ஆவி அமுதாவும் பி.டி. சாமியும்

frnr2.jpgஇந்த வார துக்ளக் இதழில் சீனியர் சிட்டிசன் என்பவர் எழுதும் துணுக்குத் தொகுப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐ.மு.கூ சார்பில் போட்டியிடும் பிரதீபா படேலைப் பற்றி ஒரு துணுக்கு வந்திருக்கிறது. அவர் ஆவியுடன் பேசுவதாக சொல்லியதையடுத்து ஆவி அமுதா என்று பெயர் சூட்டியிருக்கிறார் சீனியர் சிட்டிசன். இந்த சீனியர் சிட்டிசன் ஒரு எழுத்தாளர். பல்வேறு புனைப்பெயர்களில் துக்ளக்கில் பழம் கருத்துக்களை அள்ளிவிடுவது இவரது நீண்ட காலத் தொழில். இந்த ஆவிகளோடு பேசும் சமாச்சாரமும் இவருக்கு உகந்ததுதான். ஆனால், காங்கிரசைத் திட்ட ஒரு வாய்ப்புக்கிடைத்தது என்று அம்மையாரைத் திட்டித் தீர்த்திருக்கிறார் சீனியர்.

உண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆவிகளின் பெயரைச் சொல்லி பெரும் அட்டூழியம் புரிந்தது நம்முடைய முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாத்தான். பிரதீபா பாடீல் ஆவி அமுதா என்றால், ராஜேந்திர பிரசாதை பேய்க் கதை மன்னன் பி.டி. சாமியுடன்தான் ஒப்பிட வேண்டும். ஆவியுடன் பேசுபவர்களை அழைத்து வந்து நேரம் காலம் தெரியாமல் தொடர்ந்து ஆவியுடன் பேசிவந்தவர் இவர்தான். அதேபோல, இவர் காலத்தில்தான் ஜாதகம் பார்க்கிறேன், குறி சொல்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட போக்கிரிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் சுற்றித் திரிந்தார்கள். ராஜேந்திரப் பிரசாதின் மனைவி ரொம்பவும் ஆச்சாரமானவர். அவருக்குக் காலையில் தினமும் அன்றைக்குக் கறக்கப்பட்ட பசுவின் பால் வேண்டும். அதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்குள்ளேயே பசுக்கள் வளர்க்கப்பட்டன. இந்தியாவின் முன்னாள் வைசிராய்கள் பயன்படுத்திய கழிப்பறைகளில் இந்தப் பசுக்கள் கட்டப்பட்டன. இவ்வளவு அட்டூழியமும் ஆச்சாரம், மத நம்பிக்கையின் பெயரால் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தேறின. சீனியர் சிட்டிசன்கள், ஆதிகள், துர்வாசர்களுக்கு இதெல்லாம் பக்காவாக மறந்துபோய்விடும். ஏனென்றால் முதல் குடியரசுத் தலைவர் ஒரு இந்து வெறியர். ராஜேந்திர பிரசாதைப் பற்றிய இந்த விமர்சனங்கள் எல்லாம் ஏதோ வாய்க்கு வந்தபடி சொல்லப்படுபவை அல்ல. The Relevance of Bhagavath Geetha in Indian History உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நூல்களில் இடம்பெற்றவைதான்.

பி.கு. : அதற்காக ஆவி அமுதா அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதை வடக்கு மாசி வீதி ஆதரிக்கவில்லை. அவர் மீது வந்து குவியும் ஊழல் புகார்களை வைத்துப் பார்த்தால், அடுத்த குடியரசுத் தலைவர் குடியேற அந்த மாளிகையையாவது மிச்சம் வைப்பாரா என்று பயமாக இருக்கிறது.  இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னொரு காமெடி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. காரணம் இவர் புட்டபர்த்தி சாயிபாபாவின் பக்தர் என்பதால்  இவரை ஏற்றுக்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் மறுத்துவிட்டதுதான்.  பாவம் சிவராஜ் பாடீல், சாயிபாபாவை நம்பினால் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.  பாபாவை நம்பியதாலேயே வாய்ப்புப் பறிபோய்விட்டது.  இதற்குப் பிறகும் சிவராஜ் திருந்துவார் என்று நினைக்கிறார்களா? ம்ஹும்,  அங்கே போய் பாபா லிங்கம் எடுப்பதையும் சங்கிலி எடுப்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத்தான் வருவார்.  யாரு பெத்த புள்ளையோ, என்ன சீக்கோ?

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

8 Responses to ஆவி அமுதாவும் பி.டி. சாமியும்

  1. jeeveeji says:

    மேல் நாட்டிலெல்லாம் இருப்பதைப் போல, குடியரசுத் தலைவருக்காக
    தேர்வில் இருப்பவர்கள், நாட்டுப் பிரச்னைகளின் தீர்வுகளில் அவர்கள்
    கருத்தென்ன என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினால், மக்களுக்கும்
    அவர்களைப் புரிந்து கொள்ள, அல்லது அவரைப் பற்றி மதிப்பிட ஒரு
    வாய்ப்பு கிடைக்கும்.
    வெகு ஜன மக்களிடமிருந்து விலகி, கட்சி அரசியல்வாதிகள் ஒன்று கூடி
    அவரைத் தேர்ந்தெடுப்பது ‘மெஜாரிட்டிக்கு’ ஒரு ‘ஆமாம், சாமி’ இருந்தால்
    போதும் என்பதைத்தான் காட்டுகிறது.
    இதில் அவர் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணாய் இருந்தால் என்ன?..

    Like

  2. bsubra says:

    —வைசிராய்கள் பயன்படுத்திய கழிப்பறைகளில் இந்தப் பசுக்கள் கட்டப்பட்டன.—

    அச்சச்சோ! கோமாதாவை அவமதிக்கும் செயலாச்சே இது!?

    Like

  3. ஜீவிஜி,
    அமெரிக்காவில் இருப்பதுபோல, அதிபர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் தங்கள் கொள்கை என்ன என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிவரும். இல்லாவிட்டால், தங்களைத் தேர்ந்தெடுத்த கட்சிக்கும் கட்சித் தலைவருக்கும் விசுவாசமாக இருந்து காலத்தைக் கழித்துவிட்டுப் போக வேண்டியதுதான். “இந்திரா காந்தி சொன்னால் நாடாளுமன்றத்தின் தரையைக்கூட்டிச் சுத்தம் செய்வேன்” என்று ஒரு முறை சொன்னார் குடியரசுத் தலைவர் கியானி ஜெய்ல்சிங். இந்திரா காந்தி இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சி ராஜீவை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அவருக்கு அடுத்த பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இப்படியிருக்கிறது இவர்களுடைய விசுவாசம்.

    Like

  4. குஜராத் கொலைகார கும்பலிலிருந்து ஒரு ஆள் ஜனாதிபதியாவதை விட பிரதிபா மேல் என்று சொல்லத் தோன்றியது. ஆனால் ஜெயில் சிங் பதவிக் காலத்தில் இந்திரா காந்தியின் மரணத்தையடுத்து நடந்த சீக்கியர் படுகொலை நினைவுக்கு வந்து தொலைகிறது. அப்துல் கலாம் பேத்தலாக நிறைய கவிதைகள் எழுதினாரே தவிர அவர் எந்தத் தீமையிலும் பங்கேற்கவில்லை. இந்திய ஜனாதிபதிகள் அறிவியல், சமூக சேவைப் பின்னணியிலிருந்து மட்டும் வந்தால்தான் அந்தப் பதவிக்கு மரியாதை.

    Like

  5. Senthil Kumar says:

    பின்குறிப்பு அட்டகாசம்.

    Like

  6. நன்றி செந்தில்!

    Like

  7. இப்படி பாடாவதி சமஸ்கிருதப் பாட்டையெல்லாம் பின்னூட்டம் இட்டால் எப்படி யுநாநி? வடக்கு மாசி வீதி வலை பதிவின் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?

    Like

  8. யுநாநி பெரும் தொந்தரவாக மாறிவிட்டார். அவரை spam என்றே கருத வேண்டியிருக்கிறது. அவருக்கு ஒரு good bye!

    Like

Leave a comment