நவம்பர் மாத இறுதியிலேயே சந்திரஹாசம் கைக்குக் கிடைத்துவிட்டது. டிசம்பர் 1ஆம் தேதி இரவில் படித்தும் முடித்துவிட்டேன். பகலிலும் இரவிலும் மழை பின்னி எடுத்துக்கொண்டிருந்தது. அப்போதே அதிகாலை 1 மணியாகிவிட்டதால் காலையில் இதைப் பற்றி எழுதலாம் என்று புத்தகத்தை வைத்துவிட்டு தூங்கப்போனேன். 2ஆம் தேதி என்ன நடந்தது என்பது வரலாறு :(.
மாலிக் காபூர் மதுரையைத் தாக்கியதுபோல ஆகிவிட்டது வீடு. அதிலிருந்து மீண்டெழுந்து இதைப்பற்றி மீண்டும் எழுவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது.
மதுரை, காமிக்ஸ், சு. வெங்கடேசன் என மனதுக்குப் பிரியமான பல அம்சங்கள் ஒன்று சேர்ந்த சந்திரஹாசத்தின் கதை இலங்கையில் துவங்குகிறது.
இலங்கைக்கு படையெடுத்துச் செல்லும் பாண்டிய நாட்டை ஆண்ட மாற வர்மன் குலசேகர பாண்டியன், தன் மகன் வீர பாண்டியனின் வியூகத்தால் இலங்கையை வென்று புத்தரின் புனிதப் பல்லை மதுரைக்குக் கொண்டுவருகிறான். பிறகு, மீண்டும் அந்தப் பல் இலங்கைக்குத் திரும்புகிறது. குலசேகர பாண்டியனின் இரண்டாவது மனைவியின் மகனான வீரபாண்டியனுக்குப் பட்டம் சூட்டப்படுவதால் ஆத்திரமடையும் முதல் மனைவியின் மகனான சுந்தர பாண்டியன் மதுரையை மீட்க மாலிக் காபூரை அழைத்துவருகிறான் என்பதோடு இந்தப் புத்தகம் முடிகிறது.
இதற்கு நடுவில் குப்ளாய்கானின் அரசவையிலிருந்து மார்கோபோலோ மதுரைக்கு வந்து போகிறார்.
சட்டென 800 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரைக்குக் கூட்டிச்செல்கிறது இந்தப் புத்தகம். 800 ஆண்டுகளுக்கு முந்தைய அந்நகரின் வளமை, வடிவமைப்பு, நாகரீகம், அரச குடும்பத்துப் பகை, சதி என வார்த்தைகளும் சித்திரங்களும் விரிய விரிய கால எந்திரத்தில் நம் பயணம் துவங்குகிறது.
இதை ஒரு காமிக்ஸ் என்று சொல்வதைவிட, ஆல்பம் என்ற வகையில் சேர்ப்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் கதையைத் தெரிந்துகொள்வதைவிட அந்தச் சித்தரங்களைப் பார்ப்பதே பேரின்பத்தைத் தருகிறது.
இலங்கையின் பராக்கிரமபாகுவுக்கும் பாண்டிய மன்னனுக்கும் நடக்கும் யுத்தம், மதுரையில் பொக்கிஷங்கள், கோபுரத்தில் இருந்து பார்க்கும்போது தெரியும் மதுரை, மாலிக் காபூரின் படை, பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் உச்சகட்டமாக சந்திரஹாசம் என்ற அந்த வாள் – இவையெல்லாமே ஒரு விஷுவல் ட்ரீட்.
காமிக்ஸ்களைப் பொறுத்தவரை, சித்திரங்களுக்கே முதலிடம். வார்த்தைகள் இரண்டாம் பட்சமதான். ஆனால், இந்தக் கதையில் சு.வெங்கடசேனின் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதவை.
இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் என்பது, தமிழில் உருவாக்கப்பட்ட, தமிழ் மண்ணின் வரலாற்றைச் சொல்லும் கதை என்பதைத் தாண்டியும் நிற்கிறது. வெவ்வேறு வரலாற்றுப் புள்ளிகளைத் தொட்டுச்செல்லும் சந்திரஹாசம், காலப்பயணத்தில் ஒரு நிறுத்தத்தில் இப்போது நம்மைை நிறுத்திவைத்திருக்கிறது. இதன் இரண்டாம் பாகமான மதுரா வியூகம் வரும்போது அந்தப் பயணம் மீண்டும் தொடரும். அதில் மாலிக் காபூரின் அழிவுத் தாண்டவத்தை, அவன் மதுரையைச் சிதைப்பதைக் காண வேண்டியிருக்கும் என்றாலும் அந்தப் பயணத்துக்காக மனம் ஏங்குகிறது.
உங்களுக்கு மதுரை நகர வரலாற்றில் ஈடுபாடு இல்லாமலிருக்கலாம்; காமிக்ஸ் மீது காதல் இல்லாமல் இருக்கலாம்; சு. வெங்கடேசனின் எழுத்துக்களை இதற்கு முன்பு படிக்காமல் இருந்திருக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் ஒரு இனிய, மறக்க முடியாத துவக்கமாக சந்திரஹாசம் இருக்கும்.
படிக்க வேண்டுமென்ற ஆவல் எழுகிறது. அருமையான அறிமுகம். நன்றி.
LikeLike
நன்றி ஐயா. கண்டிப்பாக படியுங்கள்.
LikeLike