கலைடாஸ்கோப்

images

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
வரும் சிறுவர்கள்
பெற்றோரிடம்
அடம்பிடித்து,

கோவில் கடைகளில் விற்கும்
கலைடாஸ்கோப்பை கண்ணில் பொருத்தி,
வர்ண ஜாலங்களைப் பார்த்து
மிரள்கிறார்கள்.
ஏதோ ஒரு சிறுவன்,
ஏதோ ஒரு கலைடாஸ்கோப்பை
கண்ணில் வைத்து, பார்வையைச்
செலுத்தும்போது
வண்ணச் சிதறல்களாய்
விரிகிறது எனது பால்யம்.

Advertisements
Posted in நவகவிதை | Tagged | Leave a comment

கார்ப்பரேட் யுத்தம்

நடுத்தெருவின் நடுப்பகுதியில் இருந்த இருவர் கடைக்கும் இடையிலான இடைவெளி 20 அடிகள்தான் இருக்கும். இருவரும் சாயங்காலம் கடை வைப்பார்கள். கிஇதில் செவநாயியின் கடைக்குத்தான் அதிக கூட்டம் வரும். இதனால், கூட்டத்தைக் கவர்வதற்காக செவநாயி கடையைத் துவக்குவதற்கு முன்பே கிருஷ்ணம்மாள் கடையை போடுவார். இருந்தும் செவநாயி கடையைத் திறந்துவிட்டால் கூட்டம் அங்கே போய்விடும். செவநாயி கடையைச் சுற்றி எப்போதும் 5 பேர் சட்டியோடு உட்கார்ந்திருப்பார்கள். கிருஷ்ம்மாளிடம் இருவர் இருந்தால் அதிகம். இருவரும் விதவைகள். இருவருக்கும் காப்பாற்றியாக வேண்டிய குழந்தைகளோ, பேத்திகளோ இருந்தனர்.  இருவரும் நடுவயதைத் தாண்டியவர்கள். கிருஷ்ணம்மாளைக் கிழவி என்றே சொல்லலாம்.
செவநாயி very strict. ஒரு பஜ்ஜியின் விலை ஐந்து பைசா. ஐம்பது பைசாவைக் கொடுத்து பத்து பஜ்ஜி கேட்டால் உடனே கொடுத்துவிட மாட்டார். 8 பஜ்ஜியும் 2 வடையும் வாங்கிக்கொள்ள வேண்டும். புதியவராக இருந்தால் 6- 4 விகிதாசாரம். போனவுடன் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார். 25 காசுக்கு பஜ்ஜி என்று கேட்டால், ஆளுக நிக்கிது.. கொஞ்ச நேரம் ஆகும் என்று முகத்தைப் பார்க்காமல் சொல்வார். கிருஷ்ணம்மாளின் கூட்டமில்லாத கடை நம்மை ஈர்க்கும். ஆனாலும், கௌரவத்திற்காக செவநாயியின் கடையில் எல்லோரும் நின்றுவிடுவார்கள். வெகு சிலர் மட்டும் செவநாயி கடையில் இருக்கும் கூட்டத்தை தூரத்திலேயே பார்த்துவிட்டு, நேரடியாக கிருஷ்ணம்மாள் கடைக்குப் போய் வாங்கிவிடுவார்கள். வாங்கிவிட்டு, செவநாய் கடையைக் கடந்துசெல்லும்போது, “எங்க வாங்குனா என்னா.. ரெண்டும் நல்லாத்தான் இருக்கு.. இங்கமட்டும் என்ன தங்கத்திலயா சுடுறாக” என்று எல்லோரு காதுபடவும் பேசிவிட்டு, செவநாயி சுடும் பஜ்ஜியை ஏக்கத்துடன் பார்த்தபடி செல்வார்கள்.
ஏதோ, செவநாயி மட்டும்தான் ஸ்ட்ரிக்டு; கிருஷ்ணம்மாள் ரொம்ப நல்லவர் என்று நினைக்கக்கூடாது. செவநாயி கடையில் நேரமாகிறது என்று ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு கிருஷ்ணம்மாள் கடைக்குப் போனால், “ஏன் அவ விரட்டி விட்டுட்டாளா?” என்று தெருவில் போகிறவர் வருகிறவர் காது பட கேட்பார். வேறு அவசர வேலையாக தெருவில் போகிறவர்கள்கூட மெனக்கெட்டு இந்தக் கேள்விக்கு பதில் சொல்வார்கள். “ஆமாக்கா.. அங்க விரட்டிவிட்டா இங்க தானக்கா வரணும்.. சின்னப் பய.. ஆசப்பட்டுட்டான்.. யாருடா நம்ம அழகம்மா பேரனா?.. பஜ்ஜி வாங்க வந்துட்டான்” என்று நம்மை அவமானப் படவைப்பார்கள். இதில் கிருஷ்ணம்மாள் உடனே சந்தோஷப்பட்டுவிட முடியாது. “இங்க வந்து வாங்குற.. ஆத்தாக்காரி அடிக்கப்போறா” என்று ஒரு சின்ன பிட்டை போட்டுவிட்டுப் போவார்கள். கிருஷ்ணம்மாள் சட்டுப்புட்டென்று வடையைப் போட்டு அனுப்பிவிடுவார்.
செவநாயி சுடும் வடைக்கு மட்டும் ஏன் இவ்வளவு மவுசு. சுவையில் சிறிது வேறுபாடு இருந்தது நிஜம். அவர் காட்டும் கிராக்கியும் ஒரு காரணமாக இருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், கிருஷ்ணம்மாள், செவநாயி இருவரது வீடும் அடுத்தடுத்து இருந்ததுதான்.
ஒரு நாள் காலை செவநாயி எழுந்து பார்த்தபோது, அவரது 18 வயது மகன் வீட்டு உத்தரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். அன்று அவர் வடைக் கடை போடவில்லை. கிருஷ்ணம்மாள் சற்றுத் தயக்கத்திற்குப் பின் கடையைப் போட்டுவிட்டார். அடுத்த ஒரு வாரத்திற்கு கிருஷ்ணம்மாள் கடையில் கூட்டம் பின்னியது. அந்த ஒரு வாரத்தில் கிருஷ்ணம்மாள் என்ன நினைத்திருப்பார்?

P.S: சிவன்ஆயி என்ற பெயரே சிவநாயி.. செவநாயி என்று மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Posted in அனுபவம் | 1 Comment

தமிழ்ச் சமூகமும் என்னத்த கண்ணையாவும்

என்னத்த கண்ணையா வெகு சில படங்களில் மட்டுமே நடித்துவந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் மீது தனது வசனங்களின் ஊடாக பெரும் தாக்கம் செலுத்திவருகிறார். நேற்று திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பு பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பாட்டு வெகுவாகக் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பாட்டின் பல்லவி இதுதான்: “வரும் ஆனா.. வராது..” அதாவது, ஜெயலலிதாவுக்கு கூட்டம் வரும் ஓட்டு வராது என்று போகிறது பாட்டு.
“கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…”, “கற்பூர கனல்வாக்கைக் கலைஞர் சொல்லட்டும்” போன்ற கம்பீரமான பாடல்களுடன் வலம்வந்த தி.மு.க. இன்று ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து, வரும் ஆனா வராது என்ற நிலைக்கு வந்துவிட்டது.
அதற்காக, வரும் ஆனா வராது என்ற சொற்றொடரை நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்கக்கூடாது. பல அர்த்த அடுக்குகளை உள்ளடக்கிய வாக்கியம் அல்லவா அது?

Posted in சும்மா ஒரு கருத்து | Leave a comment

ஒரு ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாசி வீதியில் ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப் பொழுதுகள் சுவாரஸ்யமற்றவையாகவே செல்லும். சிறுவர்களாக இருந்தால் சாலையை பிட்ச்சாக மாற்றி கிரிக்கெட் விளையாடலாம். 17-18 வயதில் இருப்பவர்கள் இப்படி விளையாட விரும்பமாட்டார்கள். ஆனால், பொழுது போக வேண்டுமே… நேராக ஓயின் ஷாப்பிற்குப் (டாஸ்மாக்) போவார்கள். அங்கேயே சரக்கை வாங்கி குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து படுத்துவிடலாம். ஆனால், அப்படிச் செய்துவிட்டால் என்ன சுவாரஸ்யம்?  அதனால், பாட்டிலை வாங்கிக்கொண்டு நேராக வடக்கு மாசி வீதிக்கு வருவார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் வடக்கு மாசி வீதியில் ஒரு ஒயின் ஷாப்பும் கிடையாது என்பதுதான். இப்போதும் கிடையாது. அதனால், வேறெங்காவது இருந்துதான் வாங்கிவர வேண்டும்.
நேராக புளியோதரை கடைக்கு வருவார்கள். அது ஒரு வெற்றிலை – பாக்குக் கடை. அந்தக் கடையை ஆதிகாலத்தில் துவக்கியவரின் பெயர் புளியோதரை. அதனால், அந்தப் பெயரே இப்போது வரை நிலவிவந்தது. இப்போது கடையை வேறொருவர் வைத்திருந்தார். அவரும் அவருடைய மாமனாரும் அந்தக் கடையைக் கவனித்து வந்தார்கள். இந்தக் கடையை “வெளங்காத பய கட” என்றுதான் சொல்வார்கள் மக்கள். காரணம், எதுவும் அங்கே உருப்படியாகக் கிடைக்காது. மூக்குப் பொடிகூட 25 பைசாவுக்கு வாங்கினால், 20 பைசாவுக்கு உண்டான பொடிதான் இருக்கும். சர்பத் கிளாஸை சரியாக கழுவ மாட்டார்கள். இந்தக் கடைதான் ஞாயிற்றுக் கிழமை மதியக் காட்சிக்கான அரங்கு.
சரக்கு பாட்டிலோடு வரும் அந்த வடக்கு மாசி வீதி இளைஞன் நேராக அந்தக் கடைக்குப் போய், “கிளாஸை எடு” என்பான். மருமகன் இருந்தால் மறுபேச்சுப் பேசாமல் கிளாஸை எடுத்துக் கொடுத்துவிடுவார். அவன் அங்கேயே வைத்து தண்ணி அடித்துவிட்டு, சைடு டிஷ்ஷாக அங்கிருக்கும் முறுக்கு, தட்டைகளைத் தின்றுவிட்டு, ஒரு கத்திரி சிகெரெட்டையும் ஓசியில் குடித்துவிட்டு போய்விடுவான். இதில் சுவாரஸ்யம் ஏதும் இருக்காது.. ஆனால், அதே நேரம் மாமனார் இருந்துவிட்டாலோ.. கேட்கவே வேண்டாம்.
சம்பாஷனை இப்படி இருக்கும்…
குடிகாரன்: ஏய் மாமா… கிளாஸை எடு… சாப்ட்டுட்டியா.. என்ன கறிக்கொழம்பா..
மாமனார்: கிளாஸும் கிடையாது ஒன்னும் கிடையாது.. போ.. போ…
குடிகாரன்: ஏய்…என்னய்யா குரல் ஒசருது… கிளாஸை எடு.. குடிச்சிட்டுத் தந்திர்ரேன்..
மாமனார்:.. டேய்.. போடா…
குடியாரன் பளாரென ஒரு அறை விடுவான். மாமனார் மறுபேச்சுப் பேசாமல் கிளாசை எடுத்துத் தந்துவிடுவார். குடிகாரன் விடாமல், “சோடாவை எடு” என்பான்.. அப்போதும் ஏதாவது சொல்லி இன்னொரு அறையை வாங்கிக்கொண்டுதான் சோடாவைக் கொடுப்பார்.. சிகரெட்டு.. இன்னொரு பளார்.. கத்திரி சிகெரெட் கைமாறும்.. இன்னொரு பளார்.. “‘டேய். நான் ப்ளூ பேர்டுதான குடிப்பேன்.. கத்திரி சிகரெட்டத் தார… வாங்கினது பத்தலையா…” என்று சொல்லியபடி கடலைமிட்டாய் பாட்டிலைத் தூக்கிப் போட்டு உடைத்துவிடுவான் குடிகாரன். இதற்குள் வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருக்கும். சட்டென கடைக்குள் கையைவிட்டு இன்னொரு சோடா பாட்டிலை எடுத்து ரோட்டில் போட்டு உடைப்பான் குடிகாரன். அதுதான் லிமிட். மாமனார் கடையைவிட்டு வெளியில் குதித்து, கடையை வேகவேகமாக மூடிவிட்டு ஓடிவிடுவார்.
குடிகாரன் சட்டென போதை தெளிந்து, வீட்டுக்குப் போய்த் தூங்கிவிடுவார். பிறகு ஒரு ஆறு மணி வாக்கில் குளித்து, விபூதியெல்லாம் பூசி, வெள்ளை வேட்டி – சட்டையில் ஆலயமணி, பார்த்தால் பசி தீரும் போன்ற பழைய படம் ஓடும் தியேட்டர் வாசலில் தென்படுவார். ஏதாவது வண்டி சற்றே பிளாட்பார ஓரமாக வந்தால்கூட, குடிகாரப் பயலுக.. பார்த்துப் போறாய்ங்களா… என்றபடி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, டீசண்டாகப் படம் பார்க்கப் போய்விடுவார்.
Posted in நம்ம பயலுக | Leave a comment

மீண்டும் நித்யானந்தா

நித்யானந்தா சாமியாரின் புகழ் பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. பிரம்மச்சர்யத்தை உபதேசம் செய்த சாமியார், ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானது, அவரை நம்பியிருந்த பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது. சாமியார் செய்தது குற்றம்தான். ஆனால், தார்மீக ரீதியான குற்றம். தன்னை நம்பிய பக்தர்களுக்கு அவர் பதில்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால், சட்டப்படி அவர் என்ன குற்றம் செய்திருக்கிறார் என்பது இனிமேல்தான் தெரியவரும். அல்லது தெரியவைக்கப்படும். அதை செய்ய பல சக்திவாய்ந்த கரங்கள் முயல்கின்றன என்பது பின்வரும் செய்தியைப் படித்தால் புரியும்.
மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழ் வெளியிட்ட செய்தி இது.
அதன் சுருக்கமான தமிழாக்கம் இதோ:
சுவாமி நித்யானந்தாவின் வீழ்ச்சிக்கு பெண், நிலம், அதிகாரம் ஆகியவற்றிற்கான போட்டியே காரணம்.
சுவாமி நித்யானந்தாவை செக்ஸ் சர்ச்சையில் சிக்க வைத்த ஸ்டிங் நடவடிக்கை அவருடன் நிலப் பிரச்னையுள்ள சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின்பேரிலியே நடத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாமியார் ரஞ்சிதாவுடன் இருக்கும் காட்சிகளை முதலில் வெளியிட்ட டிவி சேனலின் உரிமையாளர்களான மாறன்களுடன் நித்யானந்தாவுக்கு சொத்துத் தகராறு இருக்கிறது. இதுதவிர, கர்நாடகத்தில் முன்னாள் தாதாவான முத்தப்பா ராயும் ஆசிரமத்தின் 19 ஏக்கர் நிலத்தின் மீது கண் பதித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த செக்ஸ் வீடியோ ஒளிபரப்பானதும் முத்தப்பாவின் ஆட்கள்தான் ஆசிரமத்தைக் கொளுத்தியது என்றும் சொல்லப்படுகிறது.
நித்யானந்தாவின் ஆசிரமம் பிடதியில் முத்தப்பாவின் வீட்டிற்கு அடுத்து அமைந்திருக்கிறது.  இந்த விவகாரம் குறித்து சாமியாரிடம் முத்தப்பா பலமுறை கேட்டிருக்கிறார். மாறன்களுக்கும் சாமியாருக்கும் இடையில் பல நாட்களாகவே தகராறு உண்டு. கடந்த ஆறு மாதத்தில் இந்தத் தகராறு மோசமடைந்திருக்கிறது. “நிலத் தகராறுக்கும் நாங்கள் ஒளிபரப்பிய செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்கிறார் சன் குழுமத்தின் கர்நாடக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மூத்த துணைத் தலைவர் விஜயகுமார். “எந்த ஒரு பொறுப்பான மீடியா குழுமத்தையும்போல, இவரை அம்பலப்படுத்த வேண்டும் என்றே நினைத்தோம். எங்களுடைய ஸ்டிங் நடவடிக்கை உண்மையானது” என்கிறார் அவர்.
சாமியாரின் ஆசிரமத்திற்குச் செல்லும் சாலையில் செக் போஸ்ட்களை வைத்து, அங்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தி வந்திருக்கிறார் முத்தப்பா என்கிறார்கள் உள்ளூர்காரர்கள்.  “சாமியை நிலத்தை விட்டு வெளியேற்ற அவர்கள் செய்த தந்திரம் அது” என்கிறார்கள் அவர்கள். இது குறித்து முத்தப்பாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. “நாங்கள் ஸ்வாமியை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. அவருடைய நிலமும் எங்களுக்குத் தேவையில்லை. மாறாக, மக்களைக் கவர்வதற்காக அவர்தான் முத்தப்பாவைப் பற்றித் தவறாகப் பேசுவார்” என்கிறார் முத்தப்பாவின் நெருங்கிய கூட்டாளியான ஜகதீஷ் கௌடா.
கடந்த ஒரு மாதமாகவே நித்யானந்தா பிளாக் மெயில் செய்யப்பட்டு வந்ததாக ஆசிரமத்தினர் தெரிவிக்கிறார்கள்.
——————————————
இந்த சதியில் இதில் சிக்கி சின்னாபின்னமானது ரஞ்சிதாதான்.  கொலை செய்த சாமியார்கள் கூட கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தால் தப்பித்து விடுகிறார்கள். பகைக்கக்கூடாதவர்களை பகைப்பவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.
Posted in நித்யானந்தா, ஸ்கூப் | 1 Comment

நித்யானந்தா.. ரஞ்சிதா..

எனக்கு நேற்று என் பால்யகால நண்பனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.
அந்த மின்னஞ்சல்:
கட்டியக்காரா,
நீ சொன்னது மாதிரியே நடந்துவிட்டது பார்த்தியா.. 2010 மார்ச் 13ந் தேதி தமிழ்நாட்டுக்கு புதுசா சட்டமன்றம் திறப்பாங்கன்னு சொன்னிடேயா. அதையும் மன்மோகன் சிங்குன்னு ஒரு பிரதமர் வந்து திறப்பார்னு சொன்னியேடா.. நாங்கள்ளாம் அப்போ சிரிச்சோம். இப்போ உண்மையாகப் போகுது.
நீ தீர்க்கதரிசிதாண்டா…
அன்புடன்,
மூர்த்தி
மார்ச் 3, 2010
பி.கு. நித்யானந்தா மாட்டிக்கொண்டவுடன் “நித்யானந்தா மாட்டிக்கொள்வார்ன்னு அன்னிக்கே சொன்னியேடா” என்று நித்யானந்தத்தின் பல பிராண்ட் அம்பாசிடர்களுக்கும் அந்த பிராண்ட் அம்பாசிடர்களின் அல்லக்கைகளுக்கும் நண்பர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்து குவிகின்றனவாம். ஏன் எங்களுக்கு மட்டும் மின்னஞ்சல் வராதா என்ன?
பின்குறிப்புக்குப் பி.கு: தலைப்பு, வழக்கம்போல கூட்டம் கூட்டுவதற்காக செய்த நீச காரியம். தேடிவந்தவர்கள் மன்னிக்க.
Posted in நித்யானந்தா | 2 Comments

“நவகவிதை நமது உயிர்” வரிசை

எல்லோரும் நல்லவரே.

மாற்றுக் கருத்து சொல்லாதவரை

எல்லோரும் நல்லவரே.

Posted in நவகவிதை | Leave a comment