
நீடாமங்கலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடம்.
1937ஆம் வருடம். அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமம். தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3வது மாநாடு இந்த ஊரில் 28.12.1937ல் நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் அந்தப் பகுதியில் பெரும் நிலக்கிழாராக விளங்கிய டி.கே.பி. சந்தன உடையார். அவருக்குச் சொந்தமான அல்லது அவரது தமையனாருக்குச் சொந்தமான ஒரு மாளிகையில் மாநாடும் அதை ஒட்டிய மைதானத்தில் சமபந்தி விருந்தும் நடைபெற்றன. முற்பகல் மாநாடு முடிந்ததும், சமபந்தி போஜனம் நடப்பதால், எல்லோரும் வந்து சாப்பிடலாம் என அங்கிருந்த தாழ்த்தப்பட்டவர்களையும் அழைக்கின்றனர். 2,3 முறை அழைத்ததால், அவர்களும் சாப்பிட அமர்ந்தனர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே டி.கே.பி. சந்தன உடையாரின் ஆட்கள், “ஏண்டா, பள்ளப்பயல்களா, உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்திலே வந்து சாப்பிடலாமா?” என்று கேட்டபடியே அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். அடிதாங்காமல் அவர்கள் ஓடிவிடவே, அடுத்த நாள் அவர்கள் வேலை பார்த்த பண்ணைக்குச் சென்று உடையாரின் ஆட்கள் தாக்கினர். பந்தியில் உட்கார்ந்து உணவருந்திய சுமார் 20 பேருக்கு மொட்டையடிக்கப்பட்டது. சாணிப் பால் கரைத்து ஊற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சி நடத்திய மாநாட்டில் நடந்த இந்தக் கொடூரத்தை முதன் முதலில் வெளியுலகிற்குக் கொண்டுவந்தவர்கள் அந்தப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்ட சுயமரியாதை இயக்கத்தினர். இது தொடர்பான செய்திகளை பெரியாரின் விடுதலை நாளேடு வெளியிட ஆரம்பிக்கிறது.
“ஹரிஜனங்களுக்கு காங்கிரஸ் மரியாதை” என்ற பெயரில் துண்டறிக்கையையும் அச்சடித்து வெளியிடுகிறது சு.ம. இயக்கம்.
இது தொடர்பாக பெரியாருக்குத் தந்தி அனுப்பப்பட்டவுடன், விடுதலை நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருந்த அ. பொன்னம்பலனாரை நீடாமங்கலத்திற்கு களவிசாரணைக்கு அனுப்புகிறார் அவர். பொன்னம்பலம் அங்கு தங்கி, இது தொடர்பான செய்திகளை விடுதலைக்கு அனுப்ப ஆரம்பித்தார். குடியரசிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.

குடியரசு இதழின் முகப்பில் தாக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள்.
அப்போது காங்கிரசிற்கு ஆதரவாக இருந்த தினமணி நாளிதழ் இதற்கு மறுப்புச் செய்திகளை வெளியிட்டது. ஆனால், விடுதலை வன்முறைக்கு உள்ளானவர்களிடமிருந்து ஆதாரங்களைப் பெற்று தொடர்ந்து வெளியிட்டது. தாக்குதலுக்குள்ளான சிலரை ஈரோட்டிற்கு அழைத்துவந்து பாதுகாப்பளித்தது சுயமரியாதை இயக்கம்.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் சென்னை நகர மேயரும் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களில் ஒருவருமான ஜெ. சிவசண்முகம் பிள்ளை கேள்வியெழுப்புகிறார். இதற்கு, பதிலளித்த அரசு, தாக்குதல் ஏதும் நடக்கவில்லையென மறுத்தது.
இருந்தபோதும் இந்த விவகாரம் தொடர்பாக சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து எதிர்வினையாற்றிவந்தது. 19.1.1938ல் பொள்ளாச்சியில் பெரியார் இது குறித்துப் பேசினார்.
21ஆம் தேதி குன்னூரில் நடந்த கூட்டத்திலும் இது தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு பெரியார் பதிலளித்தார்.
“நீடாமங்கலத்தில் நடந்ததென்ன” என்ற தலைப்பில் 28ஆம் தேதியன்று ஒரு கூட்டத்திற்கு சுயமரியாதை இயக்கம் ஏற்பாடு செய்தது. இதில் பெரியார், சி.என். அண்ணாதுரை, அ. பொன்னம்பலனார் ஆகியோர் பேசினர். தாக்குதலுக்கு உள்ளான தேவசகாயமும் இதில் கலந்துகொண்டு நடந்தது என்ன என்பதை விவரித்தார்.
நீடாமங்கல நிகழ்வை ரிப்போர்ட் செய்ததற்காக விடுதலை வெளியீட்டாளர், ஆசிரியர் ஆகியோர் மீது பிப்ரவரி மாதத்தில் உடையாரின் சார்பில் மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 200 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்படுகிறது. இல்லாவிட்டால் 4 மாதம் சிறை தண்டனை. செஷன்ஸ் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் அபராதத் தொகை தலா 100 ரூபாயாக குறைக்கப்படுகிறது.

நீடாமங்கலம்: ஜாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் நூலின் ஆசிரியர் ஆ. திருநீலகண்டன்
மேலே சொன்ன இந்தத் தகவல்களையெல்லாம் குடியரசு, விடுதலை நாளிதழ் பதிவுகளை வைத்தும் அரசு ஆவணங்களை வைத்தும், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து உரையாடியும் சேகரித்து திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் ஆ. திருநீலகண்டன் தன்னுடைய நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் புத்தகத்தில் நம் பார்வைக்கு முன்வைக்கிறார்.
ஏகப்பட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி நகரும் இந்தப் புத்தகம், மிகமிக விறுவிறுப்பான ஒன்று. தற்போதைய சூழலில் கவனிக்கத்தக்க இரண்டு, மூன்று விஷயங்களை இந்த நூலின் மூலமாக சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். முதலாவதாக, பெரியார் தாழ்த்தப்பட்டவர்கள் தரப்பில் நின்று ஒருபோதும் பேசியதில்லை; இடைநிலை ஜாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறார் என்ற வாதத்தை சற்று அசைக்கிறது இந்தப் புத்தகம். நீடாமங்கலம் சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள். தாக்கியவர்கள் உடையார் என்ற அதிகாரமும் பணமும் நிரம்பிய இடைநிலை ஜாதியினர். சுயமரியாதை இயக்கம் தாழ்த்தப்பட்டோர் பக்கமே நின்று பாதுகாப்பளித்ததோடு, வழக்கையும் சந்தித்தது.
இரண்டாவதாக, அந்த காலகட்டத்தில் சட்டப்பேரவையில் 29 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர். தவிர, பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டுவந்தனர். அவர்கள் இந்தத் தாக்குதல் குறித்து பெரிதாக எதிர்வினையாற்றவில்லை என்பதையும் ஆதாரங்களோடு முன்வைக்கிறார் திருநீலகண்டன்.
பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் வழிகாட்டுதலும் மிரட்டலுமே புத்தகத்திற்கு காரணம் என்கிறார் திருநீலகண்டன். அவரது முனைவர் பட்ட ஆய்வேடான “திராவிடர் இயக்கமும் தாழ்த்தப்பட்டோரும்” என்ற பதிவும் விரைவில் நூலாக வரவேண்டும். அதற்கும் சலபதியின் மிரட்டல் உதவுமென்று நம்பலாம்.
இந்த முக்கியமான நூலை வெளியிட்டிருப்பது காலச்சுவடு பதிப்பகம்.