
குற்றங்கள் வெறுப்பின் அடிப்படையில் நடக்கும்போது அதைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானது.
வெறுப்பு – குற்றங்கள் குறித்துப் பேசினால், அதற்குப் பதிலாக வேறு ஒரு குற்றத்தைச் சுட்டிக்காட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பது மனிதத் தன்மையற்ற செயல்.
The Hinduவில் வெளிவரும் சில கட்டுரைகளில் பாதிக்கப்பட்டவரின் பாலினத்தையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடுவதற்கு உண்மையிலேயே முக்கியமான காரணங்கள் இருக்கும். சில வன்முறைச் சம்பவங்களில் தலித் பெண், தலித், முஸ்லிம் என்ற வார்த்தைகளை தலைப்பில் ஏன் பயன்படுத்துகிறீர்கள் என சில வாசகர்கள், குறிப்பாக மாணவர்கள் கேட்கிறார்கள்.
உதாரணமாக, பாட்னாவைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர், “ஹரியானாவில் 15 வயது தலித் பெண் ஓடும் காரில் பலாத்காரம் (August 1)” என்ற தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண் வேறொரு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால், “பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவி பலாத்காரம்” என்று உங்கள் செய்தித் தாளில் சொல்வீர்களா என்று கேட்டிருக்கிறார். இந்தூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி க்ரடின் சாஸ்திரி என்ற மாணவரும் இதே போன்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

The Hinduவின் Readers Editor ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
முஸ்லிம்கள் அடித்துக்கொல்லப்படுவது குறித்த செய்திகளை பற்றிக் கேள்வியெழுப்பும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.வி. ரமணா என்ற மாணவர், “எல்லா இந்தியர்களும் என் சகோதர சகோதரிகள்” என்ற தேசிய உறுதிமொழியை நினைவூட்டுகிறார். செய்திக் கட்டுரைகளில் ஜாதி மற்றும் மத ரீதியான அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும்; அவை அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துபவை என்கிறார் அவர். “Temple purified in U.P. after visit by Dalit woman MLA” (August 1) என்ற செய்தியைச் சுட்டிக்காட்டியும் பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதாவது, அந்த செய்திக் கட்டுரை ஜாதிப் பாகுபாட்டைவிட பாலினப் பாகுபாடு குறித்துதானே பேசுகிறது; ஆகவே அந்தப் பெண்ணின் ஜாதியை தலைப்பில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமில்லாதது என்கிறார்கள் இவர்கள்.
இந்தக் கடிதங்களில் இவர்கள் சுட்டிக்காட்டுவது ஒரே விஷயத்தைத்தான். அதாவது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைச் சொல்வதன் மூலமாக ஒரே மாதிரியாக இருப்பதிலிருந்து செய்தித்தாள்கள் தவறிவிடுகின்றன என்பதைத்தான். காரணம், ஜாதி இந்துக்கள் பாதிக்கப்படும்போது அவர்களது ஜாதி அடையாளம் குறிக்கப்படுவதில்லை அல்லவா என்று கேள்வியெழுப்புகிறார்கள்.
மிகக் கவனமாக தன் மதிப்பீடுகளைப் பின்பற்றும் ஒரு நாளிதழ், எல்லோரும் சமம் என்ற பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு நாளிதழ், சமத்துவத்திற்கும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து செயல்படும் என இந்த வாசகர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பது என்ற அம்சம் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மையை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
ஜாதி என்பது எப்படி படிப்படியான சமத்துவமின்மையை உருவாக்கிவைத்திருக்கிறது என பி.ஆர். அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். ஜாதீயப் படிநிலையில் கீழே செல்லச்செல்ல கண்ணியமாக நடத்தப்படுவதற்கான போராட்டம் மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். குற்றம் செய்பவரின் நோக்கம் ஜாதி – மத துவேஷத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் இருக்கும்போது அந்தக் குற்றம் வெறுப்பின் அடிப்படையிலான குற்றம் என சுட்டிக்காட்டாவிட்டால், The Hindu தனது கடமையிலிருந்து தவறியதாகவிடும்.
தங்களுடைய பின்னணியின் காரணமாகக் கிடைக்கும் வசதி-வாய்ப்புகள் – முன்னுரிமைகளால் கிடைக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்துபவர்களுக்கும் அந்த வசதி – வாய்ப்புகள் – முன்னுரிமைகள் கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுபவர்களுக்கும் இடையிலான மோதலை புரிந்துகொள்வது மிக முக்கியம். அந்த வசதி – வாய்ப்பு – முன்னுரிமை ஆகியவை அவர்களுடைய ஜாதி, வர்க்கம், இனக் குழு, பாலினம், மதம் ஆகியவற்றால் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.
ஒரு பொறுப்பான பத்திரிகையாளரைப் பொறுத்தவரை மனித கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதுவும் செய்தியாகச் சொல்லத்தக்கது. தீமைகளைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையே ஊடகவியலின் அடிப்படை. ஆட்களை அடித்துக்கொலை செய்வது அல்லது தள்ளிவைப்பது போன்ற அத்துமீறல்கள் நடக்கும்போது களத்திலிருந்து இயங்கும் செய்தியாளரையும் அலுவலகத்திலிருந்து பணியாற்றும் உதவி ஆசிரியரையும் உள்ளடக்கிய பத்திரிகையாளர் அணி, செய்தி சேகரிப்பதிலும் அதனை எடிட் செய்வதிலும் தலைப்பு வைப்பதிலும் மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவரது சமூக அடையாளத்தின் காரணமாகவே அவரது கண்ணியம் பாதிக்கப்படும் தருணங்களில் மட்டுமே அவரது அந்த அடையாளம் வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு சாதாரண குற்றத்திற்கும் வெறுப்பால் இழைக்கப்படும் குற்றத்திற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை இந்த அணி சுட்டிக்காட்டுகிறது.
எது செய்தி என்ற கேள்விக்கு இவை நம்மை இட்டுச் செல்கின்றன. உண்மை, துல்லியம், இருதரப்புக்கும் இடம்கொடுத்தல், சூழல் ஆகிய எல்லாம் அடங்கிய ஒன்றுதான் செய்தி. வெறுப்பின் அடிப்படையிலான குற்றங்களை மற்ற சாதாரண குற்றங்களிலிருந்து பிரித்துக்காட்டாவிட்டால் அது ஒரு கடமை தவறிய செயலாக இருக்கும். ஒருவர் தன் பிறப்பின் காரணமாகவோ, அடையாளத்தின் காரணாகவோ வன்முறைக்குள்ளாக்கப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால் அது சட்டத்தை மீறும் செயல். இந்தச் சூழலைத்தான் முடிந்த அளவுக்கு நம்முடைய செய்திக் குறிப்பிலும் தலைப்பிலும் சுட்டிக்காட்ட வேண்டும்.
வெறுப்பின் அடிப்படையிலான குற்றத்தையும் வேறு சாதாரண குற்றத்தையும் ஒன்றாக வைத்து, இதையும் அதையும் ஒப்பிடுவது மனிதத் தன்மையற்ற செயல். இந்த முக்கியமான வித்தியாசத்தை அழிப்பதன் மூலம் நாம் பிரிவினைவாதிகளாகிறோம். மேலும் சமூக இழைகளை அறுக்கும் அடையாளம் சார்ந்த வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு சூழலையும் உருவாக்குகிறோம்.
August 1ஆம் தேதி The Hindu நாளிதழில் அப்பத்திரிகையின் Readers Editor ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய Why Context Matters? என்ற கட்டுரையின் தமிழாக்கம். இந்தக் கட்டுரையை மொழியாக்கம் செய்யும் யோசனையைத் தெரிவித்த குணசேகரனுக்கு நன்றி.
https://www.thehindu.com/…/why-context-…/article24733441.ece
Pingback: செய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்? – ஏ.எஸ். பன்னீர்செல்வன் – TamilBlogs