கோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா?

meenakshi-amman-temple-1.jpgகோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியார் எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, மூடத்தனமும்கூட. ஒருவர் செய்த செயல்களைப் பற்றி எழுதும்போது, சம்பந்தப்பட்டவரின் பேச்சுகள், எழுத்துகளை மேற்கொள் காட்டுவதுதான் அறிவு நாணயம். காந்தியைப் பற்றி எழுதும்போது காந்தி குறித்து கோட்ஸே கூறியதை மேற்கோள்காட்டி, எதையாவது சொல்வதற்குப் பெயர் சங்கித்தனம்.

1.காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றது பற்றி எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லையென்றால் எதற்காக அதில் போய் பங்கேற்கப் போகிறார்?

2.  சுசீந்திரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தொடர்ந்து நடந்த கிளர்ச்சிகளில் பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும் தொடர்ந்து பங்கேற்றனர்.

3. கோவில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாக நடத்தியது சுயமரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும்தான். இதை மறுப்பவர்கள், இதற்கு முன்னால் யார் நடத்தியது என்பதைச் சொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்கள்.

4. 1930களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக தனிமைப் பட்டுப்போயிருந்தது காங்கிரஸ். 1939ல் நடக்கவிருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலை மனதில் கொண்டு மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் பள்ளியறை பூஜை முடிந்த பிறகு, சில தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைந்து தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார் வைத்தியநாதய்யர். இதனை அனுமதித்தவர் நீதிக்கட்சியில் இருந்தவரும் கோவிலின் நிர்வாக அதிகாரியுமான ஆர்.எஸ். நாயுடு.

5. இந்த வைத்தியநாதய்யர்தான், 1922ல் தாழ்த்தப்பட்டோர் கோவிலில் நுழைவதைக் கடுமையாக எதிர்த்தவர். திரு.வி.கவின் வாழ்க்கைக் குறிப்புகளில் இது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அப்போது எதிர்த்தவர் இப்போது ஆதரித்தது ஏன்? தேர்தல்தான் காரணம்.

22406014_1111515288980197_4847281383306716507_n.jpg

6. கோவில் நுழைவுச் சட்டத்தை அப்போதைய முதல்வரான ராஜாஜி இயற்றியதாக தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. இது ஒரு பொய். உண்மையில் என்ன நடந்தது என்றால், அப்போதைய சட்டப்படி கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதும் நுழையச் செய்வதும் குற்றம். மீனாட்சியம்மன் கோவிலையடுத்து தஞ்சாவூரிலும் சில கோவில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்தது. ஆகவே, கோவிலில் நுழைந்தோரையும் நுழையவிட்டோரையும் பாதுகாக்கும் ஒரு அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டுமென அப்போதைய ஆளுனர் எர்ஸ்கின் பிரபுவிடம் கோரினார் ராஜாஜி. அதன்படி, மேலே சொன்ன குற்றத்தைச் செய்தவர்கள் மீது வழக்குத் தொடர்வதைத் தடுக்கும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டது.

அதாவது, எல்லோரும் கோவிலில் நுழையலாம் என்பது சட்டமல்ல. சட்டத்தை மீறி நுழைந்தவர்களை அரசு விரும்பினால் பாதுகாக்கும் என்பதுதான் சட்டம்.

7. 1938ல் தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. ராஜா கொண்டுவந்த ஆலய நுழைவு மசோதா நிறைவேறாதபடி செய்தவர் ராஜாஜிதான்.

8. ராஜாஜி கொண்டுவந்த சட்டத்தைத்தான் பெரியார் எதிர்த்தார். “எனது நண்பர் கனம் ஆச்சாரியார் கோவில் பிரவேசம் சம்பந்தமாக பேசுவதும் செய்வதும் எல்லாம் சூழ்ச்சி என்றே எனக்குப் படுகிறது. அவர்களுக்குத்தான் அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் தான் இஷ்டப்பட்ட கோவில்கள்தான் திறக்கப்பட வேண்டும் என்றும் தன் இஷ்டப்பட்ட கோவில்கள்தான் திறக்கப்பட வேண்டும் என்றும் தன் இஷ்டப்படிதான் காரியம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

அவர் செய்த அவசரச் சட்டத்தில் கோவிலில் ஆதி திராவிடர் நுழைவது கிரிமினல் குற்றம் என்று வியக்தமாகச் சொல்லிவிட்டார். ஆனால், தன்னால்தான் சிலர் மன்னிக்கப்படக்கூடும் என்கிறார். இது ஜனநாயகமா, பொது ஜன அபிப்பிராயமா?

.. இவர்கள் நாணயமுடையவர்களாக இருந்தால், இவர்களுக்கு இருக்கும் மெஜாரிட்டியை கொண்டு கோவிலுக்குள் ஆதி திராவிடர்கள் போவதால் சாமி தீட்டுப்பட்டுவிடாது என்றும் சுத்தமாக ஆச்சாரமாக எந்த இந்துவும் இட வித்தியாசமில்லாமல் வழிபடலாம் என்றும் ஒரு சட்டம் செய்துவிட்டால், இவர்கள் கையை யார் வாங்கிவிடுவார்கள்?” என்று 1939ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி குடியரசு இதழில் எழுதினார் பெரியார்.

பெரியார் என்றைக்காவது கோவில் நுழைவை ஆதரித்து எழுதியிருக்கிறாரா என்று கேட்கும் மூடர்களுக்கு இதுதான் பதில்.

9. தமிழ்நாடு கேரளா மட்டுமல்ல, புனேவில் நடந்த கோவில்நுழைவுப் போராட்டத்தையும் பெரியார் ஆதரித்தார். நேப்பியர் பூங்காவில் 1929 அக்டோபரில் நேப்பியர் பூங்காவில் சௌந்தரபாண்டியனார் தலைமையில் நடந்த இதற்கான ஆதரவுக் கூட்டத்தில் பெரியார் சிறப்புரை ஆற்றினார்.

ஆக, ராஜாஜி கொண்டுவந்த மோசமான சட்டத்தை எதிர்த்த பெரியாரை, சனாதனிகளுடன் சேர்ந்துகொண்டு ஆலய நுழைவை எதிர்த்தார் என்று எழுதுவது அயோக்கியத்தனம்.

1939ஆம் வருட ஆலய நுழைவுச் சட்டம்

கோவிலில் தாழ்த்தப்பட்டோரும் வேறு சில ஜாதியினரும் நுழைவது குற்றமாக இருந்த காலகட்டத்தில், அப்படி நுழைந்தோரையும் நுழையத் தூண்டியோரையும் அரசு பாதுகாக்கும் என்பதுதான் 1939ஆம் வருட Madras Temple Entry Authorization and Indemnity Act.

உங்களுக்குத்தான் அரசில் பெரும்பான்மை இருக்கிறதே, கோவிலில் எல்லோரும் நுழையலாம் என்று சட்டம் கொண்டுவராமல், நீங்கள் விரும்பியவர்கள் நுழையலாம்; அவர்களைப் பாதுகாப்பேன் என்று சட்டம் கொண்டுவருகிறீர்களே என்பதுதான் பெரியாரின் கேள்வி.

1947ல்தான் எல்லா ஜாதியினரும் கோவிலுக்குள் நுழைவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. The Tamil Nadu Temple Entry Authorization Act என்பது இந்தச் சட்டத்தின் பெயர். ஏற்கனவே 1939ல் சட்டம்
சரியாக இயற்றப்பட்டிருந்தால், புதிதாக ஏன் 1947ல் சட்டம் இயற்றுகிறார்கள்?

1947ஆம் வருடச் சட்டத்தின் துவக்கத்தைப் படித்தாலே 1939ஆம் வருட சட்டத்தின் போதாமை புரியும். (இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் சிவப்பில் வட்டமிடப்பட்டிருக்கும் வரிகளைப் பார்க்கவும்)

22448606_1111754045622988_2714327408162255141_n

22449743_1111754102289649_3831759861442421021_n

“ஹிந்து பொதுமக்களிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, 1939ஆம் வருடச் சட்டத்தின் கீழ் சில கோவில்களை சில வகுப்பினருக்கு கடந்த சில மாதங்களில் திறந்துவிடப்பட்டிருப்பது மாநில அரசுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இந்துக் கோவிலையும் எல்லோருக்கும் திறந்துவிடுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்பதுதான் இதன் சுருக்கமான அர்த்தம்.

1939ஆம் வருடச் சட்டம் உருப்படியானதாக இருந்திருந்தால்,அதனைத் திருத்தாமல் ஏன் புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்றுகிறது?

விவாதப் புள்ளிகள் இதுதான்.

1. பெரியார் தமிழகத்தில் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை, அதற்காக குரல் கொடுக்கவில்லை,

2. ராஜாஜி கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சனாதனிகளோடு கூட்டுசேர்ந்துகொண்டார்.

பெரியார் கோவில் நுழைவுப் போராட்டம் குறித்து வலியுறுத்தினார் என்பதற்கும் அவர் அது குறித்து பேசியதற்கும் மேலேயே ஆதாரங்களை அளித்துவிட்டேன்.

ராஜாஜி கொண்டுவந்த சட்டத்தை எதிர்ப்பதற்காக பெரியார் சனாதனிகளோடு சேர்ந்துகொள்ள தயாராக இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

சனாதனிகளும் ஒரு சட்டத்தை எதிர்க்கிறார்கள், பெரியாரும் அதே சட்டத்தை எதிர்க்கிறார் என்பதால் இரண்டு எதிர்ப்பும் ஒன்றாகிவடுமா?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுமே எதிர்க்கின்றன. ஆக, நான்கு பேரும் ஒரே பக்கமாக நிற்கிறார்கள் என்று அர்த்தமா?

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s