நடுத்தெருவின் நடுப்பகுதியில் இருந்த இருவர் கடைக்கும் இடையிலான இடைவெளி 20 அடிகள்தான் இருக்கும். இருவரும் சாயங்காலம் கடை வைப்பார்கள். கிஇதில் செவநாயியின் கடைக்குத்தான் அதிக கூட்டம் வரும். இதனால், கூட்டத்தைக் கவர்வதற்காக செவநாயி கடையைத் துவக்குவதற்கு முன்பே கிருஷ்ணம்மாள் கடையை போடுவார். இருந்தும் செவநாயி கடையைத் திறந்துவிட்டால் கூட்டம் அங்கே போய்விடும். செவநாயி கடையைச் சுற்றி எப்போதும் 5 பேர் சட்டியோடு உட்கார்ந்திருப்பார்கள். கிருஷ்ம்மாளிடம் இருவர் இருந்தால் அதிகம். இருவரும் விதவைகள். இருவருக்கும் காப்பாற்றியாக வேண்டிய குழந்தைகளோ, பேத்திகளோ இருந்தனர். இருவரும் நடுவயதைத் தாண்டியவர்கள். கிருஷ்ணம்மாளைக் கிழவி என்றே சொல்லலாம்.
செவநாயி very strict. ஒரு பஜ்ஜியின் விலை ஐந்து பைசா. ஐம்பது பைசாவைக் கொடுத்து பத்து பஜ்ஜி கேட்டால் உடனே கொடுத்துவிட மாட்டார். 8 பஜ்ஜியும் 2 வடையும் வாங்கிக்கொள்ள வேண்டும். புதியவராக இருந்தால் 6- 4 விகிதாசாரம். போனவுடன் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார். 25 காசுக்கு பஜ்ஜி என்று கேட்டால், ஆளுக நிக்கிது.. கொஞ்ச நேரம் ஆகும் என்று முகத்தைப் பார்க்காமல் சொல்வார். கிருஷ்ணம்மாளின் கூட்டமில்லாத கடை நம்மை ஈர்க்கும். ஆனாலும், கௌரவத்திற்காக செவநாயியின் கடையில் எல்லோரும் நின்றுவிடுவார்கள். வெகு சிலர் மட்டும் செவநாயி கடையில் இருக்கும் கூட்டத்தை தூரத்திலேயே பார்த்துவிட்டு, நேரடியாக கிருஷ்ணம்மாள் கடைக்குப் போய் வாங்கிவிடுவார்கள். வாங்கிவிட்டு, செவநாய் கடையைக் கடந்துசெல்லும்போது, “எங்க வாங்குனா என்னா.. ரெண்டும் நல்லாத்தான் இருக்கு.. இங்கமட்டும் என்ன தங்கத்திலயா சுடுறாக” என்று எல்லோரு காதுபடவும் பேசிவிட்டு, செவநாயி சுடும் பஜ்ஜியை ஏக்கத்துடன் பார்த்தபடி செல்வார்கள்.
ஏதோ, செவநாயி மட்டும்தான் ஸ்ட்ரிக்டு; கிருஷ்ணம்மாள் ரொம்ப நல்லவர் என்று நினைக்கக்கூடாது. செவநாயி கடையில் நேரமாகிறது என்று ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு கிருஷ்ணம்மாள் கடைக்குப் போனால், “ஏன் அவ விரட்டி விட்டுட்டாளா?” என்று தெருவில் போகிறவர் வருகிறவர் காது பட கேட்பார். வேறு அவசர வேலையாக தெருவில் போகிறவர்கள்கூட மெனக்கெட்டு இந்தக் கேள்விக்கு பதில் சொல்வார்கள். “ஆமாக்கா.. அங்க விரட்டிவிட்டா இங்க தானக்கா வரணும்.. சின்னப் பய.. ஆசப்பட்டுட்டான்.. யாருடா நம்ம அழகம்மா பேரனா?.. பஜ்ஜி வாங்க வந்துட்டான்” என்று நம்மை அவமானப் படவைப்பார்கள். இதில் கிருஷ்ணம்மாள் உடனே சந்தோஷப்பட்டுவிட முடியாது. “இங்க வந்து வாங்குற.. ஆத்தாக்காரி அடிக்கப்போறா” என்று ஒரு சின்ன பிட்டை போட்டுவிட்டுப் போவார்கள். கிருஷ்ணம்மாள் சட்டுப்புட்டென்று வடையைப் போட்டு அனுப்பிவிடுவார்.
செவநாயி சுடும் வடைக்கு மட்டும் ஏன் இவ்வளவு மவுசு. சுவையில் சிறிது வேறுபாடு இருந்தது நிஜம். அவர் காட்டும் கிராக்கியும் ஒரு காரணமாக இருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், கிருஷ்ணம்மாள், செவநாயி இருவரது வீடும் அடுத்தடுத்து இருந்ததுதான்.
ஒரு நாள் காலை செவநாயி எழுந்து பார்த்தபோது, அவரது 18 வயது மகன் வீட்டு உத்தரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். அன்று அவர் வடைக் கடை போடவில்லை. கிருஷ்ணம்மாள் சற்றுத் தயக்கத்திற்குப் பின் கடையைப் போட்டுவிட்டார். அடுத்த ஒரு வாரத்திற்கு கிருஷ்ணம்மாள் கடையில் கூட்டம் பின்னியது. அந்த ஒரு வாரத்தில் கிருஷ்ணம்மாள் என்ன நினைத்திருப்பார்?
P.S: சிவன்ஆயி என்ற பெயரே சிவநாயி.. செவநாயி என்று மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சீக்கிரம அடுத்த பதிவு போடவும்.
LikeLike