தவிர்க்க முடியாத ஆளுமை

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த ஆழி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன என்பது பற்றி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்துவிட்ட நிலையில் , திரும்பவும் அதை விவரிப்பது தேவையில்லாதது. அதனால், அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவை பற்றி மட்டும் சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

குஷ்பு – திருமாவளன் இடையிலான மோதலால் அங்கு பேசிய வேறு சிலரது பேச்சுகள் கவனிக்கப்படவேயில்லை. தமிழ் எம்.ஏ. படத்தின் இயக்குநர் ராமசுப்புவின் உரை அப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

நான் ஒரு அடிமை. நீங்கள் எல்லோரும் அடிமைகள். அடிமைக்கு அடிமை என்ன வணக்கம் வேண்டிக்கிடக்கிறது என்று பேச்சைத் துவங்கிய ராமசுப்பு, புத்தக வெளியீட்டிற்குச் சம்பந்தமில்லாமல் ( அங்கே பேசிய பலரும் அப்படித்தான் பேசினார்கள்) தன் பேச்சைத் தொடர்ந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிச் சற்று நேரம் உளறியவர் , பிறகு தனக்குப் பிடித்த டாப்பிக்கான கால் சென்டர் கலாச்சாரத்திற்கு வந்தார். அமெரிக்காக்காரரனின் பகல் நம்முடைய பகலாகிவிட்டது. அமெரிக்காகாரனின் இரவு நம்முடைய இரவாகிவிட்டதுஎன்றார். அவர் எங்கேயெல்லாம் தன் உளறலின் உச்சத்தைத் தொட்டாரோ, அங்கேயெல்லாம் கைதட்டல் எழுந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காரணமாக அமெரிக்க நிறுவனங்களின் கால் சென்டர்கள் இங்கே பல்கிப் பெருகிவிட்டன. அதனால் நாம் அடிமைகளாக இருக்கிறோம் – என்பதுதான் அவருடைய பேச்சின் சாரமாக இருந்தது.  தன்னுடைய முதல் படமான தமிழ் எம்.ஏவிலேயே இம்மாதிரி கருத்தை வலியுறுத்தியவர் இவர்.

கால் சென்டர்கள் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றா? பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது  மிகப்பெரிய நிறுவனங்கள் தகவல்தொடர்பு சார்ந்த தங்கள் சேவைகளை தங்கள் நாட்டில் செய்தால் அதிக செலவுபிடிக்கும் என்று இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அளிக்கின்றன. வளரும் நாடுகளில் இருக்கும் அபரிமிதமான ஆள் பலமும் தகவல் தொழில்நுட்பமும் இதற்கு உதவுகிறது. இதில் இரு தரப்பினருமே லாபம் பெருகிறார்கள்.

கால் சென்டர் பணியில் சேர்பவர்கள் யாரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட , மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மத்தியதர, கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரிப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பு படிக்க முடியாமலோ, அல்லது மேற்படிப்பை முடித்த பின் நல்ல வேலை கிடைக்கும் வரையிலோ இந்த கால் சென்டர் பணிகளை மேற்கொள்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது. இதை நல்ல ஆடைகள் , வாகனங்கள், பொழுதுபோக்குகளில் செலவழிக்கிறார்கள். மேற்படிப்புக்குப் பணம் சேர்த்த பின்னரோ, நல்ல வேலை கிடைத்தபின்னரோ இந்த கால் சென்டர் வேலையை விட்டுவிடுகிறார்கள்.

இதுதான் ராமசுப்பு போன்றவர்களின் கண்களை உறுத்துகிறது. இந்த இளைஞர்களின் சந்தோஷமும் பண வசதியும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த கால்சென்டர்கள் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் ? தாய் , தந்தையரைக் கஷ்டப்படுத்தி மேல் படிப்பு படிப்பார்கள். வேலை கிடைக்கும் வரை சும்மா இருப்பார்கள் அல்லது 2,000- 3,000 ரூபாய் சம்பளத்தில் எங்கேயாவது வேலை செய்வார்கள். இதைத்தான் இதுமாதிரி நபர்கள் விரும்புகிறார்கள். தான் சினிமாவில் சேர்ந்து படாதபாடுபட்டு ஒரு படம் முடித்த பிறகு கிடைக்கும் வாழ்வு இந்த இளைஞர்களுக்கு வெகு சீக்கிரத்திலேயே கிடைத்துவிடுகிறது என்ற ஆதங்கம் போலிருக்கிறது.

தமிழ் எம்.ஏ. படத்தில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தன் மேலாடையில் சற்று வேடிக்கையான வாசகம் எழுதியிருந்த பெண்ணிடம் நாயகன் மோசமாக நடந்துகொள்வான். தான் செய்ய விரும்புவதைத்தான் நாயகன் மூலம் செய்கிறார் இயக்குனர் என்று தோன்றுகிறது. மும்பையில் புத்தாண்டு தினத்தன்று இரண்டு பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இவருக்கு அடுத்தபடியாக பேசவந்த கனமொழி இதற்கு சரியான வகையில் பதிலடி கொடுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்வது என்பது இன்னமும் ஒரு வாய்ப்புதான். அதேபோல, கால் சென்டர்களில் வேலை பார்க்க வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சிலருக்குக் கிடைப்பதுபோன்ற நல்ல வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றார். ராம் உளறும்போது கையைத் தட்டியவர்கள் இந்தப் பதிலின் போது மூச்சுகூட விடவில்லை.

இதையடுத்து குஷ்பு பேசியது எல்லா மீடியாவிலும் வந்துவிட்டது. அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய உரை கவிஞர் அறிவுமதியினுடையது. குஷ்புவுக்கு அடுத்துப் பேச வேண்டியவர் அறிவுமதி இல்லையென்றாலும், குஷ்புவைக் கண்டிப்பதற்காக அடுத்ததாகப் பேச வந்தார் அறிவுமதி. தான் கலந்துகொள்ளும் எல்லாக் கூட்டங்களிலும் பேசுவதைப் போலவே இந்தக் கூட்டத்திலும் தன் பேச்சை ஆரம்பித்தார் அறிவுமதி. இரண்டாயிரம் ஆண்டுகாலமாக மலத்தையும் மூத்திரத்தையும் தூக்கிச் சுமக்கிறான் தமிழன். என் தாத்தனும் அப்பனும் இப்படி ஒடுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள். அந்தத் தமிழனை விடுவிக்க வந்த திருமவளவன் வந்தால் வணக்கம் சொல்ல மறுக்கிறீர்கள். நக்கல் செய்கிறீர்கள். அதேபோல ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் Who is He? என்று கேட்டீர்கள். இப்படி ஒரு தமிழனை, தங்கர் பச்சானை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? அவன் யார் எனறு கேட்கிறீர்கள் என்பதுதான் இவரது உரையின் சாரம்.

அறிவுமதி தன் எல்லா உரையையுமே மலம் அள்ளும் மூத்திரம் அள்ளும் தமிழன் என்றுதான் ஆரம்பிப்பார். உண்மையில் மலம் அள்ளும் மக்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? என்றைக்காவது அவரோ, அவரது இனத்தினரோ அம்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்களா ? வடமாட்டங்களில் ஆதிக்க ஜாதியாக இருக்கும் ஒரு ஜாதியைச் சேர்ந்த அவர் ஏன் இப்படி ஒடுக்கப்பட்டவர் வேடம் போடுகிறார் ? யாரும் அவரைக் கேட்டுவிட முடியாது. கேட்டால் தமிழின விரோதி என்பார்.

இது ஒரு தந்திரம். ஒரே சமயத்தில் ஒடுக்கப்படுபவராகவும் ஒடுக்குபவராகவும் இருக்கும் தந்திரம். ஒடுக்கப்படுபவர் குரல் எழுப்பினால் நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன் என்று சேர்ந்துகொள்வது. அதே நேரத்தில் ஒடுக்குமுறையாளனுக்கான எல்லா வசதிகளையும் அனுபவிப்பது. இதை யாரும் கேள்விகேட்கக்கூடாது. கேட்டால், அவன் தமிழின விரோதி.

தங்கர்பச்சானை யார் அவர் என்று கேட்டால் இவருக்கென்ன கோபம் ? காரணம், ஒரே ஜாதி. தமிழ் நாட்டில் வேறு இயக்குனர்களே இல்லையா ? ஏன் போகிற இடத்திலெல்லாம் தங்கர்பச்சானைத் தூக்கிப்பிடிக்கிறார் இவர். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே அதுதான் இது. உண்மையைச் சொல்லப்போனால், தங்கர்பச்சானைவிட திரையுலகில் குஷ்புதானே சீனியர் ? அவரைவிட பிரபலமானவரும்கூட.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு கிராமத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஊர் பெரிய மனிதர் அந்த ஊரைச் சேர்ந்த முக்கியமான தமிழறிஞர் ஒருவரை அழைத்துவந்து, இவர் தமிழ்நாட்டிலேயே மிக முக்கியமான தமிழறிஞர் என்று அவருடைய பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவைத்தார். எம்.ஜி.ஆரும் அந்த அறிஞரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அந்த தமிழறிஞர், ஊர் பெரிய மனிதரைப் பார்த்து, நான் யாருன்னு ஐயாகிட்ட சொன்னேள். ஐயா யாருன்னு எனக்கு அறிமுகப்படுத்தவேயில்லையே ?” என்று கேட்டாராம். ஊர் பெரிய மனிதர் திடுக்கிட்டுப் போய், இவரையா தெரியலை என்று கேட்டிருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரே தான் யார் என்பதை அவரிடம் சொல்லி பேச்சைத் தொடர்ந்திருக்கிறார்.

தன்னைத் தெரியாது என்றவுடன் எம்ஜிஆருக்குக் கோபம் வரவில்லை. தங்கர்பச்சானுக்கும் அறிவுமதிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. தங்கர்பச்சானை யார் அவர் என்று கேட்ட குஷ்பு ரஜினியை அப்படி கேட்பாரா ? நிச்சயமாக மாட்டார். ரஜினி ஒரு முக்கியமான, வெற்றிகரமான நடிகர். தங்கர்பச்சானைக் கேட்கிறார் என்றால் அவர் நிலை திரையுலகில் எந்த இடத்தில் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டியதுதான். அதைவிட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் பொங்கினார் அறிவுமதி.

இறுதியாகப் பேசிய திருமாவளவன், குஷ்புவுக்கும் தனக்கும் இடையிலான பிரச்னையை அத்தோடு முடித்துக்கொள்ளும்படி பேசினார். அதுதான் இந்தக் கூட்டத்திலேயே மிகச் சிறந்த அம்சம்.

குஷ்புவை உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோஅன்றைக்கு அவர் செய்ததை ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ (அன்றைய தினம் திருமாவளவனுக்கு அவர் வணக்கம் சொன்னபோது அவருடைய உடல் மொழி மிக மோசமாக இருந்தது என்பது வருந்தத்தக்கதுதான்)  அவர் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை, திருமாவளவனைப்போல. நடிகைகள் என்றாலே கிள்ளுக்கீரைகள் என்று நினைக்கும் அறிவுமதி போன்ற ஆட்கள் நிறைந்த சமூகத்தில் இப்படித் துணிச்சலாக குரல்கொடுக்க இன்னும் பலர் வேண்டும்.

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

8 Responses to தவிர்க்க முடியாத ஆளுமை

  1. செந்தில் says:

    அய்யா தமிழின நண்பரே..
    கால் சென்டர் பற்றி ஒருவர் பேசியதை உளறல் என்று உங்கள் உள்மன வேட்கையை மேடை கிடைக்காத வருத்தத்தில் இங்கே பதிவு செய்துள்ளீர்கள். சரி.
    ஆனால் அதற்கு பிறகு அனைவரையும் ஏகத்திற்கு வசவு செய்வதற்கு பெயர் எந்த வகைப்பட்ட ஆளுமை?
    ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பேச வேண்டுமா?
    அறிவுமதி சொன்ன பாட்டனும் முப்பாட்டனும் அவருடைய சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல.
    அவர் சொன்ன பாட்டனும் முப்பாட்டனும் உண்மையில் ஒடுக்கபட்டவர்களே .. இதையே ஒடுக்கபட்டவர்களைதான் அவர் சொந்தம் என்று சொல்கிறார் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

    எல்லாம் போகட்டும், அவர் தங்கர் பச்சானை பற்றி பேசினால், அவரும் இவரும் ஒரே சாதி.. நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு சரி…
    நீங்கள் இந்த பதிவில் பல இடங்களில் குஷ்பூ க்கு வக்காலத்து வாங்குகிறீர்களே.. குஷ்பூ க்கு சொந்தமாக இருப்பீங்களோ? இது சுந்தர்.சி க்கு தெரியுமா? M.G.R. க்கு வக்காலத்து வாங்குகிறீர்களே? அவரும் உங்கள் சாதியா? இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

    Like

  2. செந்தில் says:

    விடுபட்டவை..
    ரஜினி யை பற்றி கூட புகழ்ந்திருக்கிறீர்கள். ரஜினியும் நீங்களும் ஒரே சாதியா? இல்லை அவருக்கும் நீங்கள் சொந்தமா? இது சிம்பு வுக்கு தெரியுமா?

    Like

  3. கட்டியக்காரன் says:

    ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை அன்பரே. ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக, அவர்களுக்கு ஆதரவாக மற்றவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம். ஆனால், அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும்போது அதைச் செய்ய வேண்டும். வட மாவட்டங்களில் வன்னியர்களால் பல தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானபோது அறிவுமதி எங்கே போயிருந்தார்? அப்போது ஏன் ஒடுக்கப்பட்டவர்கள், தலித்கள் சார்பாக குரல்கொடுக்கவில்லை?

    இரண்டாவதாக, குஷ்பு, எம்ஜிஆர், ரஜினி (சிவாஜி விமர்சனத்தையும் படித்துப் பாருங்கள்)ஆகியோருக்கு வக்காலத்து வாங்குவதாகவும் அவர்கள் எல்லோரும் என் ஜாதியா என்றும் கேட்டிருக்கிறீர்கள். சொந்த ஜாதிக்காரனை மட்டும் தூக்கிப்பிடிக்கும் அல்ப புத்தி எனக்கு இல்லை. அதெல்லாம் அறிவுமதி, தங்கர்பச்சான் ஆகியோருக்கு மட்டுமே உரியது.

    Like

  4. செந்தில் says:

    உங்களை அல்ப புத்திக்காரர் என்று நான் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. மாறாக நீங்களே உங்களுடைய பதிவில் எங்காவது அல்பத்தனம் தென்படுகிறதா என்று தேடி பார்த்து பின் தெளிவடைந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது..
    அறிவுமதி சாதி பார்த்து குரல் கொடுப்பவர் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..
    சிலருக்கு தமிழ் தமிழர் என்று பேசினாலே கசப்பாகி விடுகிறது..
    அவர் ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சமூகங்களைச் சார்ந்த பெண்கள் யாரிடமும் தவறாக நடந்து கொண்டவரில்லை. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பெண்களை கற்பழித்தவர்களுக்கு வக்காலத்து வாங்கியவரும் இல்லை.
    எல்லாத் தமிழரும் தமிழர் என்று இன்னல்களுக்கு மத்தியில் சொல்லி வருபவர் என்று மட்டுமே அவரை அனைவரும் அறிவர். தமிழர்கள் ஒரே சாதிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், இதோ பார் ஒரே சாதி அதனால் ஒன்றாய் சேர்ந்தார்கள் என்று கூறுவீர்கள். அதே ஆள் வேற்று சாதிக்காரர்களுக்கு குரல் கொடுத்தால் இவன் தான் வேற சாதி ஆச்சே. இவன் எப்படி பேசலாம். இதோ பார் இவன் ரெட்டை வேடம் போடுகிறான் என்கிறீர்கள்.
    பாவம் தமிழன் என்னதான் பேசுவான் என்னதான் செய்யுவான்.
    உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:
    ஒரு வேடிக்கை பதிவாக ஒரு முயற்சி செய்யுங்களேன். இதே அறிவுமதி அதே மேடையில் தமிழை பற்றியோ தமிழரைபற்றியோ தமிழ் நாட்டை பற்றியோ பேசாமல் மேடையில் இருந்த குஷ்பூவின் அநாகரீகமான சபை நடவடிக்கைகளை விமர்சிக்காமல் பேசியிருந்தால் என்ன பேசிஇருப்பார் என்பதை கற்பனையில் பதிவு செய்யுங்கள்.
    அது எப்படி இருக்கும் என்றால் அவர் வந்த வேலையை பார்த்துக் கொண்டு போனது போல் இருக்கும். அதை பார்த்து உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குஷ்பூக்கள் மட்டும் எந்த மேடையிலும் என்ன குட்டிக் கரணம் வேண்டுமானாலும் போட்டுவிட்டு போகட்டும். எல்லாரும் ஜாக்கெட் இல்லாத ரவிக்கையும், புடவை இல்லாத சேலையும் பார்த்து விட்டு ஜொள்ளு வடித்து கலைந்து போகட்டும்.

    Like

  5. கட்டியக்காரன் says:

    ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நேரடியாக பதில் சொல்வது ஒரு கலை. அந்தக் கற்க முயற்சி செய்யுங்கள். நான் பதிவில் எழுதியது ஒன்று. நீங்கள் ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறீர்கள்.”அவர் ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சமூகங்களைச் சார்ந்த பெண்கள் யாரிடமும் தவறாக நடந்து கொண்டவரில்லை.” – இந்த வரி எதற்காக? என் பதிவில் எங்கேயாவது தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் அறிவுமதி தவறாக நடந்துகொண்டார் என்று வருகிறதா? “எல்லாத் தமிழரும் தமிழர் என்று இன்னல்களுக்கு மத்தியில் சொல்லி வருபவர் என்று மட்டுமே அவரை அனைவரும் அறிவர்” – இப்படி ஒரு வரி. அவருக்கு என்ன இன்னல்?
    அறிவுமதி மீதான விமர்சனத்தை ஒருவரியில் சொல்கிறேன்: தமிழ், தமிழன் என பேசிக்கொண்டே கலாச்சார பாஸிஸத்தை நம் மீது விதிக்கிறார் என்பதுதான். ஆரிய இனம்தான் உயர்ந்தது; ஆரியர்களுக்காக குரல் கொடுப்போம் என்று சொல்லித்தான் ஹிட்லர் நாட்டைப் பிடித்தான். அதன் பிறகு நடந்த கொடுமைகளை உலகமே அறியும். தமிழுக்காக செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நம்முடைய பண்பாடு மிக உயர்ந்தது என்றால் எத்தனை குஷ்பு வந்தாலும் அதை அசைத்துவிட முடியாது. ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் காலம்தோறும் மாறிவருபவை. அறிவுமதி முன்வைக்கும் கலாச்சாரம் ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்தும் ஆணாதிக்கத்தை வலியுறுத்தும் கலாச்சாரம். அவரை நீங்கள் தொடர்ந்து கவனித்து வந்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன். தொடர்ந்து குஷ்புவை “ஒரு நடிகை, அவள் என்ன பேசுவது” என்றே அவர் சொல்லிவருகிறார். ஒருவரை அவர் செய்யும் தொழில் சார்ந்து சிறுமைப் படுத்துவது என்பது ஆதிக்க ஜாதியினர் காலம் காலமாக செய்து வருவது. இது ரத்தத்திலேயே ஊறியிருக்கும். “சிலருக்கு தமிழ் தமிழர் என்று பேசினாலே கசப்பாகி விடுகிறது..” – இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்வதெல்லாம் அனாவசிய வேலை. நிஜமாகவே தமிழ், தமிழர் என்று பாடுபட்டு, சொத்தை இழந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். வீடு, வாசல், குடும்பம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்கலாம்.

    பின்குறிப்பு: “எல்லாரும் ஜாக்கெட் இல்லாத ரவிக்கையும், புடவை இல்லாத சேலையும் பார்த்து விட்டு ஜொள்ளு வடித்து கலைந்து போகட்டும்.” – இந்த வரிக்கு என்ன அர்த்தம்? ஜாக்கெட், ரவிக்கை இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தானே? அதேபோலத்தானே புடவையும் சேலையும்?

    Like

  6. சாமரன் சொல்வது என்னவென்றால் ... says:

    சாமரன் சொல்வது என்னவென்றால் …
    அன்பு நண்பர்களே உங்களிடையே என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். நண்பர் கட்டியக்காரன் பல்வேறு கட்டுரைகளில் நடு நிலைமையான கருத்துகளைப் பதிந்து வருபவர். ஆனாலும் பாவலர் அறிவுமதி குறித்தும் இயக்குனர் தங்கர் பச்சான் குறித்தும் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் நடு நிலை தவறியவை. ஏதோ போகிற போக்கில் புழுதிவாரி தூற்றி செல்லும் ஆதிக்கவாத விமர்சனப் போக்காகவே இதை சொல்லி இருக்கிறார். நண்பர் செந்தில் சொல்ல்வது போல் இன்று தமிழை பற்றி பேசினாலும் எழுதினாலும் தமிழனின் நிலை குறித்து ஆதங்கம் கொண்டாலும் சிலருக்கு வைக்க கூடாத இடத்தில் மிளகாய் பொடியை தூவியதைப் போல் துள்ளுகிறார்கள். உண்மையில் அறிவுமதி பேசுவதும் எழுதுவதும் அவருக்காக அல்ல. தமிழ் திரை உலக வரலாற்றில் ஆபாசமாக பாடல் எழுதச் சொல்கிறார்கள் என்பதால் பாடலே எழுத மாட்டேன் என்று மறுத்த சுயமரியாதை உள்ள ஒரே பாடலாசிரியன் அறிவுமதி மட்டும்தான். அவ்வாறு அவரை முடிவெடுக்கச் செய்தது அவரது தன் மான தமிழ் உணர்வுதான். நீங்கள் சொல்ல்வது போல் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கால் சென்டர் நிறுவனங்களினால் வேலை வாய்ப்பும் வருமானமும் பெருகி இருப்பது உண்மைதான். ஆனால் இந்த வேலை வாய்புகள் ஏற்படுத்தி இருக்கும் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை கட்டியக்காரன் யோசிக்க வேண்டும். இரவில் தூங்கி பகலில் வேலை செய்வது என்பது இயற்கை வகுத்த நீதி. ஆனால் அமெரிக்கா காரன் சல்லிக் காசை சம்பளமாக எறிகிறான் என்பதற்காக (அவன் நாட்டில் நம்மை போன்று ஏமாளிகள் கிடைப்பதில்லை) இயற்கைக்கு மாற்றமாக இரவில் முழித்து வேலை பார்க்கும் என் தமிழ்ச் சகோதரன் பல்வேறு மன நோய்களுக்கு ஆளாகிறான். மன அழுத்தத்தால் பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான், தண்ணி அடிக்கிறான், டிஸ்கோதே போகிறான், கடைசியில் வாங்கிய சம்பளத்தை டாக்டருக்கு கொடுத்து அழுகிறான். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் அறிவுமதி போன்றோர் பாடுபடுகின்றனர். அதை ஏற்ர்கவிட்டளும் கொச்சை படுத்தாமல் இருக்கலாம். நிறைய எழுத நினைக்கிறேன். ஆனால் என்னால் இந்த யூனிகோட் போர்மட்டில் எழுத இயல வில்லை .

    Like

  7. அமரன் says:

    சாமரன் சார், இந்தப் பதிவை நீங்கள் படிக்கவேயில்லை என்று தெரிகிறது.

    Like

  8. கட்டியக்காரன் says:

    இன்று தமிழை பற்றி பேசினாலும் எழுதினாலும் தமிழனின் நிலை குறித்து ஆதங்கம் கொண்டாலும் சிலருக்கு வைக்க கூடாத இடத்தில் மிளகாய் பொடியை தூவியதைப் போல் துள்ளுகிறார்கள். – இதைத் தவிர புதிதாக ஏதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள் சாமரன். உங்களுக்கு உ.வே.சா என்று ஒருவரைத் தெரியுமா? நாம் இன்று பழந்தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம் அவர் மட்டும்தான். எந்த ஒரு மேடையிலும் இப்படி தமிழ், தமிழ் என்று முழங்கியவரில்லை.
    கால் சென்டர்கள் ஏன் உங்களைத் தொந்தரவு செய்கின்றன? காலம் காலமாக நிலபிரபுத்துவவாதிகளும், உழைக்காமல் பரம்பரைச் சொத்தை வைத்தே அடுத்தவர்களை அடக்கியவர்களும் அனுபவித்த சந்தோஷங்கள் எல்லோருக்கும் கிடைக்கிறதே என்ற ஆதங்கமா? உங்களுக்குக் கால் சென்டர் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வேலை பார்க்காதீர்கள். அதை வைத்து நான்கு தமிழ்க் குடும்பம் பிழைக்கிறதென்றால் பிழைத்து விட்டுப் போகட்டும்.
    இந்தக் கால்சென்டர் மீதான வெறுப்பு எல்லாம் ஒரு அறியாமையில் இருந்துதான் பிறக்கிறது. அதாவது, எல்லோரும் அமெரிக்காவிற்காக வேலை பார்க்கிறார்கள் என்ற அறியாமையில் இருந்து. உண்மையில் எல்லா நாடுகளுக்காகவும் இங்கே கால்சென்டர்கள் இருக்கின்றன.
    தமிழனுக்கு உதவி செய்பவர்களாக இருந்தால் வளைகுடா நாடுகளில் குப்பை அள்ளி சிரமப்படுபவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் களத்தில் இறங்கி அதைச் செய்ய வேண்டும். ஆனால், அதெல்லாம் சிரமமான காரியமாயிற்றே. நமக்கு இருக்கவே இருக்கிறார் குஷ்பு. அவரைத் திட்டினால் தமிழ் வாழ்ந்துவிடும். அறிவுமதி குத்துப்பாட்டு எழுதாவிட்டால் தமிழினம் முன்னேறிவிடும். என்ன ஒரு வாதம்!

    Like

Leave a comment