ஸ்வீடனின் கடற்கரையோர சிறுநகரில் ஓர் அதிகாலையில் சிறு விமானம் ஒன்று விழுந்து நொறுங்குகிறது. அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, தையல் பொருட்களை விற்கும் இரண்டு வயதான பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டு, கடையோடு எரிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு, போதை மருந்து வர்த்தகத்தில் தொடர்புடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். இவையெல்லாம் ஒரே காவல் நிலைய வரம்புக்குள் நடக்கிறது.

என் நாவல்கள் ஸ்வீடனின் பதற்றத்தைப் பற்றியவை: ஹென்னிங் மேன்கல்
கர்ட் வாலண்டர் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. பல வழக்குகளை மிக அற்புதமாக, துப்பறிந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தியவர். காக்க காக்க படத்தின் சூர்யா சிலருக்கு நியாபகம் வரலாம். ஆனால், கர்ட் வாலண்டரின் கதையே வேறு. 40ஐத் தாண்டியவர். விவாகரத்து. பெண் அம்மாவுடன் வசிக்கிறாள். தந்தை இருக்கிறார். ஆனால் தனியே. மனிதருக்கு காவல்துறை வேலை மட்டுமே ஒரே ஆறுதல்.
இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கர்ட் வாலண்டர். மெதுமெதுவாக சக அதிகாரிகளுடன் சேர்ந்து புலனாய்வு செய்கிறார். இதற்கு நடுவில் வாலண்டரின் தந்தை எகிப்திற்குப் போய் பிரமிடுகளைப் பார்க்கப்போகிறேன் என்று செல்கிறார். இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று, வாலண்டரின் தந்தையை கெய்ரோவில் கைதுசெய்துவிடுகிறார்கள்.

தி பிரமிட், பல சிறுகதைகளையும் குறுநாவல்களையும் உள்ளடக்கியது
இது தி பிரமிட் குறுநாவலின் கதை. எழுதியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஹென்னிங் மேன்கல். துப்பறியும் கதைகள் பிடிக்கும் என்றால் நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு எழுத்தாளர். ஆனால், உண்மையில் மேன்கல் எழுதுவது, துப்பறிதலைப் பற்றியல்ல. ஸ்வீடனில் நிலவும் பதற்றத்தைப் பற்றி. அங்கு எல்லோருக்கும் பதற்றம் இருக்கிறது. தனிமை குறித்த பதற்றம். வாலண்டருக்கு, அவரது தந்தைக்கு, உடன் பணியாற்றுபவர்களுக்கு என எல்லோருக்கும் இந்தப் பதற்றம் இருக்கிறது. வயதான காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற பதற்றம். அவற்றைத்தான் மேன்கலின் க்ரைம் நாவல்கள் பிரதிபலிக்கின்றன.

கர்ட் வாலாண்டராக கென்னத் ப்ரனா
இந்தப் பதற்றம் ஸ்வீடன் முழுக்கவே இருக்கிறது எனக் கருதுகிறார் மேன்கல். இவருடைய எல்லாக் கதைகளின் அடி நாதமாக இருப்பது இந்தப் பதற்றம்தான்.
மேன்கல் ஒருவகையில் ஸ்காண்டிநேவிய நாடுகளில் நிலவும் ஒரு பொதுவான போக்கின் பிரதிநிதி. ஐஸ்லாண்டிக்கில் எழுதும் Arnaldur Indriðason போன்றவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அதாவது, க்ரைம் நாவல்களின் வழியே தாங்கள் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவரிப்பது.
அல்பாசினோ நடித்த இன்சோம்னியா படத்தின் நாயகனை மனதில் கொள்ளுங்கள். அவர்தான் இந்த Nordic Noir கதைகளின் நாயகன்.
இந்த சோக சமாச்சாரமெல்லாம் எனக்கு வேண்டாம்; ஐ வான்ட் ஒன்லி கொலை, தேடல், அரஸ்ட் என்பவர்களையும் இவர்களது எழுத்து வசீகரிக்கும். எங்கேயோ, ஸ்வீடனிலும் ஐஸ்லாண்டிலும் இருப்பவர்களின் பிரச்சனைகளோடு, உங்கள் பிரச்சனைகளையும் அடையாளப்படுத்திக்கொள்வீர்கள். முதலில் மேன்கலின் Faceless Killersல் இருந்து துவங்குங்கள்.
ஒரு புதிய சுவையைப் பழகிக் கொள்வீர்கள். எளிய ஆங்கிலம், ஏகப்பட்ட கொலைகள் – வேறென்ன வேண்டும் ஒரு வாசகனுக்கு?
சூப்பர் இடுகை! நீங்கள் அறிமுகப்படுத்தித்தான் ஹென்னிங் மாங்க்கெல் படிக்கத் தொடங்கினேன். நேரம் கிடைக்கும்போது பிரமிடையும் படித்துவிட வேண்டியதுதான். மாங்க்கெலிடம் எனக்கு அலுப்பூட்டும் ஒரு விஷயம், வாலாண்டரின் சோர்வு பற்றிய ஓயாத, நீண்ட, திரும்பத் திரும்ப வரும் வர்ணனைகள். அது மட்டுந்தான். வாலாண்டர் பாத்திரத்திற்கு கென்னத் பிரனா கொஞ்சம் ப்ரெட்டி பாயாக இருக்கிறார். ஹாலிவுட்காரர்களுக்கு எப்போதுமே மூஞ்சிகள் அழகாக இருக்க வேண்டும்.
கொஞ்ச நாளில் Hans Fallada உள்ளிட்ட எழுத்தாளர்களின் பட்டியலை அனுப்புகிறேன். படித்துப் பார்த்துவிட்டு நானும் படிக்கலாமா என்று சொல்லி உதவவும்.:-)
LikeLiked by 1 person
ஹாலிவுட்காரர்களைத் திட்டாதீர்கள். பிபிசி 1 எடுத்த தொடரில்தான் கென்னத் பிரனா வாலாண்டராக வருகிறார்.
LikeLike
அப்ப சரி. பிபிசி-காரர்கள் முக அழகைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பாராட்டத்தக்க விசயம். ஆனால் கென்னத்தும் நல்ல தேர்வுதான். பழைய கை.
LikeLike
அப்புறம் பிபிசி தொடர் என்றால் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம், கம்ப்யூட்டர் திரையில். :-)))) ஜாலி 😉
LikeLike