102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி

48393007_1416935151771541_5883470794490642432_n

மினர்வா என்ற பூர்வீகப் பெயரைக் கொண்ட பாட்சா தியேட்டரின் பழைய தோற்றம்.

கடந்த ஆண்டு சென்னையின் சினிமா பாரடைசோ என்ற தலைப்பில் சென்னையில் இயங்கிவரும் திரையரங்குகளிலேயே மிகப் பழமையான திரையரங்கான பாட்சா திரையரங்கைப் பற்றி பிபிசியில் எழுதியிருந்தேன். 

அந்தக் கட்டுரைக்காக நான் போய் பார்த்தபோது, மிகவும் பாழடைந்து, குப்பை பொறுக்குபவர்கள், கூலித் தொழிலாளர்களுக்கான திரையரங்காக மாறியிருந்தது. கட்டணம் 20-25 ரூபாய்தான்.

48417202_1416935601771496_4067254044136046592_o

முன்பு பட்சா தியேட்டரில் பாக்ஸ் ஆஃபீஸே கிடையாது. இப்போது இன்டர்நெட் புக்கிங்கே உண்டு.

அந்தக் கட்டுரைக்காக அவரிடம் பேசிவிட்டுப் புறப்படும்போது, திரையரங்கை நடத்திவந்த பாட்சா, “இந்தத் தியேட்டரை டிஜிட்டல் வசதியோட, ஏசி பண்ணி ஓட்டனும்னு பார்க்கிறேன். பார்க்கலாம்” என்று சொன்னார்.

ஆனால், மனிதர் இப்போது செய்தே முடித்துவிட்டார். புத்தம்புது பொலிவோடு காட்சியளிக்கிறது பாட்சா.

தியேட்டரை முழுமையாக புதுப்பித்து, சோனி 4கே புரொஜக்ஷனுடன் குளிரூட்டும் வசதியையும் செய்துவிட்டார். SDC நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து இதைச் செய்திருப்பதாகச் சொல்கிறார் பாட்சா.

48373924_1416935725104817_3478507031076274176_o

பாட்சா தியேட்டரின் பழைய, புதிய முகப்புத் தோற்றம்.

முன்பு 25 ரூபாயாக இருந்த கட்டணம் இப்போது 60 ரூபாய் – 140 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. முன்பு 290 இருக்கைகள் இருந்த இடத்தில் இப்போது 282 இருக்கைகள் குஷன் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. முன்பு திரையரங்கின் வாசலில் நின்று பாட்சாவே டிக்கெட் கொடுப்பார். இப்போது நவீனமான பாக்ஸ் ஆஃபீஸ் போக புக்மைஷோவில் ஆன்லைன் பதிவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆனால், முன்பைப் போல குப்பை பொறுக்குபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இங்கு வர முடியாது. அவர்கள் வசதிக்கு அப்பாற்பட்ட இடமாக இது மாறிவிட்டது.

48364806_1416935655104824_5683006129412505600_o

பாட்சா தியேட்டர் உரிமையாளர் எஸ்எம் பாட்சாவின் உரிமையாரின் அலுவலக அறை முன்பும் இப்போதும்.

“இனி இங்கிருப்பவர்களை மட்டும் வைத்து படம் ஓட்ட முடியாது. வடசென்னையின் பல பகுதியைச் சேர்ந்தவர்களும் இங்கு குடும்பத்துடன் வரவேண்டுமென நினைக்கிறேன். அதனால், டீசன்டாக வருபவர்களை மட்டும்தான் அனுமதிக்க முடியும். முன்பு கூலித் தொழிலாளர்கள் துண்டுபோட்டு வந்தால் அனுமதித்துவந்தேன். இனி அப்படிச் செய்ய முடியாது. இதில் அவர்களுக்கு வருத்தம்தான். ஆனால், என்ன செய்வது? வேறு வழியில்லை” என்கிறார் பாட்சா.

2006ல் பாட்சா இந்த திரையரங்கை ஐம்பது ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்ததிலிருந்து அவர்கள்தான் ரசிகர்கள். அவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா? “கீழே இரண்டு குடோன் இருந்தது. ஒன்றைக் காலி செய்து பார்க்கிங்கா மாற்றிவிட்டேன். இன்னொன்றை குட்டி தியேட்டராக மாற்றி பழைய படங்களைப் போடலாமென இருக்கிறேன். பழைய பட ரசிகர்களை அப்படியே விட முடியாதே” என்கிறார்.

48376891_1416935665104823_86648684569165824_o

பாட்சா தியேட்டர் உரிமையாளர் எஸ்எம் பாட்சா தன் திரையரங்கின் அலுவலக அறை முன்பும் இப்போதும் எப்படி மாறியுள்ளது என சுட்டிக்காட்டுகிறார்.

பழைய பாட்சா தியேட்டரில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. பேப்பர் பொறுக்குபவர்கள் இரவு முழுவதும் பேப்பர் பொறுக்கி காலையில் கடையில் போட்டுவிட்டு, பகல் நேரத்தை இந்தத் திரையரங்கில் கழிப்பார்கள். அதற்காக மூன்று ஷோவுக்கும் டிக்கெட் எடுப்பார்கள்.

48362718_1416935591771497_3359440268364349440_o

பாட்சா தியேட்டரில் பாழடைந்து கிடந்த இடம் இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழைய பாட்சாவில் ஸ்லைடு வருமானமே நன்றாக வந்தது என்கிறார் பாட்சா. ஒரு ஸ்லைடை மாதம் முழுவதும் இடைவேளையின்போது காண்பிக்க 1200 ரூபாய் வாங்குவார். அதுபோல 20 ஸ்லைடுகளாவது இருக்கும். இதுவே கிட்டத்தட்ட 22 ஆயிரம் ரூபாய் வருவாயாக வரும். “பூமர் பனியன்காரர்கள் ஸ்லைடு கொடுக்கும்போது இலவசமாக பனியன் கொடுப்பார்கள். சமையல் எண்ணைக்கு விளம்பரம் கொடுப்பவர்கள் இரண்டு லிட்டர் எண்ணெய் கொடுப்பார்கள்” என்று சொல்லிச் சிரிக்கிறார் பாட்சா.

48383348_1416935581771498_7815435015096893440_o

முன்பு ஃபிலிமில் இயங்கிய பாட்சா தியேட்டர் இப்போது க்யூப் முறையில் இயங்குகிறது. 

இவர் இப்போது டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டார். அப்படியானால் அவரிடமிருந்த 100க்கும் மேற்பட்ட ஃபிலிம் மூலம் மட்டுமே திரையிடக்கூடிய படங்களின் கதி? “அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இப்போதுகூட சரவணா, பாலாஜி தியேட்டரில் இரண்டு படங்களை வாடகைக்கு எடுத்துப் போகிறார்கள்” என்கிறார் பாட்சா.

நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் 1916ல் டபிள்யு.எச். மர்ச் என்ற பிரிட்டிஷ்காரரால் இந்த அரங்கம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் தமிழகத்திலேயே மிக நவீனமான, குளிர்ச்சியான அரங்கம் இதுதான். தமிழகத்தில் முதன் முதலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கமும் இதுதான்.

48419832_1416935715104818_7509186705677615104_o

முன்பு ஃபிலிமில் திரையிடும்போதும் இப்போது சோனி 4 கேவில் திரையிடும்போதும்.

1930களின் மத்தியில் இந்த திரையரங்கம் டாண்டேகர் குடும்பத்தின் வசம் வந்தது. அப்போதுதான் நேஷனல் என்ற பெயர், மினர்வா என்று மாற்றப்பட்டது.

இதன் பிறகு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்திருந்ததால், தொடர்ந்தும் ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்டன. 1952ல் பராசக்தி திரைப்படம் இங்கு திரையிடப்பட்டுதான் சென்சார் செய்யப்பட்டது.

48366523_1416935675104822_2179327068108488704_o

பாட்சா திரையரங்கில் முன்பு 290 சீட்கள் இருந்த இடத்தில் இப்போது 282 சீட்கள் இருக்கின்றன.

ஆனால், 1970களின் மத்தியில் சென்னையில் பல இடங்களில் இரண்டு – மூன்று திரையரங்குகளைக் கொண்ட மல்டி – ஸ்க்ரீன் திரையரங்குகள் வர ஆரம்பித்ததும் மினர்வா போன்ற ஒற்றைத் திரை அரங்குகளின் செல்வாக்கு குறையத் துவங்கியது. அதற்குப் பிறகு சில வழக்குகளால் மூடப்பட்டுக் கிடந்த இந்தத் திரையரங்கை 2006ல் பாட்சா குத்தகைக்கு எடுத்தார்.

தமிழ்நாடு முழுவதும் பழைய ஒற்றைத் திரையரங்குகள் இடிக்கப்பட்டுவரும் நிலையில், சென்னையின் ஆகப் பழைய திரையரங்கின் புதிய அவதாரம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

This entry was posted in தியேட்டர், Uncategorized. Bookmark the permalink.

Leave a comment