இந்தி பேசுபவர்களுக்கு சுரணை இருக்கிறதா?

மகாரஷ்டிரத்தில் ரயில்வே தேர்வு எழுதவந்த வட இந்திய மாணவர்கள் மீது மகாராஷ்டிர நவ நிர்மாண சேனையினர் தாக்குதல் நடத்தியது, வட இந்தியவர்களை அதிர வைத்திருக்கிறதோ என்னவோ, வட இந்திய ஊடகங்களை அதிர வைத்திருக்கிறது. குமுறித் தள்ளுகிறார்கள். “அவர் ஆஃப் ஷேம்” என்கிறது அவுட்லுக். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புலம்பித் தள்ளுகிறார்கள். சகிப்புத் தன்மையைப் பற்றிப் பக்கம் பக்கமாக பாடம் நடத்துகிறார்கள். இந்தியாவிற்குள் யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்று கேவுகிறார்கள்.  ராஜ் தாக்கரேவின் கட்சியினர் செய்வது தவறுதான்.

ஆனால் சகிப்புத் தன்மை பற்றியெல்லாம் வட இந்தியர்கள் பேசுவது தகுமா? இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் வெறும் நான்கு மாநிலங்களில் மட்டுமே பேசப்பட்டுக்கொண்டிருந்த இந்தியை, இந்தியா முழுவதுமிருக்கும் மக்கள் எல்லோரும் பேச வேண்டும்; இனி இந்திதான் இந்திய அரசின் தகவல்தொடர்பு மொழி; மத்திய அரசுப் பணியில் பணியாற்ற விரும்புவர்கள் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தது மட்டும் சகிப்புத்தன்மைக்கு உகந்த காரியமா?

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்திருக்கும் குக்கிராமத்தில் இருக்கும் வங்கி கிளையில் பணம் கட்டுவதற்கான படிவத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலத்திலும் மற்றொரு பகுதியில் இந்தியிலும் அச்சடித்து வழங்கிக்கொண்டிருக்கிறார்களே, அது மட்டும் சகிப்புத் தன்மையா? இந்தியா முழுவதுமிருக்கும் ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், வங்கிகளில் இந்தி இல்லாத இடமே கிடையாது. இந்தி பேசுபவன் மட்டும் எங்கே போனாலும் சிரமப்படக்கூடாது. மற்றவன் உழைத்துச் சாப்பிட வேண்டுமானாலும் அதற்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் இப்படி நிலையை ஏற்படுத்தியவர்கள்தான் பயங்கரவாதிகள்.

இந்தி பேசும் மக்களின் மனநிலையே ஒரு மாதிரியானது. அவர்களைப் பொறுத்தவரை, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்திதான் பேசுகிறார்கள். இந்தி பேசாத, தெரியாத மக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு விசித்திரமாக இருக்கிறது. சத்தீஸ்கரி உள்ளிட்ட பல மொழிகளை இந்தியின் பரவல் அழித்துவிட்டது. இனிமேல் அந்த மொழிகளை மீட்கவே முடியாது. அந்த மொழிகளோடு சேர்ந்து, அவற்றில் இருந்த மருத்துவ, விஞ்ஞான, சுற்றுச்சூழல் அறிவும் அழிந்துவிட்டது. அப்போதெல்லாம் யாரும் குமுறவில்லை. இன்றைக்கு இந்தி பேசுபவர்கள் அடிவாங்குகிறார்கள் என்றவுடன் குமுறுகிறார்கள்.
 
ஆட்களை அடித்தால்தான் வன்முறை என்றில்லை. கலாச்சார ரீதியிலான, மொழி ரீதியிலான தாக்குதலும்கூட வன்முறைதான். ஆனால், அதை மென்மையாக யாராவது சொன்னால் புரிவதில்லை. கையில் கட்டையுடன் சொன்னால்தான் புரிகிறது.

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

2 Responses to இந்தி பேசுபவர்களுக்கு சுரணை இருக்கிறதா?

  1. பாயின்ட் பாயின்ட்டாக அடித்திருக்கிறீர்கள். அவர்களது அறியாமையும் ஆச்சரியமான விஷயம். ஸ்வபன் தாஸ் குப்தா என்று இந்து தீவிரவாத பத்திரிகையாளர் ஒருவர் ‘தில்லி முதல் ஹரியானா வரை இந்தியா முழுவதும்’ என்று எழுதினார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அறியாமையும் குறுகிய மனப்பான்மையும் அவர்களுக்கு இருக்குமளவு தென்னிந்தியர்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது.

    Like

  2. அவர்களுக்கு ரயிலில் பயணச் சீட்டை முன்பதிவு செய்து போவதே ஆச்சரியமாக இருக்கிறது. இது நம்ம ரயிலு, அதுல போய் டிக்கெட்டா என்ற ரேஞ்சில்தான் இருக்கிறார்கள் இந்திக்காரர்கள். இதில் அவர்களுடைய மொழியை எல்லோரும் பேச வேண்டுமாம்.

    Like

Leave a comment