80களின் இறுதியில் விஜயகாந்த் நடித்த படங்களைப் பார்த்தால், ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அந்த நேரத்தில் வந்த பல படங்களில் ஜாதி, மதம், அந்தஸ்து காரணமாக பிரிக்கப்படும் காதலர்களை உயிரைக் கொடுத்தாவது சேர்த்து வைப்பார் விஜயகாந்த். இப்படி விஜயகாந்தைப் போலவே காதலர்களைச் சேர்த்துவைக்கவென்று 90களின் ஆரம்பத்தில் வடக்கு மாசி வீதியில் பலர் திரிந்தார்கள். யாராவது ஒரு பையன், ஒரு பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் போதும். எங்கிருந்தோ வந்துவிடுவார் ஒரு விஜயகாந்த். விறுவிறுவென அந்தப் பெண்ணின் பூர்வீகம், ஜாதகம் எல்லாவற்றையும் ஒப்பிப்பார். பிறகு, அந்தப் பெண்ணை எந்த இடத்தில் எப்போது பார்க்கலாம் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அந்த ஒரு தலைக் காதலனுக்குத் தேவைப்படக்கூடிய அத்தனை உதவிகளையும் செய்துகொடுப்பார் விஜயகாந்த். “கவலைப் படாதீங்க பாஸ். அது ஒங்களைத்தான் பாக்குது. முடிச்சிடலாம்” என்று தினமும் சாயங்காலம் சந்தித்து ஆறுதல் சொல்வார்.
இவனுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று நீங்கள் மறுகுவீர்கள். ஒரு கைமாறும் எதிர்பார்க்க மாட்டார் விஜயகாந்த். ஓட்டலுக்குப் போனால்கூட பில்லை அவர் கொடுப்பார். எல்லாம் நல்லபடியாகப் போய்கொண்டிருக்கும். எல்லாம் அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்குமான உறவு தொடரும்வரைதான். அந்தப் பெண் மீதான ஒரு தலைக் காதல் உங்களிடம் தீர்ந்துவிட்டாலோ, அல்லது நீங்கள் பிரிந்துவிட்டாலோ சட்டென விஜயகாந்த் காணாமல் போய்விடுவார்.
பிறகு எதிரில் பார்த்தால்கூட ஒரு வேண்டாவெறுப்புச் சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போய்விடுவார். பிறகு, வேறு யாரையாவது சேர்த்துவைக்க முயன்றுகொண்டிருப்பார் மனிதர். வாழ்நாளில் அவரை மீண்டும் சந்திக்கவே மாட்டீர்கள். இந்த விஜயகாந்த்கள் எப்படி உருவாகிறார்கள்? தங்கள் ஒரு தலைக் காதலில் தோற்றவர்கள்தான் இப்படி மாறுகிறார்கள் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. ஆனால், காதலில் தோற்றவர்கள் எல்லோரும் இப்படியாவதில்லையே? காதலிலும் தோற்று, வேலை வெட்டி ஏதும் இல்லாமல் போனால் இப்படி விஜயகாந்த் ஆகும் வாய்ப்பு அதிகம் என்கிறார் 2008ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற ஃப்ரான்சுவா பாரி சினௌசி. அந்தக் கூற்றில் உண்மை இருக்கவே செய்கிறது.
பழுக்குகள் நாய் வளர்த்த கதையைப் படித்த மாதிரி இருக்கிறது. 🙂
LikeLike
நன்றி. இந்த விஜயகாந்த்தனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
LikeLike