தாய்வீடு படத்தில் ரஜினிகாந்திற்கு ஒரு நாய் ரொம்பவுமே உதவி செய்யும். பல சாகசங்களில் ஈடுபடும். இதைப் பார்த்த வடக்குமாசி வீதி பழுக்குகளாகிய நாங்கள் ஒரு நாய் வளர்க்க முடிவெடுத்தோம். அதற்காக ஒரு குட்டி நாயைத் தேடி தெருத்தெருவாக சுற்றினோம். கடைசியில் ஓரிடத்தில் பிறந்து ஒன்றிரண்டு வாரங்களேயான ஒரு நாய் கண்ணில் பட்டது. அப்போது அந்தக் குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. அப்போதாவது எங்களுக்கு அதன் தன்மை புரிந்திருக்க வேண்டும். புரியவில்லை. தூக்கிக்கொண்டு மாசி வீதிக்கு வந்துவிட்டோம்.
உடனடியாக நாய் வளர்க்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. செல்வம் அந்தக் குழுவின் தலைவன். நான் பொதுச்செயலாளர். இதன் அர்த்தம் என்னவென்றால் நாய்க்காக நாங்கள் ஏதும் செலவு செய்யமாட்டோம் என்பதுதான். நாய்க்கு பயிற்சியளித்து, அதை பெரிய ஆளாக்குவது மட்டுமே எங்கள் பொறுப்பு. பிற செலவுகளையெல்லாம் மற்றவர்கள்தான் பார்த்துகொள்ளவேண்டும். பாலைப் பற்றிப் பிரச்னையில்லை. அங்கே நிற்கும் ஏதாவது ஒரு மாட்டைப் பிடித்து கறந்துவிடுவோம். நாய்க்கான கழுத்துப் பட்டை, சங்கிலி போன்றவற்றை வாங்கும் செலவை பிறர் தலையில் கட்டினோம்.
கழுத்துப் பட்டை, சங்கிலி, சைக்கிள் டயர், ஸ்கூட்டர் டயர் போன்ற சாதனங்கள் வாங்கப்பட்டன. ஒரு பழுக்கு நாய்க்கு எந்நேரம் பார்த்தாலும் பாலைக் கறந்து ஊற்றிக்கொண்டே இருந்தான். இன்னொருவன் தொடர்ந்து பிஸ்கட், சாப்பாடு போன்றவற்றை போட்டுக் கொண்டிருந்தான்.
நாய்க்கு பெயர் வைக்கும் பிரச்னை எழுந்தது. டைகர், ராம்போ போன்ற புதுயுகப் பெயர்களும் மணி, ராமு போன்ற பாரம்பரியப் பெயர்களும் யோசிக்கப்பட்டன. கடைசியில் ராம்போ என்ற பெயரே சூட்டப்பட்டது (அந்த சமயத்தில் ராம்போ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது).ராம்போவுக்கான பயிற்சிகள் துவங்கின. முதலில் ஓட்டப்பயிற்சி. இத்தனை நாட்களாக பாலையும் பிஸ்கட்டையும் தின்று தின்று கொழுத்துப் போயிருந்த ராம்போ நடக்கவே சிரமப்பட்டது. இரண்டடி நடக்கும். பிறகு மெதுவாக நிற்கும். அப்படியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அப்படியே தூங்கிவிடும். செல்வம் இதைப் பார்த்து ரொம்பவுமே நொந்துபோனான். ராம்போ தூங்குவதைப் பார்த்தாலே விளக்கமாற்றுக் குச்சியால் அதனைப் பின்னியெடுத்துவிடுவான். அடிவாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடும். பிறகு வழக்கம்போல நிற்பது, உட்கார்வது, தூங்குவது என்ற பழைய கதைதான்.
சர்க்கஸில் வருவதுபோல, ராம்போவை ஒடிவரச் செய்து உயரத்தில் சைக்கிள் டயரைத் தொங்கவிட்டு, அதன் நடுவே ராம்போவைத் தாவச் செய்வதற்காகதான் சைக்கிள் டயர், ஸ்கூட்டர் டயர் ஆகியவை வாங்கப்பட்டன. ஆனால், ஒரு முறைகூட ராம்போ சைக்கிள் டயர் நடுவில் தாவிச்செல்ல முயற்சிக்கவில்லை. கீழே வழியிருக்கும்போது, மேலே எதற்குத் தாவச் சொல்கிறார்கள் என்பதுபோல செல்வத்தை கேவலமாக ஒரு பார்வை பார்க்கும். பிறகு சாவகாசமாக சைக்கிள் டயருக்குக் கீழே நடந்து சென்றுவிடும். சைக்கிள் டயருக்கு அடுத்ததாக, அதற்குச் சற்று சின்ன சைசில் இருக்கும் ஸ்கூட்டர் டயர் கட்டப்பட்டிருக்கும். சைக்கிள் டயரையே தாண்டாத ராம்போ, ஸ்கூட்டர் டயரை நிமிர்ந்துகூட பார்க்காது.தினமும் அதற்கு பால் ஊத்திக் கொண்டிருந்த ஒரு பழுக்கு சொன்னான், “ஏண்டா, இந்த சைக்கிள் டயரையே தாண்டாத இந்த நாயாடா நாம ஆபத்தில இருக்கும்போது வந்து காப்பாத்தப்போது…“. செல்வத்திற்கு ஏகப்பட்ட ஆத்திரம். விளக்குமாறு குச்சியால் வெளுத்துவிட்டான் ராம்போவை. அப்போது அந்தப் பக்கம் சென்ற, மாசி வீதி பெண்மணி, “ஒரு பொட்டை நாயைப் போட்டு இந்தப் பாடு படுத்துறாய்ங்களே“ என்றார். எங்களுக்குத் திகீர் என்று ஆனது. ஓரு பெட்டை நாய்க்கா ராம்போ என்று பெயர் வைத்தோம் என்று கூசிப் போனோம். செல்வம் மௌனமாக அதன் கழுத்துப் பட்டையையும் சங்கிலியையும் கழற்றினான். பிறகு எங்கோ போய் விட்டுவிட்டுவந்தான். சில நாட்களில் மீண்டும் வடக்குமாசி வீதியில் ராம்போ தென்பட்டது. ஆனால், பழுக்குகள் கண்டுகொள்ளவில்லை.
நாய்க்கே நாய் பாடு. நல்ல ஆன்ட்டி க்ளைமாக்ஸ்!
LikeLike
How can i write in Tamil language here?
please guide me…………
LikeLike
உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சொல்லுங்கள் வைகை. விரிவாக இதை விளக்குகிறேன்.
LikeLike
Vaigai,
Please Try,
http://www.pkp.in/info/downloads/Tamilunicode%20writter.html
LikeLike
emmessdot@yahoo.co.in
LikeLike
Good one.
mailing list urvakkungalen…
nagaga chuda chuda ungal padipuhalai padikalame.
Niraya velai paluvirku idayil, ungal eluthu oru thenralai kadhu madalai theendukiradhu…
Nanum, kuliruttappata araikkul valum IT adimai than.. Enna seivadhu.. Kalathin katayam ( Arasiyal vadhikalluku nanri…)
LikeLike
கீழே வழியிருக்கும்போது, மேலே எதற்குத் தாவச் சொல்கிறார்கள் என்பதுபோல செல்வத்தை கேவலமாக ஒரு பார்வை பார்க்கும்
I laughed out a lot and ended up with tears… After a long time such a great fun.. Thank you so much for this.
LikeLike