
மாலைக் கோனார் சந்தனக் கடையில் இப்போதும் கூடியிருக்கும் கூட்டம்.
மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாடகங்களின் துவக்கத்தில் பாடப்படும் பாடல், பெரும்பாலும் இப்படி இருக்கும்:
“வந்தனமய்யா வந்தனம், வந்த சனங்கள் குந்தனும்
நாங்க வரும்போது வாங்கி வந்த மாலைக் கோனார் சந்தனம்”.
நாடகப் பாடல்களிலும் புகுந்துவிட்ட இந்த மாலைக் கோனார் சந்தனக் கடைக்கு மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விசேஷங்களில் மிக முக்கியமான இடம் உண்டு. சமீப காலம்வரை கல்யாணம், காது குத்து, குல சாமிக்கு சாமி கும்பிடுதல் எல்லாவற்றிற்கும் இந்தக் கடையிலேயே சந்தனம் வாங்க முயல்வார்கள். இப்போது அந்தக் கடை அவ்வளவு தவிர்க்க முடியாத கடை இல்லையென்றாலும் இன்னும் பழைய பெயரும் மணமும் நீடிக்கவே செய்கிறது.
மதுரையில் தளவாய் அக்ரஹாரம் வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கிச் செல்லும் யாருடைய கண்ணிலும் தவறாமல்படும் கடை, மாலைக் கோனார் சந்தனக் கடை. தமிழ் மீன் காரத் தெருவும் தளவாய் அக்ரஹாரமும் சந்திக்கும் இடத்தில், இந்திய வங்கிக் கிளைக்கு எதிரில் அமைந்திருக்கிறது இந்தக் கடை.

கடையை தற்போது கவனித்துவரும் ஜெயச்சந்திரன், 60. இவர் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர்.
சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியின் தந்தையாக, சமுத்திரக்கனியின் அண்ணனாக வருவாரே அவர்தான் இந்தக் கடையின் தற்போதைய உரிமையாளர். பெயர் ஜெயச்சந்திரன்.
“இந்தக் கடை எப்ப ஆரம்பிச்சதுங்கிற வருசம் சரியா எங்கிட்ட இல்லை. ஹாஜிமுசா ஜவுளிக்கடையும் எங்க கடையும் ஒன்னா ஆரம்பிச்சதுன்னு சொல்வாங்க” என்கிறார் ஜெயச்சந்திரன். ஹாஜிமூசா ஜவுளிக் கடை 1878ல் துவங்கப்பட்டதாக அந்தக் கடையின் பெயர்ப் பலகை சொல்கிறது. ஜெயச்சந்திரன் சொல்லும் வருடக் கணக்கு சரியென்றால், மாலைக் கோனார் சந்தனக் கடையின் வயது சுமாராக 140.
கடை துவங்கப்பட்ட காலத்தில் சந்தனம் கும்பகோணத்தில் இருந்து அரைத்து இங்கு கொண்டுவரப்பட்டது என்கிறார் ஜெயச்சந்திரன். அதற்குப் பிறகு இங்கேயே சந்தனத்தை இங்கேயே அரைக்க ஆரம்பித்தார்கள்.
கடை துவங்கப்படும்போது இப்போது இருந்த இடத்தில் இல்லை. தற்போதுள்ள இடத்திற்கு சரியாக எதிரில், அதாவது தற்போது இந்திய வங்கிக் கிளை உள்ள இடத்தில் அமைந்திருந்தது. தற்போது கடை உள்ள இடம் குடோனாக வைக்கப்பட்டிருந்தது. 1942ல் அந்த இடத்தின் உரிமையாளர் கடையைக் காலிசெய்யச் சொல்லவே, குடோனாக இருந்த இடத்திற்கு மாறியது கடை.
யானை மலைக்கு பக்கத்தில் உள்ள அரும்பனூர்புதூர்தான் கடையைத் துவங்கிய மாலைக் கோனாருக்கு சொந்த ஊர். அந்த ஊர் அம்மனின் பெயர் மாலையம்மன். அந்த அம்மனின் பெயரை அந்த ஊர்க்காரர்கள் எல்லோருமே பெயருக்கு முன் வைத்துக்கொள்கிறார்கள்.
கடையைத் துவங்கிய மாலைக் கோனார் 1920களில் இறந்துவிட, அவரது மகன் சுப்பிரமணி வசம் கடை வந்தது. அதற்குப் பிறகு அவரது மகன் ஜெயச்சந்திரனும் அவரது மகன் சீனிவாசனும் கடையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மூணு பொம்மைக் கடை என பலரும் அடையாளம் சொல்லவே பொம்மைகள் விட்டுவைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடையின் சந்தனத்தின் வாசனை தவிர, அங்கு கண்ணைக் கவரும் இரண்டு அம்சங்களும் இருக்கின்றன. முதலாவதாக, அங்குள்ள கண்ணாடி ஷோ கேஸின் மீது வைக்கப்பட்டுள்ள மூன்று பொம்மைகள்.
“ஆரம்பத்துல எதுக்கு இந்த பொம்மையை வைச்சாங்கன்னு தெரியல, பிறகு எல்லோரும் மாலைக் கோனார் கடைங்கிறதுக்குப் பதிலா, மூணு பொம்மை கடைன்னு சொல்ல ஆரம்பிச்சவுடனே, சரி, இதுவும் ஒரு அடையாளம்தானே இருக்கட்டும்னு விட்டுட்டோம்” என்கிறார் ஜெயச்சந்திரன்.

வாசனை திரவியங்களை அதிகம் வாங்கியதால் நெப்போலியன் நிறுவனம் வழங்கிய வெண்கலச் சிலை.
இரண்டாவது, அந்த கண்ணாடி ஷோ கேஸிற்குள் உள்ள ஒரு வெண்கலச் சிலை. “நாங்க நிறைய சென்ட் வாங்குனோம்னு அந்த சென்டை தயாரிச்ச நெப்போலியன் கம்பனி கொடுத்தது அந்தச் சிலை, நல்லாயிருக்கா?” என்கிறார் ஜெயச்சந்திரன்.
தலைமுறை தலைமுறையா இந்தத் தொழிலைப் பார்த்துக்கிட்டிருக்கோம். போக மனசில்லை என்கிறார் ஜெயச்சந்திரன். அப்புறம் எப்பிடி சினிமாவுல நடிச்சீங்க என்று கேட்டால், சசிகுமார் நம்ம சொந்தக்காரன். அவன் கேட்டான்னு நடிச்சேன், அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, சந்தனத்தை உருட்ட ஆரம்பிக்கிறார் மனிதர்.
Pingback: மாலைக் கோனார் சந்தனக் கடை பொம்மைகளின் மர்மம் – TamilBlogs