முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

நான் இப்போது சொல்லப்போவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது இன்மதி இதழில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, அதை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிரூபிப்பதாகக் கூறுகிறது. இதை எழுதியிருப்பவர் ஹிமான்ஷு தாக்கூர்.

ஹிமான்ஷு தாக்கூர் இந்திய அளவில் அணைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். அதில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவமும் பெற்றவர். அவர் நடத்திவரும் Sandrp.in அணைகள், பருவமழை, வெள்ளம் குறித்து ஏகப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். ஆனால், அவரே இந்த முறை சறுக்கியிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாம்.

கேரளாவில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது, அதில் அணைகளின் பங்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் பங்கு என்ன என்பது குறித்து இன்மதி இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மிக நீண்ட அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம். https://inmathi.com/2018/08/28/11747/?lang=ta

அந்தக் கட்டுரையில் அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறேன்.

1. ஜூலை 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தனது 90 சதவீத கொள்ளளவை, அதாவது 173 மில்லியன் கனமீட்டர் அளவை எட்டியுள்ளது. ஆனால் பருவமழை முடியும் வரை இது நிகழ்ந்திருக்கக்கூடாது. இந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில், இந்த அணையைப் பராமரித்து வரும் தமிழக பொதுப் பணித்துறைக்கு, கூடுதல் தண்ணீர் வரவை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம்.

2. ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் வாராந்திர அறிக்கைப்படி, அணையின் நீர்மட்டம் 147 அடியாக உள்ளது. அதாவது அணையில் நீர் தேக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை விட, 5 அடி கூடுதலாக உள்ளது. மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, அணையின் முழு கொள்ளளவு 867.41 மீ. ஆகஸ்டு 16ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 868.91மீ, அதாவது அனுமதிக்கப்படட் முழு கொள்ளளவை விட 1.5 மீட்டர் (அதாவது 5 அடி) அதிகமாக இருந்துள்ளது.

3. இந்தச் சூழ்நிலையால், ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அதனால், வண்டிபெரியாறில், அதாவது முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியான பெரியாறு ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதாவது, உச்சபட்ச வெள்ள அளவை விட, 3.5 மீட்டர் அளவு அதிகம். முழுக் கொள்ளளவுக்கு மேல் நீர்மட்டம் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது.

4. கேரள அதிகாரியான ஜேம்ஸ் வில்சன் சொல்வது போல இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் அதிகபட்ச நீர் திறப்புத் திறன் 2,200 கன அடி. ஆனால், இந்த அளவின்படி முல்லை பெரியாறு அணையில் இருந்து ஜூல 20லிருந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த காலகட்டத்தில் மின்சார தயாரிப்புக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகபட்சத்தை நெருங்கும் அளவில் இருக்கும். அதாவது மின்சார தயாரிப்புக்காக, பவர் டர்பைன்களில் 1,600 கன அடி தண்ணீரை கடத்த முடியும். இக்காலகட்டத்தில் பெரியாறு அணையிலிருந்து தினசரி எவ்ளவு தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை திறந்து விட்டது என்று கேட்பது அவசியம்.

5. வைகை அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழக அரசு தண்ணீரை ஏன் திறந்து விடாமல் காத்திருந்தது என்பது மர்மமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து, பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்திலுள்ள வைகை அணையை சென்று சேரும். வைகை அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால், பெரியாறில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும். இது தமிழகத்துக்கும் பயனளித்திருக்கும். அதேவேளையில் வெள்ள நேரத்தில் கேரளாவுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றிருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே வைகை அணையிலிருந்து ஏன் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்ற கேள்விக்கும் தமிழகம் பதில் கூற வேண்டியது அவசியமாகிறது.

இப்போது ஒவ்வொரு கேள்விக்கான பதிலாகப் பார்க்கலாம்.

பதில் 1. ஜூலை 26ஆம் தேதியன்று அணை தனது முழு கொள்ளளவில் 90 சதவீததத்தை எட்டியது. அந்த காலகட்டத்தில் அந்த அளவுக்கு தண்ணீரைத் தேக்கியிருக்கக்கூடாது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல். ஜூலை 26ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.6. இன்னும் ஆறு அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம். ஆதாரம்: 26 ஜூலை தினமணி மதுரைப் பதிப்பு – படம் 1.

dinamani

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஜூலை 26ஆம் தேதி 135.6 அடியா இருந்தது. ஆதாரம்:  ஜூலை 27, 2018, தினமணி, மதுரைப் பதிப்பு.

அப்படியானால் எங்கே தவறு நேர்ந்தது? ஹிமான்ஷு எங்கே தவறு செய்கிறார்? சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் (சிடபிள்யுசி) புள்ளிவிவரங்களை வைத்தே அவர் முடிவுக்கு வருவதால்தான் இந்தத் தவறு நேர்கிறது. சென்ட்ரல் வாட்டர் கமிஷன்தானே நாடு முழுவதுமுள்ள அணைகளின் நீர் அளவைச் சொல்ல சரியான ஆணையம் என்று கேட்கலாம். ஆனால், இந்த ஆணையம் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஒரு தவறைச் செய்திருக்கிறது.

அதாவது, முல்லைப் பெரியாறு அணையின் உயரம் இந்த CWC இணையதளத்தில் மீட்டரில் கொடுக்கப்படுகிறது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் கொடுக்கப்படுகிறது. நாம் வழக்கமாக அணையின் உயரத்தை Feet அளவில்தான் அறிந்து பழகியிருக்கிறோம். CWC இணைய தளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 867.41 மீட்டர் எனக் குறிக்கிறது. இது குழப்பத்திற்கு முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்த 867.41 மீட்டர் என்பது 142 அடியைக் குறிக்கவில்லை. 136 அடியைக் குறிக்கிறது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய அணையின் உயரத்தையே CWC தன் இணையதளத்தில் இன்னமும் குறிப்பிட்டுவருகிறது. அதுதான் இந்த மொத்தக் குழப்பத்திற்கும் காரணம். அது எப்படி என்பதை அடுத்த பதிலில் பார்க்கலாம்.

பதில் 2. ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையின் உயரம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியையும் தாண்டி 147 அடியைத் தொட்டுவிட்டது என்கிறது கட்டுரை. அதற்கு ஆதாரமாக CWCன் புள்ளிவிவரத்தையே அளிக்கிறார் ஹிமான்ஷு. அதாவது அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 868.91 மீட்டர் என்கிறார் அவர். அதாவது 867.41 மீட்டரை 142 அடி என்று கணக்கில் கொண்டு, 868.71 மீட்டரை 147 அடி என்று புரிந்துகொள்கிறார். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 142.2 அடிதான்.

முல்லைப் பெரியாறு அணையைப் பொறத்தவரை ஷட்டர் மட்டமே 142 அடிதான். அதற்கு மேல் 20 -30 சென்டிமீட்டர் தண்ணீர் நிற்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டர் மீதே வழிந்துவிடும். 147 அடிக்கு தண்ணீரைத் தேக்க வேண்டுமென்றால் கூடுதலாக ஷட்டர்களை இறக்க வேண்டியிருக்கும். அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவிடும். அதனால், எப்போதுமே 142 என்ற மட்டத்திலேயே ஷட்டர்கள் இருக்கும். ஆக 147 அடிக்கு தண்ணீரைத் தேக்குவது சாத்தியமே இல்லை.

இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை எட்டியது. அன்றைய தினத்தில் CWC இணைய தளத்தில் இருக்கும் தகவலைப் பாருங்கள். (படம் எண் 2) அப்போதும் 868.76 மீட்டரைத் தொட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக அப்போதும் அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதா? இல்லை. அன்றும் 142 அடிக்குத்தான் தண்ணீர் நின்றது. சிடபிள்யுசி இணையதளம்தான் அப்போதும் இப்போதும் update ஆகவில்லை.

CWC 2015

2015ல் முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை அடைந்தபோதும் தவறான தகவலைக் காட்டும் CWC இணைய தளம்.

பதில் 3. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழகம் முல்லைப் பெரியாறு அணையத் திறந்து பெருமளவு தண்ணீரை வெளியேற்றியது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 136.1 அடி. அன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் சரியான மழை. தொடர்ந்து அணையில் நீரைத் தேக்கியது தமிழகம். அதனால் அடுத்த நாள் 140.7 அடியைத் தொட்டது நீர்மட்டம். இதில் எங்கே தண்ணீர் திறக்கப்பட்டது? அப்படி யார் சொன்னது?

அப்படியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்தத் தண்ணீர் நேரடியாக மக்கள் வாழும் பகுதியைச் சென்றடையாதே? இடுக்கி அணைக்குத்தானே போகும்? முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது ஆக்ஸட் 15ஆம் தேதி. பார்க்க செய்தி இணைப்பு. https://www.maalaimalar.com/News/National/2018/08/15152341/1184008/Kerala-rains-Water-level-at-Mullaperiyar-dam-touches.vpf அதுவும் வெறும் 11,000 கன அடி மட்டுமே. பிரம்மாண்டமான இடுக்கி அணைக்கு இந்த 11,000 கன அடி என்பது ஒன்றுமே இல்லை.

DAM

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 20 வரை முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர் மட்டம். ஆதாரம்: தினமணி மதுரைப் பதிப்பு.

 

பதில் 4. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20வரை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்கப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்கிறது கட்டுரை. இதுவும் தவறான தகவல். ஜூலை 25 தேதி பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்ச நீர் திறப்பு அளவான 2200 கன அடி நீரைத் திறக்க ஆரம்பித்துவிட்டது தமிழகம். இதற்கான செய்தி இணைப்பு இங்கே. https://www.maalaimalar.com/News/District/2018/07/25144106/1179013/water-flow-increasing-to-Periyar-and-Vaigai-dam.vpf ஏன் ஜூன் 11ஆம் தேதியே பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு துவங்கிவிட்டது. செய்தி இணைப்பு இங்கே. https://www.maalaimalar.com/News/District/2018/06/11172408/1169417/Kambam-farmers-rage-for-water-opening-to-Vaigai-dam.vpf கட்டுரையாளர் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஜூலை 26ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான வினாடிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.

CWC 018

ஆகஸ்ட் 15, 2018ல் அணையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நீர்தேக்கப்பட்டதாக தவறாக குறிப்பிடும் CWC இணைய தளம்.

 

பதில் 5. வைகை அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை கூடுதலாக வைகையில் தேக்கியிருக்கலாம் என்கிறது கட்டுரை. இதுவும் ஒரு அபத்தமான, தவறான புரிதல். 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு முல்லைப் பெரியாறிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடிதான் அனுப்ப முடியும். அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். முன்கூட்டியே வைகையை திறந்திருந்தால், அணை காலியாகி, தண்ணீர் எதற்கும் பயனில்லாமல் போயிருக்கும்.

ஹிமான்ஷு எந்த உள்நோக்கத்துடனும் எழுதியிருப்பார் எனக் கருதவில்லை. ஆனால், அணைகளைப் பற்றி அறிந்தவர், அடிப்படையான ஒரு கேள்விக்கு பதிலை யோசித்திருக்க வேண்டும். அதாவது 142 அடி உயரமுள்ள அணையில் அவர் சொல்வதுபோல 147 அடிக்கு எப்படி தண்ணீர்த் தேக்க முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

ஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையை நடுநிலையோடுதான் அணுக வேண்டும். ஆனால், நடுநிலை எடுக்க வேண்டுமென்பதற்காகவே தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சாடுவது என்ன நியாயம்?

இந்தக் கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கும் படங்களையும் பாருங்கள். முல்லைப் பெரியாறு, வைகை அணையின் தினசரி நீர்மட்டங்களையும் பாருங்கள். ஹிமான்சுவின் கட்டுரை தவறானது எனப் புரியும்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

  1. Pingback: முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s