
சூப்பர் ஹீரோ
நடிகர்கள்: விக்ரம், ஸ்ரேயா, கிருஷ்ணா, பிரபு, வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி; இசை: தேவி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுசி கணேசன்.
ஜென்டில்மேனில் கொஞ்சம், அன்னியனில் கொஞ்சம், ரமணாவில் நிறைய எடுத்துச் சேர்த்து உருவாகியிருக்கும் படம்.
தங்கள் பிரச்னைகளை காகிதத்தில் எழுதி போரூர் முருகன் கோவிலில் இருக்கும் ஒரு மரத்தில் கட்டிவைத்தால், அந்தப் பிரச்னைகள் தீருகின்றன. தீர்த்து வைப்பவர் கந்தசாமி. இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று ஆராய வருகிறார் காவல்துறை டிஐஜி (பிரபு) ஒருவர்.
கந்தசாமி சிபிஐயின் பொருளாதாரக் குற்றப் பிரிவில் பணியாற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. தவறாகப் பணம் குவிக்கும் பணக்காரர்களை ரெய்டு செய்து, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் ஒரு பகுதியை ஏழைகளின் பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுத்துகிறார். இதில் சிக்கும் ஒரு பெரிய பணக்காரர் பிபிபி (ஆசிஷ் வித்யார்த்தி). அவருடைய மகள் சுப்புலட்சுமி (ஸ்ரேயா). முருகன் கோவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது கந்தசாமிதான் என்பது பிபிபிக்கு தெரிந்துவிட, ஏழைகளுக்காக உதவும் பணத்தில் பாதியைத் தனக்குத் தந்துவிட வேண்டுமென்று பேரம் பேசுகிறார் பிபிபி. பிபிபியுடன் கூட்டு சேர்ந்து, மெக்ஸிகோ வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் பெரு முதலாளிகள் சிலரது கருப்புப் பணத்தை அள்ளிவரத் திட்டம் போடுகிறார் கந்தசாமி. இதில் ஆர்எம்ஜி குழுமத்தின் ராஜ்மோகனுடன் மோதல் வருகிறது. மக்களின் குறையைத் தீர்த்துவைக்கும் கந்தசாமி யார் என்பதை காவல்துறை டிஐஜி கண்டுபிடித்தாரா, பிபிபி, ராஜ்மோகன் கதி என்ன ஆகிறது என்பதுதான் மீதப் படம்.
துயரத்தில் இருக்கும் நம்மை ஒரு சூப்பர் ஹீரோ வந்து காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பது எப்போதுமே சாகாத ஒரு ஃபேண்டஸி. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் நாயகர்கள் இந்த ஃபேண்டஸியில் உருவெடுத்தவர்கள்தான். இந்த வகைக் கதைகளில் இரண்டு, மூன்று வில்லன்களையும் சற்று சுவாரஸ்யமான திரைக்கதையையும் அமைத்துவிட்டால் போதும். ஒரு சூப்பர் ஹிட் படம் ரெடி. ஆரம்ப காலத்திலிருந்தே ஷங்கர் இம்மாதிரிக் கதையைத்தான் பல படங்களில் காட்டினார். ஆனால், ஜென்டில்மேனில் இருந்த இடஒதுக்கீட்டு எதிர்ப்புக் குரல், அன்னியனில் இருந்த இந்துத்துவ முகமும் ஆகியவை கடும் விமர்சனத்திற்குள்ளாயின. ஆனால், சுசி கணேசன் இம்மாதிரி எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. சூப்பர் ஹீரோ கதை என்று முடிவுசெய்த பிறகு, அதை சுவாரஸ்யமான, பளபளப்பான திரைக்கதையோடு கொடுத்திருக்கிறார் சுசி கணேசன்.
படத்தின் துவக்கத்தில் ஒரு ஏழைக்குக் கந்தசாமி கொடுத்த பணத்தை, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடுங்கிக் கொள்ள, அந்த இன்ஸ்பெக்டரை மாறுவேடத்தில் வரும் விக்ரம், பின்னணிப் பாடலுடன் அடித்துத் துவைக்கும்போதே படத்தின் தொனி செட்டாகிவிடுகிறது. அதை முடிவுவரை நூல் பிடித்தாற்போல எடுத்துச் சென்றிருக்கிறார் கணேசன். இப்படி சூப்பர் ஹீரோ கதையில் எல்லாம், மற்றொரு பக்கம் அசட்டு சென்டிமென்டுடன் கூடிய அம்மாவோ, அப்பாவிக் காதலியோ இருந்து படத்தை நாசம் செய்வார்கள். இந்தப் படத்தில் அப்படி இல்லை.

ஹாலிவுட் அழகியும் கந்தசாமியும்
இந்தப் படத்தின் நாயகியாக வரும் ஸ்ரேயா, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் நாயகியைப் போல, கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நடிப்பு என்று வருகிறார். அது பொருத்தமாகவும் இருக்கிறது. ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையான ஒரே தமிழ் சினிமா கதாநாயகி இவர்தான்.
விக்ரமிற்கு கிட்டத்தட்ட அன்னியன் படத்தில் செய்தது மாதிரியான வேடம். அதனால், அலட்டிக்கொள்ளாமல் நடித்துவிட்டுப் போகிறார். இம்மாதிரி சூப்பர் ஹீரோ கதைகள் இந்திய நடிகர்களில் சிலருக்கு மட்டுமே பொருந்தும். விக்ரம் அவர்களில் ஒருவர் என்று தோன்றுகிறது. இந்த சூப்பர் ஹீரோ கதையில் வடிவேலு வலுவில் நுழைக்கப்பட்டிருக்கிறார். வரும் காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார் என்றாலும், படத்தோடு ஒட்டாமல் வந்துபோகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு (என்.கே. ஏகாம்பரம்), இசை, எடிட்டிங் எல்லாமே படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. பாடல்களும் அவை படமாக்கப்பட்டு விதமும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. அதிலும் “மியாவ்.. மியாவ் பூனை” பாடல்.
படத்தில் நிறைய ஓட்டைகளும் பலவீனங்களும் இருக்கின்றன. படத்தின் நீளம் (மூன்றேகால் மணி நேரம்) அயர்ச்சியூட்டுகிறது. ஆனால், அதையெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்தின் பிரம்மாண்டமும் அடிரிலின் சுரக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளும் மறக்க வைத்துவிடுகின்றன.
எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு மூன்றேகால் மணி நேரத்தைக் கழிக்க நினைத்தால், இந்தப் படம் சரியான சாய்ஸ்.
//, பிபிபி, ராஜ்மோகன் கதி என்ன ஆகிறது என்பதுதான் மீதப் படம்.//
நம்ம கதி? அதை விட்டுட்டீங்களே!
LikeLike
நாடோடிகள் மாதிரி போலி நல்ல படங்களுக்கு, இந்த மாதிரி வெளிப்படையான பொழுதுபோக்குப் படம் எவ்வளவோ பரவாயில்லை சுரேஷ்!
LikeLike
//நம்ம கதி? அதை விட்டுட்டீங்களே!//
:-))
LikeLike
படு பாடாவதியான படத்திற்கு படு பாடாவதியான விமர்சனம். உங்களிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
LikeLike
kalanidhi சொன்னது உண்மை. கொடுமை என்பது என்ன என்று. இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்
தியேட்டரில் மக்கள் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார்கள்
LikeLike
Tata Safari Kanthaswamy Contest
participate in kandasamy contest and win free tickets to paris
LikeLike
//participate in kandasamy contest and win free tickets to paris
//
படம் பாத்தா எமலோகத்து டிக்கட் வாங்க வேண்டிவரும்
LikeLike