
பிரமாதமான நடிப்பு
பா. விஜய் நம் கலாம் கையால் தேசிய விருது வாங்கிய பாடலாசிரியர். பாக்யாவில் படு மோசமான சித்திரங்களுடன் உருகி.. உருகி.. கவிதை நடையில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். திடீரென்று பார்த்தால் ஒரு நாள் தாய் காவியம் என்று ஒரு படம், ஞாபகங்கள் என்று ஒரு பூப்போட்ட படம் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. கடைசியில் ஞாபகங்கள் வெளிவந்தேவிட்டது.
வசதியில்லாத ஒரு ரொம்ப நல்லவர் ஒரு பெண்ணை பயங்கரமாக, பயங்கர டீசன்டாகக் காதலிப்பது, பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு வீணாய்ப் போனவருடன் கல்யாணம் நடப்பது, பிறகு இந்த நல்லவர் பெரிய்ய ஆளாகி அந்த வீணாகப் போனவளைச் சந்திப்பது என்ற காவியக் காதல் கதையை 100 ஆண்டு கால சினிமாவில் பல முறை பார்த்தாகிவிட்டது. இந்தப் படத்தில் இன்னொரு முறை. இது ஒரு உண்மைக் கதை என்று படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு பில்ட் அப் வேறு கொடுக்கிறார் விஜய்.
சினிமா கவிஞர்களுக்கு என்று ஒரு பிம்பம் இருக்கிறது. வெள்ளை ஜிப்பா போடுவார்கள். எப்போதும் புன்னகையுடன் இருப்பார்கள். பேசும்போது எதுகை மோனையில் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். மென்மையாக நடந்துகொள்வார்கள். அதுவும் பெண்கள் என்றால் கேக்கவே வேண்டாம்.. அப்புறம்.. மெதுவாக, கம்பீரமாக நடப்பார்கள். இது ஒரு பாமர பிம்பம். ரவுடிகள் எல்லாம் கட்டம் போட்ட பனியன் போட்டிருப்பார்கள் என்பது மாதிரி. வைரமுத்துவை ஒரு தடவை நேரில் பார்த்தாலோ, உரையாடினாலோ இந்த பிம்பம் எல்லாம் கலைந்துவிடும்.
இந்த டுபாக்கூர் பிம்பத்தை அப்படியே பின்பற்றுகிறார் விஜய். மென்மையாக ஒரு புன்னகை. ஜிப்பா. எதுகை மோனையில் அசட்டு கவிதைகள். மென்மையாக நடந்து கொள்வது. இந்த மென்மையாக நடந்துகொள்வது என்றால் என்னவென்று இந்த இடத்தில் விளக்கிவிடுகிறேன். அதாவது, காதலிக்கும் பெண்ணுடன் தனியறையில் இருந்தால்கூட மயிலிறகால்தான் தடவுவார் கவிஞர். காதலியே முன்வந்து படுக்கத் தயாரானால்கூட, “நீ குழந்தைமா” என்று மறுத்து…
ஆனால், படம் முழுக்க தன்னை மகா கவிஞன் என்று மற்றவர்களைச் சொல்ல வைத்து அழகு பார்ப்பதில் மட்டும் கூச்சம் கிடையாது.
இந்த படத்தைப் பற்றிச் சொல்ல ஏதாவது ஒரு நல்ல விஷயம் கிடைக்குமா என்று போகஸ் லைட் போட்டுப் பார்த்தால்கூட… ம்.. ஹும்… நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார் விஜய். அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி மாட்டுவதுதான் அவருடைய உட்சபட்ச நடிப்பு. பல முக்கிய காட்சிகளில் அழுகிறாரா, ஆத்திரப்படுகிறாரா, சிரிக்கிறாரா என்று புரியாத வகையில் ஒரு முகபாவம் காட்டுகிறார்.
படத்தில் காமெடி ட்ராக் என்று தனியாக இல்லை. அந்தக் குறையை, படத்தில் வரும் புரட்சிகர தோழர்கள் தீர்க்கிறார்கள். தீவிர மார்க்ஸியமோ, தமிழ்த் தேசியமோ பேசுகிற ஒரு குழு இவர் ஒரு கட்டுரைக்குக் கொடுக்கும் தலைப்பைப் (குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர். இந்தியா சுதந்திரம் வாங்கிவிட்டது – இதுதான் அந்த அற்புதமான தலைப்பு) பார்த்து அசந்துபோய் ரூ. 5,000 பரிசளிக்கிறார்களாம். அதைப் பார்த்து போலீஸ்காரர்கள் பிடித்துக்கொண்டுபோய் வைத்து அடிக்கிறார்களாம்.
சினிமாவைக் கண்டுபிடித்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது?
(குத்துப் பாட்டு இல்லாமல், கதாநாயகியின் சதையைக் காட்டாமல், சண்டைக் காட்சி இல்லாமல் ஒரு தரமான படத்தை எடுத்தால், அதை வரவேற்கும் நல்ல குணம் இல்லையே என்று திட்டும் அன்பர்களை வரவேற்கிறேன்)
//சினிமாவைக் கண்டுபிடித்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது?//
:-))
LikeLike
😦
LikeLike
புலம்பிகிட்டே இருந்தாலும், இந்த மாதிரி மொக்கை படங்களை விடாம பாக்கறீங்களே கட்டியகாரன்! தைரியசாலிதான்.
LikeLike
//சினிமாவைக் கண்டுபிடித்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது?//
ரசித்துச் சிரித்தேன்.
அப்புறம் இறுதியில் எழுதியிருக்கும் வரிகளில் உள்ள “திட்டும் அன்பர்கள்” எதற்கு நண்பா இது,நீங்கள் குறிப்பிட்டிருக்கும் “கதாநாயகியின் சதையைக் காட்டாமல்” நான் சொல்லியிருந்த வார்த்தைகள்தான்,நான் எங்கே உங்களைத் திட்டினேன்.உங்கக் கருத்தை நீங்க சொல்லியிருந்தீங்க,என் கருத்தை நான் சொன்னேன்.அதோடு முடிந்துவிட்டது.
//ஆனால், படம் முழுக்க தன்னை மகா கவிஞன் என்று மற்றவர்களைச் சொல்ல வைத்து அழகு பார்ப்பதில் மட்டும் கூச்சம் கிடையாது.//
நீங்களே குறிப்பிட்டிருக்கின்றீர்கள் இது தனி மனித துதிபாடல்தானே நான் அதையும்தானே சுட்டிக் காட்டினேன்.
அதைவிடுங்கள்,இந்த விமர்சனத்தில் உங்கள் எழுத்தின் நடை உண்மையில் சுருக்கமாக,நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்..!
LikeLike
உம்முடைய பாராட்டுகளுக்கு நன்றி. அப்புறம்.. //“திட்டும் அன்பர்கள்” எதற்கு நண்பா இது,நீங்கள் குறிப்பிட்டிருக்கும் “கதாநாயகியின் சதையைக் காட்டாமல்” நான் சொல்லியிருந்த வார்த்தைகள்தான்// விவகாரத்துக்கு வருகிறேன்.
அதாவது நான் உங்களைக் குத்திக்காட்டுகிறேனாம். அதைப் புரிந்துகொள்ளாமல் இப்படி அப்பட்டமாக போட்டு உடைத்தால், நான் எப்படிதான் வலைபதிவு நடத்துவது?
//ஆனால், படம் முழுக்க தன்னை மகா கவிஞன் என்று மற்றவர்களைச் சொல்ல வைத்து அழகு பார்ப்பதில் மட்டும் கூச்சம் கிடையாது.// – இது நீங்கள் சொல்லும் அளவிலான தனி மனித துதி பாடல் கிடையாது. கலைஞர் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்தி, நாள் முழுக்க அதைக் காது குளிர, முதுகு வலிக்க கேட்டுக்கொண்டிருப்பாரே.. அந்த வகை இது.
LikeLike
இந்த மாதிரி படத்துக்கு எப்படி விமரிசனம் எழுத வேண்டுமோ கரெக்டாக அந்தத் தொனியில் எழுதியிருக்கிறீர்கள். 🙂
நண்பர்களுடன் பார்க்க வேண்டிய படம் போலிருக்கிறதே.
LikeLike
கண்டிப்பாக நண்பர்களுடன் பார்க்க வேண்டிய படம் இது.
LikeLike
வைரமுத்து மட்டுமல்ல, டி. ராஜேந்தரை மறந்து விட்டீர்களே!
LikeLike
டி. ராஜேந்தரை நீங்கள் கவிஞராக வேறு ஏற்றுக்கொள்கிறீர்களா?
LikeLike
புண்ணிய பாரத ஜனநாயகத் திருநாட்டிலே யார் யாரெல்லாமோ கவிஞர்தான்.
LikeLike
கட்டியக்காரன், எப்படி இதுமாதிரி படங்களைப் பார்க்கிறீர்கள்? பார்த்துவிட்டு விமர்சனம் வேறு எழுதுகிறீர்கள். என்னதான் வாழ்க்கையோ, போங்கள்!
LikeLike
இந்த வேலைதானே வேண்டாம் என்கிறது.. நீங்களும் இந்தப் படத்தைப் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன். இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
LikeLike
எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதைப் பார்க்க மாட்டமா?
LikeLike