reason for its failure in the box office? May be, as bharathiraja himself said his movie didn’t do well since he doesn’t own a tv channel!
LikeLike
நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். என்னைப் பொறுத்தவரை மார்க்கெட்டிங் சரியில்லாததுதான் படம் சரியாக ஓடாததற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
LikeLike