சமச்சீர் கல்வி தரம் குறைந்ததா?

pr040707f

அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சமச்சீர் கல்வி குறித்த பரிந்துரையை அளிக்கும் முத்துக்குமரன் குழு.

‘நீட்’ தேர்வு குறித்த சர்ச்சை உச்சகட்டத்தில் இருந்தபோது, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சமச்சீர் கல்வி முறையின் காரணமாகத்தான் மாணவர்களின் தரம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. ஆகவேதான் மாநில அரசு ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது. ஆனால், சமச்சீர் கல்வி (Uniform system of school education) என்ற நடைமுறை (பாடத்திட்டம் அல்ல) உண்மையில் தரம் குறைந்ததா, அப்படியானால் எப்படித் தரம் குறைந்தது என்ற கேள்விகளுக்கு யாரும் விரிவாகப் பதில் அளிக்கவில்லை.

முதல் கேள்வி, சமச்சீர் கல்வி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதுதான்.

பொதுவாக சமூகத்தில் நான்குவிதமான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன – ஏழை X பணக்காரன், நகர்ப்புறம் X கிராமப்புறம், ஆண் X பெண், கடைசியாக ஜாதி. இதில் நகர்ப்புறத்தில் வசிக்கும் மேல் ஜாதியைச் சேர்ந்த பணக்கார மாணவனுக்குக் கிடைக்கும் வசதியையும் கல்வியையும் மலை என்று கொண்டால், கிராமப்புறத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவிக்குக் கிடைக்கும் கல்வியை மடு என்று சொல்லலாம் (அனிதாவை இந்த முரண்பாட்டில் பொருத்திப்பார்த்தால், அவரது சாதனை எத்தகையது என்று புரியும்).

இந்த முரண்பாடுகளை ஓரளவுக்காவது களையும் நோக்கத்தோடும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பல்வேறு கல்விமுறைகளையும் அவற்றை வைத்து மாணவர்களைச் சுரண்டுவதை ஒழிப்பதற்காகவும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த விரும்பியது 2006ல் பதவியேற்ற தி.மு.க. அரசு.

அப்போது தமிழ்நாட்டில் மாநில அரசின் கல்வி முறை, மெட்ரிகுலேஷன் கல்வி முறை, ஆங்கிலோ – இந்தியன் கல்வி முறை, சிபிஎஸ்இ, ஓரியண்டல் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன் என பல கல்விமுறைகளில் பாடம் கற்பிக்கப்பட்டுவந்தது. இதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட்டுவிட்டு மற்ற எல்லா கல்வி முறைகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இதற்குத்தான் சமச்சீர் கல்வி முறை என்று பெயர் வழங்கப்பட்டது.

2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனேயே, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்க அதே ஆண்டு செப்டம்பரில் பாரதிதாசன் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் 9 வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே இது தொடர்பாக 109 பரிந்துரைகளை இந்தக் குழு அரசிடம் அளித்தது. இதையடுத்து இதற்கென சமச்சீர் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டு நவம்பர் 30 லிருந்து நடை முறைக்கு வந்த இந்தச் சட்டத்தையடுத்து, 2010-11 கல்வி ஆண்டில், முதல் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு 2011-12 கல்வி ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 200 கோடி ரூபாய்க்கு புதிய பாடப்புத்தகங்கள் அடிக்கப்பட்டன.

இந்தப் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தும்போது, தேசிய அளவில் கல்வியை நெறிமுறைப்படுத்தும் ‘என்சிஇஆர்டி’யின் விதிமுறைகளின்படியே பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. உண்மையில் ‘என்சிஇஆர்டி’யின் நெறிமுறையை எந்தக் கல்வித் திட்டமும் மீற முடியாது. உதாரணமாக, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘அல்ஜீப்ரா’ அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்றால், அறிமுகப்படுத்த வேண்டும். 12ஆம் வகுப்பில் ‘தெர்மோ டைனமிக்ஸ்’ இருக்க வேண்டுமென்றால் அது இருக்க வேண்டும்.

NCERT-LOGO

ஏனென்றால் பள்ளிக் கல்வி பொது பட்டியலில் இருக்கும் நிலையில், National Curriculum Frameworkன் படிதான் இந்தியா முழுவதும் பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். சிபிஎஸ்இயும் இதையே பின்பற்றும். சமச்சீர் கல்வியும் இதையே பின்பற்றி பாடத்திட்டத்தை வகுக்கும். அப்படியான சூழலில், சிபிஎஸ்இயைவிட இந்தச் சமச்சீர் கல்வியில் பாடத்தின் தரம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

உண்மையில் சமச்சீர் கல்வி வந்தபோதுதான், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி, அகழ்வாராய்ச்சி ஆகியவற்றில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடப் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வைக்கப்பட்ட புத்தகங்களையும் பார்த்தாலே இந்த வேறுபாடு துலக்கமாகத் தெரியும்.

ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை படிக்கவைத்துக்கொண்டிருந்தவர்கள் இதில் பெரும் வருத்தமடைந்தார்கள். தாம் பெரும் பணத்தைக் கட்டி குழந்தைகளைப் படிக்கவைக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நம் குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்க முடியவில்லை. அதேபோல, தாங்களே பாடத்திட்டத்தை வகுத்து, அதற்கேற்றபடி தனியாரிடம் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளிகளும் இதனை எதிர்த்தன.

411193-pti-jayalalithaa-new-pic.jpg

அதற்கேற்றபடி, 2011ல் ஜெயலலிதா பதவியேற்ற ஒரு வாரத்திலேயே, முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் சமச்சீர் கல்வி ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு வழக்குகள் நடந்தன. முடிவில் சமச்சீர் கல்வித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

உச்ச நீதிமன்றத்திற்கு இதுதொடர்பான வழக்கு சென்றபோது, ‘என்சிஇஆர்டி’ வல்லுனர்களை வைத்து பாடத்திட்டதை ஆய்வுசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ஆய்வின் முடிவின்படியே இந்தப் பாடத்திட்டத்தையே நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்படியானால், இப்போது உள்ள மாநிலக் கல்வி முறையில் பிரச்சனையே இல்லையா என்றால், நிச்சயம் பிரச்சனை இருக்கிறது. ஆனால், அது பாடத்திட்டத்தில் உள்ள பிரச்சனை. சமச்சீர் கல்வி முறையில் உள்ள பிரச்சனை அல்ல. அதாவது, 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் பாடத்திட்டங்கள் மாற்றப்படவேயில்லை. 2013ல் பாடத் திட்டத்தை மாற்றுவதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தனது பரிந்துரையை உடனே அளித்துவிட்டது.

அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சென்றுவிட்டன. மூன்று முதல்வர்கள் வந்துவிட்டார்கள். இருந்தபோதும் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. உதயசந்திரன் பள்ளிக்கல்விச் செயலரான பிறகுதான் அதற்கான முயற்சிகள் மீண்டும் துவங்கின. இதை எப்படி சமச்சீர் கல்வி முறையின் குறைபாடாகச் சொல்ல முடியும்?

16MA-CITY-UDHAYACHANDRAN

உதயசந்திரன் ஐஏஎஸ் பள்ளிக் கல்வித் துறை செயலரான பிறகே பாடத்திட்டத்தை மாற்றும் பணிகள் துவங்கின.

அப்படியானால் நீட் தேர்வு போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் ஏன் தேர்ச்சிபெறுவதில்லை? காரணம், தேர்வு முறையில் உள்ள வித்தியாசம்தான். சிபிஎஸ்இயின் தேர்வு முறையிலும் சமச்சீர் கல்வியின் தேர்வு முறையிலும் வித்தியாசங்கள் உண்டு. மாநில அரசு கல்வி முறையில் மாணவர்கள் நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். சி.பி.எஸ்.இயில் படித்ததை apply செய்து பதிலளிக்க வேண்டும். இப்போது தேசிய அளவிலான தேர்வுகள் எல்லாமே இந்த முறைக்கு மாறிவரும் நிலையில், தமிழக தேர்வு முறையிலும் சிறிது சிறிதாக இந்த முறைக்கு மாறுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

எல்லாம் சரிதான், தேசிய அளவில் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழக மாணவர்களின் தரம் குறைவாக இருப்பதாக சில அமைப்புகள் ஏன் சொல்கின்றன என்ற கேள்வி எழக்கூடும். உண்மைதான். இந்தியாவில் பள்ளிக்கல்வி முறையையும் தரத்தையும் ஆய்வுசெய்யும் ஒரு தனியார் அமைப்பு இந்தக் கருத்தைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இந்தியாவிலேயே மிக மோசமான மாணவர்கள் என்ற பிம்பத்தையே அந்த அமைப்பின் அறிக்கை அளிக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல என்பது, இங்குள்ள கல்வி நிறுவனங்கள், இங்கு படித்து முடித்து பிற நிறுவனங்களுக்கு தேர்வாகும் மாணவர்களைப் பார்த்தாலே தெரியும்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஒரு முறை சொன்னார், “சிபிஎஸ்இயில் படித்து, ஐஐடியில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் அங்குள்ள தேர்வுகளையும் பாடங்களையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நிறையவே உண்டு. ஆனால், மாநிலப் பாடத்திட்டத்தை படித்துவிட்டு ஐஐடியில் சேர்ந்தவர்களோ, மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்களோ இப்படிச் செய்துகொண்டதாக வரலாறு உண்டா? அப்படியிருக்கும்போது ஏன் மாநில கல்விமுறையைக் குறைசொல்கிறீர்கள்?”.

dsc05802.jpg

தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் பள்ளிக்கூடங்களின் பரவல் சிறப்பாகவே இருக்கிறது.

ஒப்பீட்டளவில் பள்ளிக் கல்வியில் ஒரளவுக்கு சிறந்த கட்டமைப்பு தமிழகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு 1 கி.மீ சுற்றளவிலும் ஒரு ஆரம்பப் பள்ளி இருக்கிறது. ஒவ்வொரு 3 கி.மீ. சுற்றளவிலும் ஒரு நடுநிலைப் பள்ளி இருக்கிறது. ஒவ்வொரு கி.மீ. சுற்றளவிலும் மேல் நிலைப் பள்ளி இருக்கிறது. 7 கி.மீ. சுற்றளவுக்குள் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது.

அதேபோல, இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாவற்றிலுமே Para – Teacher என்ற ஆசிரியர்கள் உண்டு. 12 வகுப்பு முடித்துவிட்டு பள்ளிக்கூடங்களில் கற்பிப்பவர்கள் இவர்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் இந்த முறை கிடையாது. பணியில் சேர, ஆசிரியர் பயிற்சியோ, பி.எட்டோ முடித்திருக்க வேண்டும். இங்கே யாரும் பாரா – டீச்சர் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை.

இந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டியது 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை update செய்ய வேண்டியதும் படிப்படியாக தேர்வுமுறையை மாற்ற வேண்டியதும்தான்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s